Read in : English
ஒரு நாள், நள்ளிரவில், கோவை பொது கூட்டத்தை முடித்து விட்டு கலைஞர் அவர்கள் சென்னையிலுள்ள முரசொலி அலுவலகத்தை தொடர்பு கொண்டார். “என்ன, கோவை கூட்டத்தின் செய்தியெல்லாம் வந்தாகிவிட்டதா? நாளை காலை முரசொலியில் தலைப்புச்செயதி இதுதானே” என்று செய்தி ஆசிரியரிடம் கேட்டார். செய்தி ஆசிரியரோ கையை பிசைந்து கொண்டு நெளிகிறார். ”எட்டு காலம் (column) செய்தியாக போடலாம், ஆனால் ஒரு மணி நேரமாக ஆசிரியர் குழு முயற்சி செய்தும், எட்டு காலம் தலைப்பு சரியாக அமையவில்லை” என்று தெரிவித்தார். ”அவ்வளவு தானே, இதோ நான் தருகிறேன் எட்டு காலம் தலைப்பு -‘கடல் காணாத கோவை கண்ட மக்கள் கடல்’ – இது சரியாக இருக்கிறதா போட்டு பாருங்கள் என்கிறார். செய்தி ஆசிரியர் அந்த தலைப்பை போட்டு பார்த்தார். சரியாக பொருந்தியது! என்ன ஆச்சரியம் ! ஒரு மணி நேரம் போராடியும் நம் குழுவிற்கு கிட்டவில்லை. ஒரு நொடியில் தலைப்பை கொடுத்துவிட்டாரே தலைவர் கலைஞர் என்று திகைத்து நின்றனர் முரசொலியின் மூத்த பத்திரிகையாளர்கள்!
பத்திரிகை துறைக்கு தேவையான அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார் கலைஞர். சிறிய வயதிலிருந்தே ஒரு இயக்கத்திற்கு பத்திரிகைகளின் துணை இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். எந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும், இறுதியில், பத்திரிகையாளர்களுக்கு எதை முக்கிய செய்தியாக கொடுக்க வேண்டும் என்ற பணியை தானே மேற்கொண்டு, முத்தாய்ப்பாக ஒரு போராட்டத்திற்கான அறிவிப்போ அல்லது நேரடி நடவடிக்கைக்கான அறிவிப்போ வரும். அது புதிய செய்தியாக இருக்கும்.
சட்டசபையில் கலைஞர் அவர்களின் சாதனைகள் ஏராளம். எதிர்கட்சியிலிருந்தாலும், தனது ஆற்றல்மிக்க வாதங்களினால் அரசிற்கு பல சங்கடங்களை உருவாக்கினார். ஒரு முறை, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.யார் சட்டசபையில் ஒரு அறிவிப்பை செய்தார். பணியில் ஈடுபடும் போது மரணம் அடையும் காவல்துறையினரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 ,000 அரசு வழங்கும் என்று அறிவித்தார், உடனே, கலைஞர் அவர்கள், அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்தால், அவர் குடும்பத்திற்கு ரூபாய் 10 ,000 வழங்கப்படும் என்று அரசாணை ஏற்கனவே உள்ளது. ஆகவே, இது ஏற்கனவே அறிவித்த தொகையாக ரூபாய் பத்தாயிரமா அல்லது கூடுதலாக ரூபாய் 10 ,000 வழங்கப்படுமா என்று கேட்டார். ஒரு நிமிடம் முதல்வர் எம்.ஜி.ஆர் யோசித்தார். பிறகு அவருக்கே உரித்தான சிரிப்பிற்கு இடையில், “மரணம் என்பது ஒரு முறைதான்” என்றார். அதாவது மொத்தம் 10 ,000 வழங்கப்படும், 20 ,000ரூபாய் அல்ல என்று அர்த்தம். ஆனால், சில நிமிடங்களுக்கு பின்னால், சபை கலைந்த பிறகு, அதிகாரிகள் புதிய அறிவிப்பின் படி, ரூபாய் 10 ,000 கூடுதலாக வழங்கப்படும் என்றும், மொத்தம் ரூபாய் 20 ,000 வழங்கப்படும் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்கள். இப்படி, அந்த நேரத்தில் தக்க கேள்விகளினால் முதல் அமைச்சர், அமைச்சர்களிடையியே குழப்பத்தை உண்டாக்கி அரசிற்கு தர்மசங்கடத்தை உருவாக்குவதில் வல்லுநராக கலைஞர் செயல்பட்டார்.
இன்னொரு சமயம், திருச்செந்தூர் கோயிலில் பணி புரிந்த அதிகாரி சுப்ரமணிய பிள்ளையின் மரணத்தை ஒட்டி, அது தற்கொலை அல்ல, கொலைதான் என்ற கூறிய, எம்.ஜி.ஆர் அரசால் நியமிக்கப்பட்ட பால் கமிஷனின் அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்த நேரத்தில், தி மு க தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்.
அதன் பிறகு, நீதிபதி பாலின் அறிக்கையை முறியடிக்கும் வகையில், அரசு அறிக்கை ஒன்றை தயாரித்து Action Taken Report , பால் (Paul) கமிஷனின் அறிக்கையுடன், நடவடிக்கை அறிக்கையையும் இணைத்து சட்டசபையில் வெளியிட்டது. அதன் மீது நடந்த விவாதத்தில், கலைஞர் பால் கமிஷன் அறிக்கை உண்மையான அறிக்கை, அது பால் (Milk). அரசின் நடவடிக்கை அறிக்கை உண்மையை மறைக்கும் முயற்சி. அது விஷம் (Poison). தயவுசெய்து, இந்த பாலையும், அந்த விஷத்தையும் கலக்காதீர்கள் என்று கூறினார் (Don’t mix the milk and the poison). இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகத்தின் சில முக்கியமான நிகழ்வுகள் பதிவுசெய்யப்படுமேயானால் கலைஞரின் இந்த உரையில் முத்தாய்ப்பாக, ஒரு கையில் பால் கமிஷனின் அறிக்கையை வைத்துக்கொண்டு, வலது கையில் அரசின் நடவடிக்கை அறிக்கையை பிடித்துக்கொண்டு, இந்த பாலையும் அந்த விஷத்தையும் ஒன்றாக கலக்கவேண்டாம் என்று வாதிட்டது, சிறப்பான இடத்தை நிச்சயம் வகிக்கும். கலைஞரின் சிறந்த உரைகளில் இது ஒன்றாக நிச்சயம் கருதப்படும்.
அவருக்கு அதிகம் ஆங்கிலம் தெரியாது என்று கூறப்பட்டாலும், ஆங்கிலத்தை பற்றிய புரிதல் இருந்தது என்பது பல நேரங்களில் அவர் வெளிப்படுத்தினார். புதுக்கோட்டை இடை தேர்தலுக்கான போட்டியில், அப்பொழுது எம்ஜிஆர் அதிமுகவின் தலைவர் திருநாவுக்கரசை எதிர்க்கட்சிகளின் பொது (Common) வேட்பாளராக நிறுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்தபோது, கலைஞர் அவர்கள் ”காமனும் இல்லை, ரதியும் இல்லை” என்று இலக்கிய ரீதியில் பொது வேட்பாளர் கருத்திற்கு தன் எதிர்ப்பை தெரிவித்தார்.
ஒரு வகையில் நானும் ஒரு நான்முடிச்சோழன் தான் என்று தன் ஹாஸ்ய உணர்வை வெளியிட்டார் கலைஞர். ஆங்கிலத்தில் நான் (Non) என்பதிற்கு இல்லை என்ற அர்த்தம். தன்னுடைய வழுக்கை தலையை சுட்டிக்காட்டி, நான் முடியில்லாத சோழன் என்று குறிப்பிட்டார்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தன் கட்சி திமுக நினைத்தாலும், நடைமுறையில் ஆங்கிலம் தேவை என்றும் அதற்க்கு காமராஜர் தந்த விளக்கத்தை மேற்கோள்காட்டினார். ரைசிங் சன் என்ற ஆங்கில பத்திரிகையை (ஆசிரியர் முரசொலி மாறன்) வெளியிட்ட பொது, திமுகவினர் அதிலும் மாறன் எப்படி ஆங்கில பத்திரிகையை நடத்தலாம் என்று குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக சட்டசபையில் காமராஜர் அண்ணா டமும் தன்னிடமும் கூறியதை நினைவுகூர்ந்தார்.
காமராஜர் அவர்கள் “ஆங்கிலத்தை வெரட்டி அடித்தா, அந்த இடத்தில் ஹிந்தி வந்து குந்திக்கும்னேன்” என்று தெரிவித்தார். எவ்வளவு பெரிய விஷயத்தை, எளிய முறையில் காமராஜர் கூறினார் என்று கலைஞர் குறிப்பிட்டு, ஹிந்தியை தடுக்க ஆங்கிலம் தேவை என்று திமுகவினருக்கும் நாட்டுக்கும் தெரிவித்தார்.
அரசியல் களத்தில், கட்சியின் பிரச்சாரதிற்காக அவர் உருவாக்கிய கோஷங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ அனைவரும் அறிந்தது. எம்.ஜி.யார் உடல் நலம் சரியில்லாத சூழ்நிலையில், 1984 ல், ‘நண்பர் நலம் பெற நல்வாழ்த்துகள், நாடு நலம்பெற கழகத்திற்கு வாக்குகள்’, ‘தாலிக்கு தங்கம் இல்லை, தாளிக்க தக்காளி இல்லை’ போன்ற வாசகங்களில் அரசியல் கூர்மையும் அழகான தமிழும் கவனிக்கவேண்டியவை.
தனது அரசின் மீது குற்றச்சாட்டுகள் வந்தாலும், அதை லாவகமாக சமாளிப்பார். சென்னைக்கு வந்தது கிருஷ்ணா நீர் அல்ல; மழை நீர் தான் என்று எதிர்க்கட்சிகள் சொல்ல, உடனே கலைஞர் “எல்லா நீரும் மழை நீர் தான்” என்று கூறினார்!
மதுவிலக்கை மீண்டும் அமுல்படுத்துவோம் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். தற்போது எடுத்த இந்த முடிவில் மாற்றம் வருமா என்று ஒரு நிருபர் கேட்டபோது, “இப்போதைக்கு இல்லை” (போதை என்ற சொல்லை வைத்து அவர் வெளிப்படுத்திய ஹாஸ்ய உணர்விற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு ).
அரசியல் எதிரிகள் கூட பாராட்டும் கடின உழைப்பும், திரைப்படங்களுக்காக அனல் தெறிக்கும் வசனங்கள், தமிழ் மொழிக்காக அவரின் பங்களிப்பு, பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவருடைய சேவை, இவை அனைத்தும் பார்க்கையில், கலைஞருக்கு நிகராக இன்னொருவரை பார்ப்பது கடினம் தான்.
Read in : English