Read in : English

சமீபத்தில் காலமான பாடகி வாணி ஜெயராமிற்கு சிறப்புமிக்க மூன்று பேர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் ஒருவர் ராஜ்குமார் பாரதி; வாணியுடன் இணைந்து இவர் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

இரண்டாவது எம்.வி.எஸ்.பிரசாத், சென்னை பத்திரிகை தகவல் பணியகத்தின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் செலுத்திய அஞ்சலியில் தனது தனிப்பட்ட வாழ்வோடு சம்பந்தப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினார்.

மூன்றாமவர் msvtimes.com தூண்களில் ஒருவரான பலே சம்பத் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் சம்பத் சுந்தரராஜன். வாணியின் பாடல்களைப் பற்றிய அவரது பகுப்பாய்வு அந்தப் பாடகியின் இசைத் திறமையை ஆய்வுநோக்கில் வெளிப்படுத்துகிறது.

முதலில் ராஜ்குமார் பாரதியைப் பற்றி:

ராஜ்குமார் பாரதி என்ற பெயரே அவர் மகாகவி பாரதி பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. சர்வஸ்ரீ வள்ளியூர் குருமூர்த்தி, எம்.பாலமுரளிகிருஷ்ணா, டி.வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் கீழ் பாரம்பரிய கர்நாடக இசையில் முறையாகப் பயிற்சி பெற்ற ஒரு கலைஞர் என்பது மட்டுமல்லாமல், பாரம்பரிய வகையில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட இசையமைப்பாளராகவும் உள்ளார். சென்னை மியூசிக் அகாதெமி இவருக்கு 2019ஆம் ஆண்டில் டிடிகே விருதை வழங்கியது.

இன்மதிக்கு அளிக்கப்பட்ட அஞ்சலிப் பதிவில், வாணியுடன் இணைந்து பாடிய அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார் ராஜ்குமார் பாரதி. தன் மீது வாணி மிகுந்த பாசம் வைத்திருந்ததையும், தன்னைச் சொந்த சகோதரனைப் போல நடத்தியதையும் விவரிக்கிறார்.

ஒரு பாடலின் நுணுக்கங்களை வாணிக்கு விளக்க இசையமைப்பாளர் அதிக நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டியதில்லை

“வாணியுடன் நான் பாடிய முதல் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யுத்த காண்டம் படத்தில் இசையமைத்தது. போரா அமைதியா என்ற தேர்வுக் குழப்பத்தை அந்த பாடல் வெளிப்படுத்தியது. ஸ்டுடியோவில் வாணியின் பக்கத்தில் நின்று அவருடன் சேர்ந்து பாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

நேரம் தவறாமை உட்படப் பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர் தேவையில்லாத பேச்சில் ஒரு கணம் கூட வீணடிக்க மாட்டார். கர்னாடக இசை மற்றும் இந்துஸ்தானி இரண்டையும் முறையாகப் பாடக் கற்றுக்கொண்ட அவர், ஸ்டுடியோக்களில் மிகுந்த மரியாதையைப் பெற்றார். அவர் விஷயங்களை விரைவாகப் புரிந்துகொண்டார். ஒரு பாடலின் நுணுக்கங்களை அவருக்கு விளக்க இசையமைப்பாளர் அதிக நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டியதில்லை.
சினிமாப் பாடலாக இருந்தாலும் சரி, மெல்லிசையாக இருந்தாலும் சரி, பக்திப் பாடலாக இருந்தாலும் சரி, பாடல்களுக்குக் குறியிடும் கலையிலும் வாணி தேர்ச்சி பெற்றிருந்தார்.

மேலும் படிக்க: வாணி ஜெயராம் – காலம் தந்த சுக ராகம்!

பாடல்களை அவர் விளக்கிய விதத்திலும் மறுஆக்கம் செய்த விதத்திலும் இது பிரதிபலித்தது. ஒரு விசயத்தைப் புரிந்துகொள்வது என்பது வேறு; அதை அப்படியே மறுஆக்கம் செய்வது வேறு. அவர் இரண்டையும் சரியாகச் செய்தார். இந்த விஷயங்களுடன் அவரது சுருதி (பிட்ச்) உணர்வும் சேர்ந்தது. எப்போதும் அவர் சரியான சுருதியைப் பிடித்துப் பாடினார். ஒருபோதும் சுருதி தவறியதில்லை.

அவர் ஒரு பன்மொழி வித்தகர். தமிழில் மட்டுமல்ல, அவருடன் கன்னடத்திலும் பல பாடல்களைப் பாடியுள்ளேன். கே.என்.டெய்லர் இயக்கிய துளு படத்திலும் பாடினோம்.

என்னால் மறக்க முடியாத மற்றொரு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கே.வி.மகாதேவன் அல்லது எம்.எஸ்.வி போல தமிழகத்தில் பிரபலமானவர். நானும் வாணியும் அவருக்காகப் பல பாடல்களைப் பாடினோம். கர்நாடக அரசு பல சலுகைகளை வழங்கியதால் அம்மாநிலத்தில் உள்ள ஸ்டுடியோக்களில் கன்னடத்தில் இசைப்பதிவுகளைச் செய்ய வேண்டியிருந்தது.
வாணியின் கணவர் ஜெயராமுடன் விமானத்தில் சென்று பெங்களூரில் ரெக்கார்டிங் செய்வோம்.

இசையமைப்பாளர் விஜய ஸ்கருக்கும் பல பாடல்களைப் பதிவு செய்தோம், தெலுங்கிலும் சில பாடல்களைப் பாடினோம். வாணியும் ஜெயராமும் என்னை அன்போடும் பிரியத்தோடும் நடத்தினார்கள். நான் வாணிக்கு எப்போதும் ஒரு சகோதரனாக இருந்தேன்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான புகழ்பெற்ற நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தியின் நிகழ்ச்சி நன்றாக நினைவிருக்கிறது, அதில் ஒரு அத்தியாயத்தில் வாணியும் நானும் ஸ்ரீ சியாமா சாஸ்திரியின் ஒப்பற்ற பைரவி ஸ்வராஜதியைப் பாடினோம். கர்நாடக இசையில் வாணி அடைந்திருந்த ஆழம் அதில் வெளிப்பட்டது.

அது போலவே ஸ்ரீ நாகை சண்முகம் எழுதி எல்.கிருஷ்ணன் இசை அமைத்த ஷீரடி சாய்பாபாவுக்கான ஆரத்தி பாடலைத் தமிழில் பாடினோம். இன்றளவும் இப்பாடல் மிகப்பிரபலமானது.

ரெக்கார்டிங் ஸ்டூடியோ வைத்திருந்தார் ஜெயராம். மைக்கின் முன் நிற்கும் போதெல்லாம் ஒலி இயக்கவியலை வாணி நன்கு அறிந்திருந்தார். அவரும் அவரது கணவரும் பக்திப் பாடல்களை ஒருபோதும் சிறுமைப்படுத்தவில்லை, அவற்றைப் பாடும்போது தொழில்ரீதியாக முழுமையாக ஈடுபட்டிருந்தனர். .

என் தந்தை ஒரு ஹோமியோபதி மருத்துவர்; வாணியும் ஜெயராமும் அவரிடம் ஆலோசனைக்கு வந்திருக்கிறார்கள்.
குரலில் எனக்குச் சில பிரச்சினைகள் ஏற்பட்டபோது, என் தந்தையின் பராமரிப்பில் இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார்கள். தந்தை இறந்தபோது, அவர்கள் வந்து என் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

இறுதியில் என் குரல் பிரச்சனைகளில் இருந்து மீண்டு, வாணியை என் இசை இயக்கத்தின் கீழ் பாட வைக்கும் பாக்கியம் பெற்றேன். அதுபோல, என் கச்சேரிகளில் கலந்துகொண்டு, கச்சேரிக்குப் பிறகு பின்னூட்டங்களை இருவரும் கொடுத்திருக்கிறார்கள்.

வாணி ஜெயராமின் ஆத்மா சாந்தியடையட்டும்!”

சென்னை பத்திரிகை தகவல் பணியகத்தின் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் எம்.வி.எஸ்.பிரசாத்; போலே ரே பாபிஹாரா பாடல் மூலம் வாணியுடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்டது என்கிறார் பிரசாத். இந்தித் திரையுலகில் ஒரு புதிய குரலைக் கேட்டது வித்தியாசமாக இருந்தது என்பது அவரது எண்ணம்.

“தீர்க்க சுமங்கலி படத்தின் “மல்லிகை என் மன்னன்” என்ற பாடலைக் கேட்டு வாணியின் குரலால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நான் அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வேன், சங்கராபரணம் வெளியானபோது, தமிழ் தெலுங்கு படங்களில் முக்கியப் பாடகியான சுசீலாவை விட்டுவிட்டு வாணியையும் ஜானகியையும் ஏன் விஸ்வநாத் தேர்வு செய்தார் என்று பெரும்பாலோர் ஆச்சரியப்பட்டார்கள்.

சங்கராபரணம் வெளியானபோது, தமிழ் தெலுங்கு படங்களில் முக்கியப் பாடகியான சுசீலாவை விட்டுவிட்டு வாணியையும் ஜானகியையும் ஏன் விஸ்வநாத் தேர்வு செய்தார் என்று பெரும்பாலோர் ஆச்சரியப்பட்டார்கள்

ஆந்திர பிரபா (தமிழ்நாட்டில் தினமணியைப் போல) பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்தபோது, ஒருநாள் எஸ்பிபி வீட்டில் இருந்தேன். அந்த நேரத்தில், தேசிய விருதுகள் அறிவிப்பு வெளியானது. மிகவும் பிரபலமான படம் சங்கராபரணம்; சிறந்த ஆண் பாடகர் எஸ்பிபி., சிறந்த பெண் பாடகர் வாணி ஜெயராம் என்று அறிவிப்புகள் வெளியாகின. அது வாணிக்கு கிடைத்த இரண்டாவது விருது. ஏற்கனவே அபூர்வ ராகங்கள் படத்திற்காக ஒரு விருதை வென்றிருந்தார். நான் எஸ்பிபியைப் பேட்டி எடுக்கத் தயாரானபோது, அதற்குப் பதிலாக வாணியை நேர்காணல் செய்ய விரும்பினார்.

எஸ்.பி.ஷைலஜா என்னை வாணியின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் (அவரது சகோதரரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு). வாணி மற்றும் ஜெயராம் உடன் நான் இரவு முழுவதும் தங்கியிருந்து நேர்காணலை முடிக்க/பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். என்னிடமிருந்த டேப் ரெக்கார்டர் நேஷனல் பானாசோனிக் என்று நினைக்கிறேன்.

வாணி தனது பஜனைகளின் எல்.பி ரெக்கார்டுகளை எனக்கு வழங்கினார், அந்தப் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் பிலிம் டிவிசனைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞர் ரகுநாத் சேத் மற்றும் மற்றொரு புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக்கலைஞர் விஜயராம ராவ் ஆகியோர்.

மேலும் படிக்க: பாம்பே சிஸ்டர்ஸ் லலிதா – காற்றில் கலந்த கானம்!

விஜயவாடாவில் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் குழுமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவர் என்னால் எப்படி வாணி ஜெயராமைப் பேட்டி காண முடிந்தது என்று வியந்து, அதை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுக்கச் சொன்னார். அது தி இந்தியன் எக்ஸ்பிரஸின் வெள்ளிக்கிழமை சிறப்புப் பக்கங்களில் அனைத்து தெற்கு பதிப்புகளிலும் வெளியிடப்பட்டது.

பின்னர் நான் பிரஸ் இன்பர்மேஷன் பீரோவில் சேர்ந்து திருமலையில் விளம்பர அதிகாரியாக இருந்தேன். அந்த நேரத்தில் பாலாஜி கோவிலில் வாணி வழிபட்டபோது, என் மனைவியும் கூட இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தெய்வத்தின் முன் ஓரிரு பாடல்களைப் பாடினார். எங்கள் குடும்பத்தினர் அவருடன் நெருக்கமாக இருந்ததால் ஒரே காரில் திருப்பதியைச் சுற்றி வந்தோம்.

நாங்கள் இருவரும் நெல்லூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதில் இருந்தே எஸ்பிபியை நன்கு அறிந்திருந்தேன். என்றாலும், எஸ்பிபியை விட வாணி எங்கள் குடும்பத்துடன் மிக அதிகமாக நெருக்கமானார்.

விருதுகளை வெல்வது வாணிக்கு வழக்கமான விஷயமாக மாறியது, மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத் இயக்கிய சுவாதி கிரணம் படத்திற்காக தனது மூன்றாவது விருதைப் பெற்றார். அம்ருதவர்ஷினி ராகத்தில் இயற்றப்பட்ட ஓர் அழகான பாடல் அந்தப் படத்தில் உள்ளது; என்னால் மறக்க முடியாதது. முடிந்துவிட்டதாகத் தோன்றும், ஆனால் மீண்டும் தொடங்கும் பாடல் அது. மிகவும் கடினமான பாடல். அதைக் கேட்டு கை தட்டாமல் இருக்க முடியாது.

வாணி இளம்பையன் மஞ்சுநாத்திற்காக (மால்குடி டே புகழ்) பாடினார். மஞ்சுநாத்தின் குருவாக மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ள படம் இது. கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பாடுவது கடினம் என்றாலும் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலைப் பாடிய வாணிக்குப் பாராட்டுகள்!

அனைத்து விருதுகளும் அவரைத் தேடிவந்தாலும், தெலுங்கு திரையுலகில் அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை. அதுதான் என் உணர்வு. தமிழ்த் திரையுலகைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் தெலுங்கை உச்சரித்த விதத்தைப் பார்த்தால், அவர் தெலுங்கு ‘பிரஜா’ இல்லை என்றால் நம்பவே முடியாது. அது அவரது கன்னடம் மற்றும் இந்தி உச்சரிப்புக்கும் பொருந்தும்.

பத்திரிகைத் தகவல் பணியகத்தின் பணியாளராக சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எங்கள் அலுவலகம் சென்னை சாஸ்திரி பவனில் இருந்தது, வாணியின் வீடு ஹாடோஸ் சாலையின் முனையில் இருந்தது. அதனால் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாணி மும்பையில் இருந்தபோது அப்துல் ரஹ்மான் கான் சாகிப்பிடம் இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொண்டார் என்பதை நான் அறிவேன். தினமும் 10 மணி நேரம் பயிற்சி செய்ததாக என்னிடம் கூறுவார். பின் வசந்த் தேசாய்க்கு அறிமுகமானார்; வாணியின் குரல் கம்பீரத்தால் ஈர்க்கப்பட்ட தேசாய் அவருக்குக் ’குடி’ திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். நடிகை ஜெயபாதுரிக்கு அதுதான் முதல் படம்.

இந்தித் திரைப்பட இசைத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மங்கேஷ்கர் சகோதரிகள் குழுவை எதிர்த்து தேசாய் போராட வேண்டியிருந்தது. குடி படத்தின் போலே ரே பாபிஹாரா மற்றும் ஹம் கோ மான்கி சக்தி தேனா ஆகிய இரண்டு பாடல்கள் உடனடியாகப் பிரபலமடைந்தன. படம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு இரண்டாவது பாடல் பல பள்ளிகளின் பிரார்த்தனைப் பாடலாக மாறியது.

வாணியை முதன்முதலில் எம்.எஸ்.விஸ்வநாதன் சந்தித்தபோது, அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியாமல், ”நீங்கள் ஏன் இதற்கு முன்பு தமிழ் படங்களில் பாடவில்லை” என்று கேட்டார். அவரது குரலின் வலிமையால் கவரப்பட்ட விஸ்வநாதன், தீர்க்க சுமங்கலி படத்தில் ’மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்ற பாடலைப் பாட வைத்தார். அந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது.

தெலுங்கு திரையிசைத் துறையைப் பொறுத்தவரை அபிமானவந்தலு படத்தின் மூலம் வாணிக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் எஸ்.பி.கோதண்டபாணி. அந்தப் படத்தில் வாணி ஒரு ஜாவலி (கல்யாணி) பாடினார்; அந்தக் காட்சியில் நடனக் கலைஞர் பத்மஸ்ரீ ஷோபா நாயுடு நடனமாடினார். திரையில் ஷோபா நாயுடு தோன்றிய ஒரே படம் அதுதான்.

புதிய குரல்களை (தெலுங்குத் திரையுலகில்) அறிமுகப்படுத்திய பெருமை கோதண்டபாணிக்கு உண்டு; ஜேசுதாஸ், எஸ்.பி.பி மற்றும் வாணி ஆகியோரை அறிமுகப்படுத்தியது கோதண்டபாணிதான். அவரின் நினைவாக எஸ்பிபி தனது ஸ்டுடியோவுக்கு கோதண்டபாணி ஆடியோ லேப்ஸ் என்று பெயரிட்டார்.

கன்னடத் திரைப்படங்களில் ராஜன் நாகேந்திரா மற்றும் விஜயபாஸ்கருக்காக வாணி பாடினார், மலையாளத்திலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

தாய்மொழியான தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் கவிதைகளை இயற்றிய பாடகர் பிபி ஸ்ரீனிவாஸுடன் வாணியை ஒப்பிட முடியும் என்று நினைக்கிறேன். வாணி ஜெயராம் பாடலாசிரியராகவும் ஓவியராகவும் இருந்தார். அவர் தனது இசைப் பாடல்களை வெளியிட்டுள்ளார்; அவரது இஷ்டதெய்வம் முருகன். வாணி பல பக்திப் பாடல்களைப் பாடினார்; அவரது பக்தி உணர்வு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பேசப்படும்!

வாணிக்கு பத்மவிருது வழங்க நாங்கள் கையெழுத்து பரப்புரைகளை ஏற்பாடு செய்தோம், இறுதியாக 2023 ஜனவரி 26 அன்று அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. போனில் தொடர்பு கொள்ள முடியாததால், அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினேன்.

கடந்த ஜனவரி 31ம் தேதி நானும் என் மனைவியும் சென்னைக்கு வந்தபோது அவருடன் நேரத்தைச் செலவிட்டோம். அவருடனான எங்கள் கடைசி உரையாடலாக அது இருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் அவர் பாடிய பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அது இசைரீதியாகச் சிறந்த பாடல் அல்ல; நவீனப்படுத்தப்பட்ட ஒருவகையான நாட்டுப்புறப் பாடல் வடிவம்தான். (வாணியும் அப்படித்தான் நினைத்தார். எனினும் ஆஸ்கார் பரிந்துரை என்பது மதிப்பு மிக்கது அல்லவா?)

ஜனவரி 31 அன்று நாங்கள் பிரிவதற்கு முன்பு, வாணியின் வற்புறுத்தலின் பேரில் நாங்கள் மூவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அது என் மனதில் அழிக்க முடியாத ஞாபகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தியைக் கேட்டதும் நான் எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்தேன். ஆந்திரஜோதி பத்திரிகை என் அஞ்சலியைக் கேட்டு வாங்கி, பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்டது.

ஒவ்வொரு முறையும் புத்தாடைகள் கொடுத்து எங்கள் வருகையைக் கொண்டாடும் பழக்கம் வாணிக்கு இருந்தது.

சமீபத்தில் பாடலாசிரியர் வெண்ணலக்கண்டி தலைமையிலான கலாஞ்சலி என்ற அமைப்பு வாணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க விரும்பியது. என் வேண்டுகோளை ஏற்று வாணி அந்த விருதைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார். அந்த அமைப்பு அவரை நெல்லூருக்கு அழைத்து வந்தது; அங்கு பூர்ணாகும்ப வரவேற்புடன் ஒரு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நெல்லூரில் உள்ள அனைத்து விஐபிக்களும் கலந்து கொண்டனர். அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் வாணியின் பாடல்கள் பாடப்பட்டன.

மேடையில், ”ஸ்ரீ பிரசாத் வற்புறுத்தியதால் நான் விருதை ஏற்றுக்கொண்டேன்” என்று வெளிப்படையாகக் கூறினார் வாணி, “பிரசாத் என் சகோதரர்!” என்றும் அனைவரின் முன்பாகக் கூறினார். எனக்கும் மனைவி சரோஜாவுக்கும் வேறு என்ன வேண்டும்? இன்னொரு சகோதரர் எஸ்பிபியை இழந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வாணியை இழந்தது வாழ்நாள் முழுவதும் என்னை வாட்டி வதைக்கும்! இந்த இரண்டு இழப்புகளும் இசை உலகிற்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரும் இழப்புகள்தான்!

பலே சம்பத் என்று பலராலும் அழைக்கப்படும் சம்பத் சுந்தர்ராஜன் ஒரு ஆடிட்டர். தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் வலைத்தளமான msvtimes.com தூண்களில் ஒருவராகவும் உள்ளார். சமீபத்தில் மெல்லிசை ராணி பி.சுசீலாவின் 80வது பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பழைய காலத்து சினிமா பாடல்களையும் தற்போதைய பாடல்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றின் சிறப்புகளை எடுத்துச் சொல்வதில் வல்லவர் சம்பத்.

யோடெல்லிங் என்பது ஒரு பாடும் வகைமை. இது குறைந்த பிட்ச் ’மார்புக் குரல்’ மற்றும் உயர்ந்த பிட்ச் தலைக்குரல் (ஃபால்செட்டோ) ஆகியவற்றுக்கு இடையில் ஊடாடிப் பாடும் வசீகரம். கிஷோர் குமார், ஜே.பி.சந்திரபாபு போன்று வாணி எப்படி ’யோடெலிங்’ செய்தார் என்பதை சம்பத் தனக்கே உரித்தான பாணியில் நமக்கு உணர்த்துகிறார்.

”வாணியின் குரலை வேறுபடுத்திக் காட்டியது அனைத்து மொழிகளிலும் அவர் வெளிப்படுத்திய சரியான உச்சரிப்பு. அது அந்தந்த மொழிகளையும் பாடலாசிரியரையும் கௌரவித்தது. எந்தவொரு இசைக்கும் மிக முக்கியமான ஸ்ருதி சுத்தத்தின் மூலமாகப் பாடல்களைப் பாடும்போது பொருத்தமான பாவத்தை வழங்குவது, பாடல்களை அவ்வப்போது சரியாகக் குறிப்பெடுப்பது, இசையமைப்பாளர்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் முழுமையாகப் பாடுவது ஆகியவை வாணியைச் சிறப்பான பாடகியாக்கியது.

ஸ்ருதி சுத்தத்தின் மூலமாகப் பாடல்களைப் பாடும்போது பொருத்தமான பாவத்தை வழங்குவது, பாடல்களை அவ்வப்போது சரியாகக் குறிப்பெடுப்பது, இசையமைப்பாளர்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் முழுமையாகப் பாடுவது ஆகியவை வாணியைச் சிறப்பான பாடகியாக்கியது

இசையின் அனைத்து வகைகளிலும் அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. முறைப்படி இந்துஸ்தானி, கர்னாடக சங்கீதம் இரண்டையும் வாணி ஜெயராம் கற்றுக் கொண்டது அவருக்கு நல்ல பலனைத் தந்தது. நாதமெனும் கோவிலிலே, ஏழு ஸ்வரங்களுக்குள், இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ, கேள்வியின் நாயகனே, மேகமே மேகமே போன்ற பாடல்களை இதற்கான சான்றாகச் சொல்லலாம்.

அவர் எளிமையாகப் பாடிய அந்தப் பாடல்கள் காதுகளில் விழுந்து மனங்களுக்குள் பயணிக்கும்போது ஏற்படும் ஆனந்தம் ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

தேவி வந்த நேரம், கங்கை நதி ஓரம், அன்பு மேகமே, ஓரே நாள் உன்னை நான் போன்ற வாணி பாடிய மெல்லிசைப் பாடல்களைக் கேட்டால் அவை மனதுக்கு ஒருவகை மருந்தாக அமைவதை உணரலாம். என்றென்றும் நிலைத்திருக்கும் ஜீவத்தன்மை கொண்டவை அந்தப் பாடல்கள்.

நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்கும்போது அவரது பன்முகத்தன்மையை உணர முடியும்; நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, ஆலமரத்து கிளி, மன்னாரு மன்னாரு ஆகியவற்றை உதாரணங்களைச் சொல்லலாம்.

‘வா.. வா.. பக்கம் வா..’ போன்ற நடனப் பாடல்கள் ஸ்டாக்காட்டோ எஃபெக்ட்டுடன் பாடப்பட்டவை; பாடல்களுக்கான நோட்டேஷன்களை வாணியின் குரலில் இருந்த பாவங்களும் அவரது அபரிமிதமான அறிவும் அனுபவமும் ஜீவக்களையோடு இயங்க வைத்தன.

அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் வரும் ‘நானே நானா யாரோ தானோ’ பாடல் மிகவும் வசீகரமானது. காதலனால் ஏமாற்றப்பட்ட நாயகி, அவருடன் மீண்டும் இணையும் சூழ்நிலைக்காக ஏங்குவார். இசையமைப்பாளரும் வாணியும் சூழ்நிலையை முழுமையாகப் புரிந்து கொண்டு தங்களால் இயன்றதைச் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் வரும் ‘வேறு இடம் தேடி போவாளோ’ என்ற பாடல் கங்கா (லக்ஷ்மி) என்ற ஒரு பெண்ணின் மகத்தான சோகத்தை ஒரே அடியில் வெளிப்படுத்துகிறது. வாழ்நாள் முழுவதும் ஸ்ரீகாந்தை நம்பி வாழ முடியாது என்று தோன்றும்போது அவர் கிட்டத்தட்ட சிக்கித் தவிக்கிறார், ஏமாற்றமடைகிறார்.

எம்.எஸ்.வி என்ற மாஸ்டர் இசையமைப்பாளர் பாடல் வரிகளின் முழு உணர்வையும் (ஜெயகாந்தன் எழுதிய பாடல்) வெளிப்படுத்தும் மெட்டின் மூலம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார். மேலும் வாணி இந்த பாடலைப் பாடும்போது சோகத்தின் உச்சத்தைத் தொடுகிறார். வாணியை விட வேறு யாராவது இதை மிகவும் உருக்கமானதாகச் செய்திருப்பார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது.”

இந்த மூவரின் கண்ணீர் அஞ்சலி, வாணி ஜெயராமின் மாஸ்டர் பீஸான தமிழில் அவர் பாடிய முதல் பாடலான “மல்லிகை என் மன்னன் மயங்கும்!” என்ற பாடல் ஒலியின் பின்னணியில் முடிந்தது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival