Read in : English
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி மாநில அமைச்சராகப் பதவியேற்றுள்ளது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. பனி பெய்து குளம் நிறையாது என்பதுபோல விமர்சனங்களால் எதுவும் மாறிவிடாது. உதயநிதி அரசியலில் நீடிப்பதும் நிலைப்பதும் அவரால் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்பதையும் மூத்த தலைவர்களை அரவணைத்து கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்தும் திறமையையும் பொறுமையையும் வளர்த்துக் கொள்ள முடியுமா என்பதையும் பொறுத்தது.
இதுவரை அவர் கடந்து வந்தது மலர்ப்பாதையாக இருந்தாலும் இனி அவருக்குப் பல சவால்களும் சோதனைகளும் நிச்சயம் காத்திருக்கின்றன. உதயநிதிக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் விமர்சனத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், திமுக தலைவர்களில் ஸ்டாலினைத் தவிர உதயநிதியால் மட்டுமே மக்கள் ஆதரவைத் திரட்டவும் வாக்குகளை ஈர்க்கவும் முடியும் என்பதே திமுக அவரைக் களம் இறக்குவதற்கான முக்கியக் காரணம்.
திமுகவில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கட்சித் தொண்டர்கள் அறிந்த முகமாகவும், தங்களது தொகுதியிலுள்ள மக்களால் அறியப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாரும் தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்காளர்களை ஈர்க்கும் முகமாக இல்லை.
2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் உதயநிதி. சென்ற இடங்களில் எல்லாம் பெருமளவு கூட்டத்தை இழுக்க அவரால் முடிந்தது. தன்னைக் காண வந்திருந்த மக்களிடம் ‘கருணாநிதியின் பேரன் என்றும், ஸ்டாலினின் மகன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு எளிமையாகப் பேச முடிந்தது.
திமுகவில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர்; அவர்களில் யாரும் தமிழ்நாடு முழுவதுமுள்ள வாக்காளர்களை ஈர்க்கும் முகமாக இல்லை
கட்சித் தலைவர் ஸ்டாலினைத் தவிர வேறு எந்த திமுக தலைவராலும் மாநிலம் முழுவதும் கூட்டத்தை ஈர்க்கவும் வாக்குகளைச் சேர்க்கவும் முடியாத நிலையே தற்போது உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற உதயநிதி மட்டுமே காரணம் இல்லை. வேறு பல காரணங்கள் இருக்கிறது என்பதும் உண்மை தான்.
முன்னாள் முதல்வர்கள் ஜெ.ஜெயலலிதா, மு.கருணாநிதி போன்ற கவர்ச்சியான தலைவராக உதயநிதி இன்னும் மாறிவிடவும் இல்லை. ஆனால், இனி வரும் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வாக்குகளைக் கவர ஸ்டாலினுக்கு அடுத்து இன்னொரு தலைவரை உருவாக்கும் கட்டாயத்தில் திமுக இருக்கிறது. அந்தக் கட்டாயமே உதயநிதிக்கு தரும் முக்கியத்துவத்துக்குக் காரணமாகவும் இருக்கிறது.
மேலும் படிக்க: எதிர்கால கழகத்தலைவர், இன்று கலகத்தலைவன்?
திமுகவில் தற்போதுள்ள எந்தத் தலைவரையும் மக்கள் தலைவராக முன்னிறுத்த முடியாது. அந்த இடத்துக்கு உதயநிதி வருவாரா என்பதும், திமுகவின் திட்டம் வெற்றி பெறுமா என்பதும் எதிர்காலத்தில் மக்களால் முடிவு செய்யப்படும்.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்தபோது ஜெயலலிதா வெறும் கொள்கைப் பரப்புச் செயலாளராகவே இருந்தார். கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு மேல் பல தலைவர்கள் இருந்தனர். நாவலர் நெடுஞ்செழியன் போன்ற மூத்த திராவிட இயக்கத் தலைவர்களும், கா.காளிமுத்து போன்ற பல துறைகளில் புகழ் பெற்ற திறமையான பேச்சாளர்களும் இருந்தார்கள்.
ஆனால், 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களில் பெரும்பகுதியினர் ஜெயலலிதாவின் தலைமைக்கு வாக்களித்தனர்.
மக்களின் வாக்குகளைப் பெறும் முக்கிய தகுதி ஜெயலலிதாவுக்கு இருந்ததால், அவருடைய தலைமையின் கீழ் கட்சி ஒன்றிணைந்தது. 1996 மற்றும் 2006 தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் கட்சியை அவர் கட்டுக்கோப்பாகவே வைத்திருந்தார்.
உதயநிதியுடன் ஒப்பிடும்போது திமுக தலைவர் ஸ்டாலின் முப்பது வயதிற்குள் திமுக இளைஞரணி தலைவராகிவிட்டார். 35 ஆண்டுகள் அரசியலில் அவரைப் பாதுகாத்து வளர்த்தார் அவரது தந்தை கருணாநிதி.
சென்னை மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு முன்பே பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்துள்ளார் ஸ்டாலின் . அரசியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றபின்னர், அதாவது 2006ல் தான் ஸ்டாலினால் மாநில அமைச்சராகவும் துணை முதல்வராகவும் கட்சியின் பொருளாளராகவும் வர முடிந்தது. ஸ்டாலினின் எழுச்சி மெதுவாகவும் சீராகவும் இருந்தது.
அரசியலில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றபின்னர், ஸ்டாலினால் மாநில அமைச்சராகவும் துணை முதல்வராகவும் கட்சியின் பொருளாளராகவும் வர முடிந்தது
ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி, மாநில அமைச்சராகப் பதவியேற்பதற்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே அனுபவம் பெற்றிருக்கிறார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கான துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நிர்வாகத்தில் பயிற்சி மற்றும் அனுபவத்தைப் பெற முடியும். சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் அமைச்சகம் தரப்பட்டுள்ளதால் எல்லா அமைச்சர்களுடனும் அவர் தொடர்புகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உதயநிதியை எதிர்ப்பவர்கள் அவர் செய்யும் தவறுகளுக்காகக் காத்திருக்கிறார்கள். சமூக ஊடக யுகத்தில் அவருக்கு ஏற்படும் சிறு சறுக்கலும் கூட ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்க்கும். 25 ஆண்டுகளுக்கு முன்பு அச்சு ஊடகங்கள் மற்றும் சில தனியார் தொலைக்காட்சிசேனல்கள் மட்டுமே இருந்தன; ஆதலால், ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் பெற்ற கவனமும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. ஆனால், உதயநிதி நிலை அப்படியில்லை.
மேலும் படிக்க: திமுகவில் உதயநிதியை முந்தும் கனிமொழி
தன்னைச் சுற்றியுள்ள சிலருடன் மட்டுமே பேசக் கூடியவர்; எளிமையானவர்; மென்மையான சுபாவம் கொண்டவர் என்று அறியப்படும் உதயநிதி 24 மணி நேரமும் ஊடகங்களின் வெளிச்சத்தில் காலம் தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் அவர் பேசும் வார்த்தைகள், அவரது செயல்கள் ஒவ்வொன்றும் கவனம் பெறும். அவர் எதைப்பற்றி பேசாமல் இருக்கிறார் என்பதும், எதைச் செய்யாமல் இருக்கிறார் என்பதும் கூட கவனிக்கப்படும். அவர் பேசாமலே இருந்தாலும் அதுவும் பேசுபொருளாகும்.
ஸ்டாலின் தலைவரானபோது, கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆதரவு அவருக்கு இருந்தது. ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் வெளிப்படையாக எதிர்த்தார்கள். 1994ல் மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் ‘அரசியலில் நேர்மை’ என்ற முழக்கத்துடன் கட்சியில் இருந்து வெளியேறியதால் ஸ்டாலின் பாதையில் தடைகள் இல்லை. ஸ்டாலின் இளைஞரணித் தலைவரானபோது, அறுபது ஆண்டுகளைக் கடந்த அவரது தந்தை கருணாநிதி அவரை வழிநடத்தினார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள், அரசியலில் அவரைப் பாதுகாத்து பயிற்சி அளித்தார்.
ஸ்டாலினை எதிர்த்தவர்கள் தங்கள் கருத்துகளையோ, நோக்கங்களையோ மறைக்காமல் இருந்ததால் அவர்களை நீக்குவது கருணாநிதிக்கு மிகவும் எளிதாக இருந்தது.
உதயநிதியைப் பொறுத்தவரை, கட்சியின் மூத்த தலைவர்கள் யார் யார் அவரை எதிர்க்கிறார்கள் என்பதும் யார் ஆதரிக்கிறார்கள் என்பதும் முழுமையாகத் தெரியவில்லை. அரசியல் என்பது யாரையும் நம்ப முடியாத களமாகத்தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
“காலங்களாலே காரியம் பிறக்கும்
காரியம் பிறந்தால் காரணம் விளங்கும்”
என்னும் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் அரசியலுக்கும் பொருந்தும்!
Read in : English