Read in : English
எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது அவருடைய ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவருடைய இசைக்கருவியில் வரும் ஒலியைக் கேட்டு பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இது அவரது இசையால் நான் கவரப்படும் முன்பு நிகழ்ந்தவை. குழந்தையாக இருககும்போது, அந்த ஒலி நாடாக்களின் முகப்பு அட்டையில் புன்சிரிப்புடன்கூடிய அவரது முகத்தைப் பார்த்து மேடையில் அவரது முகம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அட்டையில் இருந்த புகைப்படத்தைவிட, மேடையில் மிகுந்த தேஜஸுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்ததைப் பார்த்து வியந்திருக்கிறேன். பெருமைக்குரிய குரு மாண்டலின் ஸ்ரீனிவாஸ் தான் அந்த அழகிய ஆத்மா!
எனக்கு எட்டு வயது இருக்கும்போது அவரை நான் நேரில் சந்தித்தேன். 2008இல் எனது முதல் இசை ஆல்பத்தை (கர்னாடிக் மியூசிக் ஆன் கீ போர்டு முதல் தொகுப்பு) வெளியிடும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமாறு கேட்டு அவரை அணுகினோம். அவர் முன்னிலையில் நான் கீபோர்டை இசைத்துக் காண்பித்தேன். அவர் என்னை பாராட்டி, நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார். அவரது சீட்சையின் கீழ் இசை கற்றுக்கொண்டேன். அவரிடம் கீர்த்தனைகளை கற்றுக்கொண்டதை என் வாழ்நாள் பொக்கிஷமாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன். அவருடைய அனுபவததையும் திறமைகளையும் என்னைப் போன்ற ஒன்பது வயது நிரம்பிய சிறுவர்களிடம் கூட பகிர்ந்துகொள்வார். அது எனக்கு கதை சொல்லிக் கேட்பதைப் போன்று அத்தனை மகிழ்ச்சியான தருணம்.
அவர் இசையில் முழு நிறைவை விரும்பியவர்; அவர் இசையின் நுட்பங்களை நிகழ்த்திக் காட்டி அதனை கீபோர்டில் நான் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார். அவருடன் சேர்ந்து இருப்பதும், அவரைக் கேட்பதும் பார்ப்பதும் உரையாடுவதும் எனக்கு சொல்லமுடியாத உணர்வைக் கொடுத்தது. அவரிடமிருந்து கேட்ட அந்த அற்புத இசையின் ஒலியை அவரால் மட்டுமே உருவாக்க முடியும்.
தொடக்கத்தில் நான் யமஹா கீ போர்டை பயன்படுத்தி வந்தபோது ‘பெடல்ஸ்டீல் கிடார்’ என்றாழைக்கப்பட்ட ஒரு தனித்துவமான ஒலியை அது உருவாக்கும். அதன் பிறகு கோர்க் கீபோர்டை பயன்படுத்தத் தொடங்கியபோது அதில் ஜாஸ் கிடார் இசைப்பதை விரும்பினேன். ஸ்ரீனிவாஸிற்கு அந்த ஒலி மிகவும் பிடிக்கும். அதைக் கேட்க ரம்மியமாக இருப்பதாகக் கூறுவார்.
குரு ஸ்ரீனிவாஸின் இசை, இசையமைப்பாளர்களிடையேயும் இசையை நேசிப்பவர்களிடையேயும் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. பல முகவரி இல்லாத பாடல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். அவருடைய கச்சேரிகளில், “எந்த முத்தோ” “நகுமோமு” போன்ற பாடல்களை ரசிகர்கள் திரும்பத் திரும்ப கேட்டு ரசித்தனர். சாய் பஜனை நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு கச்சேரியும் எனக்கு பிடித்தமானது. அதுவும் எனக்கு பிடித்த “அடமோடி காலடா’, “எந்த முத்தோ’’, ‘’வெங்கடாச்சல நிலையம்’’, ‘’ஓ ரங்கசாயி’’ போன்ற பாடல்களை இசைக்கும்போது அந்த இசையில் மெய்மறந்திருக்கிறேன்.
அவர் கர்நடக இசையில் தனக்கென்று ஒரு தனித்துவமான பாணியை வைத்திருந்தார். அவர் தேர்தெடுக்கும் ராகங்கள், சங்கதிகளின் மேன்மை, ஸ்வரம் அனைத்துமே தனித்துவமானவை. மாண்டலின் இசைக்கருவியின் இசை அழகை அற்புதமாக வெளிக் கொண்டு வந்தவர் அவர். சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத கடினமான ராகங்களையும் ஸ்வரங்களையும் சாதாரண மனிதர்கல்கூட ரசிக்கும் வகையில் இசைத்துக் காட்டுவார்.
‘ஷக்தி’ இசைக்குழுவில் ஜான் மாக்லினோடு இணைது உலகளவில் இசையில் தாக்கத்தை ஏற்படுத்தினார். மாண்டலின் இசைக்கருவியை அனைத்து மக்களிடம் எடுத்துச் சென்று, இந்திய இசையை அனைவரும் ரசித்து பாராட்ட வைத்தார். உலகளவில் பல இசை மேதைகளோடு இணைந்து, தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர். இந்திய இசையையும் கலாசாரத்தையும் உலகளவில் எடுத்துச் சென்ற ஒப்பற்ற இசைத்தூதர்.
அவருடைய இசை எனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்தது. அவரிடமிருந்து அழகியல் என்பதற்கான அர்த்தத்தையும் பண்புகளையும் கற்றுக் கொண்டேன். மேடையில் ஒரு கலைஞன் எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சக கலைஞர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் மேடைகளில் குழுவாக இணைந்து நிகழ்த்திக் காட்டுவதையும் கற்றுக்கொண்டேன்.
2011 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி எங்கள் இருவருக்கும்‘பாரத் கலாச்சார்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதை மறக்க முடியாது. அவருக்கு ‘விஸ்வ கலா பாரதி விருது’ம் எனக்கு ‘யுவ கலா பாரதி விருது’ம் வழங்கப்பட்டது. அவரது கரங்களால் அவ்விருதைப் பெற்றது மிகப் பெரிய கௌரவம்!
Read in : English