Read in : English

எம்மைப்பற்றி

சமூக ஊடகக் காலத்தில் இதழியலைத் தொழில்சுத்தத்துடன் வழங்க இன்மதி.காம் விழைகிறது. வெகுஜன ஊடகம் வியாபார நோக்கத்துடன் களமிறங்கிவிட்ட சூழலில், ஊடகத்தின் உள்ளடக்கம் விளம்பரம், வணிகம், அரசியல் போன்ற காரணங்களால் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. விமர்சனப் பார்வை கொண்ட உள்ளடக்கம் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது அல்லது சார்புநிலையில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

சமூக ஊடகம் கோலோச்சும் இந்தக் காலத்தில், வணிகம், அரசியல், கொள்கை சார்ந்த காரணங்கள் ஊடகத்தின் உள்ளடக்க உருவாக்கத்தில் தலையிடும்போது, வெகுமக்களின் பாதுகாவலனாகப் பணியாற்ற வேண்டிய ஊடகம் தன் கடமையிலிருந்து தவறிவிடுகிறது. இந்தச் சூழலில் வெகுஜன ஊடகத்துக்கு மாற்றாக இருப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டது சமூக ஊடகம். ஆனால், கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்னும் இயல்பு காரணமாகவும் முறையான செய்தி வெளியீட்டு நடைமுறை இல்லாததாலும் சமூக ஊடகத்தில் புரளிகளும் வதந்திகளும் சரிபார்க்கப்படாத தகவல்களும் முழுமைபெறாத அறிக்கைகளும் நிரம்பிவழிகின்றன.

இன்மதி.காம், தமிழ் சார்ந்த அம்சங்களை மையமாகக் கொண்ட சுயாதீன இதழியலுக்கான, நீடித்திருக்கக்கூடிய ஒரு மேடை அமைக்க விழையும் இருமொழி மின்னிதழாகச் செயல்படுகிறது. இந்த இதழ், வாசகர் சமூகத்தின் முழுமையான பங்களிப்பைக் கோருகிறது. வாசகர் சமூகம் உள்ளடக்கத்தை வாசிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் உள்ளடக்கம் குறித்த ஆலோசனைகளைத் தெரிவித்து, நடுநிலை மற்றும் ஆக்கபூர்வமான தன்மைகளுடனான தரமான இதழியல் உள்ளடக்கத்தை உருவாக்க உறுதுணை புரியும்வகையில் செயல்படுவதை ஊக்குவிக்கிறது. வெகுசன ஊடகத்தில் இருக்கும் கட்டுகளின்றிச் செயல்படும் அதே நேரத்தில், இன்மதி. காம் இணைய இதழில் கட்டுக்கோப்பான செய்தி வெளியீட்டு நடைமுறை பின்பற்றப்படுவதால் எந்தச் சார்புமற்ற வகையில், மறைக்கப்படாத கூட்டிக் குறைக்கப்படாத தகவல்களுடன் கூடிய, எந்தச் சித்தாந்தத்தையும் ஊட்டி வளர்க்கும் தன்மையற்ற உள்ளடக்கமே வெளியாகும் என உறுதி தருகிறது.

இன்மதி.காம் இதழ், தனது இருப்பாலும் பராமரிப்பாலும் வெகுஜன ஊடகத்துக்கான மாதிரியாகச் செயல்பட விழைகிறது. அதாவது, உண்மையான விமர்சனத்துடனும், எதிர்த் தரப்பு குறித்த அக்கறையுடனுமான இதழியலை, தனிப்பட்ட நோக்கத்துடன் நிதி உதவி அளிக்கும் எவரையும் சாராது சொந்தக் காலில் நின்று நடத்திடும்போது, நல்ல சமூகத்தை உருவாக்க விழையும் இதழியல் நடைமுறைகளை வளர்த்தெடுக்க இயலும் என்பதில் இன்மதி.காம் நம்பிக்கை கொள்கிறது; அப்படியொரு இதழாகவே இன்மதி. காம் இதழ் நடத்தப்படுகிறது.

இன்மதி.காம் இதழின் நிறுவனரும் ஆசிரியருமான எம். கல்யாணராமன், அச்சு ஊடகத்திலும் காட்சி ஊடகத்திலும் பங்களித்த, சென்னையைச் சார்ந்த இதழாளர். அடிப்படையில் கப்பல் பொறியியலாளரான இவரது சிறுவயது விருப்பம், கனவு இதழியலே. இவர் பள்ளியில் பயின்றபோது, ஆல் த பிரசிடெண்ட்ஸ் மென் என்னும் ஆங்கில நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை வாசித்தபோது, அமெரிக்க வாட்டர்கேட் ஊழலுக்கும் அப்போது இந்தியாவைக் கலக்கிய போபர்ஸ் ஊழலுக்குமிடையிலான ஒற்றுமைகள் அவரை வியக்கவைத்தன. அதன் பின்னர் தான் இவருக்கு ஒழுங்குடனான இதழியல் மீது பெரும் பிடிப்பு உண்டானது. பொறியியல் கல்லூரியில் பயின்றபோது, கல்லூரி அளவில் இதழ் ஒன்றை நடத்தியுள்ளார். அவர் கல்லூரியிலிருந்து வந்த பின்னரும் சில ஆண்டுகள் அந்த இதழ் வெளியாகியுள்ளது. இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்ற பின்னர், அவர் கப்பல் பணியில் சேர்ந்தார். ஆனாலும், அடிக்கடி செய்தி இதழ்களிலும் பிற பிரசுர நிறுவனங்களிலும் சுயாதீனமாக எழுதிவந்தார்.

இதற்கிடையே கப்பல் பொறியாளராகவும் மேம்பட்டுவந்தார். திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் கப்பல்களை இயக்குவதைக் கற்றதில் இந்தியாவில் இவர்தான் முன்னோடி. ஆனால், 30 வயதில் இவர் இதழியல் பணிகள் சார்ந்து தன் பாதையை மாற்றினார். சென்னையில் இருந்து செய்திகளை எழுத முனைந்தார். அப்போதுதான் உயர்ந்த தரத்துடன் கூடிய இதழியல் பயிற்சி தனக்குத் தேவை என்பதை உணர்ந்தார். ஆகவே, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில், 2002-03ஆம் ஆண்டில் இதழியலில் முதுநிலைப் பட்டப் படிப்பு பயின்றார். அமெரிக்காவில் சில காலம் இதழியல் பணிகளை மேற்கொண்டார். கல்யான், சென்னைக்கு 2001இல் திரும்பிவந்தார்.

இந்து ஆங்கில இதழ், டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ், புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் முதன்மையான பொறுப்புகளை வகித்துவந்தார். அந்தப் பங்களிப்புகளில் கிடைத்த அனுபவம் காரணமாக தமிழ்நாட்டில் சுயாதீன இதழியலின் தேவையை உணர்ந்தார். 2017-18 ஆம் ஆண்டில் தொடங்கி பத்து மாதங்கள் நடத்தினார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, 2021 செப்டம்பர் மாதத்தில் இன்மதி.காம் இதழை மீண்டும் தொடங்கி நடத்திவருகிறார்.

உங்களது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எங்களுக்கு editor@inmathi.com என்ற மின்னஞ்சல் வழியாகத் தெரிவியுங்கள். பெரிய முதலீட்டார்களைவிட அதிகப்படியான எண்ணிக்கையிலான சந்தாதாரர்களின் ஆதரவையே இன்மதி விழைகிறது. அவர்கள் இன்மதியின் மதிப்புமிகு உள்ளடக்கத்துக்கு வாசகர்களாக இருப்பதுடன் உள்ளடக்கத்தை வடிவமைப்பதிலும் பங்களிக்கலாம். சந்தா செலுத்த இணைப்பைப் சொடுக்குக.

ஆசிரியர் குழு

எம். கல்யாணராமன்

எம். கல்யாணராமன்

இன்மதி இணைய தளத்தின் நிறுவன ஆசிரியர். மெரைன் என்ஜினியர். பத்திரிகையாளரான இவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்றவர்.
பொன். தனசேகரன்

பொன். தனசேகரன்

இனமதி இணைய தளத்தின் தமிழ்ப்பிரிவு பொறுப்பாசிரியர். தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர். தமிழ்நாட்டில் பஞ்சாயத்துகளில் பெண்கள் குறித்த செய்திக் கட்டுரைக்காக 2008இல் தி ஹங்கர் புராஜக்ட் வழங்கிய Êசரோஜினி நாயுடு பரிசு பெற்றவர். அத்துடன், Ðபானோஸ் சௌத் ஏசியா மீடியா ஃபெல்லோஷிப் பெற்றவர்.
அம்ரிதா பாலாஜி

அம்ரிதா பாலாஜி

அம்ரிதா பாலாஜி மக்கள் தகவல் தொடர்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். அம்ரிதா தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தில் மின் நூல் ஆசிரியராகப் பங்களித்துள்ளார். இவர் இன்மதி.காம் இதழின் சமூக ஊடகப் பிரிவின் ஆசிரியர்.

வினோத் எஸ்

வினோத் எஸ்

வினோத் நிபுணத்துவமிக்கப் படத் தொகுப்பாளர். படத் தொகுப்புத் துறையில் 18 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர். அண்மைக்காலப் படத் தொகுப்பு மென்பொருள்களைக் கையாள்வதில் நிபுணர். சிபி.காம் இணையதளத்திலும் பி.ஏ.ஜி. லிமிடெட் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

கட்டுரையாளர்கள்

பி. கண்ணப்பன்

பி. கண்ணப்பன்

ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. (புலனாய்வு)
ஜி. அனந்தகிருஷ்ணன்

ஜி. அனந்தகிருஷ்ணன்

சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர். தி இந்து நாளிதழில் சீனியர் எடிட்டராக இருந்தவர். Ðகருத்துப் பக்கங்களில் கட்டுரைகள் எழுதியவர். செய்திப் பத்திரிகைகளை மேலாண்மை செய்வதில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். நகர்ப்புற விவகாரங்கள், சுற்றுச்சூழல், வளர்ச்சி, நலத் திட்டங்கள் போன்ற விஷயங்கள் குறித்து கொள்கை, நிர்வாகம் குறித்த கோணங்களில் எழுதுவதில் ஆர்வம் காட்டி வருபவர்.
இணைய உலகம் அனுமதிக்கும் பல்வகைப்பட்ட ஊடகங்கள் மற்றும் தொடர்புப்பரிமாற்றங்களை முழுமையாகச் சாத்தியமாக்கி வழங்கிட “இன்மதி” திட்டமிடுகிறது. தகவல் காப்பாளராக இருக்கும் மரபுவழிப்பட்ட ஊடகச்செயல்பாடு இன்றைய எண்முறை(டிஜிட்டல்)உலகிற்கு முழுக்கப்பொருந்தாது என்பதை “இன்மதி” புரிந்து கொள்கிறது.

Read in : English