Read in : English
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மயிலாப்பூர் தொதியின் 124 வது வார்டில் 7500 வாக்குகளை பெற்று திமுகவை சேர்ந்த கி.விமலா வெற்றிப்பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக 3363 வாக்குகள் பெற்ற அதிமுக இரண்டாவது இடத்தையும், 2563 வாக்குகள் பெற்று பாஜக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
கடந்த ஆட்சிகளில் அதிமுக, திமுக என திராவிட கட்சிகளின் உறுப்பினர்களே கவுன்சிலர்களாக இருந்து வந்த நிலையில் மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிகளவில் பிராமணர்கள் வசிக்கும் 124வது வார்டில் பாஜக வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு திமுகவை சேர்ந்த உறுப்பினர் வெற்றி வாகை சூடியுள்ளார். 124வது வார்டில் கிட்டத்தட்ட அதிமுகவை நெருங்கும் அளவுக்கு கணிசமான ஓட்டுக்களை பாஜக பெற்று மூன்றாவது கட்சியாக உள்ளது.
அதிகளவில் பிராமணர்கள் வசிக்கும் 124வது வார்டில் பாஜக வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு திமுகவை சேர்ந்த உறுப்பினர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
தனியாக நிறுவனம் நடத்தி வரும் பால சுப்ரமணியன் பேசுகையில், ”இப்போது ஓட்டு போடவில்லை என்றால் என்ன நடக்க போகிறது என்ற மெத்தனம் பிராமணர்களிடம் உள்ளது. பெரும்பாலானோர் வாக்களிக்க செல்லவில்லை. அவர்கள் வாக்களித்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிக்கலாம். அடித்தட்டு மக்களிடம் பாஜகவுக்கான விளம்பரம் அதிகளவில் இல்லை. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களும் மக்களை சென்றடைவதில்லை. இதனால் ஏன் பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டுமென சிலர் வாக்களிக்காமல் தவிர்த்து விடுகின்றனர்” என்கிறார் மயிலாப்பூரில் தனியாக நிறுவனம் நடத்தி வரும் பாலசுப்பிரமணியன்.

இந்தத் தேர்தலில் 124வது வார்டில் 2,563 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பாஜக பிடித்துள்ளது. இது மொத்த வாக்கில் 16.7 சதவீதம்
“காலம் காலமாக அதிமுக, திமுகவும் மாறி மாறி வென்று வருகின்றனர். இடையில் பாஜக வந்தால் எப்படி வாய்ப்பளிக்க முடியும். தற்பொழுது திமுக ஆட்சியில் உள்ளது. அவர்களுக்கு வாக்களித்தால் தானே எங்களுக்கு ஏதாவது செய்வார்கள். ஏற்கெனவே மோடியால் பாஜகவை பலரும் வெறுக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பளித்து, திமுக ஆட்சியிலிருந்து கிடைக்கும் நன்மையையும் கெடுத்து கொள்ள விரும்பவில்லை“ என்கிறார் கபாலீசுவரர் கோயில் குளத்திற்கு அருகில் கடை வைத்திருக்கும் பெயர் குறப்பிட விரும்பாத ஒருவர்.
“ஜிஎஸ்டி, எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜகவின் மத்திய அரசு தான் காரணம். ஹோட்டலில் சாப்பிட சென்றால் ஜிஎஸ்டிக்கு தனியாக வரி வாங்குகிறார்கள். எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000 வரை உள்ளது. மானியமும் சரியாக வருதா என்றால் இல்லை. பாஜகவை இங்குள்ள மக்கள் ஆதரிப்பதில்லை. அதனால் அவர்கள் வாக்கு செலுத்த செல்லவில்லை. மற்றொருபுறம் 15 வாக்களிக்கும் மையங்களையும் வேறொரு இடங்களில் மாற்றிவிட்டனர். இதனால் எங்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. நான்கு தெரு சுற்றி சென்று வாக்களிக்க வேண்டுமா என இங்குள்ளவர்கள் வாக்களிக்கவே செல்லவில்லை” என்று கோயில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் சீதா தெரிவித்தார்.
எந்த வார்டிற்கு எங்கு வாக்களிக்கும் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்று தெளிவாகக் கூறவில்லை. அதனால், வயதான பிராமணர்கள் வாக்களிக்காமல் இருந்து விட்டனர்.
“பாஜக வெற்றிப்பெற வேண்டும் என்று தான் நினைத்திருந்தோம். பகவான் அதை விரும்பவில்லை போலும். அதனால்தான் அவர்கள் வெற்றிப்பெறவில்லை. இங்கே இருக்கும் அனைவரும் சென்று வாக்களித்திருந்தால் பாஜக வெற்றிப்பெற்றிருக்கும். ஆனால், யாருமே வாக்களிக்க செல்லவில்லை. எங்களது வார்டை நான்கு தெரு தள்ளி சென்று வைத்து வாக்களிக்க சொன்னால் வயதானவர்கள் எப்படி செல்வார்கள். எந்த வார்டிற்கு எங்கு வாக்களிக்கும் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்று தெளிவாகக் கூறவில்லை. அதனால், வயதான பிராமணர்கள் வாக்களிக்காமல் இருந்து விட்டனர். என்னிடம் பைக் இருக்கு, நான் அதிலே சென்று வாக்களித்தேன். எல்லாரும் அப்படி போக முடியுமா? வாக்குச்சாவடியை மாற்றி வைத்ததால் பெரும்பாலானோர் வாக்களிக்க செல்லவில்லை“ என்று கபாலீசுவரர் தெருவீதியில் இரு சக்கர வாகனத்தில் நின்றிருந்த முதியவர் கூறினார்.
ஏடிஎம் மையத்தில் காத்திருந்த பிராமண முதியவர் ஒருவர் பேசுகையில், ”எனக்கு வயசு 78 ஆகிறது. நான் வாக்களிக்கும் மையம் எங்கு உள்ளது என தெரியவில்லை. என்னால் சிரமப்பட்டு தேடி சென்று வாக்களிக்க முடியுமா.? வயசான நான் வாக்களித்து என்ன மாறிவிட போகுது? நான் வாக்களிக்க செல்லவில்லை” என்று வெறுப்புடன் தெரிவித்தார். ஒரு சில பிராமணர்கள் வாக்களித்தீர்களா என கேட்கும் போதே அதெல்லாம் இல்லை என கூறி நழுவி சென்றனர்.
15,000 வாக்குகள் உள்ள 124வது வார்டில் 38 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. நான் 2,563 வாக்குகள் பெற்றுள்ளேன். இது மொத்த வாக்கில் 16.7 சதவீதம் ஆகும். மூன்றாவது இடத்தை பிடித்துள்ளோம்.
பாஜக சார்பில் போட்டியிட்ட துர்கா பேசுகையில், “15,000 வாக்குகள் உள்ள 124வது வார்டில் 38 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. நான் 2,563 வாக்குகள் பெற்றுள்ளேன். இது மொத்த வாக்கில் 16.7 சதவீதம் ஆகும். மூன்றாவது இடத்தை பிடித்துள்ளோம். தோல்வி அடைந்தாலும் மகிழ்ச்சி தான்.ஆனால், பெரும்பாலான மக்கள் வாக்களிக்க வரவில்லை. குறிப்பாக பிராமணர்கள் வாக்களிக்கவில்லை என்றார்.
வாக்கு மையத்தை மாற்றி வைத்ததால் வயதானவர்களால் சிரமப்பட்டு வாக்களிக்க செல்ல முடியவில்லை. அந்த காரணத்தால் எங்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது. வாக்கு மையத்தை மாற்றாமல் இருந்திருந்தாலோ அல்லது மாற்றப்பட்ட மையங்கள் குறித்து தெளிவாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தாலோ மக்களுக்கு எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் வந்திருக்காது. மயிலாப்பூரில் இரண்டு பி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. வாக்கு மையத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் குழப்பம் தான் ஏற்படும். அதன் முகவரியை தெளிவாக குறிப்பிடவில்லை. ஒருசிலர் 2,3 வாக்குச்சாவடிக்கு சென்று அலைந்து விட்டு கடையாக தங்கள் பெயர் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். நானே மூன்று வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டு நான்காவது வாக்குச்சாவடியில் சென்று வாக்களித்தேன். மேலும் படித்தவர்களின் வாக்கு பதிவாகவில்லை. உள்ளாட்சி தேர்தல் தானே. இதற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இந்தத் தேர்தல் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு குறிப்பாக படித்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வாக்காளர்கள் வாக்களித்தால் போதும். அவர்கள் வாக்களிக்க வருவதில்லை என்பது தான் பிரச்சினையாக உள்ளது” என ஆதங்கப்பட்டார்.
Read in : English