Read in : English

Share the Article

பாம்பே சிஸ்டர்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு சங்கீத உலகில் புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் சரோஜா, லலிதா சகோதரிகள். இருவரில் திருமதி லலிதா (84) கடந்த ஜனவரி 31 அன்று, நம்மை எல்லாம் மாளாத் துயரில் ஆழ்த்தி இவ்வுலகை விட்டு மறைந்தார்; இசையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.

சரோஜா, லலிதா இருவரும் பம்பாயிலிருந்து சென்னைக்கு வந்தது, மத்திய அரசின் உதவித்தொகை பெற்று முசிறி சுப்பிரமணிய ஐயரிடம் சங்கீதம் பயிலவே.அது நிறைவேறியது. முசிறியின் பிரதம சீடராகிய டிகே கோவிந்த ராவ் (டிகேஜி) இவர்களுக்கு இசை வகுப்புகளை நடத்துவார். நாள்பட நாள்பட, இருவர் மீதும் அபார நம்பிக்கை வைக்கலானார். கற்றதை வீணடிக்காமல் கச்சேரியில் சென்று பாடி பரிமளிக்கச் செய்யும் திறமையுடையவர்கள் என்பது அவரது உறுதியான எண்ணம். அதுவும் நிறைவேறியது.

பம்பாய் சகோதரிகளின் தனித்தன்மை என்ன? “இருவரும் ஒன்றாகப் பாடும்போது சற்று உற்றுக் கேட்டால் காலஞ்சென்ற எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடுவதைப் போலிருக்கும்” என்கிறார் ஒரு ரசிகர். அது முற்றிலும் உண்மை. “எம்.எஸ்., எம்எல்வி. மற்றும் டி.கே.பி. ஆகியோரின் கலவைதான் நாங்கள்” என்று ஒருமுறை இருவருமே சொல்லியிருக்கின்றனர்.

பம்பாய் சகோதரிகள் என்ற பெயர் எப்படி வந்தது? ஆரம்ப காலத்தில் அம்பத்தூரில் வசித்து வந்தபோது, ஒருமுறை மௌன சுவாமிகள் முன்னிலையில் பாடும் வாய்ப்பைப் பெற்றனர். சுவாமிகள் மௌனத்தைக் கடைப்பிடிப்பவராகையால், ஒரு காகிதத்தில் இவர்கள் “பம்பாய் சகோதரிகள்” என்று அழைக்கப்படட்டும் என்று அருளிச் செய்ய, அந்தப் பெயரிலேயே இவர்கள் அழைக்கப்பட்டனர்.

இவர்களது முதல் கச்சேரி 1963ல் நிகழ்த்தப்பட்டது. இதே ஆண்டில், மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் மஹாவித்வான் மதுரை மணி ஐயர் பாடுவதாக இருந்தது. ஏதோ சில காரணங்களுக்காக அது நிகழாமல் போகவே, பம்பாய் சகோதரிகள் பாட அழைக்கப்பட்டனர். ’பிரபல வித்வான் பாட வேண்டிய இடத்தில் நாமா’! உள்ளூர பயம் தான் இவர்களுக்கு. கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. பாடுபவர்களாகிய இவர்களே அரங்கின் உள்ளே நுழைவதற்குப் பெரும்பாடாகிவிட்டது. ஆனால், கச்சேரி “படுஹிட்” என்றுதான் சொல்ல வேண்டும்.

இருவரும் ஒன்றாகப் பாடும்போது சற்று உற்றுக் கேட்டால் காலஞ்சென்ற எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடுவதைப் போலிருக்கும்

நிறைய பக்திப் பாடல்களையும் சுலோகங்களையும் ஸஹஸ்ரநாமங்களையும் மிக நேர்த்தியுடன் மெட்டமைத்து இசைவடிவம் கொடுத்துப் பாடி இவர்கள் பிரபலமடைந்தனர். இவர்கள் பாடாத சுவாமி இன்னும் அவதாரம் எடுக்காத தெய்வமே! அந்த மெட்டுக்கள் எல்லாம் மிகச்சிறந்த ராகங்களான பேகடா, மோஹனம் போன்றவற்றிலேயே அமைக்கப்பட்டிருக்கும். ஒருமுறை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வொன்றில், டி.கே.ஜியின் மெட்டமைப்பு நிபுணத்துவத்தைப் பற்றி ஒரு செயல்விளக்க உரையையே பம்பாய் சகோதரிகள் ஆற்றியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமல்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி மொழிகளிலும் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். காசெட்டுகளாகவும் சிடிக்களாகவும் வழங்கிய தோத்திரங்கள், சப்தாஹம், சுந்தரநாராயண மற்றும் குருவாயூரப்பன் கீதாஞ்சலி (மலையாளத்தில்), கனகதார ஸ்தோத்திரம், காவடிச் சிந்து, கிருஷ்ணலீலா தரங்கிணி, திருவருட்பா, சதாசிவ பிரம்மேந்திரர், லால்குடி, ஸ்ரீரங்கம், கோவூர், திருவொற்றியூர் க்ஷேத்திர கிருதிகள் என்று தனித்தனியாகப் பாடி காசெட்டுகளை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க: வாணி ஜெயராம் – காலம் தந்த சுக ராகம்!

திருப்பாவை பாடல்களைப் பலர் பாடியிருந்தாலும், திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி வெளியிட்ட மிகச் சிலருள் பம்பாய் சகோதரிகளும் அடக்கம்.

சினிமாவுலகில் இவர்கள் பிரவேசம் செய்யவில்லை. இருவரில் ஒருவர் மட்டுமே பாட வேண்டும் என்று பல இசையமைப்பாளர்கள் விரும்பியதே அதற்கான காரணம். இருப்பினும், டி.எம்.எஸ். நடித்த “அருணகிரிநாதர்” படத்தின் டைட்டில் பாடலை இருவரும் பாடியிருக்கின்றனர். அதற்காக, சினிமா பாடல்கள் இவர்களுக்கு ஒவ்வாத ஒன்று என்று அர்த்தமில்லை. இருவரும் நிறைய ஹிந்தி பாடல்களை விரும்பிக் கேட்கும் இயல்பு பெற்றிருந்தனர்.

கணவர், மாமியார், மாமனார் என்று புகுந்த வீட்டில் அனைவருமே ஆதரவாக அமைந்து போனது இவர்களது பாக்கியம். லலிதாவின் கணவர் என்.ஆர்.சந்திரன் அட்வகேட் ஜெனரல் ஆகப் பணிபுரிந்தவர். கோகுலாஷ்டமியாகட்டும், வரலக்ஷ்மி நோன்பாகட்டும், பொங்கல், தீபாவளியே ஆகட்டும்! இவர்களைக் கச்சேரியில் காணலாம். இந்தப் பழக்கத்தை இருவரின் குடும்பத்தினரும் மிகுந்த பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர்.

பம்பாய் சகோதரிகளின் பெற்றோர் பெயர் சிதம்பரம் – முக்தாம்பாள். இருவரின் நினைவாக ’முக்தாம்பரம் அறக்கட்டளை’யை நிறுவி, நிறைய இளம் வித்வான்களை ஊக்குவிப்பதில் இருவரும் முனைப்புடன் செயல்பட்டனர். கிருஷ்ணகான சபாவின் மத்தியானக் கச்சேரிகளை இந்த அறக்கட்டளையோ அல்லது லால்குடி ஜெயராமன் அறக்கட்டளையோ தான் ஸ்பான்சர் செய்யும் வழக்கமுள்ளது.

கச்சேரிக்கான தயாரிப்பென்றால் லயத்திற்கென்று தனியாக அதிக நேரம் ஒதுக்கி அதனை முறையுடன் வழங்குவார்கள். காலஞ்சென்ற கடம் வித்வான் என்.கோவிந்தராஜன் இம்முயற்சியில் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். உபபக்கவாத்தியம் இல்லாமல் ஒருபோதும் இவர்களது கச்சேரிகள் நிகழாது. வயலினைப் பொறுத்தவரை இருவரும் பெண் வாத்தியக்காரர்களையே விரும்புவர். அதேநேரத்தில், வயலினிஸ்ட் எச்.என்.பாஸ்கரை ஆரம்பம் முதலே அரவணைத்துச் சென்ற விதத்தை சொல்லப் போனால் அது வார்த்தைகளில் அடங்காது.

நிறைய பக்திப் பாடல்களையும் சுலோகங்களையும் ஸஹஸ்ரநாமங்களையும் மிக நேர்த்தியுடன் மெட்டமைத்து இசைவடிவம் கொடுத்துப் பாடி பம்பாய் சகோதரிகள் பிரபலமடைந்தனர்

லயத்தைப் பொறுத்தவரை சங்கீத கலாநிதி திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், கே.ஆர்.கணேஷ், திருச்சூர் நரேந்திரன் கும்பகோணம் சுவாமிநாதன் போன்றோர் இவர்களுக்குப் பக்கபலமாக இருந்துள்ளனர்.

ரசிகர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தம் கடமையைத் தவறாது செயல்படுத்துவதில் திண்ணமாய் இருந்தவர்கள் இருவரும். 2016 அல்லது 2017 ஆக இருக்க வேண்டும். ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இருவரும் தாசர் பதங்களை பாடிக் கொண்டிருந்தனர். கேட்பதற்கு பத்து நபர்கள் கூட இல்லை. இருப்பினும் மாலை 6 மணிக்கு ஆரம்பித்த கச்சேரியை 9.30 வரை தடையில்லாமல் பாடி முடித்தனர். எந்தக் காரணத்திற்காகவும் அரங்கில் இருக்கும் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்யக் கூடாது என்பதுதான் இவர்களது கொள்கை!

மேலும் படிக்க: பழனி சுப்புடுவுக்கு மிருதங்கம் கற்றுத் தர மறுத்த அப்பா!

நல்ல பாடந்தரத்தின் போஷகர்கள், கட்டிக் காப்பாற்றியவர்கள் என்று கூடச் சொல்லலாம். பாடாந்தரத்தை மாற்றிப் பாடினால் இவர்களுக்குக் கெட்ட கோபம் வந்து விடும். “மாற்றுவது தேவையில்லை, சாப்பாட்டில் உப்பின் அளவின்படி சங்கதிகள் இருக்க வேண்டும்” என்பார்கள்.

கச்சேரி இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் ஒருவர் மற்றொருவர் வீட்டிற்குச் சென்று பாடுவது என்பது இவர்களது இயல்பாக இருந்தது. கல்யாணப் பாடல்கள், அவற்றிற்கான உருப்படிகள் குறித்து ஒரு அரிய ஆவணத்தை சங்கீத நாடக அகாடமிக்காக ஆக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

பம்பாயில் இருந்த காலத்தில், வித்வான் எச்.ஏ.எஸ்.மணியிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். மணியின் புதல்வர் தான் பாடகர் ஹரிஹரன்.

விருதுகள் என்று பார்த்தால், 2020ல் பத்மஸ்ரீ விருது இவர்களை வந்தடைந்துள்ளது. அதே போல தமிழ்நாடு அரசின் தரப்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1992 ஆம் ஆண்டில் கலைமாமணி விருதையும்  பெற்றுள்ளனர். கிருஷ்ணகான சபா வழங்கும் சங்கீத சூடாமணி விருதை 1991ஆம் ஆண்டு இருவரும் பெற்றனர். 2004ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி இவர்களைக் கௌரவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழிசைச் சங்கம் இசைப்பேரறிஞர் பட்டத்தை இவர்களுக்குக் கொடுத்தது. 2010ஆம் ஆண்டில் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதியாக இவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

மேற்சொன்ன அத்தனை தகவல்களையும் நமக்குக் கொடுத்து உதவியவர் உமாசங்கர். பம்பாய் சகோதரிகளின் மகன் என்று கொள்ளத்தக்க வகையில், உடனிருந்து பிரதம சீடராக விளங்குபவர் உமாசங்கர். இவர் சீடராகச் சேர்ந்ததும் ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

1988ல் பம்பாய் சகோதரிகளைத் தன் குருவாக வேண்டி அணுகியுள்ளார் உமாசங்கர். “எங்களுக்கு சதா கச்சேரிகள் இருக்கும். நீ நீடாமங்கலம் அவர்களிடம் பயிலலாம்” என்று இருவரும் கூறியிருக்கின்றனர். பின்பு 1994ல் இவரைத் தங்கள் சீடராக ஏற்றுக் கொண்டனர். ஒரே நாளில் திருமதி சரோஜாவிடம் இரண்டு கீர்த்தனைகளையும், திருமதி லலிதாவிடம் இரண்டு பாடல்களையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கற்றதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் உமாசங்கர்.

லலிதா நம்மைவிட்டுச் சென்றாலும், அவர் தந்த கானங்கள் இசை ரசிகர்களிடம் என்றும் நிலை கொண்டிருக்கும்!


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles