Read in : English
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக இந்நேரம் காணாமல் போயிருக்க வேண்டும்; பாஜகவால் விழுங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அஇஅதிமுக விடுவதாக இல்லை. பொதுவாக அஇஅதிமுகவின் வாக்குவங்கி அவ்வளவு எளிதாக பாஜகவுக்கு மாறி விடாது.
இந்த 2024-ல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை ஆட்டிப் படைத்த பிரச்சினைகள் ஆகப்பெரியவை; பரந்துபட்டவை. பாஜக அரசியலமைப்புச் சட்டத்தை நோண்டி இந்திய ஜனநாயகத்தைச் செயலிழக்கச் செய்யக் கூடிய சாத்தியமும் அந்தப் பிரச்சினைகளில் ஒன்று. ஆனால் தேர்தல் பரப்புரையில் மையம் கொண்ட இந்தத் தேசிய பிரச்சினைகளில் எல்லாம் நிலைப்பாடும் எதுவும் இல்லாத கட்சி அஇஅதிமுக.
இப்போது அது வசீகரமான தலைமை இல்லாத ஓர் அரசியல் கட்சி. அதன் கருத்தியல் கொள்கைகள் மெலிந்து, ஜீவனற்று கிடக்கின்றன. தொலைதூரத்துக் கடந்தகாலத்திய நாயக வழிபாடுகளையும், இனிமையான ஞாபகங்களையும் மட்டுமே சார்ந்து அந்தக் கட்சி செயல்படுகிறது. அதன் தற்போதைய தலைவரான எடப்பாடியார் கட்சியின் முக்கிய தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார் என்பதைத் தவிர அவருக்கென்று சிறப்பான பேரும் புகழும் ஒன்றும் இல்லை.
பாஜகவை விட, எடப்பாடிதான் தேர்தலில் தனியாக நின்று தன் கட்சியின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளார்
ஆனாலும் அஇஅதிமுக கூட்டணி 25 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும் 26 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பாஜகவை விட, எடப்பாடிதான் தேர்தலில் தனியாக நின்று தன் கட்சியின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளார். தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட்டு 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. சுமார் 10 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன, குறிப்பாக ஓ. பன்னீர்ச்செல்வமும் டிடிவி தினகரனும்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செயல்திறனை 2019 –ஆம் ஆண்டுத் தேர்தலோடு அல்ல, அது தனித்துப் போட்டியிட்ட 2014-ஆம் ஆண்டுத் தேர்தலோடு ஒப்பிட வேண்டும். அப்போது மோடியின் கீர்த்தி உச்சத்தில் இருந்தது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் அப்போது இருந்தனர். “மோடியா அல்லது லேடியா?” என்று கேட்டுக் கொண்டே ஜெயலலிதா எழுப்பிய பிரச்சாரக் கோஷம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக பாஜக இருந்தது.
அப்போது தேமுதிக, பாமக, மதிமுக கட்சிகள் இப்போது இருப்பதை விட மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. ஆனால் கன்னியாகுமரியில் பாஜகவும், தர்மபுரியில் பாமகவும் என இரண்டு தொகுதிகளில் அந்தக் கூட்டணி வெற்றிப் பெற்றது.
பாஜக ஒன்பது இடங்களில் மட்டுமே போட்டியிட்ட போதிலும் அல்லது அது இப்போது போட்டியிட்டதில் பாதிக்கும் குறைவான தொகுதிகளில் அப்போது போட்டியிட்டிருந்தாலும் ஆறு சதவீதத்திற்குக் குறைவான வாக்குகளைப் பெற்றது. 2014-ல் விஜயகாந்தின் தலைமையிலான தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகித்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்த 2024-ல் பல தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன் உள்ளூர் தலைவர்கள் இப்போது அதிக கவனம் பெற்றுள்ளனர் என்பதை அது காட்டுகிறது. அவர்கள் முன்பை விட இப்போது அதிகமாக கண்ணுக்குத் தெரிகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் நன்றாகப் பளிச்சென்று தெரிகின்றன. ஆனாலும் மதிமுக, தேமுதிக., பாமக போன்ற மூன்றாம் நிலைக் கட்சிகள் பல ஆண்டுகளாக பலவீனமடைந்த போதிலும், ஒட்டுமொத்தமாகப் பாஜகவின் வாக்குச் சதவீதம் போதிய அளவு உயரவில்லை.
சமீபகாலமாகப் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் பரவலான வெளிச்சம், பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தொடர்ப்பிரச்சாரம், பத்தாண்டுக் கால மின்னல் வேக விளம்புர உத்திகள், தலைமைத்துவ வெளிப்பாடுகள், அண்ணாமலைக்குக் கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவம் ஆகியவற்றால் உருவானது. ஊடகங்களும் அண்ணாமலையிடம் அதிக ஆர்வம் காட்டுகின்றன. மத்திய முகமைகளுடன் இணைந்து ரெய்டுகளை கட்டவிழ்த்து விட்டுத் திமுகவை கடுமையாகத் தாக்கி வருகிறார் அவர். சமூக ஊடகங்களிலும் மற்றும் மைய நீரோடை ஊடகங்களிலும் அதிகமாகவே அவர் முன்னிறுத்தப்படுகிறார்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் திமுகவுக்கு எதிராகச் சட்டம் ஒழுங்கு மற்றும் ஊழலற்ற குணத்தைப் போதிப்பதாக, முன்னால் காவல்துறை அதிகாரி என்ற அவரது பிம்பம் பலமாகக் கருதப்படுகிறது. என்றாலும், தரவுகள் சொல்லும் செய்தி இதுதான்: 2014-உடன் ஒப்பிடும்போது பாஜக பெற்ற வாக்குப்பங்கு இரட்டிப்பாகியுள்ளது என்னமோ உண்மைதான். ஆனால் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும்தான் இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளதே. உண்மையில் இன்றைய தமிழகத்தில் பாஜகவின் கம்பீரமான தோற்றத்திற்குப் பொருந்தக்கூடிய வளர்ச்சி அல்ல அது. ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டில் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 ஆம் ஆண்டின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தாலும், கடந்த பத்தாண்டு பாஜக எடுத்த தீவிரமான முயற்சிகளுக்கு ஏற்ப இல்லை 2024-ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்.
2026-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ்நாட்டுத் தலைமைக்கு அஇஅதிமுக உரிமை கொண்டாடலாம்; பெரும்பான்மைத் தொகுதிகளைக் கேட்டுப் பெறலாம்
2024-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜகவின் நிலைமைக்கான ஒரு பரிசோதனை என்றால், மூன்றாவது இடத்திற்கு உரிமை கோருவதற்கு எந்தக் கட்சியும் இல்லாத போதிலும், பாஜக இன்னும் மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் மட்டுமே உள்ளது என்பதை வாக்குப் பங்குப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தாண்டுத் தேர்தல் அஇஅதிமுகவின் முக்கியத்துவத்திற்கான பரிசோதனை என்றால், நிச்சயமாக எடப்பாடி தன்னை ஓரளவுக்கு நிரூபித்து விட்டார் எனலாம். தேசம் முழுவதும், பிராந்தியக் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இறுதியில் தங்கள் அடையாளத்தையும் வலிமையையும் விலையாகக் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டன.
இப்போது பெற்றிருக்கும் வாக்குச் சதவீதங்களைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அஇஅதிமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கைகோர்த்திருந்தால் அந்த உறவு ஆகப்பெரிய பலமான கூட்டணியாக இருந்திருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிறைய தொகுதிகள் கிடைத்திருக்கும்.
எனவே, 2026-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ்நாட்டுத் தலைமைக்கு அஇஅதிமுக உரிமை கொண்டாடலாம்; பெரும்பான்மைத் தொகுதிகளைக் கேட்டுப் பெறலாம். மேலும், சட்டமன்றத் தேர்தல் மாநிலத்திற்கு மட்டுமே என்பதால், இந்த 2024-ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பெற்றதை விட, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக-வால் அதிக வாக்குகளைப் பெற முடியும்.
(வசீகரமிக்க எம்ஜிஆர் காலத்து அஇஅதிமுக 1980-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இரண்டே இரண்டுத் தொகுதிகளை மட்டும் வென்று தோற்றாலும், அதே ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லையா?)
புதுடெல்லியில் வரவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளைப் பெறாவிட்டால் (நிச்சயமில்லாத விசயம் இது), பாஜக கூட்டணிக் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கைக்கோர்க்கலாம்.
அஇஅதிமுக வாக்காளர்கள் சும்மா பாஜக வாக்காளர்களாக மாற மாட்டார்கள் என்று தோன்றுகிறது. பாஜகவின் வாக்குவங்கி பொதுவாக நகர்ப்புறத்து மற்றும் மிகவும் வசதியான மக்களை உள்ளடக்கியது. அஇஅதிமுக வாக்காளர்கள் இதற்கு நேர்மாறானவர்கள்.
இன்னும் காவி அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதுதான் இன்றைய தீர்ப்பு. சும்மாச் சும்மா திராவிடக் கட்சிகளான திமுகவையும் அஇஅதிமுகவையும் வெறும் ஊழல் வழக்கு ஆயுதத்தால் பயமுறுத்துவது வேலைக்கு ஆகாது என்பதைப் பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.
Read in : English