Read in : English
கோவையில் தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற கோவை பழமுதிர் நிலையம் (கேபிஎன்), தள்ளுவண்டியிலிருந்து மெகா சூப்பர் ஸ்டோராக வளர்ச்சி பெற்ற வரலாறு சுவாரசியமானது. இத்தகைய பிரபலமான கோவை பழமுதிர் நிலையத்தின் மொத்த பங்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதப் பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் நிதி நிறுவனம் வாங்கியுள்ளது.
இதன், தாக்கங்கள் குறித்து கே.எம்.காடை பிசினஸ் எக்ஸலன்ஸ் டிரெய்னிங் அகாடமியின் நிறுவனர் குமாரவேலன் எம்.காடை, மெர்க் எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் நித்யா சுப்ரமணியம் ஆகியோர் தங்கள் கருத்துகளை இன்மதியிடம் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் கோவை பழமுதிர் நிலையம் நிறுவனத்தின் அற்புதமான வளர்ச்சியைப் பற்றி பேசிய காடை இது ஒரு ‘அண்ணாச்சி கடை’ போல மூன்று சகோதரர்களால் ஒரு குடும்ப வணிகமாக தொடங்கப்பட்டது. பின்னர் இது முதலில் கோயம்புத்தூரிலும் பின்னர் பிற இடங்களிலும் வளரத் தொடங்கியது. சென்னை தி.நகரில் வடக்கு போக் சாலையில் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் உரிமக் கிளை மூலம் நிறுவனம் அமைப்புசாராப் பிரிவு என்ற நிலையில் இருந்து, அமைப்புசார் துறையாக முன்னேறியது. இந்தத் தொழிலை இப்போது குடும்பத்தில் இரண்டாவது தலைமுறையினர் நடத்தி வருகின்றனர்.எனவே, தொழிலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் பன்னாட்டுத் நிறுவனத்துடன் அதன் உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றார்.
கோவை பழமுதிர் நிலையத்தின் மொத்த பங்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதப் பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் நிதி நிறுவனம் வாங்கியுள்ளது
இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளின் போக்கு குறித்து நித்யா பேசுகையில், வெஸ்ட்பிரிட்ஜ் முன்னதாக ஜஸ்ட் டையல், இந்தியா மார்ட், இண்டிகோ போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது. கோவை பழமுதிர் நிலையத்தில் சமீபத்தில் முதலீடு செய்துள்ளார்கள். மொத்தம் 28,000 கோடி ரூபாய் முதலீடுகளில், 800 கோடி ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
2008-இல் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட தனியார் பங்கு முதலீட்டாளரான ஆக்டிஸ், இந்தியாவின் பழமையான சூப்பர் மார்க்கெட் குழுமங்களில் ஒன்றான நீலகிரிஸ் நிறுவனத்தில் 51 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வாங்கியதையும் நித்யா நினைவு கூர்ந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டில், பியூச்சர் கன்ஸ்யூமர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆக்டிஸிடமிருந்து 98 சதவீத பங்குகளை வாங்கியது, இதனால் நீலகிரிஸ், பியூச்சர் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமாக மாறியது.
மேலும் படிக்க: உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண் உழவர் சந்தைகள்
சில்லறை வர்த்தக வளர்ச்சி குறித்து பேசிய காடை 2003-ஆம் ஆண்டில் சில்லறை வணிகத்தில் மூன்று சதவீதம் மட்டுமே அமைப்புசார் துறையில் இருந்தது. உண்மையில், சில்லறை விற்பனைக் கடைகள் அமைப்புசாரா துறையிலிருந்து அமைப்புசார் துறைக்கு மாறுவது காலத்தின் கட்டாயம். ஏனெனில் இது நமது பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது. 2013-இல் சில்லறை வணிகத்தில் 13 சதவீதம் அமைப்புசார் துறைக்கு மாறியது. சில்லறை விற்பனையின் பெருவணிகத் திறனை உணர்ந்து பெரிய நிறுவனங்கள் இத்துறையில் கால் பதித்து வருகின்றன. உதாரணமாக, 2006 ஆம் ஆண்டில் ஆதித்யா பிர்லா நிறுவனம் சூப்பர் மார்க்கெட் சில்லறை வணிகக் குழுமமான திரிநேத்ராவை வாங்கியதன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைந்தது.
இப்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்டதாலும், இரட்டை வருமானம் கொண்ட ஆனால் குழந்தைகள் இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கைப் பெருகி கொண்டிருப்பதாலும் அமைப்புசார் சில்லறை வணிகம் நிலைபெற்று விட்டது.
உதாரணமாக, ரிலையன்ஸ் கைப்பற்றிய பின்பு அமைப்புசாராத கண்ணன் சூப்ப ர்மார்க்கெட் கண்ணன் பிராண்ட் பெயரைத் தக்கவைத்துக் கொண்டு புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
சில்லறை வணிகம் நிறுவனமயமானால் சிறிய சில்லறை விற்பனையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் 2006-இல் இருந்தது. அலைபேசிகள் பயன்பாட்டில் வந்தபோது கூட டெலிபோன் பூத்கள் இயங்காமல் போய்விடும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் வளர்ச்சி என்று வரும்போது காலம் அதன் விதிமுறைகளை தீர்மானிக்கிறது.
சில்லறை வணிகம் அமைப்புசார் துறைக்குள் வரும்போது சில்லறை விற்பனையாளர்களின் சிறிய விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என்று கேட்டதற்கு, சில்லறை விற்பனையாளர்களுக்குச் சப்ளை செய்வதில் இடைத்தரகர்கள் மட்டுமே இருந்தனர் என்று காடை கூறினார். இப்போது சில்லறை விற்பனையாளர்கள் நிறுவனங்களிடமிருந்து மொத்தக் கொள்முதல் செய்யலாம். அமைப்புசார் துறை நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களைக் கொள்முதல் செய்யலாம். இதற்காக அவர்கள் இடங்களில் சேகரிப்பு மையங்களைக் கொண்டுள்ளனர்.
உதாரணமாக ஒட்டன்சத்திரம் போன்ற இடங்களில் விவசாயிகள், நுகர்வோர் என அனைவரும் அமைப்பு ரீதியான சில்லறை விற்பனையில் மகிழ்ச்சியாக உள்ளனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. நுகர்வோர்களுக்கு நல்ல விலையில் தரமான பொருட்கள் கிடைக்கின்றன.
பன்னாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்களுடனான கோவை பழமுதிர் நிலையம் கொண்டிருக்கும் தொடர்பு சிதைக்கப்படாது. எனவே ஊழியர்களின் பணிக் கலாச்சாரம், அவர்களின் விற்பனை பாணி மற்றும் கோவை பழமுதிர் நிலைய நிர்வாகம் மாறாது
ஒரு சில்லறை வர்த்தகக் குழுமத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கையகப்படுத்தும்போது, சந்தையைக் கைப்பற்ற போட்டி சில்லறை விற்பனையாளர்கள் இருக்க மாட்டார்களா?
இந்த கேள்விக்கு பதிலளித்த நித்யா, பெயர் பெற்ற சில்லறை வணிக நிறுவனத்தை வாங்கும் போது, அதன் அசல் பிராண்ட் பெயர் மற்றும் நிர்வாகம் மாற்றப்படாது. சில்லறை சூப்பர் மார்க்கெட்டை வாங்கியுள்ள அல்லது சில்லறை வணிகத்தில் அதிக முதலீடு செய்துள்ள நிறுவனம், மக்கள் மத்தியில் பிரபலமான நிறுவனம் பின்பற்றிய நடைமுறைகளை நீண்ட காலத்திற்குத் தொடரவே செய்யும். எனவே போட்டியை எதிர்கொள்வது குறித்த கேள்வி இங்கு அர்த்தமற்றது.
நீலகிரி நிறுவன நிர்வாகத்தைக் கையகப்படுத்திய பிறகு, அதுபற்றி அறியாமல் மக்கள் அந்தச் சூப்பர் மார்க்கெட்டிற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: உழவர்ச்சந்தை அரசுத்திட்டம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்
கண்ணன் சூப்பர் மார்க்கெட்டை ரிலையன்ஸ் கைப்பற்றியபோது, பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு ஓரளவு அனுபவம் இருந்தது. ஆனால் கோவை பழமுதிர் நிலைய விஷயத்தில், அடிப்படையில் ஒரு முதலீட்டு நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்கும் ஒரு சில்லறை அங்காடியின் கட்டமைப்பிற்குள் எவ்வாறு பொருந்தும்?
இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட முடியாது. ஏனெனில் ரிலையன்ஸ் தொழில் விரிவாக்கம் செய்கிறது. வெஸ்ட்பிரிட்ஜ் சந்தையில் தனது இருப்பை பதிவு செய்ய வருகிறது. அதன்மூலம் தன்னோடு இணையும் நிறுவனம் வேகமாக வளர உதவ விரும்புகிறது என்று நித்யா கூறினார். மேலும், முதலில் ஆக்டிஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டு பின்னர் பியூச்சர் குழுமத்திற்கு விற்கப்பட்ட நீலகிரியைப் போல, ஒரு முதலீட்டாளர் சரியான நேரத்தில் வாங்கி, சரியான நேரத்தில் விற்கத்தான் செய்வார் என்றார் நித்யா.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சில்லறை விற்பனை நிறுவனத்தில் பெருமளவு பங்குகளைக் கொண்டிருக்கும்போது, அது காய்கறிகள் மற்றும் பழங்கள் வணிகத்தை நடத்துவதில் தன் தனித்துவமான செயல்பாட்டுப் பாணி மற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்த நினைக்கலாம். அதனால் வெஸ்ட்பிரிட்ஜ் கோவை பழமுதிர் நிலைய நிறுவனத்தில் 71 சதவீத பங்குகளை வாங்கியது அதன் ஊழியர்களையும் அவர்களின் அன்றாட வேலை பாணியையும் பாதிக்குமா?
அதனால் தற்போதுள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார் நித்யா. ஒருவேளை வெளிநாட்டு நிறுவனம் நிர்வாகம் மற்றும் கொள்முதலில் மாற்றங்களைச் செய்யலாம். ஊழியர் கட்டமைப்பை இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம். ஆனால் எதிர்காலத்தில், அந்த வெளிநாட்டு நிறுவனம் மிகவும் அதிநவீன விற்பனையாளர்களை கொண்டு வரக்கூடும். ஏனென்றால் அவர்கள் நடத்தும் தொழிலில் தங்கள் கலாச்சார தடங்களைப் பதிக்க விரும்பலாம்.
ஆனால், கோயம்புத்தூரில் ’பழமுதிர்’ என்று சொன்னாலே அது கோவை பழமுதிர் நிலையத்தைத்தான் குறிக்கும் அளவுக்கு கொங்கு மண்டல மக்கள் மத்தியில் கோவை பழமுதிர் நிலையம் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது என்று காடை கூறினார். அங்கே பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளனர். கோவை பழமுதிர் நிலையம் கடையின் பளபளப்பான மஞ்சள் பலகைகளில் இருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பட்டியல்களும், ஊழியர்கள் வாடிக்கையாளர்களை குடும்ப உறுப்பினர்கள் போல நடத்துவதும் பேசுவதும் கோவை மக்களின் அன்பையும் ஆதரவையும் அந்த நிறுவனம் சம்பாதித்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக, மற்ற சில்லறை விற்பனை நிறுவனங்கள் ’திருவாதிரை’ திருவிழாவைக் கொண்டாடும் கோவை மக்களைக் குறிவைத்து தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும்போது, கோவை பழமுதிர் நிலையம் வெறுமனே ‘சித்திரைகனி’ என்ற பெயரில் பலவகையான பழங்களை காட்சிக்கு வைக்கிறது. கோவையில் திருவாதிரைக்கு களி இல்லை; நாட்டுக் காய்கறிகளும் கனிகளும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆதலால் மண்ணின் மைந்தன் என்ற பெயரைப் பெற்றிருக்கும் கோவை பழமுதிர் நிலையம் திருவாதிரை நாளில் கோவை மக்கள் விரும்பும் சித்திரைக் கனியை வரிசைப்படுத்தி வைக்கிறது. காய்கறிகளும் கனிகளும் அங்கே வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் பாங்கும் சிறப்பாகவே இருக்கும்.
பன்னாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்களுடனான கோவை பழமுதிர் நிலையம் கொண்டிருக்கும் தொடர்பு சிதைக்கப்படாது. எனவே ஊழியர்களின் பணிக் கலாச்சாரம், அவர்களின் விற்பனை பாணி மற்றும் கோவை பழமுதிர் நிலைய நிர்வாகம் மாறாது. ஒருவேளை திறமை மாற்றக் குழு அமைக்கப்பட்டதை அடுத்து கொள்முதல் மாற்றங்கள் ஏற்படலாம்.
ரிலையன்ஸ் வாங்கிய பிறகு கண்ணன் பல்பொருள் அங்காடியின் பெயர் ஜெய்சூர்யாஸ் என்று மாற்றப்பட்டது என்று காடை சுட்டிக்காட்டினார். ஆனால் மக்கள் அந்தச் சூப்பர் மார்க்கெட்டை கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்று மட்டுமே இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள், யாரும் ஜெய்சூர்யாஸை குறிப்பிடவில்லை. கோவை பழமுதிர் நிலையம் விஷயத்திலும் அப்படித்தான் இருக்கும் என்கிறார் குமாரவேலன் எம்.காடை.
Read in : English