Read in : English
திமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரை பல்வேறு இடங்களிலிருந்தும் பல்வேறு நபர்களிடமும் அனைத்துத் தகவல்களையும் கேட்டுக் கொள்வார். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் இறுதி முடிவை அவர்தான் எடுப்பார். கருணாநிதி போன்ற காலையிலிருந்து இரவு வரை பரபரப்பாக செயல்படுகிற தலைவரிடம் உதவியாளராக இருப்பது என்பது, எளிதான காரியமில்லை. அவருக்கு நம்பகமான உதவியாளர் தேவை. அத்துடன் அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய திறமையானவராகவும் ஆர்வத்துடன் சலிக்காமல் வேலை செய்பவராகவும் அவர் இருக்க வேண்டும். இந்த குணங்கள் சண்முகநாதனுக்கு இருந்ததால்தான், கருணாநிதிக்கும் சண்முகநாதனுக்கும் இடையே உள்ள உறவு 48 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.
திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கை என்ற கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சண்முகநாதன். பள்ளிக் கட்டணமே செலுத்த இயலாத அவருக்கு, அந்தப் பள்ளி ஆசிரியரே பணம் கட்டிப் படிக்க வைத்துள்ளார். பலருடைய உதவியால் ஆரம்பக் கட்டப் படிப்பை முடித்த நிலையில் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்த சண்முகநாதன், இடையில் தட்டச்சு கற்றார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தேர்வாகி, சென்னையில் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இதற்கிடையில் தமிழ் சுருக்கெழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். அந்த தமிழ் சுருக்கெழுத்துப் பயிற்சி அவரை திமுக தலைவர் கருணாநிதியிடம் சேர்த்தது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் பொதுக்கூட்டத்தில் அவரது உரையைப் பதிவு செய்தார் சண்முகநாதன். அந்த உரையின் அடிப்படையில் கருணாநிதியின் மீது காவல் துறை வழக்குத் தொடர்ந்தது. அவரது பேச்சுக் குறிப்பின் நகலை காவல் துறையிடம் கேட்டு வாங்கிப் படித்த கருணாநிதி, தனது பேச்சை இம்மி பிசகாமல் எழுதியுள்ளாரே என்று வியந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பொதுப் பணித்துறை அமைச்சரான கருணாநிதி, சண்முகநாதனை தனக்கு உதவியாளராக அழைத்தார். இதனால் தனது சம்பளம் குறைந்துவிடும் என்று முதலில் மறுத்த சண்முகநாதன், தனது அப்பா சொன்னதால் கருணாநிதியிடம் உதவியாளராகச் சேர்ந்தார். .
அவரைச் சந்திக்க வருபவர்கள் யாராக இருந்தாலும், அவரது வாயிலிருந்து எந்தத் தகவலும கசிந்துவிடாது. அத்துடன், தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டுவிட மாட்டார்
சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களிடம் இருக்கும் சில பிஏக்கள் போல தேவையில்லாத விஷயங்களில் தலையிடமாட்டார் சண்முகநாதன். அவரைச் சந்திக்க வருபவர்கள் யாராக இருந்தாலும், அவரது வாயிலிருந்து எந்தத் தகவலும கசிந்துவிடாது. அத்துடன், தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டுவிட மாட்டார். வருபவர்கள் சொல்வதைக் கேட்டு கலைஞரிடம் சொல்வார். அவர் சொல்வதை கேட்டு அந்தத் தகவலை வருபவர்களிடம் சொல்வார். கட்சிப் பிரமுகர்கள், செய்தியாளர்கள் அவரிடம் உரிமையோடு பேச முற்பட்டாலும் சண்முகநாதன் அதிகம் பேசமாட்டார். இவருக்குத் தெரியாத விஷயமா என்று கட்சியின் மூத்த முன்னணியினர் ஏதேனும் கேட்க நினைத்தாலும் சிரித்துப் பேசி விடைகொடுப்பார் சண்முகநாதன். அவர் கோபப்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது.
கருணாநிதியின் ஞாபகசக்தி அபாரமானது. ஏராளமான தகவல்களை தனது ஞாபகத்தில் வைத்திருப்பார். சில தகவல்களைச் சொன்னதும், அதைப் புரிந்து கொண்டு, அதைத் தேடி எடுத்துத் தர வேண்டும். கருணாநிதி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து உடனே செயல்படுவதற்கு எப்போதும் தயாராக இருப்பார் சண்முகநாதன்.
1989-91இல் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கான சலுகை வழங்குவது குறித்து முதல்வராக இருந்த கருணாநிதி ஆணை பிறப்பித்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வராக வந்ததும், அந்த பைலை கேட்டார். “அது மஞ்சள் நிறத்தில் பைல் இருக்கும்” என்று கூறி அதை எடுத்து வரச் சொன்னார் சண்முகநாதன். ரெக்கார்டு ரூமில் ஃபைலைத் தேடிப்போனவருக்கு ஆச்சரியம். மஞ்சள் நிறத்தில் பைல் இருந்தது. அந்த அளவுக்கு சண்முகநாதனின் ஞாபக சக்தியும் அபாரமானது.
சுருக்கெழுத்தாளர் என்பதால் கலைஞரின் பேட்டிகள், பொதுக்கூட்டப் பேச்சு, முழுமையாகக் குறிப்பெடுத்து எழுதி முரசொலிக்குக் கொடுப்பது சண்முகநாதனின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்தது
கருணாநிதி எப்போது எதைக் கேட்பார் என்று தெரியாது. நிகழ்வைச் சுட்டிக்காட்டி, மேற்கோள்காட்ட எந்த நாளிதழைக் கேட்பார் என்று தெரியாது. அத்துடன் அன்றாடம் வெளியாகும் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் உள்பட அனைத்தையும் படித்து அதில் குறிப்பிட்ட ஒன்றை திடீரென்று கேட்பார். எனவே, அன்றாடம் காலையில், “சண்முகநாதன்” என்று கருணாநிதி அழைப்பதற்குள் இவர் ஓரளவுக்கு அன்றைய செய்திகள், கட்சிப் பணிகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப தயார் நிலையில் வைத்துக் கொண்டு சந்திக்கச் செல்ல வேண்டும்.
கருணாநிதியின் பொதுக்கூட்டப் பேச்சு, அவரது அறிக்கைகளை தயாரிப்பது என்று அனைத்து விவரங்களையும் சுருக்கெழுத்தில் குறித்து வைத்திருப்பார். கருணாநிதி சொல்லியதில் சந்தேகம் இருந்தால் தான் எழுதி வைத்த குறிப்புகளைப் பார்த்து சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வார். அவற்றையெல்லாம் எங்கே வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு வேலையில் கவனத்துடன் இருப்பார்.
அரசு அலுவலர் என்றாலும் அலுவலக மேசையோடு அவரது வேலை நின்று விடாது. பொதுக்கூட்டங்களில் பேசும்போது, அவரது பின்னால் ஒரு நாற்காலியில் அமர்ந்து சுருக்கெழுத்தில் அவரது பேச்சைக் குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார். பேட்டி என்றாலும் அப்படித்தான் அருகில் இருந்து கொண்டு குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார். காலை முதல் இரவு கருணாநிதி ஓய்வுக்குச் செல்லும் வரை அனைத்து எழுத்துப் பணிகளிலும் சண்முகநாதனுக்குப் பங்கு உண்டு.
உடன்பிறப்பே கடிதத்தில் தொடங்கும் பணி, பிற செய்திகளை அவர் எழுதி வைத்திருந்தால் அவர் திருத்திக் கொடுப்பார். இல்லாவிடில் உடனே டிக்டேட் செய்ய ஆரம்பித்துவிடுவார். முக்கியமான தனிச் சந்திப்புகளிலும் சில சமயங்களில் சண்முகநாதனை உடனிருக்க கருணாநிதி அனுமதித்தது உண்டு.
சுருக்கெழுத்தாளர் என்பதால் கலைஞரின் பேட்டிகள், பொதுக்கூட்டப் பேச்சு, முழுமையாகக் குறிப்பெடுத்து எழுதி முரசொலிக்குக் கொடுப்பது சண்முகநாதனின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்தது. பேட்டி முடிந்தவுடன், அதன் விவரங்களைக் கருணாநிதியிடம் காட்டிவிட்டுதான் பிறவேலைகளைத் தொடர்வது வழக்கம்.
வயதையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சலிப்பில்லாமல் வேலை செய்தவர். விடுமுறை என்பது சண்முநாதனுக்கு அபூர்வமானது
வெளியூர் சுற்றுபயணங்களில் கருணாநிதியின் பேட்டியைத் தொகுத்து கேள்வி பதில் பாணியில் தட்டச்சு செய்து அங்கிருந்து முரசொலிக்குக் கொடுப்பதும் அவர்தான். பேச்சுக்கான தலைப்பையும் கருணாநிதியிடம் பெற்றுத் தர வேண்டும். முரசொலிக்கான செய்தியாளர் பயணத்தில் வராவிட்டால் இந்த வேலைகளை சண்முகநாதனே செய்து விடுவார். கருணாநிதியின் வேகத்துக்கு சண்முகநாதனைத் தவிர வேறு யாரும் ஈடுகொடுத்திருக்க முடியாது என்பதை நேரில் அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
நெருக்கடி நிலை காலத்தில் சண்முகநாதனும் கடுமையான நெருக்கடிக்கு ஆளானார். அவரது வீட்டுக்குக் காவல் துறையினர் சென்று சோதனை என்ற பெயரில் நெருக்கடி கொடுப்பார்கள். கருணாநிதியுடன் இருந்த பலர் காவல் துறையின் நெருக்கடிக்குப் பயந்து விலகிச் சென்ற சூழலில் அவர் கருணாநிதியுடன் தொடர்ந்து இருந்தார்.
1976இல் திமுக ஆட்சி இழந்த பிறகு, அரசு வேலையை விட்டு விலகும்படி கருணாநிதி சொல்லவே, சரி என ஏற்றுக் கொண்டார் சண்முகநாதன். ஆனால், “இளம் வயதில் அரசுப் பணியில் இருக்கும் அவரை விலகச் சொல்ல வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவருக்கான பிஏவாக நியமிக்கச் சொல்லலாம்” என்று முரசொலி மாறன் யோசனை சொன்னார். அன்றைய முதல்வர் எம்ஜிஆர் முதலில் இதை ஏற்கவில்லை. அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலையிட்டு பேசியதை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் உதவியாளராக சண்முகநாதன் நியமிக்கப்பட்டார்.
திமுக தலைவரின் குடும்பச் சூழலோடு தனது பணி அமைந்தாலும் தனக்கே உரிய இயல்பை எந்தக் கட்டத்திலும் மாற்றிக் கொள்ளாத உழைப்பாளி அவர். ஆட்சி, கட்சி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை அறிந்து, தன்னைச் சுற்றி நடப்பதை உணர்ந்திருந்தாலும் கோபாலபுரம் இல்லத்தில் தனக்கான இடத்தில் கம்ப்யூட்டர் முன் இருப்பார். தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் எந்த சலனமும் இல்லாமல் தனது வேலையில் மட்டுமே கவனமாக இருப்பதற்கு அவரால் மட்டுமே முடியும். சிலவேளைகளில் கருணாநிதியின் கோபத்துக்கு சண்முகநாதனும் ஆளாகியதுண்டு. உடனே அவர் சமரசமாகி சகஜநிலைக்கு வந்து விடுவார்.
வயதையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சலிப்பில்லாமல் வேலை செய்தவர். விடுமுறை என்பது சண்முநாதனுக்கு அபூர்வமானது. அரசுப் பணிலியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, கருணநிதிக்கு உதவியாளராக பணி செய்வதிலிருந்து அவர் ஓய்வு பெறவில்லை. கோபாபுரத்துக்கு அன்றாடம் வந்துவிடுவார். கலைஞர் இறந்த பிறகும்கூட அந்த வழக்கம் மாறவில்லை. கலைஞரை இழந்த கோபாலபுரம் தற்போது அவரது உதவியாளர் சண்முகநாதனையும் இழந்துள்ளது.
Read in : English