Read in : English

Share the Article

மாநிலங்களின் சுயாட்சிக் கோரிக்கை நீண்ட காலமாகவே நிலுவையில் இருக்கிறது. பல தசாப்தங்களாகத் தமிழ்நாடு அதை முன்நின்று உரக்கக் கூவிக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி மாநில சுயாட்சி கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ணூடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேசியதாகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களின் முதல்வர்கள் தில்லியில் ஒன்றுகூடி, மாநிலங்களின் சுயாட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி விவாதிக்க முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார்.

1974இல் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி மாநில சுயாட்சி பற்றிய முக்கியமான ராஜமன்னார் கமிட்டி அறிக்கையைச் சட்டசபையில் சமர்ப்பித்தார். நீண்ட விவாதத்திற்குப் பின்பு அந்த அறிக்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தியும் தான் அதை விரைவில் பார்ப்பதாகக் கருணாநிதியிடம் தெரிவித்தார்.

ஆனால் 48 ஆண்டுகள் கழித்து அந்த அறிக்கை மீண்டும் செய்தியாகியிருக்கிறது. இந்தியா பல மொழிகள்பல இனங்கள்பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு தேசம். அதனால் பிராந்தியங்களின் ஆசைகளும்தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம்.

ஆனால் 48 ஆண்டுகள் கழித்து அந்த அறிக்கை மீண்டும் செய்தியாகியிருக்கிறது. இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு தேசம். அதனால் பிராந்தியங்களின் ஆசைகளும், தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது இந்திய அரசியல் கட்டமைப்பின் அடிப்படைக் கொள்கை. மக்களை மையமாகக் கொண்ட கடமைகளும் செயற்பாடுகளும் மாநிலஅரசைச் சார்ந்தவை. ஆதலால் இந்தக் கடமைகளைச் சரிவர செய்வதற்கு மாநிலங்களுக்குச் சுயாட்சி என்பது மிகஅவசியம்.

அண்ணா இந்தக் கோரிக்கையை ஆதியிலேயே வைத்துவிட்டார். “மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி” என்று முழங்கினார் முன்னாள் முதல்வரும் திமுகவின் நிறுவனத் தலைவருமான சி.என். அண்ணாதுரை. ’காஞ்சி’ பத்திரிகையின் பொங்கல் சிறப்பிதழில் மாநில சுயாட்சி பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்.

“இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.  எங்கள் கட்சி மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகளும் கட்சிசாரா அறிவுஜீவிகளும் இதை ஆதரிக்கிறார்கள்”

அதற்கு முன்பு 1963-ஆல் நாடாளுமன்றத்தில் மாநில சுயாட்சிக்காக ஆதரித்துப் பேசியிருக்கிறார். “அரசியல் இறையாண்மை மக்களிடமே இருக்கிறது என்று அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை சொல்கிறது. சட்டரீதியான இறையாண்மை கூட்டாட்சி ஒன்றியத்திற்கும், அதன் அங்கமான அலகுகளுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது,” என்று சொன்னார். மாநிலங்கள் ”பலமான இறையாண்மை அலகுகளாய்” இருக்க வேண்டுமே ஒழிய ஒன்றிய அரசிடமிருந்து ”சலுகைகள் பெறும் கழகங்களாக” குறைந்துபோய்விடக் கூடாது என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.

’ஹோம் ரூல்’ என்னும் வாரப்பத்திரிகையில் ”விடியலை வரவேற்போம்” என்ற தலைப்பில் அவர் கடிதம் ஒன்று எழுதினார். “தம்பிக்கு” என்று ஆரம்பித்து அவர் எழுதிய தொடர் கடிதங்களில் அதுதான் இறுதியானது. அதில் அவர் பின்வருமாறு சொன்னார்:

தம்பிக்கு! நான் ஒன்றும் வெறியன் அல்ல. வெறும் காகிதத்தில் கூட்டாட்சிக்குச் சாதகமானது என்று சொல்லிவிட்டு நடைமுறையில் ஒன்றிய அரசிடம் அதிக அதிகாரங்களைக் குவித்துவிடும் (நமது) அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வராய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.”’

“தம்பிக்கு! நான் ஒன்றும் வெறியன் அல்ல. வெறும் காகிதத்தில் கூட்டாட்சிக்குச் சாதகமானது என்று சொல்லிவிட்டு நடைமுறையில் ஒன்றிய அரசிடம் அதிக அதிகாரங்களைக் குவித்துவிடும் (நமது) அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வராய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.”’

கோரிக்கையை முன்னெடுத்த கருணாநிதி

அண்ணா காலமானவுடன், கருணாநிதி முதல்வரானதும் 1969-ஆம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பிரதமர் இந்திராகாந்தியைச் சந்தித்துப் பேசினார். பின்பு அவர் நிருபர்களிடம் இப்படிச் சொன்னார்: “மாநிலங்களின் அதிகாரங்கள் நன்றாக வரையறுக்கப்பட வேண்டும்; சுயாட்சி வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இது எங்கள் தலைவர் அண்ணாவின் கனவு; திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையும் சித்தாந்தமும் அதுவே.”

மாநில சுயாட்சியில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி ஆராய அவர் 1969, ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதியன்று மூன்று உறுப்பினர்கள் கொண்ட ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார். கமிட்டியின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதியரசர் பி. வி. ராஜமன்னார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியாரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. சந்திராரெட்டியும் உறுப்பினர்களாக இருந்தார்கள். பஞ்சாபின் அன்றைய முதல்வர் குர்நாம் சிங் இந்த முன்னெடுப்பை வரவேற்றார். ராஜமன்னார் கமிட்டி தன்அறிக்கையை முதல்வரிடம் 1971, மே 27 ஆம் தேதி சமர்ப்பித்தது.

கூட்டாட்சிதான்; பிரிவினை வாதம் அல்ல

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ், கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி, நீதியரசர் வி. ஆர் கிருஷ்ணய்யர் ஆகியோர் கருணாநிதியின் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தனர். ஆனாலும் அவர்களின் தேசிய ஒற்றுமை உணர்வை யாராலும் குறைசொல்ல முடியாது.

மாநி ச்சுயாட்சிக்கான குரலைப் பிரிவினைவாதக் குரலென்று இணைத்துப் பார்க்கக்கூடாது; அல்லது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என்று அணுகக்கூடாது. காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் புரிதலோடுதான் பேசியிருக்கின்றன.

ஒன்றிய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவை,  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை நசுக்க எப்படிப் பயன்படுத்தியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356வது பிரிவின்படி, ஒரு மாநிலத்தின் அரசு இயந்திரத்தை ஒன்றிய அரசு தனது நேரடியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம். ஒன்றிய அரசு இதுவரை இந்தப் பிரிவைப் பயன்படுத்தி 128 தடவை மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது.

முதன் முதலில் இது நிகழ்ந்தது பஞ்சாபில்தான். டாக்டர் கோபி சந்த் பார்கவாவின் காங்கிரஸ் அரசு 1951ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கலைக்கப்பட்டது. அதன்பின்பு பாட்டியலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் அரசு கலைக்கப்பட்டது.

கேரளாவில் 1959-இல் நம்பூதிரிபாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசை ஒன்றிய அரசு கலைத்தது. அரசியல் அமைப்புச்சட்டப் 356வது பிரிவு, இவ்வாறு இடைவிடாமல் பயன்படுத்தப்பட்டது.  எஸ்.ஆர். பொம்மையின் தலைமையிலான கர்நாடக அரசு கலைக்கப்படும்வரை. இதற்காக எஸ்.ஆர். பொம்மை இந்திய ஒன்றியத்தின்மீது வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் 1994ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வழங்கிய இறுக்கமானதோர் தீர்ப்பில், ஒன்றிய அரசு தன்னிஷ்டத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்க முடியாது என்று ஆணித்தரமாகச் சொன்னது. ஒன்றிய அரசு -மாநில அரசு உறவுகளும் அதில் விவாதிக்கப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த இதுவரை 130 மசோதாக்கள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து மாநில சுயாட்சி பற்றி பல கமிட்டிகள் ஆராய்ந்திருக்கின்றன. கருணாநிதி அமைத்த நீதிபதி ராஜமன்னார் கமிட்டிதான் அவற்றிற்கு எல்லாம் முன்னோடி.

அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த இதுவரை 130 மசோதாக்கள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து மாநில சுயாட்சி பற்றி பல கமிட்டிகள் ஆராய்ந்திருக்கின்றன. கருணாநிதி அமைத்த நீதிபதி ராஜமன்னார் கமிட்டிதான் அவற்றிற்கு எல்லாம் முன்னோடி.

 1. மொரார்ஜி தேசாய் தலைமையிலான, பின்பு கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் ஹனுமந்தையாவின் தலைமையிலான, ஒன்றிய அரசின் நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் தன்அறிக்கையை1967, செப்டம்பர் 28ஆம் தேதி சமர்ப்பித்தது.
 2. அந்தக்கால தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன் “மாகாண சுயாட்சி” என்னும் தலைப்பில் ஒரு தமிழ் புத்தகம் எழுதினார். அறிஞரும், முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சருமான கே. சந்தானம் ஓர் அறிக்கையை1970, ஏப்ரல் 1ஆம் தேதி சமர்ப்பித்தார்.
 3. சிரோன்மணி அகாலி தளம், அனந்த்பூர் மாநாட்டில் மாநில சுயாட்சியை ஆதரித்து1973 அக்டோபர் 16 -17 ஆகிய தேதிகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
 4. மேற்கு வங்கத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு அப்போதைய நிதி மந்திரியும், பொருளாதார அறிஞருமான அசோக் மித்ரா தயாரித்த ஓர்அறிக்கையை 1977, டிசம்பர் 1-இல் பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்பி வைத்தார்.
 5. மீண்டும் பாசு ஒன்றிய அரசு -மாநில உறவுகள் பற்றியும், நிதிப் பங்கீடுகள் பற்றியும் ஒரு வெள்ளை அறிக்கையை அனுப்பிவைத்தார். அது ஃபரூக் அப்துல்லா நடத்திய ஸ்ரீநகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
 6. பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான ஒன்றிய அரசு நீதியரசர் சர்க்காரியா கமிஷனை1983, ஜூன் 9ஆம் தேதி அமைத்து ஒன்றிய அரசு-மாநில உறவுகளை ஆராயச்சொன்னது.
 7. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் மொத்தம்59 (17 அரசியல் கட்சிகள்) ஸ்ரீநகரில் 1983-ஆம் ஆண்டு அக்டோபர் 5,6,7 ஆகிய நாட்களில் கூடின. ஒன்றிய அரசு -மாநில உறவுகள் பற்றிய ஸ்ரீநகர் முழக்கத்தை அறிவித்தன. அங்கே கருணாநிதியும் இருந்தார். அந்தக் கூட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பற்றிய அறிவிப்பையும், ஆளுநர்கள், மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் பற்றியும் விவாதித்தன. இந்த நிகழ்வுகள் எல்லாம் சதி சானியால் தொகுக்கப்பட்டு ‘ஒன்றிய அரசு- மாநில உறவுகள்’ என்ற தலைப்பில் ஆங்கிலப் புத்தகமாக வெளியிடப்பட்டது.
 8. கர்நாடககத்தில்1983 முதல் 1988 வரை முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே 1983ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி காங்கிரஸ் அல்லாத தென்னாட்டு முதல்வர்களின் கூட்டத்தை பெங்களூரில் நடத்தினார். அப்போது தமிழ்நாட்டு முதல்வராய் இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், பாண்டிச்சேரி முதல்வர் புதுவை ராமச்சந்திரன், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. ராமராவ், மற்றும் புதுதில்லி, கர்நாடக முதல்வர்கள் ஆகியோர் அதில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் ஆட்சி என்றதால் கேரளா அதில் விலகியிருந்தது. ஆளுநர் பதவியை ஒழித்தல் என்பது போன்ற பரிந்துரைகளைக் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை ஹெக்டே வெளியிட்டார். எம்ஜிஆர் அந்த அறிக்கையை தமிழக  சட்டசபையில் 1983 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி சமர்ப்பித்தார்.
 9. அதைப்போன்றதோர் கூட்டத்தை ஆந்திரப்பிரதேச முதல்வர் ராமராவ், விஜயவாடாவில்1983ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி நடத்தினார். பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, அகாலி தளத் தலைவர் பர்னாலா, காங்கிரஸ் (எஸ்) தலைவர் ஷரத் பவார், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்  தலைவர் பசவபுன்னையா, ஹெச். என். பகுகுணா, முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் ஒன்றிய அரசு அமைச்சர் ஜெகஜீவன் ராம், மேனகா காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவை நீக்கும்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசு- மாநில உறவுகள் பற்றிய ஓர் அறிக்கையைத் தெலுங்குதேசக் கட்சி வெளியிட்டது.
 10. அசாம் கண பரிஷத், ஷில்லாங்கில் நடத்திய அகில இந்திய அனைத்துக் கட்சி மாநாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின்356வது பிரிவை நீக்க வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டது. அதைப்போன்ற தீர்மானங்கள் பாட்னாவில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்டன.
 11. எம்ஜிஆர் முதல்வர் என்ற முறையில் ஒரு மாநாட்டை சென்னையில்1984ஆம் ஆண்டு ஜனவரி 5 முதல் 8 வரையிலான தேதிகளில் நடத்தி அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசின் சர்க்காரியா கமிஷனிடம் சமர்ப்பித்தார். மேலும் அறிக்கையை சட்டப்பேரவையிலும் முன்வைத்தார்.
 12. “உங்களுக்கு ஆளுநர் வேண்டுமா, வேண்டாமா?” என்ற தலைப்பில் விரிவான ஓர் அறிக்கையை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்1989ஆம் ஆண்டு ஏப்ரல்8ஆம் தேதி வெளியிட்டார்.
 13. முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர் சி. சுப்ரமணியம்1991ஆம் ஆண்டு நவம்பர் 8,9 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் ஆல்- இந்தியா ரேடியோவில் சர்தார் படேல் நினைவுச் சொற்பொழிவுகளில் ஒன்றிய அரசு- மாநில உறவுகள் பற்றி உரையாற்றினார். அது ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் புத்தகமாகக் கொண்டுவரப்பட்டது.
 14. மதிமுக1999ஆம் ஆண்டு ஜுலை 24, 25 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரத்தில் மாநிலச் சுயாட்சி மாநாட்டை நடத்தியது. பின்பு ஆவணம் ஒன்றைத் தயாரித்து அதை ஒன்றிய அரசின் வெங்கடாசலையா கமிட்டியிடம் சமர்ப்பித்தது.
 15. முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு, காஷ்மீருக்கான மாநில சுயாட்சியை ஆய்வுசெய்ய ஒரு கமிட்டியை நியமித்தது. தேசிய மாநாடு, ஒன்று கமிட்டி அறிக்கையை விவாதித்தது.
 16. ஏ.பி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், ஒன்றிய அரசு-மாநில உறவுகள், ஆளுநர்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி ஆராய2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ல் எம். என். வெங்கடாசலையா கமிட்டி நியமிக்கப்பட்டது.
 17. ஒன்றிய அரசு-மாநில அரசுகள், நிதிச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றைப் பற்றிய ராஜா ஜே. செல்லையாவின்2006-ஆம் ஆண்டு அறிக்கை மிக முக்கியமானது.
 18. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஒன்றிய அரசு -மாநில உறவுகளை ஆராய்ச்சி செய்ய நீதியரசர் மதன்மோகன் புஞ்சி கமிஷனை உருவாக்கினார்.

இவற்றைத்தவிர, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், அவர் மேற்கு வங்கத்தில் தனி அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். அப்போது கருணாநிதி சென்னையில் நடத்திய மாநில சுயாட்சிக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு அவர் படு தீவிரமாகக் குரல் கொடுத்தார். மாநில சுயாட்சிக்கு மபொசி வழங்கிய பங்களிப்பையும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

இந்த வரலாறுகளை எல்லாம் நாம் மீண்டும் வாசிக்க வேண்டும்; அப்போதுதான் நமக்கு நிகழ்காலம் நன்றாகப் புரியும்.

(கேஎஸ் ராதாகிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர்).


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles