Read in : English
மக்களுக்கு புரதச் சத்து, நார்ச் சத்து கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மீன், பயிறு, கடலை போன்றவற்றை வழங்க வேண்டும் என்கிறார் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன்.
தொற்றா வாழ்வியல் நோய் பற்றிய உலக அளவிலான கருத்தரங்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இந்த முறை, வட அமெரிக்க நாடான கனடா நாட்டின் ரொடண்டோ நகரில் ஐந்து நாட்கள் நடந்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்கில் பங்கேற்ற பிரபல சித்த மருத்துவர் சிவராமன், இந்தக் கருத்தரங்கின் முக்கியத்துவம் தொடர்பாக கனடாவிலிருந்து இன்மதிக்கு அளித்த நேர்காணல்.
கேள்வி: உலக அளவிலான இந்தக் கருத்தரங்கு ஏற்பாட்டில் உங்களை கவர்ந்தது என்ன?
மருத்துவர் சிவராமன்: முதலில் இங்கு நான் கற்றுக் கொண்டது, கருத்தரங்க நேர ஒழுங்கு அமைப்பைதான். கருத்தரங்கைத் துவக்கி வைக்க வரும் அமைச்சர், வாழ்த்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம், மாலை நடக்கும் விருந்து நிகழ்வுக்கு தான் அழைக்கப்படுகின்றனர். விருந்துடன் அந்த நிகழ்வு முடிந்தது. இதைத் தவிர்த்து, ஐந்து நாட்களும் மருத்துவக் கருத்துகள் மட்டும்தான் பறிமாறப்பட்டன.
நம் ஊரில் கருத்தரங்கம் துவக்க, நிறைவு விழா கோலாகலங்கள், ஆர்ப்பரிப்புகள், அலங்காரங்கள் தான் இருக்கும். அதன் நடுவே தான் கருத்துரைகள் இருக்கும். அதுபோல், ‘ஆராய்ச்சி பற்றி ஐந்து நிமிடத்தில் பேசுங்க’ என்பது போல் துண்டுச்சீட்டு மேடைக்கு வரும். அது போல் எதுவும் இங்கு இல்லை.
‘மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்’ என்ற சித்த மருத்துவ வரிகளை அலோபதி அல்காரிதத்தில் பேசியது பயனுள்ளதாக இருந்தது.
இந்த கருத்தரங்களில் கலந்து கொண்ட மருத்துவத் துறையில் உலக அளவிலான பேராளுமைகள் கூட, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 45 நிமிடத்தில் சரியாக நன்றி சொல்லி முடித்ததும் ஆச்சரியம் தந்தது. தலைப்புக்குள் நின்று பேசியது இயல்பாக நடந்தது. ஆப்ரிக்க நாடான நைஜீரியா, ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து இணைய வழியில் பேராசிரியர்கள் உரைகளும் இடம்பெற்றது. துளி பிசகு இன்றி அனைத்தும் சிறப்பாக நடந்தன. இதை மாதிரியாகக் கொண்டு சென்னையில் ஒரு சித்த மருத்துவ மாநாடு நடத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது!
கேள்வி: கருத்தரங்கில் காலநிலை மாற்றம் குறித்த விவரங்கள் குறித்த பேசப்பட்டதா?

பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன்
சிவராமன்: நான் மிக விரும்பியது, உலகெங்கும் பெருகி வரும், ‘நான் கம்யூனிக்கபிள் டிசீஸ் இன் சில்ட்ரன்’ (non communicable diseases in Children) என்ற தலைப்பிலானது. உலகம் முழுவதும் உயர்ந்து கொண்டே செல்லும் உளவியல் நல சவால்கள், கோவிட் நோய் தொற்றுக்கு பிந்தைய உலகில், பெருகும் இதய மற்றும் சர்க்கரை நோய்கள் பற்றிய விவரங்களை அறிய விரும்பினேன். எல்லோருக்குமான உணவு, கால நிலை மாற்றத்தால் பெருகும் நோய்கள் பற்றிய புள்ளி விவரங்கள் ஏராளமாக கிடைத்தன.
ஆச்சரியப்பட வைத்த மருத்துவ உரைகளில் ஒன்று, மிசௌரி பல்கலைக்கழக இதயவியல் பேராசிரியர் ஆனந்த் சொக்கலிங்கம், இதய நோய்களை ஒருங்கிணைந்து சீர் செய்ய இயலும் என்ற அவரது, ‘ஐலைப்’ (HiLife) சிகிச்சை முறை பற்றியது. ‘மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்’ என்ற சித்த மருத்துவ வரிகளை அலோபதி அல்காரிதத்தில் பேசியது பயனுள்ளதாக இருந்தது.
மேலும் படிக்க: மரபு மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைப்பது சரிதானா?
கால நிலை மாற்றம் பற்றியும் பேசப்பட்டது. இன்னும், 9840 நாட்கள்தான் பாக்கி இருக்கிறது. வங்க•தேசத்தில் 11 சதவீதம் காலநிலை மாற்றத்தால் காணாமல் போய்விடும் என, புள்ளி விவரங்களுடன் கனடா பேராசிரியர் ஒருவர் பேசினார். . வங்க•தேசத்தில், 11 சதவீதம் போனால், சென்னையில் பாலவாக்கம் கொட்டிவாக்கம் மயிலாப்பூர் கதி என்னவாகும் என சிந்தனை பறந்தது.
காலநிலை மாற்றத்தால் நிலத்தில் உப்பேறுவதால், சோற்றில் உப்பேறுவதால் சிறுநீரக செயலிழப்பை நோக்கி எப்படிச் செல்கிறோம் என்பதை சுட்டிக்காட்டி இன்னொரு ஆய்வாளர் பேசியது, கால நிலை மாற்றம் பற்றி சிந்திப்பது தலையாய கடமை என உணர்த்தியது.
கேள்வி: கருத்தரங்கில் பயனுள்ளதாக எவற்றை கருதுகிறீர்கள்?
சிவராமன்: இன்போடமிக் (Infodemic) என்ற தலைப்பில் பேராசிரியார் திமோத்தி (இவர் ரிலாக்ஸ் (Relax) போன்ற பிரபல நூல்களின் ஆசிரியர்) சமூக ஊடகங்கள் வாயிலாக மருத்துவ உலகில் நடக்கும் பொய்ப் பிரசாரங்கள் பற்றியும், அதனால் நலவாழ்விற்கு ஏற்பட்டுள்ள சவால்களைப் பற்றியும் விலாவாரியாகப் பேசினார். முகப்பரு பாதிப்புக்கு, நாய்மூத்திரம் குடிப்பது, கோவிட் தடுப்பூசி போட்டவுடனே உடலில் காந்தத் தன்மை வந்து, ‘குண்டூசி ஆணி பிளேடு’ எல்லாம் உடலில் ஒட்டிக்கொள்வது, உலகை மறைமுகமாக ஆளும் பல்லி பாம்பு தலை கொண்ட மனிதர்கள் (lizard people theory conspiracy) என எல்லாவற்றையும் பேசினார். இந்த பொய்ப் பிரசாரங்களால், மனிதகுலத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் எவ்வளவு சங்கடங்களை அனுபவிக்கின்றனர், எத்தனை நோய்களுக்குள் அவர்கள் சிக்குகின்றனர் என தெள்ளத்தெளிவாக விளக்கினார். இது போல் பல அறிஞர்கள் உரைகளை கேட்க முடிந்தது.
உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மரபணு துறையில் ஆய்வு செய்யும் அறிஞர் மதன் தங்கவேலு இவர்களுடன் உரையாட முடிந்தது. இவை எல்லாம் இந்த கருத்தரங்கில் எனக்கு கிடைத்த புது ரத்தம். மரபணு விஞ்ஞானி சித்த மருத்துவ முறை பற்றி பேசியதும், ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர் வீட்டுச் சாப்பாட்டின் பெருமையை பேசியதும் இங்கு கேட்க முடிந்தது.
தமிழக ரேஷன் கடையில் 20 கிலோ இலவச வெள்ளை அரிசியை, 10 கிலோவாக குறைத்து, அதற்கு பதிலாக புரதம், நார்சத்து கிடைக்க வாரத்துக்கு அரை கிலோ மீன், மாதத்துக்கு, 2 கிலோ பயிறு, கடலை போன்றவற்றை வழங்க வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது
அதே சமயம் மற்றொரு கேள்வியும் எழுந்தது. அமெரிக்காவின் மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு எப்படி சரியாக பொருந்தும் என்ற மருத்துவ பொருளாதார கேள்விகளும் எழத்தான் செய்தன.
நல்ல சாப்பட்டை இலவசமாக அல்லது இன்னும் விலை குறைவாக கொடுக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் இப்போது ஒலிக்கத் துவங்கியுள்ளது. தமிழக ரேஷன் கடையில் 20 கிலோ இலவச வெள்ளை அரிசியை, 10 கிலோவாக குறைத்து, அதற்கு பதிலாக புரதம், நார்சத்து கிடைக்க வாரத்துக்கு அரை கிலோ மீன், மாதத்துக்கு, 2 கிலோ பயிறு, கடலை போன்றவற்றை வழங்க வேண்டியது கட்டாயத் தேவையாக உள்ளது.
மேலும் படிக்க: அலோபதியில் மாற்று மருத்துவம்: சரியா?
கேள்வி: இந்த மாநாட்டின் அடிநாதம் என்ன?
சிவராமன்: மாநாட்டில் அடிநாதமாக சர்க்கரை பாதிப்பு, மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு, புற்று நோய் போன்றவற்றை தடுப்பது மருந்து மாத்திரையால் மட்டும் இல்லை; அவை அவசியம் வேண்டும் தான். ஆனால், ஆரோக்கிய உணவு, அவசியமான உடற்பயிற்சி, அழுத்தமில்லாத மனம் போன்றவைதான் முழுமையான நல வாழ்வைக் கொடுக்கும் என்ற சிந்தனை பெருகிவருகிறது. இது ஒன்றும் புதிய செய்தி இல்லை.
ஆனால் முக்கிய ஆய்வுத் தரவுகளுடன் ஒட்டுமொத்த அறிவியல் உலகமும் இதை நோக்கி இப்போது கூக்குரலிடுகிறது. நமக்கும் அது கேட்க வேண்டும்.
Read in : English