Read in : English
திமுக துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டிருக்கிறார். தனது மகனை அடுத்த தலைவராக்கும் திட்டத்துடன் தங்கைக்கு மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார் என்று இதுவரை நிலவிய குற்றச்சாட்டைக் கட்சியின் தலைவராக அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு நீர்த்துப்போகவைத்துள்ளது.
கனிமொழியும் குடும்பத்தில் ஒருவரே என்றாலும் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவைவிட்டு வெளியேறியபின் கனிமொழியின் நியமனம் இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. திமுகவில் தற்போது கனிமொழியைவிடப் பரவலாக மக்களுக்கு அறிமுகமான பெண் தலைவர் யாரும் இல்லை. உதயநிதி அரசியலில் நுழைந்த நாள்முதல் எதிர்க்கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் திமுக மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டைச் சுமத்திவருகின்றன. திமுகவில் மன்னராட்சியில் நடப்பதுபோல் தந்தைக்குப் பின் மகன் அவருக்குப் பின் பேரன் என்று வாரிசுரிமை தொடர்வதாகப் பேசப்பட்டது.
இதுவரை கனிமொழியும் உதயநிதியும் கட்சியின் அணிகளில் ஒன்றுக்குத் தலைவர்களாகச் சமநிலையில் இருந்தனர். கனிமொழி துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபின் அவர் திமுக தலைமையில் முக்கியமான ஒருவராக மாறியுள்ளார். ஆனால், உதயநிதி கட்சியின் ஒரு அணிக்குத் தலைவராகத் தேங்கி நிற்கிறார்.
உதயநிதியைவிடக் கட்சிப் படிநிலையில் கனிமொழி உயரத்தில் இருப்பதால் திமுகவின் அடுத்த தலைவரும் இதே குடும்பத்தில் இருந்து வரும் நிலை உருவானால் கனிமொழிக்கே வாய்ப்பு அதிகம் என்று பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் உதயநிதி அரசியலில் ஒரு காலும் சினிமாவில் ஒரு காலும் வைத்து இருக்கிறார்.
இதுவரை கனிமொழியும் உதயநிதியும் கட்சியின் அணிகளில் ஒன்றுக்குத் தலைவர்களாகச் சமநிலையில் இருந்தனர். கனிமொழி துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபின் அவர் திமுக தலைமையில் முக்கியமான ஒருவராக மாறியுள்ளார்
பத்தாண்டுகளுக்கு முன்னர் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்குக் கனிமொழியே காரணம் என்று பேசப்பட்டது. அவர்மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன; இதனால் தேர்தலில் திமுகவுக்குப் பெரும் பின்னடைவு உருவானது எனப் பார்க்கப்பட்டது. 2007ஆம் ஆண்டே கனிமொழி மாநிலங்களவை உறுப்பினரானாலும் அவர் 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானபிறகுதான் அவரது அரசியல் அடுத்த கட்டத்துக்குப் போனது.
2019ஆம் ஆண்டு அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு அப்போதைய மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நாடார்கள் பெருமளவு நிறைந்த தொகுதியில் அதே சமுதாயத்தைச் சார்ந்த தமிழிசையை கனிமொழி பெரும்வாக்கு வித்தியாசத்தில் வென்றது நாடார் சமுதாயம் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் அவரை ஆதரித்ததை வெளிப்படுத்தியது.
மேலும் படிக்க: ”ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மின்சார ஆலையாக மாற்றமுடியும்”
அடுத்து நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அவரைத் தென்மண்டலப் பொறுப்பாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது, ஆனால், அது நடைபெறவில்லை. ஆனால், இளைஞர் அணி செயலாளர் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அவர் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். இந்தத் தேர்தலில் திமுக பிரம்மாண்டமான வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பின்னும் யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளை அதிமுக பெற்றது.
கடந்த ஆண்டு இறுதியில் திமுக இளைஞர் அணியில் இளம்பெண்களைச் சேர்ப்பதாக வந்த தகவல் கனிமொழிக்கும் உதயநிதிக்கும் மோதலை ஏற்படுத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன. கோவையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் இளம்பெண்கள் கலந்துகொண்டதால் இளைஞர் அணிக்கும் மகளிர் அணிக்கும் இடையே குழப்பம் நிலவியது.
இளம்பெண்களை இளைஞர் அணியில் சேர்த்துவிட்டால் மகளிர் அணி என்பதே முதிய மகளிர் அணியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டது. இறுதியில், இந்தப் பிரச்சினைக்கு முடிவுகாணும் வகையில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பின் கனிமொழியின் அரசியல் பயணம் ஏறுமுகத்திலேயே காணப்படுகிறது.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், உதயநிதி தொடர்ந்து சினிமாத்துறையில் கவனம் செலுத்திவந்ததால் முதலமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை என்று தெரிகிறது. நடிகராகச் சம்பளம்பெறும் ஒருவர் ஆட்சிப் பதவியில் இருக்க முடியாது என்ற நிலை இருப்பதாலும் சட்டச் சிக்கல் எழும் என்பதாலும் உதயநிதி ஆதரவாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் இந்தக் கோரிக்கையை ஆதரித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், உதயநிதி தொடர்ந்து சினிமாத்துறையில் கவனம் செலுத்திவந்ததால் முதலமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை என்று தெரிகிறது
உதயநிதி அவரது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சிறப்பாகப் பணிகளைச் செய்துவருகிறார். சமூக ஊடகங்களில் கூர்மையான பாஜக எதிர்ப்புக் கருத்துகளை வெளியிடுவதால் எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைக்கிறார் கனிமொழி.
ஆனால், உதயநிதி காவி அணிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வெளியிடுவதில்லை. அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் மனிதநேயமுள்ள நல்ல மனிதராக தன்னைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்குவதையே உதயநிதி விரும்புகிறார். தன்னைத் தமிழன் என்று அடையாளப்படுத்துவதையோ தமிழர்களின் தேசியப் பிரச்சினைகளில் கருத்து சொல்வதையோ அவர் தவிர்த்துவிடுவார்.
மேலும் படிக்க: மதச்சார்பின்மை கொண்டவரா ஸ்டாலின்?
அவர் தன்னை ‘சின்னவர்’ என்று அழைப்பதைப் பெரிதும் விரும்புவதாக அவரே பேசியுள்ளார். ‘சின்னவர்’ என்பது முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைத் திரைத்துறையினர் குறிப்பிடும் பெயர். ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்கள் கூட எம்ஜிஆருக்கு இணையான பிம்பத்தைக் கட்டியமைக்க முடியாத நிலையே இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் இல்லாத நிலையில் மிகவும் சாதாரண மொழியில் பேசுவதே மக்களுடன் தன்னை இணைக்கும் என்று உதயநிதி கருதுகிறார். திருநங்கைகள் பற்றி கனிமொழி நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசுவதுண்டு. அவர்களைப் பற்றி சட்டமன்றத்தில் உதயநிதியும் பேசியுள்ளார்.
கனிமொழி ஓரளவு இலக்கிய ஈடுபாடுள்ளவர். சிறுவயது முதலே திராவிடர் கழகத்துடன் நெருக்கம் காட்டுபவர். அவ்வப்போது கொள்கை முழக்கங்களால் தன் மீது கவனத்தை ஈர்ப்பவர். பத்திரிகையாளர்களுடன் இயல்பான நெருக்கம் காட்டுபவர். மொத்தத்தில் இப்போதைய சூழலில் அரசியல் சதுரங்கத்தில் கனிமொழி சற்று வலுவான இடத்தை நோக்கி நகர்ந்துள்ளார் என்றே பார்க்க வேண்டியதிருக்கிறது.
Read in : English