Read in : English
அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் தாமதமான பருவமழைக்கு மத்தியில், சர்ச்சைக்குரிய மேகதாது அணைத் திட்ட விசயத்தில் தமிழ்நாடு அரசு பெருந்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும், இரு மாநில விவசாயிகளின் நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கர்நாடகத் துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இரு மாநிலங்களும் இது சம்பந்தமான நீதிமன்றப் போராட்டங்களை நிறுத்திக் கொண்டு, இந்த லட்சியத் திட்டத்திற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.
மேகதாது அணைத் திட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் சிவக்குமார், கர்நாடகம் மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிநீர் வழங்கும் இந்தத் திட்டத்தின் நன்மைகளை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஏற்கெனவே ரூ.1,000 கோடி கணிசமான நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அந்த நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேகதாது அணைத் திட்டத்தால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் சிவக்குமார், கர்நாடகம் மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிநீர் வழங்கும் இந்தத் திட்டத்தின் நன்மைகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
மேகதாது திட்டம் ஏற்படுத்தியிருக்கும் கவலைகளையும் அச்சங்களையும் நீக்கும் விதமாக சிவக்குமார், திட்டத்தின் நோக்கம் தமிழகத்துடன் பகைமையை உருவாக்குவதோ அல்லது மோதலில் ஈடுபடுவதோ அல்ல என்று அழுத்தமாகக் கூறினார். இரு மாநிலங்களும் இதுவரை சகோதர உறவைப் பேணிக் காத்திருந்ததை எடுத்துரைத்த துணைமுதல்வர், காவிரி நீர் ஆதாரங்களை கடலில் கலந்து வீணாக விடாமல் நியாயமான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று வலியுறுத்தினார்.
காவிரி அணைகளின் மீதான கட்டுப்பாடு ஒன்றிய அரசிடமே உள்ளது என்றும், அதுதான் நீர்த்திறப்பு குறித்து முடிவு செய்யும் என்றும் துணைமுதல்வர் விளக்கினார். இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அவர் வாதிட்டார்.
மேலும் படிக்க: மெட்ரோ ரயில் மூலம் இனி கர்நாடகம், தமிழ்நாடு இணையும்
அவரது கூற்றுப்படி, இந்தத் திட்டத்தின் நோக்கம் குடிநீருக்காக தண்ணீரைச் சேமித்து பயன்படுத்துவதாகும். ஆதலால் கீழ் நதியோர மாநிலம் (தமிழ்நாடு) கவலைப்படுவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை கட்டப்படும் என்று சிவக்குமார் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அணைகட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒவ்வொரு நிலையிலும் கடுமையாக எதிர்க்கும் என்று அவர் அறிவித்தார்.
காவிரிநீர் மேலாண்மை ஆணையம் நடத்திய 15 கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொள்ளவில்லை என்று கர்நாடகத் துணை முதல்வர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் துரைமுருகன் கூறினார். உண்மையில் ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகம் பங்கேற்றிருக்கிறது என்று கூறிய அவர், கர்நாடக அதிகாரிகள் தங்கள் துணை முதல்வருக்கு தவறான தகவல்களை அளித்திருக்கலாம் என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்படாத மேகதாது அணையை கர்நாடகம் கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அரசமைப்புச் சாசனம் மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளின்படி மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியுள்ளது
காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் சம்பந்தமான குறிப்புகளில் தமிழகத்தின் பங்கேற்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றார் துரைமுருகன்.
காவிரி நடுவர் மன்றம் ஒவ்வொரு திட்டத்தையும் பரிசீலித்த பிறகே நதியோர மாநிலங்களுக்கு நீர்ப்பங்கீடு செய்தது என்றும் சில திட்டங்களின் முன்மொழிவுகளை மன்றம் நிராகரித்து விட்டது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் நடுவர் மன்றத்தின் உத்தரவை முழுமையாக அங்கீகரித்தது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்படாத மேகதாது அணையை கர்நாடகம் கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து அரசமைப்புச் சாசனம் மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளின்படி மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மீன்பிடித் தடை: தமிழக மீனவர்களுக்கு கர்நாடக மீனவர்கள் ஆதரவு
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நதியின் நீர் மீது எந்த மாநிலமும் தனி உரிமை கோர முடியாது என்று தமிழக நீர்வள அமைச்சகத்தின் வல்லுநர்கள் வலியுறுத்தினர். பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக கர்நாடகம் ஏற்கனவே தனது நீர் ஆதாரங்களை நிறுவியுள்ளது.
ஆனால், இப்போது 4.75 டிஎம்சி குடிநீர் என்ற பெயரில் 67.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது என்று துரைமுருகன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
Read in : English