Read in : English
ஸ்டெர்லைட் ஆலை திரும்ப துவங்கிவிடுமோ என்ற பேச்சும் அதை குறித்த அச்சமும் திரும்ப தூத்துக்குடியில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. தாமிர உருக்காலை இரண்டாம் கட்ட விரிவாக்கம் என்ற தகவல் பரவிய பின்பு வேதாந்தா குழுமத்தால் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். அதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
கோவிட் பெருந்தொற்றின் போது ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க முன்வந்தபோதும்கூட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை தூத்துக்குடி மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திரும்பவும் தொடங்கப்படுமோ என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் அந்த ஆலை விரிவாக்கத்துக்கு வேண்டிய நிலம் கிடைக்குமா என்பது பெரும் சந்தேகமே. மூடப்படும் முன்பு தன்னுடைய விரிவாக்கத்துக்காக ஸ்டெர்லைட் மேலதிக நிலம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்றின் போது ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க முன்வந்தபோதும்கூட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை தூத்துக்குடி மக்கள் நம்பத் தயாராக இல்லை
தமிழக அரசின் பிரமாண்டமான சர்வதேச மரச்சாமான்கள் பூங்கா தூத்துக்குடியின் சிப்காட்டில் அமைய உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு, ஒரு வேளை அது திரும்ப தொடங்கப்படும் பட்சத்தில், நிலம் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறிவருவதாக ஸ்டெர்லைட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு வீரபாண்டியபுரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்காக 324.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள விவரத்தை அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகும், இந்த நிலமானது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடமே உள்ளது. அந்த நிலம் சர்வதேச மரச்சாமான்கள் பூங்காவுக்காக எடுக்கப்படவில்லை என்று சிப்காட் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் 324.5 ஏக்கர் நிலம் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு போதுமானதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் கருதியதா என்பது சந்தேகமே. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மக்கள் கருத்தை கேட்காமல் ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கத்தைத் தொடங்கியதாக நடந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஏறக்குறைய 300 ஹெக்டர் நிலத்தை (ஒரு ஹெக்டர் என்பது 2.47 ஏக்கர்கள்) தனது விரிவாக்கத்துக்கு கோரியதாக தீர்ப்பு ஆவணம் தெரிவிக்கிறது. அதன்படி பார்த்தால், தற்சமயம் அதனிடம் முன்னர் உத்தேசித்த இடப்பரப்பில் பாதிஅளவே உள்ளது. ஸ்டெர்லைட் கோர உத்தேசித்த மீதி இடம் சர்வதேச மரச்சாமான்கள் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக ஸ்டெர்லைட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டெர்லைட் மீண்டும் தன்னுடைய உற்பத்தியை தொடங்கும் என்றால், அதன் விரிவாக்கம் ஸ்டெர்லைட் நிர்வாகம் நினைத்த அளவுக்கு நடக்குமா என்பது சந்தேகமே.
ஸ்டெர்லைட் மீண்டும் தன்னுடைய உற்பத்தியை தொடங்கும் என்றால், அதன் விரிவாக்கம் ஸ்டெர்லைட் நிர்வாகம் நினைத்த அளவுக்கு நடக்குமா என்பது சந்தேகமே.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு, வியாபாரம் இழப்பு என்ற பேச்சுக்கு ஒரு மாற்றாக சர்வதேச மரச்சாமான்கள் பூங்கா அமையவிருக்கிறது. இந்தியாவில் அதிக மரச்சாமான்களும் மரமும் இறக்குமதி நடக்கும் ஒரு துறைமுகமாக தூத்துக்குடி உள்ளது. இந்திய அளவில் மரச்சாமான்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில் தூத்துக்குடியில் 1150 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த பூங்கா இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மற்றும் சர்வதேச மரச்சாமான்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த பூங்காவிற்கு வரவிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டில் உருவாக்கப்படும் இந்த தொழிற்பூங்காவினால் 3.5 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும் மரச்சாமான்கள் தயாரிக்க தேவையான யூகலிப்டஸ், ரப்பர் வகை மரங்கள் கன்னியாகுமாரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தோட்டங்களிலிருந்து கிடைக்கும் எனவும் அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மூடப்பட்டபின்பு இந்தியா தன்னுடைய தேவைக்காக ஆண்டுக்கு 3 லட்சம் டன் தாமிரம் இறக்குமதி செய்கிறது. பருவநிலை மறுபாடுகளுக்காக நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளான மின்சார ஊர்திகள் தாமிரத்துக்கான தேவையை பலமடங்கு உயர்த்தும் நிலையில் தாமிரத்தின் இறக்குமதி இனி வரும்காலங்களில் அதிகரிக்கவே செய்யும். மூடப்படுவதற்கு முன்பு ஸ்டெர்லைட் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Read in : English