Read in : English

தமிழ்நாட்டில் அமுல் பால் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் ஆவின் நிறுவனம் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய விடுதலைப் போருக்கும் அமுல் பால் நிறுவனத்திற்கும் இடையிலானத் தொடர்பு பலர் அறியாதது. குஜராத் மாநிலத்தின் சிற்றூரான கைராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

காரணம் பால் முகவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு கொள்முதல் விலையைக் குறைப்பதை எதிர்த்தே அவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் பின்னர் காங்கிரஸ் தலைவர் வல்லபாய் படேலைச் சந்தித்து தங்கள் நிலையைக் கூறினர். அவர் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி பால் கொள்முதலைச் செய்யலாமே எனப் பரிந்துரைத்தார். இத்துடன் காங்கிரஸ் தலைவர்களான மொரார்ஜி தேசாய், திரிபுவன் தாஸ் படேல் மற்றும் ஹரிசந்த் மேகா தாலியா ஆகியோரின் ஆலோசனைகளையும் பெற்றனர்.

அதைத் தொடர்ந்து 1946ஆம் ஆண்டில் கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டு இரண்டு கூட்டுறவு சங்கங்களுடன் 247 லிட்டர் பாலை அன்றாடம் கொள்முதல் செய்தனர். இதுவே ஆனந்த் பால் உற்பத்தியாளர் லிமிடெட் (அமுல்) எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் தலைவராக வர்கீஸ் குரியன் 1950ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார்.

1946ஆம் ஆண்டில் கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டு இரண்டு கூட்டுறவு சங்கங்களுடன் 247 லிட்டர் பாலை அன்றாடம் கொள்முதல் செய்தனர். இதுவே ஆனந்த் பால் உற்பத்தியாளர் லிமிடெட் (அமுல்) எனப் பெயர் பெற்றது

விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் வெண்மைப் புரட்சியை உருவாக்கும் பொருட்டு அன்றையப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தேசிய பால் மேம்பாட்டு வாரியம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் நோக்கம் கைராவின் மாதிரியைப் பின்பற்றி நாடு முழுதும் பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். வர்கீஸ் குரியன் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின்னர் அமுல் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு 1.3 கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்து இந்தியா முழுதும் சந்தைப்படுத்துகிறது அமுல். குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்கிறது. சென்ற நிதியாண்டில் (2022-23) ரூ. 55,000 கோடிக்கு வணிகம் செய்துள்ளது, அமுல்.

மேலும் படிக்க: பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் ஆவின் முன்னணியில் இருக்கிறதா?

சென்றாண்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா கர்நாடகாவில் பேசும் போது உள்ளூர் நந்தினி (நம்மூர் ஆவின் போன்றது) யும், அமுலும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்தலில் பால் கொள்முதல் செய்யும் மாவட்டங்களில் காங்கிரஸ் அதிகம் வென்றிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஊடகங்கள் கன்னடர்கள் தங்களது பெருமிதம் எனக் கருதும் எதையும் விட்டுத்தருவதில்லை எனச் சுட்டுகின்றனர்.

நந்தினி பால் விலை ரூ. 39 என இருக்கையில் அமுலின் விலை ரூ. 54 என உள்ளது. இரண்டு நிறுவனங்களும் போட்டியிடும்போது அமுலின் அதிகக் கொள்முதல் விலையினால் நந்தினியின் சந்தை பாதிக்கப்படும் என்கின்றனர். கர்நாடகத்தில் அமுல் பால் விற்பனைச் சந்தையில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது. அமுல் பாலை இணையம் வழியாகவும், இ-காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தகம் வழியாகவும் விற்கிறது.

இணைய வர்த்தகத்திலுள்ள சாதகங்களினால் நந்தினி நிறுவனமானது தனது நேரடிச் சந்தையில் வீழ்ச்சியைக் காணும் என்பதே அச்சத்தின் அடிப்படையாகும். அரசு அளிக்கும் மானியத்தால் நந்தினி பாலின் விலை ரூ. 39 ஆக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

கர்நாடகத்தை அடுத்து தமிழ்நாட்டிலும் தனது பால் கொள்முதல் மற்றும் விற்பனையைக் மேற்கொள்ள அமுல் முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு போன்ற பகுதிகளில் சுய வேலைவாய்ப்புக் குழுக்கள் மூலம் பாலைக் கொள்முதல் செய்து விற்பனை செய்ய அமுல் முயற்சி செய்வதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. அமுல் தனது பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 36 அளிக்கவுள்ளதால் ஆவினை விட இரண்டு அல்லது நான்கு ரூபாய்கள் அதிகமாகக் கொடுக்கும் நிலை உருவாகும்.

இதனால் தமிழ்நாட்டில் மெதுவாக பால் சந்தையை அமுல் கைப்பற்றிவிடும் என்பது தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் அச்சமாகும். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 2.3 கோடி லிட்டர் பால் ஆவின் ஒரு நாளைக்கு 36 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்கிறது. பால் பொருட்கள் சந்தையில் 14% தன்னிடத்தில் வைத்துள்ளது, ஆவின். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே தனியார் பால் விற்பனையாளர்கள் மீதமுள்ள சந்தையைக் கைப்பற்றி வைத்துள்ளனர். அமுல் இங்கு நுழைந்தால் போட்டி நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கும் அமுலுக்கு இடையேதான் அதிகம் இருக்கும்.

தமிழ்நாட்டின் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் விற்பதற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு. ஒன்று 15 தினங்களுக்குள் கொள்முதல் செய்யப்பட்டப் பாலிற்கு பணம் கிடைக்கிறது. மாட்டுத் தீவனம் போன்ற இதர சலுகைகளை தனியார் சிறப்பாக செய்கின்றனர். அமுல் கொள்முதல் விலையோடு இல்லாமல் ஊக்கத்தொகை, தரமான மாட்டுத்தீவனங்களை அளிக்க முன் வந்தால் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அமுலின் சில்லறை விலை ஆவினை விட அதிகம் என்றாலும் தனியார் பால் விலையை விடக் குறைவு என்பதால் உறுதியாக நுகர்வோர் அமுலுக்கு மாறுவார்கள்.

ஒரு புறம் கொள்முதல் கையை விட்டுப்போவதை ஆவின் அனுபவிக்க, விற்பனைச் சந்தை கைவிட்டுப்போவதை தனியார் அனுபவிப்பர். இரண்டிலும் லாபம் நுகர்வோருக்கே. ஆனால், அமுல் தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபடக்கூடாது என்று அமித் ஷாவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் ஒரு சில பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் அமுல் போட்டி கிடையாது என்கின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பே பெயரளவில் பலர் முதலீடு செய்து அமுல் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் அமுல் பால் கொள்முதல் செய்யவில்லை.

இது நாள் வரையுள்ள ஏற்பாட்டை மாற்றி அமுல் வேறொரு வழியில் சந்தையைக் கைப்பற்றுவது என்பது அறமற்றதாகவே கருதப்படும். தமிழ்நாடு அரசு தனது ஆவின் நிறுவனத்தில் காணப்படும் குறைகளைத் தவிர்த்து நல்ல நிர்வாகத்தின் கீழ் நடத்தினால் அமுல், தனியார் போட்டிகளை வெல்ல முடியும்

துவக்கக் காலத்திலிருந்தே பால் கூட்டுறவு சங்கங்கள் பிற மாநில பால் கூட்டுறவு சங்கங்களுடன் போட்டியில் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்பாடு இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் பால் கொள்முதலை கூட்டுறவு சங்கங்களே மேற்கொள்கின்றன. அமுல், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பால் கூட்டுறவு சங்கம் அல்ல. எனவே அது அனுமதிக்கப்பட மாட்டாது என்கின்றனர் சில சங்கத் தலைவர்கள். இதைத்தான் முதல்வரும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைரா பால் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் ஆவின் கொள்முதல் விலையை விட அதிகமான பால் கொள்முதல் விலையை அமுல் அளிக்கவில்லை என்கின்றனர். எனவே மாநில அரசு எதிர்ப்பது வீண். மேலும் ஆவின் கொள்முதல் செய்யாத பகுதிகளில்தான் நாங்கள் கொள்முதல் செய்கிறோம் என்கின்றனர்.

மேலும் படிக்க: ஏ1, பாக்கெட் பால், ஏ2, கறந்த பால்: இதில் எது சிறந்தது?

அமுலைப் பொறுத்தவரை பால் பொருட்களை இந்தியா எங்கும் விற்பனை செய்கிறது. இந்தியாவில் புதிய சந்தையைத் தேடி அமுல் செல்கிறது என்றும் 400 நகரங்களில் விற்பனையை மேற்கொள்ள உள்ளதாகவும் அமுலின் 2023 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மெட்ரோ நகரங்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய 98 பால் பண்ணைகளின் வலைப்பின்னலை அமுல் அமைக்கவுள்ளது என்கின்றனர். தனது கிளைகளையும் 100 ஆக உயர்த்த அமுல் திட்டமிட்டு வருகிறது.

அமுலின் நோக்கம் நாடு முழுதும் குறைந்த விலையில் பாலையும், பால் பொருட்களையும் விற்பனை செய்வது என்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. கர்நாடகம், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அரசே பால் கொள்முதல் செய்வதால் தொழிலில் வீழ்ச்சி என்பது பெரியதொரு தாக்கத்தைக் கொடுக்கும். மேலும், அதிக சந்தையைக் கைப்பற்றி விட்டு அமுல் பால் விலையை உயர்த்தாது என்பதற்கு உறுதி ஏதுமில்லை.

இது நாள் வரையுள்ள ஏற்பாட்டை மாற்றி அமுல் வேறொரு வழியில் சந்தையைக் கைப்பற்றுவது என்பது அறமற்றதாகவே கருதப்படும். தமிழ்நாடு அரசு தனது ஆவின் நிறுவனத்தில் காணப்படும் குறைகளைத் தவிர்த்து நல்ல நிர்வாகத்தின் கீழ் நடத்தினால் அமுல், தனியார் போட்டிகளை வெல்ல முடியும். ஆவின் முறைகேடுகள் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை சிதைக்கிறது என்பதை அரசு உணரவில்லை போல! சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட்டை வைத்து பால் கவர் முறைகேடு பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மாநில பால் கூட்டுறவு உற்பத்தி சங்கங்களை மட்டும் நம்பாமல்தான் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. தனியாருக்கு வழங்கப்படும் உரிமம் ஏன் பிற மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விரிவுபடுத்தப்படக் கூடாது எனும் கேள்விக்கு பதில் இதுவரை இல்லை. விலைக்குறைந்த தரமான பாலை மக்களுக்கு வழங்குவதுதான் நோக்கம் என்றால் போட்டியை அனுமதிப்பதே சிறந்தது.

இரண்டாவது போட்டி இரண்டு கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடையில் என்பது அதிக லாப நோக்கத்துடன் செய்யப்படுவதாக கருதப்படக் கூடாது. அமுல் லாபம் ஈட்டுவதை பிற மாநில கூட்டுறவு சங்கங்கள் அறிந்து கொள்ளாதது அவர்களது தவறு என்பதை யார் புரிய வைப்பது?

ஆனால் இப்போட்டியில் தனியார் வென்றால் மக்களுக்குத்தான் இழப்பு; அது உற்பத்தியாளர் என்றாலும் சரி, நுகர்வோர் என்றாலும் சரி. எனவே தேசிய அளவில் இது குறித்து கொள்கை ஒன்றை மத்திய அரசு வகுக்குமானால் இப்போதைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival