Read in : English

Share the Article

’தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்  7 ஆண்டுகளாக தொடர்ந்து காவிரியில் நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் குறுவை பயிர்சாகுபடி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும் காவிரி நீர் திறந்து விடப்படாத காரணத்தாலும் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை பயிரிட்ட இடங்களில் நெற்பயிர்கள் கருகுவதைக் கண்டார்கள் விவசாயிகள்.

இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக, இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும்  கபினி அணை அதன் முழு கொள்ளளவான 2284 அடியில், 2282.35 அடி கொள்ளளவை எட்டியுள்ளது.  ஹராங்கி அணை, கிருஷ்ணசாகர் அணை ஆகியவற்றில் 90%சதவீதம் நீர் நிரம்பியுள்ளது (மூலம்: டெக்கன் கிரானிகள் பத்திரிகை)   ஆகையால்  உபரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது.அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது  57.02 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு இணங்கி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிடுமா? சம்பா பயிர் விவசாயமாவது இடையூறின்றி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு  177.25 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும். ஆனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் சூழலிலும்  மேட்டூர் அணை 90 அடி கொள்ளளவை எட்டவில்லை. அதனால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதிநீரை திறந்துவிட இயலாது என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சட்டசபையில் ஜூன் 8ஆம் தேதி அறிவித்தார்.  இந்த அறிவிப்பால் டெல்டா விவசாயிகள் பெருத்த கவலையடைந்தனர்.

இந்நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்காவது ஆகஸ்டு மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து  தஞ்சை மாவட்ட  விவசாயி வைகறை கூறுகையில், “கர்நாடகாவில் உள்ள அனைத்து பெரியஅணைகளும் நிரம்பியுள்ளது. அந்த அணைகளின் கீழ் சிறு அணைகளைக் கட்ட கர்நாடக அரசு முயற்சித்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனாலும் 435 ஏரிகளை உருவாக்கி அதில் காவிரிநீரை தேக்கி வைத்துள்ளனர். அதனால் தான் காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து யாருமே விவாதிப்பது இல்லை. மேலும், தஞ்சை மட்டும் திருவாரூரில் கிட்டத்தட்ட 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிரடப்படும். இப்போது ஏழுஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாத காரணத்தால் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் மட்டுமே நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை பயிர்செய்யபப்டுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் முறையாக செயல்பட்டு உரிய நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அது தமிழக  அரசின் கையில் உள்ளது’’, என்றார் வேதனையுடன்.

‘’கர்நாடகாவில் அதிகமாகப்பெய்யும் மழையின் காரணமாக உபரிநீரை திறந்துவிட்டு காவிரியில் நீர் திறந்துவிட்டதாகக் கூறுகிறது கர்நாடக அரசு’’ என்கிறார்  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.  மேலும், அவர் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தால் கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பி சம்பா பயிருக்கு நீர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்குமுன்பு தமிழக அரசு காவிரி மேலான்மை ஆணையத்தில் வாதாடி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை மாதம் கொடுக்க வேண்டிய நீரைப் பெற்றால் குறுவைக்கே கூட தண்ணீரை திறக்கும் வாய்ப்புள்ளது. அது தமிழக அரசின் உறுதியில் தான் உள்ளது”, என்றார்.

காவிரி நீர் அவசியத்தின் மற்றொரு கோணத்தை இப்படி கூறுகிறார் நெல்

ஜெயராமன்,”காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின்  விளைச்சலுக்கு மட்டுமில்லாது

நெல் ஜெயராமன்

தமிழகத்தின் 11 மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் அதுதான் ஆதாரம்.  அதுமட்டுமில்லாது காவிரி நீர் ஓடும் மாவட்டங்களில் நிலத்தடிநீர் உயர்வதும் காவிரியை நம்பித்தான் உள்ளது. ஆகையால் நமக்கான நீர் பங்கீட்டை மேலாண்மை ஆணையத்திடம் முறையாகப் பெறுவது அவசியம்”, என்கிறார் அழுத்தமாக. நெல் ஜெயராமன் கூருகையில் குருவைக்கென தற்போது 90 முதல் 110 நாட்கள் பயிர் இருப்பதாகவும், ஜூலை 10 தேதிக்குள் கர்நாடகம் காவிரி நீர் அளித்தால் குருவை பயிரை காப்பாற்றி விடலாம் என்று கூரினார்.

“குருவைக்கென தற்போது 90 முதல் 110 நாட்கள் பயிர் இருப்பதாகவும், ஜூலை 10 தேதிக்குள் கர்நாடகம் காவிரி நீர் அளித்தால் குருவை பயிரை காப்பாற்றி விடலாம் என்று கூரினார்.” — நெல் ஜெயராமன்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மூத்த பொறியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீரப்பன் பேசும்போது, “கர்நாடகாவில் இப்போது மழை பெய்து வருவதால் ஒரு நாளைக்கு 2 டிஎம்சி வீதம் தண்ணீர் திறந்துவிட்டால் கூட 10 நாளைக்குள்  20 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் உயரும். அப்படி உயர்ந்தால் கூட குறுவைப்பயிருக்கு தண்ணீர் திறக்க இயலும். ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய நீரான 10 டிஎம்சி அளவு நீரை கர்நாடக கொடுத்துவிட்டது. ஜூலை மாதம் 34 டிஉஎம்சி, ஆகஸ்டு மாதம் 50 டிஎம்சி நீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் சம்பா பயிர் தப்பிக்கும். கர்நாடக அரசு விநாடிக்கு 25,000 கன அடி நீரை திறந்துவிட்டதாகக் கூறியபோது ஒகேனக்கல்லில் 1,300 கன அடி நீர் தான் வந்து சேர்ந்தது என்னும் போது மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த நீரின் அளவு குறைவாகத்தான் இருக்கும். தற்போது ஜூலை 2ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால் காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா பயிர் சிக்கலின்றி நடக்கும்”, என்றார்.

ஜூலை 2ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கும் காவிரி மேலான்மை ஆணையக் கூட்டத்தின்  முடிவைத்தான் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day