Read in : English

Share the Article

சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை குறைந்து வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், 504 ஓட்டுநர், 75 நடத்துநர் பணியிடங்கள், 246 தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ளன; போக்குவரத்துக் கழகத்தின் மிகப் பழைய பேருந்தின் வயது 17.4 ஆண்டுகள் என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற பதில்கள் கூறுகின்றன.

சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு வசதியாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தான்வாங்கும் பேருந்துகள் முழுவதையும் தாழ்தளப் பேருந்தாக வாங்க வேண்டும் என்று ஊனமுற்றோர் உரிமைச்சட்டம் 2016இன் பிரிவு 41இன் கீழ் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். நீண்ட காலம் நடந்த இந்த வழக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை ஆட்டம் காண வைத்தது.

புதிதாக வாங்கும் பேருந்துகளில் ஒரு பகுதியை இப்படி தாழ்தளப் பேருந்தாக வாங்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த வழக்கு முடிவுக்கு வந்தது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குறுகலான சாலைகள், வெள்ளம் சூழும் சுரங்க வழிகள், தற்போது நடந்துகொண்டிருக்கும் மெட்ரோ விரிவாக்கப் பணிகள் போன்ற காரணங்களால் எல்லா இடங்களிலும் தாழ்தளப் பேருந்துகளை இயக்க முடியாது; எனவே, எல்லாப் பேருந்துகளையும் அப்படி வாங்க முடியாது என்று போக்குவரத்துக் கழகம் விளக்கம் கூறியது.

ஆனால், தாழ்தளப் பேருந்துகள் இயக்க முடியாத அளவுக்கு உள்ள குடிமை வசதிகளை மேம்படுத்த முன்வராத அரசாங்கம், 450மி.மீ. அல்லது 650 மி.மீ. உயரமுள்ள படிக்கட்டுகளுக்குப் பதிலாக பாரம்பரியமான 900 மி.மீ. உயர படிக்கட்டுகள் கொண்ட பேருந்துகளையே வாங்க அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தை வேண்டிக்கொண்டது. இத்தகைய பாரம்பரிய படிக்கட்டுகள் பொதுப் பயனர்களுக்கும், குறிப்பாக வயோதிகர்கள், பெண்கள், சிறுவர்களுக்கு, தீங்கானது; சட்ட விரோதமானது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை காட்டும் வகையில், அணுகல் வசதியுள்ள 342 பேருந்துகளை வாங்கி, அவற்றை தேர்ந்தெடுத்த தடங்களில் இயக்குவதாக போக்குவரத்துக் கழகம் ஒப்புக்கொண்டுள்ளது. இவற்றுக்கு டெண்டர் விடும் வேலைகள் நடக்கின்றன.

பல பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கான பஸ் டிரிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்ட்ரல், அண்ணா நகர், அடையாறு, அயனாவரம், பெரம்பலூர் டெப்போக்களில்தான் அதிகபட்சமான டிரிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன

குறிப்பிட்ட நிறுத்தத்தில் தாழ்தளப் பேருந்துகள் எப்போது வரும் என்பதை மாற்றுத் திறனாளி பயணிகள் கைபேசி செயலிகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்பதை, எல்லா பேருந்துகளையும் இது போல வாங்கமுடியாது என்பதற்கான பரிகாரமாக நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது. தகவல் உரிமை மனுவுக்கு பதில் அளித்த போக்குவரத்துக் கழகம், மெட்ரோ நிலையங்கள், புறநகர்ப் பகுதிகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றுக்கு போக்குவரத்து வசதி செய்து தரும் வகையில், தாழ்தளப் பேருந்துகளையோ, சிறு பேருந்துகளையோ இயக்கும் திட்டம் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் போக்குவரத்து துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களின் வேகத்தைக் குறைத்துள்ளது. எனினும், ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் செயல்பாட்டுக்கு வந்து, அது பொதுமக்கள் கருத்துகளை, கேட்கிறது; இதில் சமூக ஊடகங்களுக்கு கவனம் தரப்படுகிறது.

மேலும் படிக்க: மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்துகள்: நீதிமன்ற ஆணை சிறிய வெற்றி!

பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம், நிலைமையை சிக்கலாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மானியமும், கட்டணம் அல்லாத வருவாயும் அதிகரிப்பது தேவையாக உள்ளது. இந்த இரண்டிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிலை வலுவாக இல்லை.

சீர்திருத்தங்களை வேகமாக அமல்படுத்தாமல் தவிர்ப்பதற்கு, மயிலாப்பூர், மந்தைவெளி, தியாகராய நகர், ஐ.டி. காரிடார், போரூர், பூந்தமல்லி, புரசைவாக்கம், மாதவரம் போகும் வழியில் உள்ள வடமேற்கு சென்னையின் சில பகுதிகள் போன்ற இடங்களில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மெட்ரோ விரிவாக்கப் பணிகளை சாக்குப் போக்காக பயன்படுத்துகிறது மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

பல பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கான பஸ் டிரிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்ட்ரல், அண்ணா நகர், அடையாறு, அயனாவரம், பெரம்பலூர் டெப்போக்களில்தான் அதிகபட்சமான டிரிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. 2023 ஜனவரியில் 22,121 டிரிப்புகளும், பிப்ரவரியில் 20,165 டிரிப்புகளும், மார்ச்சில் 21,795 டிரிப்புகளும், ஏப்ரலில் 22,216 டிரிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஆட்டோக்களுக்கு இவை ஒரு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மினி பஸ்கள் இயக்கப்படும் 74 தடங்களின் பட்டியலை உயர் நீதிமன்றத்தில் வழங்கியது மாநகரப் போக்குவரத்துக் கழகம். தகவல் உரிமை மனுவுக்கு இந்த ஆண்டு மே மாதம் வழங்கிய பதிலில் 106 மினி பஸ்களை இயக்குவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

அதன்படி பார்த்தால், ஒரு தடத்துக்கு 1.4 பஸ் வருகிறது. அதாவது பல மினி பஸ் தடங்களில் இயக்குவதற்கு இரண்டு மினி பேருந்துகள் கூட இல்லை. ஒரே பஸ்ஸே போய் போய் வரவேண்டியிருக்கிறது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறைதான் மினி பஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

மக்கள் தொகை இப்போதை விட குறைவாக இருந்த 1980கள், 1990களில் பேருந்துகள் இயக்கப்பட்ட பல குடியிருப்புப் பகுதிகளுக்கு படிப்படியாக பேருந்து இயக்கம் விலக்கப்படுகிறது. இதனால், பல பேருந்து இல்லாப் பகுதிகள் உருவாகி, அந்தப் பகுதிகள் எல்லாம் ஆட்டோக்களையும், சட்ட விரோத ஷேர் வேன்களையும் நம்பியே இருக்கும் நிலை உருவாகிறது

மக்கள் தொகை இப்போதை விட குறைவாக இருந்த 1980கள், 1990களில் பேருந்துகள் இயக்கப்பட்ட பல குடியிருப்புப் பகுதிகளுக்கு படிப்படியாக பேருந்து இயக்கம் விலக்கப்படுகிறது. இதனால், பல பேருந்து இல்லாப் பகுதிகள் உருவாகி, அந்தப் பகுதிகள் எல்லாம் ஆட்டோக்களையும், சட்ட விரோத ஷேர் வேன்களையும் நம்பியே இருக்கும் நிலை உருவாகிறது.

வருவாய் குறைவதால் அந்தப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் கூறுகிறது. ஆனால், போக்குவரத்துக்கு மக்கள் செலவிடும் தொகை ஆட்டோக்களுக்கும், முறைப்படுத்தப்படாத ஷேர் ஆட்டோக்களுக்கும் செல்கிறது.

கார்களுக்கும், பைக்குகளுக்கும் வசதி செய்வதற்காக சென்னை நகர சாலைகள் மீண்டும்மீண்டும் போடப்படுகின்றன. ஆனால், இழப்பு ஏற்படுவதாக கூறி மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து இயக்கம் விரிவாக்கப்படுவதில்லை. சாலைகளைப் போடுவதற்கு வரி கட்டும், கார் இல்லாத குடிமக்களின் போக்குவரத்து உரிமை இதனால் மறுக்கப்படுகிறது.

மேலும் படிக்க: சிக்கனமான பயணம்: சென்னையில் சாத்தியமா?

பேருந்து செல்லும் சாலைகளுக்காக சென்னை மாநகராட்சி கடந்த மார்ச்சில் ரூ.881 கோடி ஒதுக்கியது. ஆனால், கேபிள், பைப் போன்றவை பதிக்கவும், குடிநீர் குழாய்களை பழுதுபார்க்கவும் அவ்வப்போது சாலைகளை வெட்டும்போது அவற்றை உடனடியாக சரி செய்யாமல் இருப்பதால் நிலைமை மோசமடைவதுடன் தாமதித்து நிலைமை மோசமாக அனுமதித்து பேருந்துகளுக்கும், பிற வண்டிகளுக்கும் சேதாரத்தையும் ஏற்படுத்துகிறது சென்னை மாநகராட்சி.

சென்னையில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது கார், பைக்குகளே நல்லது என்று தோன்றும் வகையில், பொதுப் போக்குவரத்தை அளவிலும், பண்பிலும் சிதைப்பது என்ற அமெரிக்க உத்தியை ஒத்திருக்கிறது. காலாவதியான, தரமற்ற பேருந்துகளைக் கொண்டு பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்குவது மட்டுமே விதிவிலக்கு. ஆனால், அமெரிக்காவிலும்கூட சில பெரிய நகரங்களில் எல்லோருக்கும் இலவசப் பேருந்து சேவை கிடைக்கிறது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை மூலம் நிறைய பொதுமக்கள் கலந்தாய்வுகளை நடத்துவதை, சென்னையில் பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதமாக காட்டுவதே திமுக அரசாங்கத்தின் அணுகுமுறை. ஆனால் வழக்கமான பேருந்துகளை இயக்குவது, தட விவரங்களை முடிவு செய்வது, தடங்களை அனுமதிப்பது, ரத்து செய்வது ஆகியவற்றை வெளிப்படைத் தன்மையின்றி செய்வது, சில நேரங்களில் சில தடங்களை அனுமதிப்பது தொடர்பாக முதல்வரின் குறைதீர்க்கும் பிரிவு எடுக்கும் முடிவுகளைக் கூட உதாசீனம் செய்வது என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.

போக்குவரத்துக் கழகத்துக்கு வரவேண்டிய வருவாயை உறிஞ்சும் ஷேர் ஆட்டோக்களை மாநிலப் போக்குவரத்துத் துறை முறைப்படுத்துவதில்லை. பஸ் டெப்போக்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் இடையில் மட்டும் இயக்கும் வகையில் இவற்றை முறைப்படுத்த முடியும்.

வழக்கமான ஆட்டோக்களின் கட்டண நிர்ணயமும் நிலுவையில் உள்ளது. போக்குவரத்துக் கொள்கை மொத்தமாக செயலிழந்திருப்பதால், திருத்தப்பட்ட மோட்டார் வண்டிகள் சட்டம் 2019இன் கீழ் சென்னை மெட்ரோ நிறுவனம் இணைப்பு சேவைகளை வழங்குவதும் சிக்கலில் உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய சென்னைப் பயணிகள்தான்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles