Read in : English

எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இருந்தபோதும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது இவ்வரசுக்கு பெரும் சிக்கலாகத்தான் முடியும். இந்த வழக்கில் மூன்றாவது நீதியின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுகவின் முக்கிய முடிவுகள் எடுக்கும் தலைவர்கள் பதட்டத்தில் உள்ளனர். அதே நேரத்தில் டிடிவி தினகரனின் அமுமுக-வும் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதிமுகவுக்கு பதிலடி கொடுக்க பல்வேறு யுக்திகளையும் அரசியல் திறனையும் அமுமுக காட்டிய வேண்டிய தருணம் இது. இன்மதி.காம், அடுத்த சில வாரங்களில் தமிழக அரசியலில், மூன்றாவது நீதிபதி எம்.சத்திய நாராயணன் தீர்ப்பை  பொறுத்து அரங்கேற வாய்ப்புள்ள சில சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது.  இரு  நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது நினைவிலிருக்கலாம்.

சூழ்நிலை 1

மூன்றாவது நீதிபதி 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து அவர்களை எம்.எல்.ஏக்களாக நீடிக்கச் செய்யலாம். தீர்ப்பு  அவ்வாறு வந்தால், எடப்பாடி அரசு மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்கும். அதாவது இந்த அரசு மைனாரிட்டி அரசாக மாறும். 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில், திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 97 இடங்களையும்( திமுக-88, காங்கிரஸ்-8, முஸ்லிம் லீக் -1) அமுமுக ஒரு இடம் (டிடிவி தினகரன்)  என எதிர்க்கட்சிகளின் மொத்த பலம் 98ஆக இருக்கும் நிலையில் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவையின் மொத்த பலம்  234 யிலிருந்து  214 ஆகக் குறையும்( தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 18,காலியாக உள்ள  திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் 2 என மொத்தம் 20 இடங்கள் காலியாக கருதப்படும்). அப்படியான நிலை உருவானால் அதிமுகவில் சபாநாயகரையும் சேர்த்து 116 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பர்.

ஒருவேளை 18 எம்.எல்.ஏக்களும் இவ்வழக்கில் வெற்றி பெற்றால், எதிர்க்கட்சிகளின் பலம் 98+18 =116 என அதிகரிக்க வாய்ப்புண்டு. 234 இடங்களில்  இரு இடங்கள் காலியாக உள்ளன, சபாநாயகர் ஒட்டெடுப்பில் வாக்களிக்க முடியாது. ஆகையால், 231 இடங்களில் அதிக ஒட்டு எடுத்து வெற்றி பெற 116 இடங்கள் வேண்டும். நடைமுறை கணக்கின்படி, அதிமுகவிடம் 115 ஓட்டுக்களே உள்ளன, சபாநாயகர் ஓட்டளிக்க இயலாது என்னும் போது ஒரே ஒரு ஓட்டில் அதிமுக தோற்கடிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.

அதேபோல் அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட வெற்றிபெற்ற மூவரின் (நடிகர் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு)  நம்பிக்கையும், சந்தேகத்துக்கிடமான வகையில் தான் உள்ளது. அம்மூவரும் (மூன்று பேரும் தினகரனுக்கு நெருக்கம் என கூறப்படுகிறது) அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தால் எதிர்க்கட்சிகள் 119 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது; அதிமுக 112 இடங்கள் என சரியும் அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது.

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அதிமுக அரசு தப்புமா?

இருப்பினும், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்களை அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்கக்  அரசுத் தரப்பு கட்டாயப்படுத்தும். அம்மூவரும் அதிமுக கொறடாவின் ஆணைக்கு அடிபணியாமல் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரை அதிமுக அரசு நாடும். ஆகையால், தங்கள் எம்.எல்.ஏ பதவியை தக்கவைத்துக்கொள்ள அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாக வேண்டும் என்ற  நிலை அவர்களுக்கு உருவாகும்.

இதே நிலை 18 எம்.எல்.ஏகளுக்கும் பொருந்தும். அவர்களும்  அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் என்ற நிலையில், அதிமுக கொறடாவின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்.  மாற்று அரசு உடனே ஏற்படும்,  அதற்க்கு ஆளுனர் துணைபோவார் என்ற தெரிந்தால், இந்த 21 எம்.எல்.ஏகளுக்கும் தகுதி நீக்கத்தைப்பற்றி  கவலைப்படாமல் அரசிற்கு எதிராக வாக்களிக்கலாம்.

அதாவது 18 எம்.எல்.ஏகளுக்கும் அரசிற்கு எதிராக வாக்களித்தால், சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் தகுதி நீக்கம் செய்து, அந்த அறிக்கையைக்கொண்டு,  ஆளுநரை அணுகி 18 பேரை தகுதி நீக்கம் செய்ததால் எடப்பாடி அரசுக்கு சட்டசபையில் நம்பிக்கை உள்ளது, ஆகவே ஆளுநர் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்த முடியும். அந்த அறிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டால், எடப்பாடி அரசுக்கு சட்டசபையில் பெரும்பான்மை உள்ளது என கருதப்படும், அதிமுக அரசும் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும்.  18 பேரும் (அல்லது 21 பேரும்) தங்கள் பதவியை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றங்களில்  வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த கால இடைவெளி எடப்பாடி அரசுக்கு சாதகமாக அமையும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால்  இன்னொரு காட்சியும் அரங்கேற வாய்ப்புள்ளது. 1987 ல் ஜெ-ஜா அணியாக அதிமுக பிரிந்தபோது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்  ஜெ.ஆதரவாளர்களான 33 எம்.எல்.ஏக்களையும்  வாக்கெடுக்கும் போதே தகுதி நீக்கம் செய்தார். அவர் வித்தியாசமான வாக்கெடுப்பை அப்போது நடத்தினார். சட்டசபையில் ஒவ்வொரு ‘பிளாக்’-ஆக எழுந்து நின்று வாக்களிக்க வேண்டும்.   ஒவ்வொரு பிளாக்கில் உள்ள எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று அரசுக்கு ஆதரவாக வாக்களித்த பிறகு, அரசுக்கு எதிராக வாக்களிக்கும் எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று வாக்களிக்கலாம். ஆனால் அரசுக்கு ஆதரவாக எழுந்துநின்று வாக்களிக்க தவறியதால், அக்கட்சியின் கொறடாவின் ஆணையை மீறி செயல்பட்டதாக கருதி, அந்த பிளாக்கில் உள்ள ஜே அணியின் எம்.எல்.ஏக்களை, அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் முன்னாலேயே, நீக்கப்பட்டதாக சபாநாயகர் பாண்டியன் அன்று அறிவித்தார். ஜானகி எம்.ஜி.யாரின்  நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றிபெற்றதாக பாண்டியன் அறிவித்தார். அதே அணுகுமுறை இம்முறையும் கையாளப்பட்டால், அதிமுக பிளாக்கில் உள்ள 18 எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று வாக்களிக்க முன்னரே நீக்கப்படலாம்.

அரசுக்கு எதிராக அவர்கள் வாக்களிக்கும் முன்னரே ஒவ்வொரு பிளாக்கிலும் உள்ள அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இந்த முறையில் 18 எம்.எல்.ஏக்களின் ஓட்டுக்களையும் எண்ணாமல் போய்விடலாம்.   அப்படி நடத்தப்பட்டால், எடப்பாடி அரசு 115 வாக்குகள் பெற்று  வெற்றிபெற்றதாக அறிவிக்க முடியும்.

பி.ஹெச்.பாண்டியன் அதிமுகவின் சட்ட அணியின் பொறுப்பாளராக இருப்பதால் அவருடைய வழியையே இந்த அரசு பின்பற்றலாம். இந்த விஷயத்திலும், 18 எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தை நாடலாம்; ஆளுநருக்கும் மனு அளிக்கலாம். திமுகவும் ஜனநாயக மரபுகள் மீறப்பட்டதாக ஆளுநரிடம் மனு கொடுக்கலாம். ஆனால் ஆளுநர் திமுக வின் மாற்றரசை ஏற்படுத்த அனுமதிப்பாரா என்பது சந்தேகம் தான். தினகரனின் 19 ஆதரவு எம்.எல்.ஏ க்களின் துணையோடு, வேறொரு அதிமுக அரசு அமைப்பதற்கு உதவி செய்வாரா என்பதும் கேள்விக்குறி தான்.

இன்னொரு சாத்தியக்கூறாக, இந்த அரசு அப்படியே நீடிக்கலாம். தகுதி நீக்க வழக்கில் சட்டசிக்கல் உள்ளதாக சபாநாயகர் தனபால் கூறி உச்சநீதிமன்றத்தை நாடி, ஆளும் காலத்தை நீட்டிக்கலாம். அதன்பிறகு, 18 எம்.எல்.ஏக்களின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை  சட்டசபைக்குள் நுழைய  அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறலாம்.  இம்மாதிரியான சிக்கல்கள் எழுந்தால் மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசு மற்றும் ஆளுநரின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழலாம்.

மற்றொரு வழியும் உண்டு. 18 எம்.எல்.ஏக்களில் சிலர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் பக்கம் சாயலாம். அப்போது எதிர்க்கட்சிகளின் பலம் 111 அல்லது 112 என குறைந்து ஆளும் அதிமுக அரசின் பலம் 120 ஆக உயர்ந்து, ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி  தக்கவைத்து கொள்ளலாம். இப்படி நிறைய திருப்பங்களும் முடிச்சுகளும் கொண்ட விறுவிறு காட்சிகளாக தொலைக்காட்சியில் ‘பிரேக்கிங் நியூஸ்’ விரும்புவர்களுக்கு பொழுதுபோக்காக அமையலாம்.

சூழ்நிலை 2:

ஒருவேளை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு அதிமுக அரசுக்கு சாதகமாக அமைந்தால், 18 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தை நாடினால் இவ்விஷயம் சட்டச்சிக்கலாக  நீடித்துக்கொண்டு இருக்கும். இருந்தபோதும் அதிமுக அரசுக்கு அது உடனடி நிம்மதியை தரும். அதிமுகவுக்கு தற்போது நிம்மதியாக மூச்சுவிடவும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை செய்யவும் போதுமான காலம் கிடைக்கும்.

18 பேரையும் தகுதி நீக்கம் செய்தது சரி என்று தீர்ப்பு வந்தால், தினகரனுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். 18 பேரின் ஆதரவாளர்களும் இவ்வழக்கில் எம்.எல்.ஏக்களும் வென்று சட்டசபைக்குச் செல்வார்கள் என நம்பிக்கையுடன் காத்துக்கொண்டுள்ளனர்.  தினகரனும் இந்த நம்பிக்கையை இந்த  எம்.எல்.ஏகளுக்கு அளித்து வந்தார். தொடர்ந்து வழக்காட தினகரன் அவர்களுக்கு உதவி புரிய தயாராக இருந்தாலும், சிலர் பொறுமையை இழந்து அதிமுக பக்கம் சாயக்கூடும். இது அமுமுகவை மேலும் பலவீனமாக்கலாம்.

இருந்தாலும் கூட, அமுமுக, மாவட்ட அளவில் கூட்டங்களை நடத்தி தொண்டர்களையும் கட்சி பிரமுகர்களையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையை பலப்படுத்தி வருகிறது. தினகரன் நடத்தி வரும் பேரணிகளால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் அமுமுக மீது நம்பிக்கை வளர்ந்துள்ளது.

பல தந்திரங்கள் மூலம் ஆட்சியை அதிமுக தக்கவைத்துக்கொண்டாலும், கட்சியின் எல்லா மட்டத்திலும் ஏற்பட்ட பிளவு, தினகரன் காட்டும் தொண்டர் பலம், ஆகியவை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என்று அதிமுக மூத்த தலைவர்கள் உணராமல் இல்லை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival