Read in : English
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றபட்டுள்ள அதேநேரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான மிகவும் மூத்த நீதிபதியான மூனீஸ்வர்நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் விருப்பப்படி இந்த செயல்பாடுகள் நடந்துள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை இங்கு மாற்றியது, அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்குவதற்கா? சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு உள்பட பலர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளாக அடுத்தடுத்து இருந்த மூன்று நீதிபதிகள் குறுகிய காலமே பதவியில் இருந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மேகாலாயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இரண்டாவது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பானர்ஜி.
2019ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில்ரமணி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அம்ரேஷ்வர் பிரசாத் சாஹி, தனது பதவிக்காலம் முடிவதற்கு 13 மாதங்கள் இருக்கும்போதே பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சஞ்சீப் பானர்ஜி, இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் அவர் பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கிடையே அவர் மேகாலாயவுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், மிகவும் மூத்த நீதிபதியான டி.எஸ். சிவஞானம் சமீபத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுதான் புதிராக இருக்கிறது.
“சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து நீதிபதி டி.எஸ். சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ராஜா ஆகிய இருவரும் பண்டாரிக்கு ஜூனியராக இருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி பண்டாரி வந்துவிட்டால், அவர்தான் மிகவும் மூத்த நீதிபதியாக இருபபார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகிவிடுவார்” என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு.
நீதிபதி பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும்கூட, அவர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெறும் வரையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிகத் தலைமை நீதிபதியாகத் தொடர்ந்து இருப்பார்.
இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் நீதிபதி சந்துரு, “நீதிபதி பண்டாரி ராஜஸ்தான் நீதிமன்றத்திலிருந்து மாற்றுவதற்கு நீதி நிர்வாகம் என்ற காரணத்தைக் காட்டி கொலஜ்ஜியம் 2019இல் முடிவு செய்தது.
அவர் சென்னைக்கு மாற்றப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் ஆவார் என்று முழுமையாகத் தெரிந்தும்கூட, 2021இல் அவரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு கொலஜ்ஜியத்தை தூண்டியது எது? முன்பு தண்டனைக்குரிய மாற்றம், இப்போதோ வெகுமதி தரும் மாற்றமாகக் காரணம் என்ன? ஒரு உயர்நீதிமன்றத்துக்குப் பொருத்தமில்லாதவர் என்று கருதப்பட்ட ஒரு நீதிபதி, மற்றொரு உயர்நீதிமன்றத்துக்கு எப்படி பொருத்தமானவராவார்? சட்டத்துறை வட்டாரங்களில் இந்தக் கேள்விகள்தான் எழுப்பப்படுகின்றன” என்கிறார் அவர்.
“நீதிபதி பானர்ஜியை மேகாலாயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியது, நீதிபதி பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்துவதற்காகவா? செப்டம்பர் 16ஆம் தேதிக்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அது ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் ஒன்றரை மாதங்கள் கழித்து பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டது? இந்தக் கேள்வியைத்தான் பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சந்துரு.
சென்னையில் உள்ள இரண்டு முக்கிய வழக்கறிஞர் அமைப்புகளான 20 ஆயிரம் வழக்கறிஞர்களை உறுப்பினர்களாக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை பார் அசோஷியேஷன் ஆகியவை, தலைமை நீதிபதி பானர்ஜியை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
அத்துடன் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சஞ்சீப் பானர்ஜியை மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரம் 200 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கு எந்த பதிலும் உண்டா என்று பார்த்தால், பிரதமர் மோடி செயல்படும் ஸ்டைலில், மேகாலாயா உயர்நீதிமன்றத்துக்கு ச]ஞ்சீப் பானர்ஜியை மாற்றியது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூவ அறிவிக்கை வெளியிட்டதுதான்.
“அரசியலமைப்புச் சட்டத்தின் 222வது பிரிவின் 1வது விதியின்படி வழங்கப்பட்டுள்ள உரிமையின்படி, குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசித்த பிறகு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மேகாலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்படுகிறார். மேகலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்க வேண்டும்” என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read in : English