Read in : English

Share the Article

ஒருவருடன் உரையாட வேண்டுமென்றால், அவர் பேசும் மொழி என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். அதில் உரையாடும் ஆற்றல் நமக்கிருக்க வேண்டும். அதேநேரத்தில், உலகில் எந்த மொழி பேசுபவருடனும் உறவாட இசை தெரிந்தால் போதும். அந்த எளிய வழியைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல; அந்த இசைஞன் மிக மிக எளிதானதாகத் தனது படைப்பை உருவாக்கினால் மட்டுமே அது சாத்தியம். மெல்லிய நகையை வார்ப்பதற்கு கடுமையாகச் சிரமப்படுவதைப் போல, நம் காதுகளுக்குள் எளிதாகப் புகுந்து எப்போதும் நிலைத்துவிடுகிற மாதிரியான இசையைத் தருவது பெரும் சவால். அப்படியொரு இசைஞன் தான் இளையராஜா; அப்படியொரு படைப்புதான் அவரது தனி ஆல்பமான ‘ஹௌ டூ நேம் இட்’. அதன் இரண்டாம் பாகம் வெளிவரப்போவதாக அவர் அறிவித்திருப்பது ஒருபக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், இன்னொரு புறம் இதுவும் காலத்தால் நிலைத்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்தை போலவே இன்னொரு ஆச்சர்யம் இளையராஜா. எங்கோ பிறந்து, எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு ஆளாகி, தமக்கான கலையை இறுகப் பற்றி கற்றுத் தெளிந்து அதனை பரீட்சித்துப் பார்த்து ரசிகர்களின் ரசனை வட்டத்திற்குள் சுழல விடுவதெல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட மேதைமை. கற்பனையிலும் கூட அடங்காத திருப்பங்கள் அவரது இசை வாழ்க்கையினுள் உண்டு. அவர் தொட்ட உயரங்களும் தேக்கி வைத்திருக்கும் அனுபவங்களும் பல பேரின் மொத்த வாழ்க்கையைப் பதிலீடாகக் கேட்கும். ராஜாவுக்கு மட்டுமல்ல, அவரைப் போன்று உலகளவில் சாதனை படைத்த பலரும் இந்த வரையறைக்குள் அடங்குவர்.

ராஜா தந்த ‘ஹௌ டூ நேம் இட்’ மற்றும் ‘நத்தின் பட் விண்ட்’ தனி ஆல்பங்கள்’கீதாஞ்சலி’, ’ரமண மாலை, ’தி மியூசிக் மெசையா, ‘திருவாசகம்’ போன்ற ஆன்மிக இசை ஆல்பங்களை தந்திருந்தாலும்ராஜாவின் கர்நாடகமேற்கத்திய இசைக்கற்பனைகளின் கலவை நேர்த்தியை உச்சம் தொட வைத்தவை இவ்விரண்டு ஆல்பங்கள்தான்.

சுயமாக இசையைக் கற்று தேர்வது, திரையிசையில் நுழைய ஆசைப்பட்டு கர்நாடக இசையையும் மேற்கத்திய இசை பாணியையும் நெறிமுறைகளுடனும் நுணுக்கங்களுடனும் கற்பது, இசையமைப்பாளர் வாய்ப்பு கிடைத்தபிறகு கற்றதையெல்லாம் சோதித்துப் பார்ப்பது என்று மூன்று வகையாக ராஜாவின் இசை வாழ்க்கையைப் பிரிக்கலாம். அதாவது 14 வயதில் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற பெயரில் தனது சகோதரர் பாவலர் வரதராஜனோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் இசைக்கச்சேரி செய்தது முதல் பருவம். பதினெட்டு வயதில் இசையமைப்பாளர் கனவோடு சென்னைக்கு வந்து சலீல் சவுத்ரி, ஜி.தேவராஜன், தட்சிணாமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார் போன்றவர்களிடம் இசைக்கலைஞராகவும் உதவியாளராகவும் பணியாற்றியதோடு, தன்ராஜ் மாஸ்டர் மற்றும் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் மேற்கத்திய, கர்நாடக இசைப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்து தனது தேடலைக் கண்டடைந்தது இரண்டாம் பருவம். தனது 33ஆவது வயதில் பஞ்சு அருணாசலம் தந்த வாய்ப்பினால் ‘அன்னக்கிளி’ மூலமாகத் திரையுலகில் நுழைந்து எண்பதுகளில் தான் கற்ற வித்தைகளை கலையின் மேம்பட்ட வடிவமாக்கித் தனது மேதைமையைப் பரீட்சித்துப் பார்த்தது மூன்றாம் பருவம். இந்த காலகட்டத்தின் உச்சமாக நான் கருதுவது, ராஜா தந்த ‘ஹௌ டூ நேம் இட்’ மற்றும் ‘நத்தின் பட் விண்ட்’ தனி ஆல்பங்கள்.

’உல்லாசப் பறவைகள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘தர்மயுத்தம்’ காலத்திலேயே திரையிசையில் விதவிதமான பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு இசைக்கோர்வைகளையும் இடையிசையினையும் வழங்கிய இளையராஜா, திரைப்படக் காட்சிகள் மூலமாக மக்களிடம் கொண்டுசேர்க்க முடியாத இசைக் கற்பனைகளுக்கு வடிவம் தர உதவியவை இந்த ஆல்பங்கள்தான். ’கீதாஞ்சலி’, ’ரமண மாலை’, ’தி மியூசிக் மெசையா’, ‘திருவாசகம்’ போன்ற ஆன்மிக இசை ஆல்பங்களை தந்திருந்தாலும், ராஜாவின் கர்நாடக, மேற்கத்திய இசைக்கற்பனைகளின் கலவை நேர்த்தியை உச்சம் தொட வைத்தவை இவ்விரண்டு ஆல்பங்கள்தான்.

குறிப்பாக, 1986இல் வெளியான ‘ஹௌ டூ நேம் இட்’ ஆல்பமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் இசையமைக்க நேரமில்லாமல் ஓடியாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியானது. ஒரே நாளில் காலையில் ஒரு படத்திற்கான கம்போஸிங், மதியம் வேறொரு பட்த்திற்கான பாடல் பதிவு, மாலையில் அடுத்த படத்திற்கான பணிகள் பின்னணி இசைக்கோர்ப்பு என்று சுற்றிச் சுழன்றவர் இளையராஜா. ஒரு ரீல் பின்னணி இசைக்காக பத்து பதினைந்து நாட்கள் செலவிடும் இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, அதிகபட்சம் மூன்றே நாட்களில் ஒரு படத்தின் பின்னணி இசையை இழைய விட்டதெல்லாம் வரலாற்றின் ஆச்சர்யப் பக்கங்கள். அப்படிப்பட்டவர் வேண்டும் என்று விரும்பியதை என்னவென்று சொல்வது? அதுவே ‘ராஜ இசை’யின் தொடக்கம்.

ஓர் இசைக்கலைஞனுக்கு பணம், புகழ், மக்களின் அபிமானம் தாண்டி சுயதிருப்தியை நோக்கிச் செல்லும் பயணம் மிக முக்கியமான ஒன்று. அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள், தொட்டதெல்லாம் துலங்கும் நேரம், ஓய்வில்லா உழைப்பு போன்றவற்றால் திரையிசையில் சிகரத்தைத் தொட்ட இளையராஜா, அகில இந்திய அளவிலான புகழுக்காக இந்தி திரையுலகில் கொடி நாட்ட விரும்பவில்லை; அதே நேரத்தில், தொண்ணூறுகளின் முற்பகுதியில் திரையிசையில் தான் தொடர்ந்துவந்த பரீட்சார்த்த முயற்சிகளைக் கைவிட்டார். ஒரு திரைக்கதையின் தன்மைக்கேற்ற இசையைத் தருவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். காலத்தைத் தாண்டிய, காலத்தால் நிலைத்திருக்கும் படைப்புகளை விரும்பிய படைப்பாளிகள் மிகக்குறைவாகவே இருக்க, உத்தரவாதமான வணிக வெற்றியை விரும்பிய பெரும்பாலான திரைக்கலைஞர்களுக்கு ராஜாவின் கற்பனை எல்லையை விரிவாக்கும் யோசனை தோன்றவே இல்லை. இதனால், சிகரத்தில் ஏறியவர் அங்கேயே நின்றுகொண்டார். அதுவே ‘இன்னும்.. இன்னும்..’ என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்குத் திகட்டிப்போன உணர்வைத் தந்தது. அதனால், சர்வசாதாரணமாக ராஜா தந்த பல பொக்கிஷங்கள் வந்த வேகத்தில் மின்னி மறைந்தன.

2000களில் ‘காதலுக்கு மரியாதை’, ‘காதல் கவிதை’, ‘டைம்’, ‘ஹேராம்’, ‘சேது’ என்று முழுக்க ஹிட் பாடல்கள் அமைந்த திரைப்படங்கள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த நேரத்தில் ஆன்மிகம், தமிழ் கவிதை மற்றும் செய்யுள், புகைப்படக்கலை என்று ராஜாவின் ஆர்வம் வேறு திசையில் விரிந்தது. அதனால் ‘ஹௌ டூ நேம் இட்’ போன்ற ஒரு ஆல்பத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கவே இல்லை. ராஜாவின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தந்த காலமிது.

2000ஆவது ஆண்டு தொடங்கி இப்போதுவரை, இளையராஜா இசையமைக்கும் படங்களும் அவரது இசையும் என்னதான் பாராட்டுகளைப் பெற்றாலும், அவை எதுவும் தொண்ணூறுகளுக்கு முந்தைய வீச்சை சிறிதளவு கூட பிரதிபலிக்கவில்லை என்பது உண்மை.

1986இல் வெளிவந்தாலும், இப்போதும் ‘ப்ரெஷ்’ உணர்வை ஏற்படுத்தும் ‘ஹௌ டூ நேம் இட்’. அன்று தொடங்கி இன்றுவரை எல்லா பள்ளி, கல்லூரி கலை கலாச்சார போட்டிகளில் இந்த இசைக்கோர்வைக்கு நீங்காத இடம் இருந்து வருகிறது. எத்தனையோ கருப்பொருளுக்கு ராஜாவின் இசை உருவம் தந்திருக்கிறது ஒரு ‘ராஜ திரவம்’ போல..! இந்த ஆல்பத்தில் உள்ள 10 கோர்வைகளில் தியாகராஜருக்கும் ஜெர்மனியின் இசை மேதை ஜோகன் செபாஸ்டியன் பாச்சுக்கும் மரியாதை செய்திருப்பார். இதிலுள்ள ‘டூ எனிதிங்’ இசைதான் பாலு மகேந்திராவின் ‘வீடு’ படத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆல்பத்துக்காக செதுக்கி கைவிட்ட கோர்வைகளில் ஒன்று ‘வளையோசை கலகலவென’ பாடலாக உயிர் பெற்றது. இந்தியாவிலும் உலக அளவிலும் பல இசை மேதைகள் ராஜாவை நெருக்கமாக உணர வைத்தது இந்த படைப்புதான். அதனைப் பிரதியெடுப்பது ராஜாவாலேயே முடியாத காரியம்.

மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, சுசீந்திரனின் ‘அழகர்சாமியின் குதிரை’ போன்ற படங்களின் பிஜிஎம் நமக்குள் பிரமாண்டத்தை உருவாக்கினாலும், தொண்ணூறுகளில் ராஜா தந்த உயிரோட்டம் அந்த இசையில் இல்லை என்றே தோன்றுகிறது. இயல்பாக மரத்தில் பூத்து காய்த்து கனிவதற்கும் செய்ற்கையாக கனியூட்டப்படுவதற்குமான வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது. ‘கடைசி விவசாயி’ போன்ற ஒரு படத்தில் ராஜாவின் மண் மணம் ஒட்டவில்லையே என்று ஏக்கம் உயர்ந்து தணிவதற்குள் ‘ஹௌ டூ நேம் இட் 2’ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ராஜா.

 திரைப்படங்களில் அடுத்த பாகங்கள் வருவதைப் போன்றுதனது இசை வேட்கைக்கும் இரண்டாம் பாகம் தர ஆசைப்பட்டிருக்கிறார் எண்பதுகளில் அவரிடம் இருந்த கட்டுடைக்கும் ஆவலும் மூர்க்கமும் இன்று அவருக்கு கிடையாது.

திரைப்படங்களில் அடுத்த பாகங்கள் வருவதைப் போன்று, தனது இசை வேட்கைக்கும் இரண்டாம் பாகம் தர ஆசைப்பட்டிருக்கிறார் இளையராஜா. அது தேவையற்ற ஒன்று. ரோஜாவுக்கு என்ன பெயர் வைத்தாலும், அதன் மணம் எப்படி மாறும்?!

எண்பதுகளில் அவரிடம் இருந்த கட்டுடைக்கும் ஆவலும் மூர்க்கமும் இன்று அவருக்கு கிடையாது. மலை மீதிருக்கும் மனிதன் விண்ணோக்கி கைகளை அசைத்து பறக்க முற்படும் சூழல் இன்றிருக்கிறது. எவருக்கும் தனது மேதைமையை நிரூபணம் செய்யத் தேவையற்ற நிலை அது. வெற்றி தோல்வி உட்பட எந்த நிர்ணயங்களும் இனி ராஜாவின் உயரத்தை அளவிட முடியாது. இப்போது, ரசிகர்களின் ரசனையை அவர்களை அறியாமலேயே மேல் நகர்த்துவதோடு ’இன்னும்.. இன்னும்..’ என்று தீராத ருசியுடன் ரசிக்கத் தூண்டும் வகையிலேயே புதிய படைப்பு அமைய வேண்டும். பண்ணைபுரத்து வேரின் மணத்தை உலகமெங்கும் பரப்ப வேண்டும். கர்நாடக இசைக்கும் மேற்கத்திய இசைக்குமான கண்ணியை முதல் பாகம் கண்டது என்றால், இரண்டாம் பாகம் எவ்வித இலக்கணங்களையும் அறியாத மண்ணிசையின் மாண்பை இப்பிரபஞ்சத்துடன் இணைக்க வேண்டும். இது எளிதல்ல என்றாலும், அதனை எளிதாகத் தருவதற்கு ராஜாவால் முடியும் என்பதே அவரது ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

‘நீ நினைப்பதை நான் ஏன் தர வேண்டும்’ என்று ராஜா பதிலளிக்கலாம். அப்படிச் சொன்னாலும், நான் நினைத்ததற்கு அப்பாற்பட்ட ஒன்றைத்தான் அவர் தர வேண்டும். இதுவரை தொடரும் அவ்வழக்கத்தை ராஜா எப்படி மீறிவிட முடியும்?


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles