Read in : English

முத்துவேல் கருணாநிதி என்னும் கலைஞரின் மறைவு அவரது குடும்பத்தையும் கட்சியையும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு முரண்களையும் உட்பூசல்களையும், கடந்தகால கசப்பான அனுபவங்களையும் தாண்டி, கருணாநிதியின் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில், அவர் மகள் செல்வி சமரச முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில், கருணாநிதிக்கு பிறகு தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று முன்பு அறிவித்த அழகிரி, தற்போது தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அழகிரிக்கு பிரதிநிதித்துவம் என்கின்ற வகையில் அவருடைய மகன் தயாநிதிக்கு கட்சியில் ஒரு பதவி வழங்கலாம் என்று பரிசீலிக்கப்படுகிறது.

கருணாநிதியுடன் அன்பழகன்

கலைஞர் 50 வருடங்களாக வகுத்து வந்த தலைமை பொறுப்பை மு.க.ஸ்டாலின்  இன்னும் சில வாரங்களில் ஏற்பது வெறும் சம்பிரதாயமான நடைமுறைதான். தடைகற்கள் நீங்கிவிட்டாலும், தலைவர் பதவியை ஏற்பதில் ஸ்டாலின் அவசரம் காட்ட விரும்பவில்லை.  கட்சியிலுள்ள சிலர் ஸ்டாலின் எவ்வளவு சீக்கிரம் இப்பொறுப்பை ஏற்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்க வேண்டும் என நினைக்கின்றனர்.   ஆகஸ்ட் 14ம் தேதி கட்சியின் செயற்குழு கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் மட்டும் நிறைவேற்றும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலைப் பற்றி அவசரம் காட்டவேண்டாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். பொதுச் செயலாளர் அன்பழகன் அதற்கு பின்னால் மாத இறுதியில் பொது குழு கூட்டத்திற்கான தேதியை அறிவிப்பார் என்று தெரிகிறது.

அழகிரி அரசியலில் தன் வளர்ச்சியைத் தானே சிக்கலானதாக்கிக்கொண்டார். கருணாநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது, ஸ்டாலின் மூன்று மாதங்களுக்குள் இறந்துவிடுவார் எனக் கூறியதால் அவரைக் கட்சியில் இருந்து கருணாநிதி நீக்கினார். அதேவேளையில் ஸ்டாலின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தும் வகையில் தான் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கட்சியின் செயல் தலைவர் பதவியை வழங்கி அலங்கரித்தார்.  இதற்கிடையில் ஸ்டாலின், அழகிரியின் கோட்டையாக கருதப்பட்ட தென் தமிழ்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தன வசம் கொண்டுவந்துள்ளார். ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று கட்சியை மீண்டும் பலமாக்கினார். தனது கடுமையான உழைப்பினால் அடிமட்ட கட்சி நிர்வாகத்தினர் மற்றும்  தொண்டர்களின் பேராதரவை பெற்றார்.

தயாநிதி அழகிரிக்கு சிறிய பதவி

அழகிரி இப்பொழுது சற்று பலவீனமாக காணப்படுகிறார். அவர் நிலையைப் பற்றி கட்சியின் தலைவர் ஒருவர் கூறுகையில், “‘அழகிரிக்கு தற்போது எந்த உயர் பதவியும் கொடுக்கப்படாமல், அரசியலில் இருந்து சற்று தள்ளி வைக்கப்பட்டிருப்பார். பின்னால் அவர் தன்னை மாற்றிக்கொள்கிறாரா அல்லது பழிவாங்க நினைப்பாரா, இதில் எது அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதை பொறுத்தே எல்லாம் அமையும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் செல்வி எடுத்திருக்கும் முயற்சியில் அழகிரியின் கோபத்தை குறைக்கும் வகையில் அவரது மகன் தயாநிதி அழகிரிக்கு ஏதாவது சிறிய பதவி கொடுக்கப்படலாம். இருந்தாலும் அழகிரியும் அவரது மகனும் ஸ்டாலினுக்கு முன்பு கொடுத்த இளைஞரணி செயலாளர் பதவியை தயாநிதிக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். 1984-ல் இளைஞரணியில் பொறுப்புக்கு வந்ததுதான் தன் முன்னேற்றத்துக்குக் காரணம்  என்பதை  ஸ்டாலின் மறந்துவிடவில்லை. கருணாநிதி இதுபற்றி ஒருமுறை குறிப்பிடுகையில் இப்பொறுப்புதான் அவரது உயர்வுக்கு ஒரு படிக்கல்லாக இருந்தது என குறிப்பிட்டார்.

ஸ்டாலின் தன் மகன் உதயநிதி இளைஞரணி செயலாளராக வரவேண்டும் என்றும் அதற்கான நகர்வுகளை ஏற்கனவே செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகரும் சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கும் உதயநிதி அவ்வப்போது கட்சியின் நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் காணப்படுகிறார். தனக்கு பின்னால் உதயநிதி தான் கட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் தலைவர் என்பதை நிலைநாட்ட, இளைஞர் அணி பொறுப்பிலிருந்து படிப்படியாக உதயநிதிக்கு பதவிகள் வழங்க முடிவெடுக்கப்பட்ட்தாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் இறுதி சடங்கில் முன்னணியில் உதயநிதி

தயாநிதி அழகிரிக்கு இளைஞர் அணி பொறுப்பை வழங்கினால் அது உதயநிதியை பாதிக்கும் என்பதினால் ஸ்டாலின் அணியினர் தயாநிதிக்கு வேறு ஏதாவது பதவியை வழங்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

திமுகவில் சமரசம் ஏற்படவேண்டும் என்று விரும்புபவர்கள், அழகிரியை ஒதுக்க வேண்டாம் என்று கூறி, 2001 சட்டசபை தேர்தலில் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட அழகிரி, தன் ஆதரவாளர்களில் சிலரை நிறுத்தி, இரண்டு சதவிகிதம் வாக்குகளை மட்டும் பெற்றாலும், திமுக வேட்பாளர்கள் பல தொகுதிகளில் தோற்பதற்கு ஒரு காரணமாக இருந்தார் என்று சுட்டிகாட்டிவருகிறார்கள்.

அறக்கட்டளை பதவி

2014ல் மக்களவை தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை, அதற்கு காரணம் ஸ்டாலின் தான் என்று கூறிய அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆர். கே நகர் தோல்விக்கு காரணம் ஸ்டாலின் தான் என்றும், அவர் தலைமையில் திமுக என்றைக்குமே வெற்றிபெற முடியாது என்று அவர் கொடுக்கின்ற அறிக்கைகள் கட்சியை பலவீனப்படுத்துகின்றது, எனவே அவரை எப்படியாவது சமாதானப்படுத்தவேண்டும் என்று கட்சியில் ஒரு தரப்பினர் நினைக்கின்றார்கள்.

எனவே, அழகிரிக்கு அல்லது மகன் தயாநிதிக்கு, முரசொலி அறக்கட்டளை போன்ற அறக்கட்டளைகளில் பதவிகள் கொடுக்கலாம் என்ற ஒரு யோசனையும் பரிசீலக்கப்படுகிறது. அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் சமரச முயற்சியைப் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த முயற்சியின் முதல் வெற்றி கலைஞரின் கடைசி நாட்களில் குடும்பத்தினர் காட்டிய ஒற்றுமை உணர்விலும்  செயல்பட்டுகளிலும் தெரிந்தது என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கினறனர்.

கருணாநிதியின் மற்றொரு மகன் மு.க.தமிழரசு அரசியலில் இருந்து விலகி தன்னுடைய தொழிலில் கவனத்தை செலுத்தி வருகிறார். அவருடைய மகன் அருள்நிதி நடிகராக உள்ளார். அவரும் அரசியலில் கொண்டு வரப்படலாம்.

கனிமொழி தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருந்தாலும் அவருடைய நிலை ஊசலாட்டம் தான். கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளின் மகளான அவர்,   தயாளு அம்மாள் குடும்பத்தின் ஆதரவை பெறுவது கடினம் தான். டெல்லி வட்டாரங்களை அவர் கருணாநிதி காலத்தில் கவனித்து வந்தார். ஆனால் இனி ஸ்டாலின், திருச்சி சிவா போன்றவர்களை அதிகம் பயன்படுத்துவார் என்று தெரிகிறது.

மாறன் சகோதர்கள் முக்கியத்துவம் இல்லை

முரசொலி மாறனின் மகன்கள், கலாநிதி மற்றும் தயாநிதி, சன் டிவி என்னும் புகழ்பெற்ற தொலைக்காட்சியின் மூலம் பதவியை அடைந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர்கள் நடத்தும்  தினகரன் நாளிதழில் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட நினைத்தபோது,  அதை வெளியிடவேண்டாம் என்றும், குடும்பத்தில் சிக்கலை உருவாக்கும் என்று எச்சரித்தார். அதையும் மீறி, அவர்கள் தினகரன் பத்திரிகையில் அதை வெளியிட்டார்கள்.  அதன் பிறகு, கருணாநிதி தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் சிறிது காலம் விலக்கிவைத்தார். டெல்லியிலும் தயாநிதிக்கு முக்கிய பங்களிப்பு இல்லை.  தற்போது மாறன் சகோதரர்கள் அமைதி காத்தாலும், அவர்கள் மீது சில வழக்குகள் உள்ளதாலும், அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம்  கொடுக்கப்படவில்லை.

அன்பழகன்: உடல்நிலையைக் காரணம் காட்டி ஓய்வா?

இதற்கிடையே கருணாநிதியின் நெருங்கிய நண்பரான க.அன்பழகன், ஸ்டாலின் போன்ற இளையவர் கட்சியில் தலைவரானால் அவருடன் இணைந்து செயல்படுவாரா என்பது கேள்விக்குறிதான். முலாயம் சிங், தன் மகன் அகிலேஷ் யாதவை கட்சியின்  தலைவராக்கியது போல ஸ்டாலினையும் தலைவராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்தனர். அன்பழகன் ஸ்டாலினோடு நல்ல உறவில் இருந்தாலும் அவரது ஜூனியர்களின் தலைமையின்கீழ் கட்சிப் பணியில் ஈடுபடமாட்டார் எனத் தெரிகிறது. இதே காரணத்தால் தான் கருணாநிதியும் தன் மகனின் விருப்பத்தை ஏற்று தலைவர் பதவியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிகிறது. அன்பழகன் உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி பதவியிலிருந்து விலகினால் அப்பதவிக்கு துரைமுருகன் கொண்டு வரப்படலாம்.

இந்த மாத இறுதிக்குள் கட்சியில் மாற்றங்கள் நிகழும். செப்டம்பர் மாதத்தில், கட்சி வருடா வருடம் கொண்டாடும் முப்பெரும் விழாவை – பெரியார், அண்ணா பிறந்தநாள், திமுக நிறுவன நாள் சிறப்பாக கொண்டாடி,  புதிய தலைமையின் அறிமுக விழாவாக எடுத்துக்கொள்ளப்படும்.

திமுக, ஸ்டாலின் மயம்

திமுக, ஸ்டாலின் மயமாக்கப்படவுள்ளது; உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர் என்பதை காட்ட படிப்படியாக காட்சிகள் அரங்கேறும். இது வாரிசு அரசியல் என்று விமர்சகரக்ள் விமர்சிக்கத் தொடங்கலாம். ஆனால் அடுத்தது யார் என்ற வரிசை தெளிவாகி வருகிறது .

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival