Read in : English
இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துகளையும் அரசுதான் நிர்வகிக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை போல, இஸ்லாமிய சொத்துகளை நிர்வகிக்க அரசின் நிறுவனமான வக்பு வாரியம் செயல்படுகிறது.
முஸ்லிம் மக்கள் அவர்களின் சொத்துகளை வக்ஃபு பத்திரம் மூலம் பொதுக்காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த சொத்துகளை நிர்வகிக்க இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசு வெளியேறிய பிறகு வக்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. இன்று இந்தியா முழுவதும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள் அங்கீகாரம் பெற்று உள்ளன.
மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்பு சொத்துகளில் திறமையான முறையில் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1959, 1964 மற்றும் 1969ஆ-ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
மீண்டும் 1995இ-ல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட்டது.
இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் மத்திய வக்பு வாரியம் என்பது இந்திய வக்பு சட்டம் 1954-இன் கீழ் அமைக்கப்பட்டது என்பதும், அதன் தலைவராக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இருக்கிறார். மத்திய வக்பு வாரியத்தின் கீழ் மாநில வக்பு வாரியங்கள் இயங்குகின்றன.
வக்பு சட்டம் 1995-இன் பிரிவு 72(1)இன்படி ஒரு வக்பின் நிகர வருமானம் ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் ஐந்தாயிரத்திற்கு மேல் இருந்தால் அந்த வக்பு, வாரியத்திற்கு அதன் வருமானத்தில் இருந்து ஏழு சதவீதத்தைக் கொடுக்க வேண்டும்.
இவை கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் ஆகும். நிகர வருமானம் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறைவான வக்புகள் வாரியத்திற்கு சகாயத் தொகை செலுத்த வேண்டியதில்லை. இவை கணக்கீட்டிற்குள் வராத வக்புகள் ஆகும்.
தமிழகம் முழுவதும் கணக்கீட்டிற்குள் வரும் வக்புகள் 2,194 உள்ளன. கணக்கீட்டிற்குள் வராத வக்புகள் 4,507 உள்ளன. இந்த கணக்கீட்டிற்குள் வராத வக்புகளையும் வக்புவாரியம் தான் நிர்வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
முறையான கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க ஒவ்வொரு வக்பும் கடமைப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறுகிற வக்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்திற்கு அதிகாரம் உண்டு. ஒவ்வொரு வக்பின் தோற்றம், வருவாய், நோக்கம், பயனாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்வது முதல் நிர்வகிப்பது வரை அனைத்துப் பணிகளையும் வக்பு வாரியம் மேற்கொள்கிறது.
வக்பு சொத்துகளும், அதன் வருமானமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்தல், வக்புகளின் கணக்கை தணிக்கை செய்தல், வரவு செலவை ஆய்வு செய்து அங்கீகரித்தல் என அனைத்து இஸ்லாமிய மத நிறுவன சொத்துக்களையும் வக்பு வாரியம் தான் நிர்வகிக்கிறது.
வக்பு சட்டப்படி மசூதிகளை நிர்வகிக்கும் முத்தவல்லிகளை நியமிப்பதும் மற்றும் நீக்குவதும்கூட வக்பு வாரியம் தான்.
ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுத்தல், வக்பு சட்டத்திற்கு உட்பட்டு வக்பு சொத்துகள் விற்பனை, குத்தகை, ஒத்தி, பரிமாற்றம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்குதல், வக்பு நிதியை நிர்மாணித்தல், வக்பு சொத்துகளின் தன்மை, பரப்பளவு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவு செய்தல் மற்றும் அளவை செய்தல் என அனைத்துப் பணிகளையும் அரசின் வழியான வக்பு வாரியமே நிர்வகிக்கிறது.
இவற்றைத் தவிர அரசு வழங்கும் மானியத் தொகை மூலம் நலிவுற்ற வக்பு நிறுவனங்களைப் பழுது பார்ப்பதற்கும், மையவாடிகளில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கும், உலமாக்கள் ஓய்வூதியம் வழங்குதல், 1986ஆ-ம்ஆண்டின் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட்டப்படி மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குதல் போன்ற பணிகளையும் வக்பு வாரியம் தான் செய்து வருகிறது.
மசூதிகளை நிர்வகிக்கும் முத்தவல்லிகளை நியமிப்பது முதல் அனைத்து மசூதிகளின் சொத்துகளை நிர்வகிப்பது வரை அனைத்தும் அரசின் கட்டுபாட்டில் உள்ள வக்பு வாரியம் தான் செய்து கொண்டிருக்கிறது.
இந்திய வக்பு வாரியத்தின் தலைவராக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர்தான் இருக்கிறார் என்கிற எல்லா உண்மைகளும் தெரிந்தாலும் இஸ்லாமியர்கள் மசூதிகளை நிர்வகிப்பது போல, இந்து கோவில்களையும் இந்துக்களே நிர்வகிக்க வேண்டும் என்று ஒரு போலி பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.
கிறிஸ்தவ நிறுவனங்களை கிறிஸ்தவ அமைப்புகள் நிர்வகிக்கின்றன என்றால் அவற்றின் சொத்துகள் அரசால் வாங்கப்பட்டவையல்ல. இறையிலி நிலங்கள் அரசுகள் கட்டமைத்து உருவாக்கியவை அல்ல துவக்கம் முதலே அது கிறிஸ்தவ அமைப்புகளாலேயே உருவாக்கப்பட்டவை. அவற்றையும் வக்பு வாரியத்தை போல அரசு நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை வேண்டுமென்றால் ஜனநாயகப்பூர்வமானதாக இருக்கலாம்.
நவீன ஜனநாயக வடிவங்களில் 60 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டவற்றை மீண்டும் பழைய நடைமுறைகளுக்கு இட்டுச் செல்ல முடியாது. வரலாற்றில் என்றுமே பின்னோக்கி செல்ல முடியாது.
இந்துக்கள் கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அப்படியானால் தற்போது அறநிலையத் துறையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது. இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் (திருத்தப்பட்ட சட்டம் 39/1996) கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஒருவர் ஆணையராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
ஆணையர், அலுவலர்கள், சார்நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல்பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளடங்கிய 2,409 அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் காலியிடங்கள் தவிர 1336 பணியாளர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். பொது நிர்வாகம், விசாரணை, திருப்பணி ஆகியவற்றிற்கு தனித்தனி கூடுதல் ஆணையர்கள் உள்ளனர். அதேபோல் தலைமை அலுவலகத்தில் இரண்டு இணை ஆணையர், மேலும் சட்டத்திற்கு என்று ஒருவரும், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகிக்க ஒருவரும் என இணை ஆணையர்கள் உள்ளனர். சட்ட பிரிவுக்கு ஒரு உதவி ஆணையரும் ’கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம்’ நிர்வகிக்க ஒரு உதவி ஆணையரும் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 11 மண்டலங்களையும், மாவட்ட அளவில் 28 கோட்டங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இணை ஆணையரும், ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு உதவி ஆணையரும் நியமிக்கப்பட்டு இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமல்ல, இந்து சமய அறநிலையத்துறையின் வழியாக பணியில் இருக்கும் ஊழியர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கணக்கர்கள், எழுத்தர் என்று அனைத்து பணிகளிலும் இருப்பவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த இந்துக்களே என்கிற உண்மையை மறைத்து விட்டுத்தான் கோவில் நிர்வாகத்தை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்று புதிய கோரிக்கை போல வைக்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கும் போதே இதற்கான சட்டமும் இயற்றபட்டுவிட்டது. தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை கட்டளைகள் சட்டம் 1959 அத்தியாயம் 2 ஆணையர் மற்றும் இதர கட்டுபாட்டு அதிகார அமைப்புகள் என்ன சொல்கிறது என்றால், ஆணையர், இணை ஆணையர் மற்றும் துணை அல்லது உதவி ஆணையர் ஒவ்வொருவரும், சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பிற அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் ஒவ்வொருவரும், அவர் எவரால் நியமிக்கபட்டிருப்பினும், இந்து சமயத்தை பின்பற்றி வருபவர்களாக இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை வழியாக கோயில்களை கடந்த 61 ஆண்டுகளாக நிர்வகித்து வருபவர்கள் இந்துக்களே. அப்படியானால் திடீரென இந்துக்களிடம் கோயில்களை கொடுக்க வேண்டும் என்று கூறுவதன் காரணம், இடஒதுக்கீட்டின் வழியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகளில் நியமிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்ட ஒவ்வாமையே.
வரலாறு முழுக்க கோவில் சொத்துகளை அனுபவித்த உயர்சாதியினர் அதனை மீண்டும் கைப்பற்றுவதற்காகவே இந்த பரப்புரை தீவிரமாக நடத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
இதில் வக்பு வாரியம் முழுக்கமுழுக்க அரசால் அவர்களாலேயே நிர்வகிக்கபடுகிறது என்கிற உண்மையை மறைத்து மசூதிகளை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க கூடாதா என்று உண்மைகளை மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
நேருக்கு நேர்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் கோயில்களின் அரசு நிர்வாகமும் – I
இன்று, இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகப்போகிற நேரத்தில், இந்து ஆலயங்கள் அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று கோருகிற ஓங்கிய குரல்களைக் பொதுவெளியில் கேட்க முடிகிறது. ஆனால், இரண்டாம் உலகப் போரில் மிகுந்த அழிவுகளை சந்தித்த பிறகு,...
Read in : English