Read in : English
இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ஷேக் மெகபூப் சுபானி மற்றும் காலிஷா மெகபூப் என்ற விசேஷ நாகஸ்வர தம்பதியரை வந்தடைந்துள்ளது.
இது இந்த இரு கலைஞர்களுக்குக் கிடைத்த கௌரவம் மட்டுமில்லை. நாகஸ்வரக் கலைக்கே கிடைத்த மறுஅங்கீகாரமாகும்.
இவர்கள் ஏழு தலைமுறைகளைத் தாண்டி இப்போது எட்டாவது தலைமுறையினராக இந்த ஒப்பற்ற கலையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்ல. இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து அவர்களது மகனான ஃபெரோஸ் பாபு மூலமாக அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவுரையைக் கேட்டு, எம்சிஏ படித்த ஃபெரோஸ் பாபுவும் நாகஸ்வரம் வாசிக்கிறார்.
1994இல் இவர்கள் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் 2017ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் வழங்கிய ஹம்ச கலா ரத்னா விருதையும் பெற்றுள்ளனர். அபுதாபி, பெல்ஜியம், கனடா, துபாய், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நாகஸ்வரம் வாசித்துள்ள அவர்கள் அந்த அனுபவத்தை நினைவுகூர்ந்தனர்: “அவர்கள் அங்குள்ள மேற்கத்திய சங்கீதம் கேட்டுப் பழகியவர்கள். அதனால் ‘இங்கிலீஷ் நோட்’ போன்றவற்றை வாசித்தால் தான் அவர்களால் உட்கார்ந்து கேட்க முடியும்.
ஆலாபனை கீர்த்தனை அங்கு சரியே வராது. ஆனால் அங்குள்ள இந்திய இனத்தவர் நமது சங்கீதத்தில் நல்ல ஈடுபாடு உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். சொல்லப் போனால் அமெரிக்காவில் முக்கியமாக ஒவ்வொரு வீட்டிலும் சங்கீதம் கற்பவர் ஒருவரை நாம் பார்க்க முடியும். நாகஸ்வரம் கற்பவர்கள் குறைவு. வீணை, வயலின் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். வாய்ப்பாடு கற்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
1977ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. இருவரிடமும் இசை இருக்கிறது. சேர்ந்து வாசித்தால் நன்றாகப் பரிமளிக்கும் என்று மக்கள் விரும்பினர். இருவரும் இணைய வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பமே எங்களை திருமணத்தில் கொண்டு சேர்த்தது என்கிறார் ஷேக் மெகபூப் சுபானி.
“காலிஷாவை முழுமூச்சாக நாகஸ்வரத்தில் கொண்டு வந்து விட்டது அவளது தாத்தா ஜனாப் ஷேக் சின்ன பீர் சாஹேப். இவர் ஆந்திர அரசின் விருது பெற்றவர். இது தவிர அவளுக்கு முழுப் பயிற்சி அளித்தது அவளது சித்தப்பா ஷேக் ஜான் சாஹேப்.
சுமார் 25 வர்ணங்கள், நிறைய கீர்த்தனைகளைப் பாடம் பண்ணினார். அவளுக்கு இதில் நாட்டம் உள்ளதைப் புரிந்து கொண்டு, ஐந்தாம் வகுப்பு வரைதான் அவளைப் பள்ளிக்குச் சென்று படிக்கவைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அவரது தாத்தாவும் சித்தப்பாவும் புகழ் மிக்க நாகஸ்வர வித்வானும் இவர்களது குருவுமான ஷேக் சின்ன மௌலானா சாகிப்புடன் பள்ளியில் படித்தவர்கள்” என்கிறார் சுபானி.
“முதன்முதலில் திருவையாரில் உள்ள ஆராதனையில் வாசிக்க ஏகேசி ஐயா அனுமதி வழங்கியபோது, தனது நாகஸ்வரத்தையே கொடுத்து வாசிக்கச் சொன்னவர் எங்களது குருநாதர் ஷேக் சின்ன மௌலானா சாகிப்.
அவர் கற்றுத்தந்த ‘காபி’ ராகம் எங்களுக்குள் மிகஆழமாகப் பதிந்து விட்டது. எங்கள் கச்சேரிகளில் ‘காபி’ ராகம் நிச்சயம் இருக்கும்” என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் நிறைய நாகஸ்வரம் வாசிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்ததால் இவர்கள் உறையூர் வாசத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். டி. எம். கிருஷ்ணாவுடன் இணைந்து இவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்கள்.
அக்கரை சுப்புலட்சுமி வயலின். அப்போது காலிஷா வாசித்துள்ள ‘காபி’ ராக ஆலாபனை அனைவரையும் கவர்ந்தது. இதில் கிருஷ்ணா வாய்ப்பாட்டில் பாடப்பாட அதற்கு ஈடாக காலிஷா நாகஸ்வரம் வாசித்தவிதம் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
“நாங்கள் இணைந்து வாசிப்பதைத் தவிர வேறு ஒரு எண்ணமும் இல்லை. தனிக் கச்சேரி செய்ய இருவருக்குமே விருப்பமில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறும் இவர்கள், கல்யாணக் கச்சேரிகளில் கடைசியில் சினிமா பாடல்களை வாசிப்தைத் தவிர்த்து விடுவார்கள். விருப்பச் சீட்டு வந்தால் அது ‘சிங்கார வேலனாகவோ’ (கொஞ்சும் சலங்கை) அல்லது ‘நலம் தானாவாகவோ’ (தில்லானா மோகனாம்பாள்) அல்லது அழகுடனும் மெலடியுடனும் மிளிரும் டிஎம்எஸ் அல்லது சீர்காழியின் பாடலாக இருந்தால் உடனே வாசித்து விடுவார்கள்.
மற்றவற்றிற்கு ‘நோ’. “சினிமா சங்கீதத்தையும் அது உருவாகும் விதத்தையும் நாங்கள் ஒரு போதும் குறைத்து மதிப்பிடுவதில்லை” என்கிறார் சுபானி.
சிலர் நாகஸ்வரத்திலிருந்து தவிலைப் ‘பிரித்தெடுத்து’ மிருதங்கத்தைப் பக்க வாத்தியாமாக வைத்துக் கொண்டு வாசிக்கிறார்களே? உங்கள் அபிப்பிராயம் என்ன என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் ஒரு பத்துப் பதினைந்து கச்சேரிகளில் ஒன்றிரண்டு இப்படிப் போகும்.
பொதுவாக தவிலுக்கு நாகஸ்வரமும் நாகஸ்வரத்திற்குத் தவிலும் என்பது திருமண பந்தம் போன்றதுதான் என்கிறார். அடுத்து, வேறு வாத்தியங்களில் முயற்சி பற்றிக் கேட்டால் இதுவே பெருங்கடல் என்கிறார் இவர்.
ஆனால் வாய்ப்பாட்டில் நன்றாகப் பாடி அது சரியாக அப்பியாசப்பட்ட பின் தான் வாத்தியத்திற்கு வருவோம். உதாரணத்திற்கு, பிரசித்தி பெற்ற ‘நகுமோமு கனலேனி’ பாடலைப் பாடி அது எப்படி வாத்தியத்துக்குரிய வண்ணம் அமைகிறது என்று பாடிக் காண்பிக்கிறார்.
தனது இல்லத்தரசி காலிஷாவுக்கு சமஸ்தானமளித்து அதே மேடையில் “சரிநிகர்சமானமாக” அமர்த்தி நாகஸ்வரம் வாசிக்கச் செய்த, ஷேக் மெகபூப் சுபானியை எவ்வளவு போற்றினாலும் தகும்!
பெண் நாகஸ்வரக் கலைஞர்களுக்காக பரிவதனி அறக்கட்டளை நடத்தும் நவராத்திரி நவசக்தி இசை நிகழ்ச்சித் தொடரின் ஊடகப் பங்கேற்பாளர் `இன்மதி’.
Read in : English