Read in : English
2001ஆம் ஆண்டு கட்சியைத் தேர்தல் தோல்விக்கு இட்டுச் சென்ற அதே அதீத தன்னம்பிக்கையால், திமுகவுக்கும், அதன் அரசுக்கும் தற்போதும் ஆபத்து நேரிடலாம். இதில் முரண் என்னவென்றால், அதன் பரமவைரியான அதிமுக, 2001ஆம் ஆண்டின் வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதைக் கணிக்கத் தவறி, 2004இல் மாபெரும் சரிவைச் சந்தித்தது. அந்த தவறைச் சரிசெய்தபின்னரே அதனால் வெற்றியை ருசிக்க முடிந்தது.
தமிழகத்தில் திமுக வெற்றிபெற வேண்டுமானால், பாஜகவைத் தவிர்த்துவிட்டு, வலுவான, அசைக்க முடியாத கூட்டணியை அமைக்க வேண்டியது கட்டாயம். பாஜகவுடன் திமுக நெருங்குவதாக சிலர் நம்பினாலும், இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனான மதச்சார்பற்ற கூட்டணி தொடர்வதே பாதுகாப்பானது என்பதை திமுக நினைவில் கொள்வது நல்லது. இந்தக் கூட்டணியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், திமுக கூட்டணிக் கட்சிகளை அதிமுக வளைக்கப் பார்க்கும்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் என தொடர்ந்து மூன்று தேர்தல்களில் திமுக, இந்த தனது வலுவான கூட்டணியால் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
வெற்றி வித்தியாசம் சராசரியாக ஏழு சதவிகிதமாக இருந்தது (2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி வித்தியாசம் அதிகம்). பாஜகவுக்கு எதிரான கட்சிகளான, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகளாலேயே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் குறிப்பிடத்தக்க அளவு வந்தது.
வலுவான மதச்சார்பற்றக் கூட்டணியை உருவாக்கத் தவறியதாலேயே 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுக்குத் தோல்வி ஏற்பட்டது.
பாஜகவுடன் திமுக நெருங்குவதாக சிலர் நம்பினாலும், இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனான மதச்சார்பற்ற கூட்டணி தொடர்வதே பாதுகாப்பானது என்பதை திமுக நினைவில் கொள்வது நல்லது.
1999ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது திமுகவுக்குச் சாதகமாக அமைந்தது. திமுகவின் இந்த அதிர்ச்சிகரமான முடிவுக்கு மூன்று காரணங்களே இருந்தன. ஒன்று திமுக தலைவர் மு. கருணாநிதியின் மருமகனும், மனசாட்சியுமான முரசொலி மாறனின் மத்திய அமைச்சர் பதவி ஆசை. இரண்டாவது ஜெயலலிதா தனது டெல்லி செல்வாக்கைப் பயன்படுத்தி, தன் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து வெளிவர முயன்றதால், அதிமுகவை மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதில் இருந்து அகற்ற வேண்டிய அவசியம். மூன்றாவது, மத்தியிலும், மாநிலத்திலும் திமுகவை வலுப்படுத்த மத்திய அமைச்சர் பதவிகளைக் கைப்பற்றி, இரட்டை குழல் துப்பாக்கியால் அதிமுகவை நசுக்க வேண்டிய நிர்பந்தம்.
2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக, பாஜகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால், 1996இல் இருந்த கூட்டணிக் கட்சிகளை வைத்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றிருக்கலாம். இருப்பினும், திமுக பாஜகவைச் சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்தது. இந்த முடிவு, இடதுசாரிகள், தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற பல மதச்சார்பற்ற கட்சிகளை அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர வைத்தது.
1999ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகளால் திமுகவுக்கு ஏற்பட்ட அதீத தன்னம்பிக்கையே, 2001இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அக்கட்சி அகற்றப்படுவதற்கு வழிவகுத்தது. இந்தத் தோல்வியால் தடுமாறிப் போன திமுக, 2003-2004இல் மத்திய பாஜக தலைமையிலான அரசில் இருந்து வெளியேறி, 2004 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான புதிய மதச்சார்பற்ற கூட்டணியை ஏற்படுத்தியது. இந்தமுறை, அதீத நம்பிக்கையில் இருந்த அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து தோல்வியைத் தழுவியது.
2004ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்குப் பிறகு, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தார் ஜெயலலிதா. இதனால் 2011, 2014, 2016 தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றியை ருசித்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக 2019 மற்றும் 2021 தேர்தல்களில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.
பாஜகவுடன் கூட்டணி வைப்பது, அரசியல் தற்கொலைக்கு வழி வகுக்கும் என்பதை திமுக உணர வேண்டும். 2001இல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு திமுக பெரும் விலை கொடுக்க நேரிட்டது. 2001இல் திமுக அமைத்த பலமான மதச்சார்பற்ற கூட்டணியை வீழ்த்தி பெற்ற வெற்றி, கட்சிக்கும், தனக்கும் கிடைத்த வெற்றி என ஜெயலலிதா கருதினார்.
அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் வரை திமுக பாதுகாப்பாகவே இருப்பதாகவே நாம் கருத வேண்டும். பாஜகவுடனான கூட்டணியை முறிக்காதவரை, திமுக கூட்டணிக்கட்சிகளை தன்பக்கம் இழுப்பது சாத்தியமில்லை என்பதைத் தெரிந்திருந்தும், அதிமுக, அதை ஏன் செய்யவில்லை என்பது அக்கட்சியைப் பற்றி அறியாதவர்களுக்கு வியப்பாகவே இருக்கும்.
திமுக பாஜகவுடன் நெருங்கி, மதச்சார்பற்ற கட்சிகள் புறக்கணிக்கப்படுமானால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, அதுவே தமிழகத் தேர்தல் களத்தில் திருப்புமுனையாக அமையும்.
காவிக் கட்சியுடனான உறவு, வெற்றியை நோக்கிச் செல்வதைத் தடுப்பதை உணர்ந்தாலும், பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு, இடதுசாரிகள் மற்றும் பிற மதச்சார்பற்றக் கட்சிகளை வளைத்துப் போடும் முடிவை எடுக்க அதிமுக விரும்பவில்லை.
ஏனெனில், தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவன், ஒருசிறு துரும்பு கிடைத்தாலும், உயிர்பிழைக்க அதைப் பிடித்துக் கொள்வதைப் போல, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடனான கூட்டணி தங்களுக்கு உதவும் என்று நினைக்கின்றனர் அதிமுக தலைவர்கள். திமுக அரசின் வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய அரசின் துணை தங்களுக்குத் தேவை என்றும் அதிமுக தலைவர்கள் கருதுகின்றனர்.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு இப்போது வேறு வழியில்லை. தற்போதையநிலையில் அவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கும் நிலையிலோ அல்லது அதில்இணையும் மனநிலையிலோ இல்லை. ஆனால், திமுக பாஜகவுடன் நெருங்கி, மதச்சார்பற்ற கட்சிகள் புறக்கணிக்கப்படுமானால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, அதுவே தமிழகத் தேர்தல் களத்தில் திருப்புமுனையாக அமையும். ஆகவே, மதச்சார்பற்ற கூட்டணியைத் தக்க வைத்துக் கொள்வதே திமுகவுக்கு நல்லது.
Read in : English