Read in : English
பெரியாரை தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று அழைத்தார் அண்ணா. தந்தை என்றாலும் அய்யா என்றாலும் பெரியாரைக் குறிக்கும். அறிஞர் என்றால் அண்ணாவைக் குறிக்கும். கலைஞர் என்றால் கருணாநிதியைக் குறிக்கும். அதுபோல பேராசிரியர் என்றால் அதுவும் குறிப்பாக இனமான பேராசிரியர் என்றால் அது அன்பழகனை (1922-2021) குறிக்கும்.
எட்டு முறை எம்எல்ஏ, ஒரு முறை சட்டமேலவை உறுப்பினர், ஒரு முறை மக்களவை உறுப்பினர், தமிழக அமைச்சரவையில் சுகாதாரம், கல்வி, நிதி அமைச்சர், கட்சிப் பொருளாளர், 43 ஆண்டு காலம் பொதுச்செயலாளர் என்ற பல பெருமைகள் இருந்தாலும்கூட, நெருக்கடி நிலை காலத்திலும், அதற்கு பிறகு திமுக ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த 13 ஆண்டு காலமும் எந்த மனமாச்சரியமும் இன்றி திமுகவில் கொள்கைப் பிடிப்போடு இருந்த வித்தியாசமான அரசியல்வாதி. அதனாலேயே இன்றைக்கும் நினைவுகூரப்படுகிறார். கட்சி பல்வேறு கால கட்டங்களில் நெருக்கடிகளைச் சந்தித்தபோது, கலைஞருக்குத் துணையாக நின்று கட்சிக்கு வலுசேர்த்தவர்.
1942இல் விஜயபுரம் என்ற ஊரில் சிக்கந்தர் விழாவில் கருணாநிதியை முதல் முதலில் சந்திக்கிறார் அன்பழகன். அன்று தொடங்கிய நட்பு 75 ஆண்டுகளுக்கு மேலும் நீடித்தது. கருணாநிதியை விட இரண்டு வயது மூத்தவர் அன்பழகன் என்றாலும் கலைஞரின் தலைமையை மனதார ஏற்றுக் கொண்டவர். அதை பல பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்.
“என் உருவம், என் குணம் மாறியதில்லை. ஆனால், மற்றவர்கள் ஏற்கும் பண்பு என்னிடம் இருந்தது. அதனால் நான் என்றைக்கும் தடுமாறவில்லை. கொள்கையில் மாற்றமில்லை. என் கருத்தை மாற்றக்கூடியவர் எவரும் உலகத்தில் இல்லை. நான் உளமாற விரும்பி கலைஞரோடு இருக்கிறேனே தவிர, கலைஞர் விரும்பியதால் நான் இருக்கிறேன் என்பதைக்கூட ஒத்துக்கொள்ள மாட்டேன். அவர் விரும்புகிறார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. என்னைவிட்டு யாரைத்தான் அவர் விரும்புவார்” என்று திமுகவில் இருப்பதைப் பெருமிதத்துடன் சொல்லியவர் அவர்.
திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த நாராயணசாமி தமிழ் உணர்வு காரணமாக நெடுஞ்செழியன் ஆனது போல, அவர் படித்த காலத்தில் அதே பல்கலைக்கழகத்தில் படித்த ராமையா, அன்பழகன் ஆனார்
“முதலில் நான் மனிதன், இரண்டாவது அன்பழகன், மூன்றாவது பகுத்தறிவாளன், நாலாவது அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன், இந்த உணர்வு இறுதிவரை என்னோடு இருக்கும். ஒருவேளை சாக்காடு முடிக்கலாம். இதற்கிடையில் என் வாழ்வில் புகுவதற்கு மாற்றான் எவருக்கும் இடம் இருக்காது” என்று தன்னைப் பற்றி வெளிப்படையாக சுய அலசல் செய்தவர் அன்பழகன். அவரது அரசியல் பயணம் கடைசி வரை திமுகவிலேயே கலந்து இருந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கதர் கல்யாணசுந்தரமாக அறியப்பட்டவர் அன்பழகனின் தந்தை. ஆனால், தேசிய இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவர், காலப்போக்கில் சுயமரியாதைக் கொள்கையில் ஆர்வம் கொண்டு, தான் வைத்திருந்த கடையில் கதராடை விற்பனையோடு குடியரசு இதழும் விற்பனை செய்தார். பெரியார் படத்தையும் தனது கடையில் வைத்தார். அவரது கடையில் கதராடை வாங்க வருபவருக்கு இது உறுத்தலாக இருந்தது. இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தபோது, காந்தி படமும் கதரும் நாட்டுக்காக, பெரியார் படமும் குடியரசு இதழும் தமிழரின் மானத்துக்காக என்று பதிலளித்தவர் கல்யாணசுந்தரம்.
திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அந்த கால கட்ட இளைஞர்களைப் போல, படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்கத்துக்கு வந்தவர் அன்பழகன். திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த நாராயணசாமி தமிழ் உணர்வு காரணமாக நெடுஞ்செழியன் ஆனது போல, அவர் படித்த காலத்தில் அதே பல்கலைக்கழகத்தில் படித்த ராமையா, அன்பழகன் ஆனார்.
பேராசிரியர் அன்பழகனின் மடை திறந்த பேச்சு, கேட்போரை மெய்மறக்கச் செய்யும். அவரது பேச்சுப் பாணி தனி பாணி. அவர் எந்தக் கூட்டத்தில் பேசினாலும், முழுமையான அரசியல் பேச்சாக இருக்காது. அதிலும் இனம், மொழி, பண்பாடு கலந்து அரசியல் வரலாற்றையும் சேர்த்துப் பேசுவது அவரது இயல்பு.
தமிழக அரசியலில் பொதுப்படையான விமர்சனத்துக்கு உள்ளாகாத திராவிட இயக்க தனிப்பெரும் முன்னோடி அவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு தனது கருத்துகளை, பிறர் உணரும் விதத்தில் பதிய வைக்கும் சொல் ஆற்றல் படைத்தவர். தனிமனித விமர்சனம் செய்வதைத் தவிர்த்தவர். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாத இயல்புடையவர். எங்கு சென்றாலும் தங்கும் இடம் முதல் தான் பங்கேற்கும் நிகழ்ச்சி வரை எளிமையாக இருந்தால் போதும் என்ற பிடிப்புடையவர்.
கருணாநிதியை விட இரண்டு வயது மூத்தவர் அன்பழகன் என்றாலும் கலைஞரின் தலைமையை மனதார ஏற்றுக் கொண்டவர். அதை பல பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்
சிங்கப்பூருக்கு சென்று வந்த அண்ணாவுக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் முன்னிலையில், அவர் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, “காமராஜர் அவர்களைத் தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும் கருதுபவருக்கு திமுகவில் இடம் இல்லை. இக்கட்சிக்கு அண்ணா ஒருவர்தான் தலைவரும் வழிகாட்டியும் ஆவார்” என்று உரத்த குரலில் தனக்கே உரிய பாணியில் கூறியவர் அன்பழகன்.
“கட்சியின் பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கட்சிக் கணக்கு கேட்டு பொதுமேடையில் பேசியதை அடுத்து, இந்த உலகில் முழுமையாக மாசற்ற அரசியல்வாதி இல்லை. ஒவ்வொரு கட்சியிலும் நாணயமற்ற சிலர் இருப்பர். எம்ஜிஆருக்கு கட்சி நலனில் அக்கறை இருந்தால் பொது மன்றத்தில் இதைப் பற்றி பேசி இருக்கமாட்டார். அவருக்கு மட்டுமல்ல, யாருக்கும் அண்ணா நிறுவிய கழகத்தை உடைக்க உரிமையில்லை” என்று பேசியவர் அவர். அன்பழகனுக்கு கொள்கைகளும் குறிக்கோள்களும்தான் முக்கியம். தனிநபர்கள் முக்கியமல்ல என்பதுதான் அவரது நிரந்தர நிலைப்பாடு.
பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியதை விட்டு விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட விரும்பிய போது, அவசரம் வேண்டாம் என்றார் அண்ணா. ஒரு கட்டத்தில் பேசி சாதிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை என்று கூறி 1957இல் திமுக முதன் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தபோது எழும்பூர் தொகுதியில் போட்டியிட இடம் வழங்கியவர் அண்ணா. அப்போது வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்ற அவர் தொடர்ந்து திமுகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டார்.
தமிழக அரசியலில் பொதுப்படையான விமர்சனத்துக்கு உள்ளாகாத திராவிட இயக்க தனிப்பெரும் முன்னோடி அவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டு தனது கருத்துகளை, பிறர் உணரும் விதத்தில் பதிய வைக்கும் சொல் ஆற்றல் படைத்தவர். தனிமனித விமர்சனம் செய்வதைத் தவிர்த்தவர்.
ஓர் இனத்தின் தலைவராக அண்ணாவின் இதயம், கலைஞர் வழியில் செயல்படுகிறது கணித்துப் பேசிய அன்பழகன், எந்தக் கட்டத்திலும் எதற்கும் அஞ்சாமல் தமிழக முன்னேற்றம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியவர்.
திமுக மாநாடுகளின்போது ஸ்டாலின் தலைமையில் இளைஞர் படை சீருடையில் அணிவகுத்துச் சென்றதைப் பார்த்து மேடையில் இருக்கும் கருணாநிதியிடம் பெருமையோடு சுட்டிக்காட்டி மகிழ்ந்தவர் அன்பழகன். பெரியப்பா என்று அன்பழகனை பாசத்தோடு கூப்பிடும் ஸ்டாலினின், ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய், ஆதரவாய் வழிகாட்டி அரவணைத்தவர் அன்பழகன். மேயராகவும், அமைச்சராகவும், துணை முதல்வராகவும் ஆட்சிப் பொறுப்புகளுக்கு ஸ்டாலின் வருவதற்குக் கலைஞரிடம் முன்மொழிந்தவரும் அவர்தான்.
தகுதியினால் பெருமை கொண்டு, தியாகத்தால் உரிமை பெற்று தொண்டினால் பதவி பெற்று, சாதனையால் புகழ் பெற்ற தகுதியாளர் தம்பி மு.க. ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டி மகிழ்ந்த அன்பழகன், ஒரு கட்டத்தில் அவரிடம் கட்சித் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கலாம், தொண்டர்களை ஈர்ப்பவர், கழக மூத்தோரை மதிக்கும் பண்பாளர், தமிழகமெங்கும் சுற்றி வந்து களப்பணியாற்றுபவர், கழகம் காப்பார் என்று பொது மேடையிலேயே தன் கருத்தைத் திடமாகச் சொல்லவும் தவறியதில்லை.
எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்தத் தகுதியானவர் ஸ்டாலின்தான் என்பதையும், கலைஞர் இருக்கும்போது திமுகவின் செயல் தலைவராகவும், அவரது மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராகவும் ஸ்டாலின் ஆனதை பார்த்து மகிழ்ந்தவர் திமுகவின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் இருந்ததையே நிறைவாகக் கருதிய பேராசிரியர் அன்பழகன்.
Read in : English