Read in : English

Share the Article

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) அரசு வேலை மற்றும் கல்வியில் பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, இட ஒதுக்கீட்டின் தாயகமான தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் சாதி விகிதாச்சாரப்படி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு முக்கியப் பதவிகளை வழங்கியும் அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்தும், தமிழகத்தில் பிராமணரல்லாத கட்சியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜக. இந்த நேரத்தில், ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் வருமானம் பெறும் ‘ஏழை உயர்ஜாதி’யினருக்கு இட ஒதுக்கீடு அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். அனைத்து இந்துக்களின் கட்சியாகக் காட்டிக் கொள்ளும் பாஜக தொடக்கத்தில் இருந்தே இந்த ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்து வருவது, உயர் சாதியினரின் நலன்களுக்காகவே அக்கட்சி சேவையாற்றுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து ச்சநீதிமன்றத்தில் வாதாடிய திமுக, அதே நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை அறிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைமுருகன், இப்போது ஐந்து பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பானது முன்னர் ஒன்பது பேர் கொண்ட அரசியல் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்டல் கமிஷன் வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் தீர்ப்பை துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவு. அதைப் போலவே, இந்த வழக்கிலும் ஒன்பது பேர் அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க வாய்ப்புகள் உள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடிய  திமுக, அதே  நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது

உச்சநீதிமன்றத்தில் இத்தீர்ப்பு வெளியான உடனேயே மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆலோசனை வழங்கினார். அதன்படியே திமுகவும் செயல்படும் என்பதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கை நவம்பர் 12ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முதன்மை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவரும் எடப்பாடி கே.பழனிசாமி இதுவரை மௌனம் காத்து வருகிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவரது கருத்து வெளிப்படலாம்.

மேலும் படிக்க: 10.5% வன்னியர் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு: அடுத்து என்ன செய்யப் போகிறது திமுக அரசு?

இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாத ஒன்றிய அரசு, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் வாங்கும் முற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

“சமூகநீதிப் போராட்டத்தில் நீண்ட நெடிய களங்களை சந்திக்க வேண்டிய நிலைமையை இத்தீர்ப்பு உணர்த்துகிறது’ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சொல்வதுபோல, இந்தப் பிரச்சினை 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை நீள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த 103வது சட்டத்திருத்தத்தை நீக்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால்தான் அது முடியும் என்று திமுக கூட்டணி பிரச்சாரம் செய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

ஒருவேளை இதற்கு வடஇந்தியாவில் இருக்கும் கட்சிகள் ஆதரவு தராவிட்டால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக வழங்கப்படும் இந்த பத்து சதவீத ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவில் உள்ள ஏழை மக்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் இப்போதே கேட்கத் தொடங்கியுள்ளன.

இந்த ஒதுக்கீடு மற்ற பிரிவினருக்கான ஒதுக்கீட்டைப் பாதிக்காது என்று தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் கூறியிருப்பதற்குப் பல்வேறு கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ’பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினரில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பொதுப்பிரிவில் இடங்களைப் பெறலாம். ஆனால், பொதுப்பிரிவில் பத்து சதவீதத்தை பொருளாதாரத்தில் குன்றிய உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீட்டுக்குத் தரும்போது அந்த இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை இதர பிரிவினர் இழக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

முதன்மை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துவரும் எடப்பாடி கே.பழனிசாமி இதுவரை மௌனம் காத்து வருகிறார்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவரது கருத்து வெளிப்படலாம்

இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்பட்ட பிறகு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி கேட்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த 103வது சட்டத்திருத்தத்தை ஆதரித்த காங்கிரஸின் மாநிலப் பிரிவும் இதே கருத்தைச் சொல்வது ‘இதுதான் தமிழ்நாடு’ என்று பலரையும் பேச வைத்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இத்தீர்ப்பை வரவேற்றாலும் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களின் எதிர்ப்பு அக்கட்சிக்குள் முரண்பட்ட கருத்துகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

பாஜகவுடன் கைகோர்க்கத் தயாராக இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் இந்த ஒதுக்கீட்டை எதிர்ப்பது பாஜகவை முழுவதுமாகத் தனிமைப்படுத்தியுள்ளது. பெரும்பாலான தலைவர்கள் இந்த இடஒதுக்கீட்டில் ஆண்டுக்கு ரூ 8 லட்சம் எனும் உச்சவரம்பு நிர்ணயத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க: இடஒதுக்கீடு: 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி தொடங்கியது

ரூ. 2.5 லட்சம் என்பதே வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு. அப்படியிருக்க ரூ.8 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று கூறும் இந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக வருமான உச்சவரம்பை 8 லட்சத்துக்கு மேல் அதிகப்படுத்தி ஏழைகளுக்கு பாஜக உதவி செய்யுமா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.

பொருளாதாரம் நிலையானதாக இருக்காது என்பதால் இது இட ஒதுக்கீட்டுக்கு ஒரு அளவுகோலாக இருக்க முடியாது என்று கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு மட்டும் எப்படி இட ஒதுக்கீடு தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸை போலவே இந்த சட்டத்துக்கு ஆதரவளித்திருக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இவ்விவகாரத்தில் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக இருப்பதற்குத் தனது எதிர்ப்பை தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ளது. இந்தக் கருத்தை அப்போதே பதிவு செய்துவிட்டோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி உதட்டளவில் வெளிப்படுத்தினாலும், செயலளவில் திருத்தம் எதுவும் இல்லாதபோதும் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தது ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தத் தீர்ப்பினாலேயே பத்து சதவிகிதம் ஒதுக்கீடு தர வேண்டிய கட்டாயமில்லை என்றும் அந்தக் கட்சி சமாதானம் கூறியுள்ளது. உயர் சாதியினர் என்ற சொல்லை கவனமாகத் தவிர்த்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி, ‘பொதுப்பிரிவினர்’ தமிழ்நாட்டில் 5 சதவீதம் மட்டுமே இருப்பதாக சொல்லப்படும் நிலையில் பொதுப் பிரிவினருக்கான சாதிக் கணக்கெடுப்பை மேற்கொண்டு அதைப் பொறுத்து தமிழ்நாடு அரசு முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான தலைவர்கள் இந்த இடஒதுக்கீட்டில் ஆண்டுக்கு ரூ 8 லட்சம் எனும் உச்சவரம்பு நிர்ணயத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளனர்

“ஆனால், ஒரு பகுதியில் ‘பொதுப்பிரிவினர்’ இருக்கும் வீடுகளை மட்டும் அடையாளம் கண்டு எப்படி கணக்கெடுப்பது? இதற்கு எதிராக, “ஒரு பகுதியில் ‘பொதுப்பிரிவினர்’ இருக்கும் வீடுகளுக்கு தனியாக எதுவும் அடையாளம் இருக்கிறதா?” என்பது போன்ற கேள்விகளும் பெருகி வருகின்றன.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரப்பூர்வத் தரவுகளை மேற்கோள் காட்டினர்.

2004-2005ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகப் (NSSO) புள்ளிவிபரங்களின்படி ஒட்டுமொத்தமாக 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தனர். இவர்களில் 7.74 கோடி தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 4.25 கோடி பழங்குடியினர், 13.84 கோடி பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளனர். உயர்சாதியினர் 5.85 கோடி பேர் மட்டுமே இருக்கின்றனர்.

இந்த புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொண்டால், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களில் உயர் சாதியினருக்கு மட்டும் ஒதுக்கீடு தருவதை தமிழ்நாடு எதிர்ப்பதையும் ஏற்கத்தான் வேண்டும். ஏனென்றால், இடஒதுக்கீட்டுக் கொள்கையை இந்தியாவுக்கே அறிமுகம் செய்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடுதான்!


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles