Read in : English

Share the Article

குழந்தைப் பருவத்தில் மிருதங்கம் வாசிப்பதில் பயிற்சி அளிக்க பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கு அவரது அப்பாவே பயிற்சி அளிக்க மறுத்தார். மிருதங்கக் கலைஞர் பழனி சுப்ரமணிய பிள்ளை வித்வான்கள் குடும்பத்திலிருந்து வந்தவர். தெளிவான பாணியாக வளர்ந்திருந்த புதுக்கோட்டை பாணியில் ஊறித்திளைத்தவர் அவரது தந்தை பழனி முத்தையா. தவில் லயத்தை, தாளகதி ஆழத்தை மிருதங்க வாசிப்பில் கொண்டுவந்த நிபுணர் அவர் என்று லலிதா ராமின் புத்தகம் துருவ நட்சத்திரம் சொல்கிறது.

அந்தப் புத்தகத்தைப் பற்றி இன்மதியில் வெளிவரும் இந்த மூன்றாவது கட்டுரையில் பழனி சுப்ரமணிய பிள்ளையின் குழந்தைப்பருவத்தைப் பார்க்கலாம். முன்பு வந்த இரண்டு கட்டுரைகளையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்

கர்நாடக சங்கீத கச்சேரி விருந்தில் பிரதானமான உணவே ராகம், தானம், பல்லவிதான். அதில் பெண்கள் ஜொலிப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் சுப்புடுவை வளர்த்தெடுத்த அவரது சிற்றன்னை அஞ்சுகத்தம்மாள் என்று லலிதா ராமின் புத்தகம் பி.எம். சுந்தரத்தை மேற்கொள்காட்டிச் சொல்கிறது.

ஆனால் சுப்புடுவின் பயிற்சிக்குத் தடையாக அவரது உடல்கூறும் மரபும் இருந்தன. அவர் புத்திசாலி என்று எல்லோருக்கும் தெரியும்., ஆனால் அவர் இடதுகைப் பழக்கமுள்ளவர். அதனால் அதைப் பெருங்குறையாக அவரது தந்தை பார்த்தார்.

தன்மகன் வீண் என்று நினைத்த முத்தையா பிள்ளை சுப்புடுவிற்கு மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொடுக்க மறுத்தார். தனது இன்னொரு மகனான செளந்தரபாண்டியனை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்து அவருக்கு மிருதங்கம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் முத்தையா பிள்ளை. எனினும் சுப்புடு அதை உற்று அவதானித்து மானசீகமாக மிருதங்கம் கற்றுக் கொள்வதை எதுவும் தடுக்கவில்லை.

சுப்புடு இடதுகைப் பழக்கமுள்ளவர். அதனால் அதைப் பெருங்குறையாக பார்த்த அவரது தந்தை, பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கு மிருதங்கம் வாசிப்பதில் பயிற்சி அளிக்க மறுத்தார்

ஒருநாள் செளந்தரபாண்டியனால் தந்தை கற்றுக்கொடுத்த பாடத்தை முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தந்தை வெறுப்படைந்தார். அப்போது தன்வீட்டுக்கு வந்த த‌ஷிணாமூர்த்தி பிள்ளையை வரவேற்க தந்தையும் மகனும் வெளியே சென்றனர். அவர்கள் திரும்பிவந்து பார்த்தபோது சுப்புடு அன்றைய பாடத்தையும் தாண்டி அருமையாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தனர்.

அதனால் தந்தை கோபமடைந்தார். மரபை மீறி வாசிப்பதும் நன்மைக்காகத்தான் என்று விளக்கி த‌ஷிணாமூர்த்தி பிள்ளை அவரைச் சாந்தப்படுத்தினார். பின்பு சமாதானமான முத்தையா பிள்ளை சுப்புடுவுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார். தயக்கத்துடன் தந்தை கற்றுக்கொடுத்ததை எல்லாம் சுப்புடு முழுவதுமாய் உள்வாங்கிக் கொண்டார்.

மேலும் படிக்க: சரிநிகர்: அந்த நாளிலேயே மிருதங்க வித்வானான முதல் பெண்

பாடங்கள் அதிகாலையிலே ஆரம்பித்து பின்னிரவுவரை தொடர்ந்தன. அசுரப் பயிற்சி என்று அதைச் சொன்னால் தகும். தந்தை கறாரானவர்; உரத்த குரலுக்குச் சொந்தக்காரர். ஆனாலும் சுப்புடுவுக்கு இன்னும் நிறைய தேவைப்பட்டது. அது ஒரு கடினமான சாதகம். துருவர் பண்ணிய கடுந்தவத்தைப் போன்றது. அதுதான் சுப்புடுவைத் துருவ நட்சத்திரம் போல ஜொலிக்க வைத்தது.

சென்னையில் சுப்புடுவின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. அப்போது அவருக்கு வயது 15 தான். அந்தக் காலகட்டத்தில் காஞ்சிபுரம் நைனா பிள்ளை உச்சத்திலிருந்த வாய்ப்பாட்டுப் பாடகர். சிக்கலான தாளலயங்களுக்குப் பேர்போனவர். தோல் வாத்தியக்காரர்களுக்கு அவர் அடிக்கடி சவால் விடுபவர் போல பாடுவார். என்றாலும் பழனி சுப்பிரமணிய பிள்ளை அவருக்கு ஈடுகொடுத்தார். வீணை தனம்மாளின் ஆதரவோடு அவர் நைனா பிள்ளைக்கு வாசிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
நைனா பிள்ளைக்கு வாசித்து சுப்புடு பெரும்புகழ் கொண்டார். ஆனால் தடைகளும் தொடர்ந்து ஏற்பட்டன.

ஒரு புதிய தலைமுறை கர்நாடக சங்கீதத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்தது. செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்று புதிய நட்சத்திரங்கள் உருவாயினர். அவர்களின் பிரதானமான கவனம் ராகம்; லயம் அல்ல. அவர்களுக்கு முழுமையான பொருத்தமாக பழனி இல்லை என்கிறது துருவ நட்சத்திரம்.

சுப்புடுவின் வாசிப்பு தனித்து நின்றது. அது கட்டுக்குள் அடங்காதது. அவரது சர்வலகுவில் பல்வேறு மாதிரிகள் இருந்தன; பல நுட்பங்கள் இருந்தன; அவை விசேஷமாக ஒலித்தன.

ஜிஎன்பியும் சுப்புடுவும் நல்லதோர் இசை ஜோடி. அழகான ஜிஎன்பி செளகரியமான வாழ்க்கையை வாழ்ந்தார்; தி நகரில் வசித்த சுப்புடுவும் அப்படித்தான் வாழ்ந்தார். இருவருக்கும் கார்கள் வாங்குவது பிடிக்கும். வாசனைத் திரவியங்களும் பிடிக்கும்

மற்றொரு சிறப்பு அவர் இடதுகையால் வாசித்தது. மிருதங்கத்தின் வலதுபக்கம் சுருதிக்கானது. பார்வையாளர்களை நோக்கியபடி இருக்கும். அதனால் கச்சேரிகளில் சுப்புடு பாடகரின் இடதுப்பக்கம் இருக்க வேண்டியதாயிற்று. வயலின் வாசிப்பவர் வலதுப்பக்கம் அமர வேண்டும். இதுவொரு மரபுமீறல். அதனால் வயலின் கலைஞர்கள் பலர் அப்படி வாசிக்க சம்மதிக்கவில்லை.

இந்தக் காரணத்தால் சுப்புடுவின் இசைத்தொழில் பாதிக்கப்பட்டது. திருமண வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. அதனால் அவரது சொந்த வாழ்க்கை சோபிக்கவில்லை.

மேலும் படிக்க: பத்மஸ்ரீ விருது பெறும் நாதஸ்வர தம்பதிகள்!

ஆனால் நல்லூழ் கோலார் ராஜம்மாள் என்னும் சிறப்பானதொரு பாடகியின் வடிவில் வந்தது. ராஜம்மாள் தன்னுடைய இசைத் தொழிலை விட்டுவிட்டு சுப்புடுவிற்கு ஆதரவாக வந்தார் என்று எழுதுகிறார் லலிதாராம்.

கர்நாடக சங்கீத உலகம் இசைக் கலைஞர்கள் கூட்டு சேர்ந்து வளர்வதும், பின்பு பிரிவதுமான பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறது என்கிறார் லலிதா ராம். அன்றைய காலத்தில் பிரபலான பாடகர்களில் ஒருவரான செம்பை வைத்தியநாத பாகவதர் பாலக்காடு மணி ஐயருடன் சச்சரவு கொண்டபோது ராஜம்மாள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரை அணுகினார். சுப்புடுவின் மேதமையை வெளிக்கொண்டு வந்ததில் செம்பையின் பங்கு என்ன என்பது பற்றி முந்தைய கட்டுரையில் வாசித்திருக்கிறோம்.

சுப்புடுவைச் சேர்த்துக் கொள்ள பாகவதர் இரண்டு நிபந்தனைகள் விதித்தார். சுப்புடு பாடகருக்கு இசைவாக நுட்பமான தாளங்களை அடக்கியே வாசிக்க வேண்டும். இந்த நிபந்தனைக்கு ஈடாக சுப்புடுவுக்கு தனி ஆவரத்தனம் வாசிக்க வாய்ப்புகள் கொடுத்தார் பாகவதர். சுப்புடுவின் தனி ஆவர்த்தனங்களைக் கைதட்டி ரசித்ததோடு மேலும் வாசிக்கத் தூண்டினார் பாகவதர்.

கச்சேரிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் வாசிக்க வேண்டும் என்பது பாகவதர் சுப்புடுவிற்கு விதித்த இரண்டாவது நிபந்தனை. இரண்டு நிபந்தனைகளும் ஒப்புக்கொள்ளப்பட்டன. வளர்ந்து ஒரு நிலைக்கு உயர்ந்தவுடன் சுப்புடு தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று பாகவதர் விளக்கினார். அது இரண்டு வருடங்களில் நிகழ்ந்தது.

பாலக்காடு மணி ஐயர் முன்னணி மிருதங்க வித்வான் என்றால், அவருடன் சேர்ந்திருக்கும் உன்னத நிலைக்கு சுப்புடுவும் முன்னேறினார். ஜி.என்.சுப்ரமணியன் உட்பட பல பெரிய பாடகர்களுக்கு வாசித்த சுப்புடுவின் இசை வாழ்வு பரிமளித்தது.

ஜிஎன்பியும் சுப்புடுவும் நல்லதோர் இசை ஜோடி. அழகான ஜிஎன்பி செளகரியமான வாழ்க்கையை வாழ்ந்தார்; தி நகரில் வசித்த சுப்புடுவும் அப்படித்தான் வாழ்ந்தார். இருவருக்கும் கார்கள் வாங்குவது பிடிக்கும். வாசனைத் திரவியங்களும் பிடிக்கும். ஜிஎன்பி-சுப்புடு கச்சேரி காதுகளுக்கு மட்டுமல்ல நாசிகளுக்கும் நல்லதொரு விருந்து என்று சொல்கிறார் லலிதா ராம்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles