விவசாய நிலங்களை கையகப்படுத்தலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், யாருக்கும் பாதிப்பின்றி இந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலையை மாற்றுச் சிந்தனையோடு இன்மதி.காம் நிருபருக்கு பேட்டியளிக்கிறார் மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாய்ரமணன்.
சென்னை – சேலம் இடையேயான பிரதான 8 வழிச்சாலை மிகவும் அவசியம் தான். திருப்பூர் ஜவுளி தொழிற்சாலை, சேலம் இரும்பு தொழிற்சாலை, விவசாய பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய புறவழிச்சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் விவசாயத்தை அழித்து, இயற்கை வளங்களை அழித்து இந்த புறவழிச்சாலை போடுவது என்பது தேவையற்றது. வல்லரசு நாடான இந்தியா சற்று தொழில்நுட்பத்தை நாடி, சிந்தித்து செயலாற்ற வேண்டும். உயரமான நெடுஞ்சாலை (elevated highway or expressway) என்று எந்த வளத்தையும் தொந்தரவு பண்ணாமல், முழுக்க முழுக்க மேம்பாலங்கள் மூலம், ஒரு இடத்தில் தொடங்கி, மறு இடத்தில் இறங்குவது மூலம், எந்த விவசாய நிலத்தையும் அழிக்காமல், காடு மலைகளை அழிக்காமல், யாருக்கும் நஷ்டமின்றி, போகவேண்டிய இலக்கை விரைவில் எந்த விபத்துக்கும் இடம் கொடுக்காமல் எளிதாக அடைய உதவும். இதன் மூலம், மழை காலங்களில் இருமடங்கு மழைநீரும் சேமிக்க முடியும். இதை அனுபவம்பெற்ற பொறியியல் வல்லுனர்களுடன் அரசு கலந்து ஆலோசித்து செயல்படுத்த வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல, இது நடைமுறையிலுள்ள திட்டம் தான்.

டாக்டர்.சாய்ரமணன்
வேஸ்ட் ஆட்டோபாஹன்
ஐரோப்பா கண்டத்தில், ஆஸ்திரிய நாட்டின் தலைநகரமான வியன்னாவில் இருந்து சாலஸ்பேர்க் என்ற நகரத்திற்கு செல்ல 1967ம் ஆண்டிலேயே 292 கி.மீ தொலைவு தூரம் கொண்ட இந்த மேம்பாலங்கள் மூலமான புறவழிச்சாலையை வடிவமைத்தார்கள். ஆல்ப்ஸ் மலைத்தொடர் எந்த பாதிப்பும் அடையாமல், அதன் நடுவே பாலம் அமைத்து, போக்குவரத்து எளிதாக செயல்பட்டுவருகிறது.
தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலை
இலங்கை தலைநகரமான கொழும்பிலிருந்து, தென்னக பகுதியான கல்லே பகுதிக்கு செல்ல 133 கி.மீ தொலைவிற்கு மேம்பாலம் ஒன்று அமைத்து, 3 மணி நேர பயண நேரத்தை 1 மணி நேரத்திற்கு குறைத்துள்ளனர். இதன் கட்டுமான வேலையை 2003ம் ஆண்டு தொடங்கி, 2011ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதை முழுக்க முழுக்க சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் நிதியுதவி வழங்கியது. இந்த திட்டத்திற்காக, மொராட்டுவா பல்கலைக்கழகம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தியது.
பெங்களூரு எலிவெட்டட் டோல்வே
பெங்களூரு நகரில், மடிவாளா பகுதியில் இருந்து தொழிற்சாலைகள் நிறைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை அடைய 9.9 கி.மீ தொலைவிலான மேம்பாலம் அமைத்து, 2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பி.வி.நரசிம்மராவ் எக்ஸ்பிரஸ்வே
ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேஹிடிபட்டினம் பகுதிக்கு செல்ல 11.6 கி.மீ தூர மேம்பாலம் 2009ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
இம்மாதிரியான மேம்பாலங்கள் மூலம், விவசாயமும் மேம்படும், நாடு வளர்ச்சியும் அடையும். பலகோடி செலவு செய்து ஒரு திட்டம் கொண்டுவரும் பொழுது, அதை அரசு சற்று வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும்.
கடவுள் எனும் முதலாளி ;
கண்டெடுத்த தொழிலாளி;
விவசாயி. என்று கண்ணதாசன் பாடியுள்ளார்.
அப்பேற்பட்ட விவசாயத்தை நாம் காப்பாற்ற வேண்டும். விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு செழிப்பாக இருக்கும். 50 ஆண்டுகளுக்கு முன்பு பிஎல் 480 என்று உணவிற்காக அங்கிலேயரிடத்தில் கையேந்தினோம். அதே நிலை மீண்டும் வந்தால் சரியாக இருக்காது. ஒரு வீட்டில், இரு குழந்தைகளையும் அவசியம் என்று கருதியல்லவா வளர்க்க வேண்டும். அதுபோல தான் விவசாயமும், தொழில்வளர்ச்சியும் இரண்டையும் ஒரே எண்ணத்துடன் தான் அணுகவேண்டும்.
பொதுவாக மக்கள் மனதில் அரசாங்கம் எது செய்தாலும் அது தவறு என்ற எண்ணம் இருக்கிறது. மக்கள், மக்களைப் பற்றி யோசிப்பார்கள். அரசு நிர்வாகத்தினர் நாட்டின் வளர்ச்சியைக் கருதி செயல்படுவார்கள். இவர்கள் இருவர் கூறுவதையும் புரிந்து, உண்மை என்னவென்று கூற இந்த துறையை சேர்ந்த பொறியியல் வல்லுநர்களோ, விஞ்ஞானிகளோ மக்களுடன் பேசி உள்ளதைப் புரியவைக்க வேண்டும். உடலில் என்ன பிரச்சனை வந்தாலும், மருத்துவருக்கு தெரியும் என்று நம்புவது போல், விஞ்ஞானிகள் கூறுவதை நம்பவேண்டும். செயற்கைக்கோள் ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் எந்த எந்த இடத்தில் விவசாய நிலம், தொழில் செய்வதற்கான நிலம் என்று அவர்கள் ஆய்வு செய்து கூறுவர். இதை முறையாக அரசாங்கம் விஞ்ஞானிகளை அணுகி, அவர்களிடம் ஆலோசித்து இந்த திட்டத்தை வகுக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், அதன் தொழிநுட்பம் மூலம், இந்த நெடுஞ்சாலை திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் இருக்கும் ஐயத்தை போக்கவேண்டும்.
இது முழுக்க முழுக்க எனது சிந்தனையே, இந்த மாறுபட்ட சிந்தனையை பத்திரிக்கைகள் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் இந்த விவசாய மக்களின் நிலத்தை பத்திரமாக மீட்டு, யாருக்கும் எவ்வித பாதிப்புமின்றி நினைத்த காரியத்தை செயல்படுத்தமுடியும் என்று கூறுகிறார் மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாய்ரமணன்.