Read in : English

Share the Article

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியுடன் திமுக, தன்எதிரியான அதிமுகவைத் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று தன்ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது. இது உண்மையின் ஓர் அம்சம்; மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 20 புதிய மேயர் பதவிகளில் 11 பதவிகளைப் பெண்களுக்குக் கொடுத்து, கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பெண்ணுக்கும் அதிகாரம் உண்டு என்பதைத் தெளிவாகவும் பலமாகவும் வெளிப்படுத்தியுள்ளது திமுக.

நீண்டகாலமாக எம்ஜிஆராலும் ஜெயலலிதாவாலும் மிகக்கவனமாகக் கட்டமைக்கப்பட்ட பெண்கள் வாங்குவங்கியை ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலே திமுக உடைத்திருக்கிறது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெண்களிடம் கட்சியைக் கொண்டுசேர்த்திருக்கும் இந்தக் கொள்கைதான் கட்சியை புதிய உயரங்களைத் தொட்டு, பல எல்லைகளைக் கடந்து புதுசிகரங்களை எட்ட வைத்திருக்கிறது. அவரது தந்தை மு. கருணாநிதியாலும்கூட சாதிக்க முடியாத ஒருசாதனை இது.

நீண்டகாலமாக எம்ஜிஆராலும் ஜெயலலிதாவாலும் மிகக்கவனமாகக் கட்டமைக்கப்பட்ட பெண்கள் வாங்குவங்கியை ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலே திமுக உடைத்திருக்கிறது.

கடந்தகாலத் தேர்தல்களில் பெண்வாக்காளர்களின் மத்தியில் அஇஅதிமுக திமுகவை விட அதிக செல்வாக்கோடு மிளிர்ந்தது. மொத்த வாக்காளர்களில் பாதி பெண்களாக இருந்தபடியால், அதிமுகவுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அதனால்தான் 1996 தேர்தலில் அதிமுகவின் பெண்கள் வாங்குவங்கி முதன்முதலாகக் கடுமையாகச் சரிந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார் ஜெயலலிதா. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது தென்சென்னைச் சாலைகளில் அவர் காட்டிய செல்வப் பகட்டு, படோடபம், குறிப்பாக தங்க நகை ஆடம்பரம், ஆகியவை கட்சியைத் தோல்விக்கு ஆளாக்கியது. இருந்தாலும், பிற்காலத்தில் பெண்கள் வாக்கு வங்கியை ஜெயலலிதா எப்படியோ மீட்டெடுத்தார்.

பெண் வாக்காளர்களிடையே பெரும்பான்மை வாக்கைப் பெறுவதில் திமுக-வுக்கு எப்போதுமே போராட்டம்தான் என்பது வரலாறு. எம்ஜியார் அடிக்கடி பயன்படுத்தும் ‘தாய்க்குலம்’ என்ற மந்திரச்சொல்லால் பெண்களுக்கு அவரை அதிகமாகவே பிடித்துப் போனது. கூட்டங்கூட்டமாகப் பெண்கள் குடும்பத்தோடு அவரது திரைப்படங்களைக் கண்டுகளித்தார்கள். இந்த வாக்குவங்கியை அஇஅதிமுக கவனமாகப் பேணிக்காத்து வந்தது.

ஆனால் சரித்திரத்தில் முதன்முதலாக ஸ்டாலின் இந்த நிலைமையைத் தலைகீழாக்கினார்; பெரும்பான்மையான பெண்வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்கும் ஒருபுதிய சூழலை உருவாக்கினார். தமிழ்நாட்டின் உள்ளார்ந்த பகுதிகளில் செயல்படும் உள்ளூர் திமுக தலைவர்கள் கொண்டிருக்கும் ஓர் அதிகாரப்படிமத்தை ஸ்டாலின் தன்னிடம் உருவாகாமல் பார்த்துக்கொண்டார். மென்மையான, எதேச்சாதிகார உணர்வு இல்லாத ஒரு தலைவராகக் காட்சியளித்தார். தேர்தல் பரப்புரைகளிலும் பொதுவிழாக்களிலும் அவரோடு பெண்களும் குழந்தைகளும் ’செல்ஃபி’ எடுத்துக்கொள்ளும் சித்திரங்களும், படிமங்களும் புனையப்பட்டவை போலத் தோன்றினாலும், பெண்கள், குறிப்பாக படித்த இளைய தலைமுறையினர், அவரை நேசிப்பதற்கு அவை காரணமாகின.

இதன் தர்க்கரீதியிலான பரிணாமத்தில், பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீட்டால் உற்சாகமடைந்த இளைய சமூகத்தினர், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டிப்போட கட்சி டிக்கெட் கேட்டுப் பெரும் ஆர்வத்தோடு வரிகைகட்டி நின்றார்கள். இருபதுகளிலும், ஆரம்பகட்ட முப்பதுகளிலும் வயதைக் கொண்டிருந்த இளைய தலைமுறையினர் உற்சாகத்தோடு தேர்தல் டிக்கெட் கேட்டுவந்த எழுச்சியைக் கண்டு திமுகவில் பழம் தின்று கொட்டைபோட்ட பெருந்தலைகள் ஆச்சரியப்பட்டன. அப்படி டிக்கெட் கேட்ட பெரும்பாலோனர் மரபுவழியான திமுக குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்றாலும், தேர்தலில் போட்டிப் போட்டுப் பதவிகளை வெல்ல ஏராளமான பெண்கள் வந்தது இதுதான் முதல்தடவை. திமுகவில் ஆகப்பெரியதோர் மாற்றம் இது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,000 நகர்ப்புறக் கவுன்சிலர்களில் கிட்டத்தட்ட பாதிபேர் மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலும் வசிக்கும் திமுகவைச் சார்ந்த பெண்கள்தான். அரசியலில் பெண்களின், குறிப்பாக இளையசமூகத்தினரின், பங்களிப்பு என்ற கொள்கையில் திமுக எட்டிப்பிடித்த சாதனை இது. அவர்களில் பெரும்பாலோனர் படித்தவர்கள்; பட்டதாரிகள்; முதுகலைப்பட்டதாரிகள்; தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் என்பது திமுகவுக்குக் கிடைத்த ஓர் உந்துசக்தி.

28 வயதுப் பெண்ணை ஆச்சரியமூட்டும் வகையில் சென்னை மேயராக்கியதின் மூலம் கடந்த 20 வருடங்களில் சாதிக்காத ஒருபெரும் பரபரப்பை மாநிலம் முழுவதும் சாதித்திருக்கிறது திமுக.

28 வயதுப் பெண்ணை ஆச்சரியமூட்டும் வகையில் சென்னை மேயராக்கியதின் மூலம் கடந்த 20 வருடங்களில் சாதிக்காத ஒருபெரும் பரபரப்பை மாநிலம் முழுவதும் சாதித்திருக்கிறது திமுக. பதினொரு பெண்கள் மேயர்களாக பதவியேற்றதையும், நகராட்சிகளிலும், நகரப் பஞ்சாயத்துகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பதவியேற்றதையும் காட்டிய படங்கள் தொலைக்காட்சித்திரையில் மின்னியபோது தாய்க்குலங்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.

அஇதிமுகவை அகற்றிவிட்டு மாநிலத்தில் முதன்மைக்கட்சியாகத் திமுகவை ஸ்டாலின் கொண்டுவந்ததற்கு இந்தச் சமூகப்புரட்சிதான் காரணம். ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்ட இலவசங்கள், நகர்ப்புறங்களில் பெண்களுக்கான இலவச அரசுப்பேருந்துப் பயணம், மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும், தலித்துகளுக்கும் இடஒதுக்கீட்டில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆகியவை திமுக புதிய வாக்காளர்களைக் கவர்வதற்கு பெரிதும் உதவின. ஸ்டாலின் பார்ப்பதற்கு மிகவும் பரிச்சயமானவர்; நேர்த்தியானவர் என்பது பெண்கள் மத்தியில் அவருடைய மதிப்பை மேலும் கூட்டியது. மாறாக அதிமுகவில் தற்போது கவர்ச்சித் தலைமை இல்லை. பொருத்தமான எளிமையான ஆடையில் ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளில் செல்வது அவருக்கு ஏராளமான ரசிகர்களைக் கொண்டுவந்திருக்கிறது. இந்த விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் நடிகர் கமல் ஹாசன்தான்; ஆனால் அவருடைய மக்கள் நீதி மையத்திற்கு கிராமப்புறங்களில் அமைப்பியல் ரீதியிலான ஆதரவு இல்லை.

இனிவரும் நாட்களில், பெண் மேயர்களும், பெண்கவுன்சிலர்களும் திமுக கட்டமைப்பில் மேலும் மேலும் வளர்ந்து மந்திரிகளாக, பெரிய நிர்வாகிகளாக உயரும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. இது திமுகவுக்கு ஆகப்பெரியதொரு பலம். பத்து ஆண்டுகளுத்கு முன்பு, திமுக முதியோர்களின் கட்சியாகத் திணறிக் கொண்டிருந்தது. ஸ்டாலின் அந்தப் பிம்பத்தைத் தகர்ந்தெறிந்து விட்டார். இன்று திமுகவில் அடிமட்டத்திலே ஏராளமான பெண் செயற்பாட்டாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இது தேர்தல் நேரங்களில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles