Read in : English
காங்கிரஸ் 3, பாஜக 0. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின் ’ஸ்கோர்’ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பிரதேசம் என்று கருதப்படுகின்ற மாநிலங்களை பாஜக தனது கோட்டை என்று மார்தட்டிக்கொண்டிருக்குற நேரத்தில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளை வீழ்த்தியது இந்திய அரசியல் களத்தை புரட்டி எடுத்துள்ளது.
3-0 என்ற ஸ்கோரை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3.0 என்று விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
2019-ல் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் முற்றிலும் ஒரு புதிய வியூகத்தை அடிப்படையாகக்கொண்டு பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சஹதீஸ்கரில் நடந்த இந்த வியூகத்தின் அடிப்படையில், அரை இறுதி ஆட்டத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தல் எனும் இறுதி ஆட்டத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெளிவாகிறது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி, மோடி மீது ஒரு போரையே நடத்திக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இம்மூன்று மாநிலங்களில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.காரணம், பாஜகவின் அசைக்க முடியாத பெரும் கோட்டை என்று கருதப்படும் மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றியின் வாசல் திறக்கப்பட்டு, செங்கோட்டையைப் பிடிக்க வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு காங்கிரஸுடன் நேரடியாக மோதி முதல் முறையாக தோல்வியைக் கண்டுள்ளார்.
சில ஊடகங்களும் பத்திரிகைகளும் மோடி வெல்ல முடியாதவர் என்று கூறியபோது, காங்கிரஸ் கட்சி இம்மூன்று மாநிலங்களிலும் அவருடன் மோதி வீழ்த்தியுள்ளது. கடந்த கால வரலாறு வழங்கும் செய்தி என்னவென்றால், சட்டசபை தேர்தலில் குறிப்பிடத்தகக் வெற்றியைப் பெற்றால், ஒருவருட காலத்துக்குள் நடத்தப்பட்டால் அவ்வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்பதையே நிரூபித்திருக்கிறது. அதேபோல், இந்த ‘தேனிலவு காலம்’ ஒரு வருடம் தொடரும் என்றும் அதே வரலாறு நிரூபித்துள்ளது. பாஜக இந்த மாநிலங்களில் கிட்டத்தட்ட 40 பாராளுமன்ற இடங்களை இழக்கலாம் என்றும் அந்த 40 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றலாம், என்றும், எனவே இது 80 இடங்களுக்கு சமம் என்று கருதலாம்.
’வாழ்வா சாவா’ என்ற போராட்டத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு காட்சிகள் மாறின. மத்திய பிரதேசத்தில் நிலமை மாறியது. இரு கட்சிகளுக்கும் இடையே ராஜஸ்தானில் மிக குறுகிய வித்தியாசமே டிசம்பர் 11ஆம்தேதி மதியம் நிலவியது. ஆனால் காங்கிரஸ் பாஜகவின் நம்பிக்கையை குலைத்து மாலையில் வெற்றி கண்டது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. இது பாஜகவுக்குக் கிடைத்த மற்றொரு இடி.
பாஜகவின் மிக பலம் பொருந்திய, வெற்றிகரமான முதல்வர்களான சிவ்ராஜ் சிங் சௌகான், வசுந்தரராஜே மற்றும் ராமன் சிங் ஆகிய மூவரும் ஆட்சியை இழந்து தலைகுனிந்து நிற்கின்றனர்.
இந்த சூழ்நிலையிலும் பாஜக 5 மாநிலங்களில் கிடைத்த எதிர்மறை முடிவுகள் எந்த தோல்வியின் பிரதிபலிப்பும் கிடையாது என்றும் பிரதமர் மோடியின் புகழுக்கு கிடைத்த தோல்வி அல்ல என்றும் கூறியுள்ளது. ஆனால் இம்மூன்று மாநிலங்களிலும் கிடைத்த ஆய்வுககிளின்படி, விவசாயிகளின் துயரம், இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் ஆகியவற்றின் எதிரொலிதான் இந்த தேர்தல் முடிவுகள் என சுட்டிக்காட்டுகின்றன. மோடி அரசின் கொள்கைகளினால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதேபோல், ரபேல் ஊழல் குற்றச்சாட்டும் பிரதமர் மோடியின் மேல் 2014-ல் இருந்த பிம்பத்தை சிதைத்துள்ளது.
ராகுல் காந்தியின் வெற்றிக்கு இன்னொரு காரணம் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கான இடத்தையும் சுதந்திரத்தையும் இம்மூன்று மாநிலங்களில் வழங்கியதுதான். கடந்த காலங்களில் மாநில காங்கிரஸ் கமிட்டியை டெல்லியில் உள்ள தலைவர்கள் அதிகாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் கிடைத்த முடிவுகள் காங்கிரஸுக்கும் அதன் புதுக் கூட்டணிக்கும் பின்னடைவுதான். தெலுங்கு தேசம் கட்சி போதிய அளவிற்கு மக்களின் ஆதரவை பெறமுடியவில்லை என்பதே இந்த தோல்விக்கான காரணம் என்று தெரிய வருகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. அங்கு முதல்வரே தோல்வியைத் தழுவியுள்ளார். அது சிறிய மாநிலம் என்பதனால் அந்த தோல்வி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.
மற்றொருபுரம் பாஜக தனது கோட்டையில் மூன்று பெரிய மாநிலங்களில் ஆட்சியை இழந்து தோல்விப் புண்களை தடவிக்கொண்டிருக்கிறது.
Read in : English