Read in : English

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கர்நாடக இசையில் இஸ்லாமியப் பாடல்களை எழுதிப் பாடியிருக்கிறார் இஸ்லாமிய இசை அறிஞர் பா.சு. முகம்மது அப்துல்லா லெப்பை ஆலிம் (1870.1962).

அவரது இசைப்  பங்களிப்பு குறித்து நமக்கு எடுத்துக்காட்டுவது,  அவர் எழுதிய `கீத்தனாரஞ்சிதம்’ என்கிற கர்நாடக சங்கீதத்தில் இஸ்லாமிய இசைப் பாடல்களைக் கொண்ட நூல். 1917ஆம் ஆண்டில் மு.ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்தசாகரம் என்ற சங்கீத நூல் வெளிவவருதற்கு முன்பே வெளிவந்த இந்த நூல், 1909இல் ஐயன்பேட்டை கா. அப்துல்கனி முன்முயற்சியால் சென்னையில் உள்ள கலாத்நாகர அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

முகம்மது அப்துல்லா லெப்பை ஆலிம்

தமிழிலும், சம்ஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடையிலும் அரபி, பார்ஸி, உருது வார்த்தைகளைக் கொண்ட அரபுத் தமிழிலும் முகம்மது அப்துல்லா லெப்பை தனது இசைப் பாடல்களை உருவாக்கியுள்ளார் என்பதை இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கும் தமிழ் இசை அறிஞர்கள் புரிந்து கொள்ள முடியும். கர்நாடக இசைப்பாடல்களில் உள்ள ராகங்களில் இஸ்லாமிய கீர்த்தனைகள் அமைந்துள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களின் வாழ்த்துக் கவிதைகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அத்துடன், இப்புத்தகத்தின் தொடக்த்தில் இடம் பெற்றுள்ள சித்தரக்கவி, அவரது கவித்துவ மேதைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

“முகம்மது அப்துல்லா லெப்பை எழுதியுள்ள கீர்த்தனாரஞ்சிதம் புத்தகத்தில் பாடல்களுக்கான பண், தாளக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் உறறு நோக்கும்போது, இசைப்பாடல்களை இயற்றுவதோடு, பாடும் திறனும் அவர் பெற்றிருந்தது புலனாகிறது” என்கிறார் மதுரை தியாகராயர் கல்லூரி தமிழ் இசை ஆய்வு மைய முதன்மை இசை ஆய்வாளர் நா.மம்மது.

“குணங்குடி மஸ்தான் (1792 1838) இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியவர். சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த இசை மணி யூசுப். நாகர்கோவில் ஹுசேன் பாகவதர், குமரி அபுபக்கர் ஆகிய இஸ்லாமிய இசைக் கலைஞர்கள் கர்நாடக இசைக்கச்சேரிகளில் பாடும் திறமை பெற்றவர்கள். சாகுல் ஹமீது என்கிற ராஜபார்ட் ராஜா, நாடகத்தில் ராஜபார்ட் வேடத்தில் நடிப்பதுடன் நல்ல குரல் வளம் மிக்கவர். ஷேக் சின்ன மௌலானாவின் பேரன்கள் காசிம் பாபு சகோதரர்கள், திருப்பதி கோவில்களின் முக்கிய நிகழ்வுகளில் நாகஸ்வரம் வாசிக்கிறார்கள். ஷேக் சுபானி மற்றும் காலிஷாபீ தம்பதியினரின் நாகஸ்வர பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வீணை, தபேலா போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் பிரபலமாகாத இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள்” என்று கூறும் அவர், தமிழ் இசைச் சூழில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு இருந்து வருவதைச்  சுட்டிக்காட்டுகிறார்.

“நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, காயல்பட்டினத்தைச் சேர்ந்த கர்நாடக இசை வித்வான் சாமிக்கண்ணு ஆசாரி, காயல்பட்டினம் தைக்கா தர்காவில் எங்களது தாத்தா முகம்மது அப்துல்லா லெப்பையின் பாடல்களை தனது வெண்கலக் குரலில் பாடியதைக் கேட்டிருக்கிறோம். கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மகாதானபுரத்தின் ஒரு பகுதியான பஞ்சலிங்கபுரம் ஜமாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய கர்நாடக இசைக் கலைஞர் ஹுசைன் பாகவதர், எங்களது தாத்தாவின் பாடல்களை விரும்பிப் பாடி வந்திருக்கிறார். தைக்கா தர்காவில் இப்போதும்கூட, அவரது பதங்களைப் பாடி வருகிறார்கள்” என்கிறார், கீர்த்னாரஞ்சிதம் புத்தகத்தின் மூன்றாவது பதிப்பைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 75 வயதாகும் அவரது பேரன் இல்யாஸ்.

1909ல் வெளியாகிய கீர்த்தனாரஞ்சிதம்

“உமறுப்புலவர் நபிகளின் வாழ்க்கை வரலாற்றை சீறாப்புராணம் என்ற காப்பியமாக எழுதுவதற்கு உதவிய சதக்கத்துல்லாஹ் அப்பாவின் குடும்ப வழியில் ஏழாம் தலைமுறையில் பிறந்த முகம்மது அப்துல்லா லெப்பை வழியில் வந்த குடும்பத்தில் பிறந்தவர்தான் எனது தாத்தா முகம்மது அப்துல்லா லெப்பை ஆலிம். கொழும்பில் தனது மூத்த சகோதரர்களுடன் சேர்ந்து மாணிக்கக்கல் வியாபாரம் செய்து வந்த அவர், மும்பையிலும் தனது வியாபாரத்தைத் தொடர்ந்துள்ளார். இசை ஆர்வம் காரணமாக இசை நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் முகம்மது அப்துல்லா லெப்பை என்ற அந்த இசைக் கலைஞரின் இசைப் பயணம் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை” என்கிறார் அவர்.

“இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1963இல் கொழும்பில் வெளியானது. இந்தப் புத்தகத்தின் மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருவதற்கு அப்துல்லா லெப்பையின் பேரன்கள் காயல்பட்டணம் பி.எஸ்.எம். உமர், பி.எஸ்.எம். இல்யாஸ் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை வெளிவராத சில பாடல்களும் இந்தப் புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன” என்கிறார் இந்தப் பதிப்பில் துணை நிற்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகாதேவன்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival