Read in : English
காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபப்ட்டிருப்பதையடுத்து அவரது தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கையில் சூடம் ஏந்தி பிரார்த்தனை, கூட்டுப் பிரார்த்தனை என பல்வேறு வகையான பிரார்த்தனைகளில் திமுக நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். காலம் முழுக்க நாத்திகம் பேசி வந்த திமுக தலைவர் கருணாநிதி தன் இறுதிநாட்களில் போராடி வரும் சூழ்நிலையில் பகுத்தறிவுக்கு முரணான இவ்விஷயங்கள் அரங்கேறி வருகிறது. பகுத்தறிவுவாதி ஈவே ராமசாமி என்னும் பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை கடைபிடிக்கிறோம் என்று கூறும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள், இவ்வாறு ஈடுபடுவது ஆத்திக கொள்கையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
மறைந்த முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டர்கள் கோயிலில் பிரார்த்தனைகளிலும் பல்வேறு மூடநம்பிக்கை செயல்களில் ஈடுபட்ட போது திராவிட இயக்கத்தின் கொள்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அதுவும், எம்ஜிஆரின் நூறாவது படமான ‘ஒளிவிளக்கு’ திரைப்படத்தில், பி.சுசீலா பாடிய ‘ஆண்டவனே உன் பாதங்களை’ என்ற பாடல் அனைத்துக் கோயில்களில் ஒலிபரப்பப்பட்டது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்திலுள்ள கோயில்களில் தங்கள் வேண்டுதலுக்காக பிரார்த்தனைகள் நடத்தினர். சில அமைச்சர்கள் மொட்டை அடித்தனர்;ஒரு அமைச்சர் அங்கபிரதட்சணம் செய்தார்; ஒருவர் வேப்பிலையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினார்; ஒருவர் மண் சோறு சாப்பிட்டார்; பலர் பாலாபிஷேகம் செய்தார்கள். எம்ஜிஆர் தன்னளவில் ஒரு மத நம்பிக்கையாளார் என்றாலும் அவரது கட்சி கடவுள் மறுப்புக்கொள்கையை பின்பற்றும் திராவிட இயக்கத்திலிருந்து உருவான கட்சி ; திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து மறைமுகமாக செய்யப்பட்டுக்கொண்டிருந்த பிரார்த்தனைகள், சடங்குகள் பொதுவெளியில் அனைவருக்கும் தெரியும் விதமாக நடக்கத் தொடங்கியுள்ளது.
பகுத்தறிவுக் கொள்கையின் அடுத்த பெரும் சுவர், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வெகுவாக பாதிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா நலம் பெற அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கோயில்களில் பாலாபிஷேகம், மண்சோறு உள்ளிட்ட வேண்டுதலில் ஈடுபட்டனர். ஜெயலலிதா தான் கடவுளை நம்பிக்கை உடையவர் என்பதை எங்கும் மறைத்தது இல்லை. அவர், கோயில்களில் தினம் அன்னதானம் வழங்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்பட்டது.
தற்போது கடந்த சில நாட்களாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ள நிலையில் பகுத்தறிவாதம் கேள்விக்குள்ளாகி வருகிறது. திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுவெளியில் தங்கள் வேண்டுதல்களை செய்து வருகின்றனர். சிறப்பு வழிபாடுகள் கோயில்களில் செய்யப்பட்டு வருகிறது. திமுக நிர்வாகிகள் கோயில்களில் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திராவிட கழகத்தின் பொது செயலாளர் கி.வீரமணி தன் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார். அதில் ‘’திமுக தலைவர் கடவுள் மறுப்பாளார் என்பதால் தொண்டர்கள் இம்மாதிரியான பக்தி வழிபாடுகள் அவரை குணமாக்கும் என நம்பி ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்’’ என கூறிள்ளார்.
மேலும் இதுகுறித்து ‘விடுதலை’ இதழில் கூறியுள்ள கி.வீரமணி, ‘’கருணாநிதி வயோதிகத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ சிகிச்சையால் அவர் குணமடைந்து வருகிறார். இதை சாக்காக வைத்துக்கொண்டு மத நம்பிக்கையாளார்கள் தங்கள் சடங்குகளைத் திணிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். ’’தொலைக்காட்சிகளில் மருத்துவமனை முன்பு பூசணிக்காய் உடைப்பது போன்று காண்பிக்கப்படுகிறது. செய்தித்தாள்களில் திமுக மாவட்ட செயலாளர் டி. எம்.அன்பரசன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல் காண்பிக்கப்படுகிறது. இம்மாதிரியான ஆபத்து, தொற்றுநோய் போல பரவக் கூடியது. இந்த படங்களை வெளியிடக்கூடாது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சில மூடநம்பிக்கை நாடகங்களை செய்தது போல இப்போது திமுகவிலும் செய்கிறார்கள். அது கூடாது ’’ என்றும் கூறியுள்ளார் வீரமணி.
வீரமணியின் இந்த கருத்துக்கு மு.க.ஸ்டாலின் எதுவும் கருத்து கூறாத நிலையில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ’தொண்டர்கள் அவர்களது நம்பிக்கைக்கு உட்பட்டு வேண்டுதலை செய்கின்றனர். அவர்களது பிரார்த்தனையில் நாம் கருத்து சொல்லவோ அதைத் தடுக்கவோ கூடாது. நாட்டில் இதுபோன்று எந்த தலைவருக்கும் ஆதரவு இருந்தது இல்லை. மக்கள் இனம், மொழி கடந்து அவருக்காக பிரார்த்தனை செய்யும்போது அதை தடுப்பது தவறாக முடியும்’ என பதில் கூறியுள்ளார்.
1987-ல் சென்னை அண்ணாசாலையில் இருந்த கருணாநிதியின் சிலை தாக்கப்பட்ட போதும் திமுகவும் திகவும் இப்படி வார்த்தை போரில் ஈடுபட்டன. அதன்பிறகு பல மாதங்கள் கழித்தும் தாக்கப்பட்ட சிலையை சரி செய்ய திமுக முனையவில்லை. அப்போதும் வீரமணி கருணாநிதி சிலை சரி செய்யப்பாடமல் இருந்ததற்கு எதிர்ப்பு தெர்வித்தார். கருணாநிதி சிலையை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது பல மூடநம்பிக்கை ஊகங்களுக்கு வழி வகுக்கும் என்றார்(உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு சிலை நிறுஅக் கூடாது என்பது பொது நம்பிக்கை) மேலும் இந்த சிலையை நிறுவியதால் தான் கருணாநிதி ஆட்சிஉயில் அமரவில்லை என்ற தவறான கருத்தையும் அது உருவாக்கும் என்று கூறினார். இதை தகர்க்கவேனும், சிலையை சரியாக மீண்டும் நிறுவ வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, சிலையை மீண்டும் நிறுவ விரும்பவில்லை என்றார். அதன்பிறகு சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆனாலும் கருணாநிதி எந்த மூடநம்பிக்கையையும் பின்பற்றவில்லை என்பதை நிரூபிக்கவாவது சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து கூறினார்.
அதற்கு பதில் அளித்த கருணாநிதி ‘’மக்கள் அனைவருக்கும்நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று தெரியும். சிலையை வைத்துதான் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று காட்டமாகவே பதில் கூறினார். இந்த சொற்போர் பலநாட்களாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. பின்பு அது தானாகவே அமைதியாகிவிட்டது.
வீரமணி தற்போது திமுக பிரார்த்தனை குறித்து பேசியதற்கு அவருடைய ஆதரவாளர்களான திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதி ஒரு பகுத்தறிவுவாதி;சுயமரிவியாதை இயக்கத்தில் இருந்து உருவானவர். அவர் இந்த செயல்களை கண்டிப்பார் என கூறியுள்ளார்.
இருந்தபோதும், திமுக தொண்டர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் காவேரி மருத்துவமனை முன்பு செய்தே வருகின்றனர். திக தலைவர்களின் கருத்தை அவர்கள் கண்டுகொள்வதாக இல்லை. அதிமுகவினரைப் போல் திமுகவினரும் இப்போது பொதுவெளியில் பிரார்த்தனைகளை பகிரங்கமாக செய்ய ஆரம்பித்துள்ளதன் மூலம், பெரியார் மண்ணிலிருந்து அவரது பகுத்தறிவு கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
Read in : English