Read in : English
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் தமிழக எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. கவர்னருக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்ததுக்குப் பிறகு ராஜ்பவனுக்கும் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே அறிக்கை போர் வெடித்துள்ளது. கவர்னரை செயல்பட விடாமல் தடுத்தால் ஏழு ஆண்டுகள் சிறை என ராஜ்பவன் -கவர்னர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மு.க.ஸ்டாலின், ஏழு வருட சிறை தண்டனை மட்டுமல்ல மானில சுயாட்சிக்காக ஆயூள் தண்டனை அனுபவிக்கத் தயார் என பதில் அளித்துள்ளார்.
கவர்னர் மாளிகை ராஜ்பவனில் முன் எப்போதுமில்லாததை விட, புரோகித் சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியாளர்களுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் ஆய்வு மேற்கொள்வேன் என்கிற அவரது தந்திரம் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது பாஜக தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் விமர்சித்துள்ளன. பாஜகவின் ஆதரவில் இயங்கும் அதிமுக இதுகுறித்து விமர்சிக்கவில்லை. மாவட்ட அளவில் கவர்னர் மேற்கொள்ளும் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் திமுக கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் மேற்கொள்ளும் என்று அறிவித்திருந்தது. அதனையடுத்து திமுக தொண்டர்கள் பல மாவட்டங்களில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 24, 2018ஆம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கவர்னர் மாளிகையில் இருந்து வெளிவந்தது. அந்த அறிக்கையில், கவர்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளும் ஆய்வுகளை எதிர்க்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்னர் மாளிகை இபிகோ சட்டம் 124- இன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதி, அங்கு அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு முழு முதற்காரணம், கவர்னருக்கு திமுக கறுப்புக் கொடிகாட்டியதுதான்.
இபிகோ சட்டம், 124ஆம் பிரிவின் படி குடியரசு தலைவரையோ அல்லது மாநில ஆளுநர்களையோ அவர்களது நடவடிக்கைகளை செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ராஜ்பவன் சுட்டிக் காட்டியுள்ளது. இது பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் இந்த எச்சரிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது என விமர்சித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு மாறாக கவர்னர் நேரடி அரசியலில் ஈடுபடுகிறார். அதனை எதிர்த்து திமுக தீவிரமாகப் போராடும் என கூறியுள்ளார்.
கவர்னரின் நடவடிக்கைகள் மாநில சுயாட்சியின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதுதான் திமுகவின் முதன்மை குற்றச்சாட்டு. மாநில அரசை முதலமைச்சரும் அமைச்சர்களும் தான் நிர்வகிக்க வேண்டும், மாநிலத்தின் கவர்னர் அதன் தலைவர் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. திமுக கவர்னர் பதவியையே எதிர்த்து வந்திருக்கிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் அப்பதவி சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால் அதனை மதிக்கிறது. திமுகவின் நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான சி.என்.அண்ணாதுரை ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்று விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக பலமுறை கவர்னர் கையில் சிக்கித் தவித்துள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் உள்துறை பல சோதனைகளுக்குள்ளாகியுள்ளது. 1976மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1971-ல் ஆளுநராக இருந்த கே. கே ஷா ஆட்சியை கலைப்பதற்கு ஒரு நாள் முன்புதான் ஒரு மேடையில் திமுகவைபுகழ்ந்து பேசினார். ஆனால் அடுத்த நாளே ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்யும் அறிக்கையை மத்திய அரசு அவரிடம் கேட்டது. அதேபோல் 1991ல் அப்போதைய கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலவிடம் திமுக ஆட்சியை கலைக்க பரிந்துரை அறிக்கை கேட்கப்பட்டது. அனால் அதை அவர் கொடுக்க மறுத்தார் என்பது வரலாறு.
அதிமுகவுக்கும் கவர்னர் சென்னா ரெட்டியுடன் கொந்தளிப்பான உறவு இருந்தது. ஜெயலலிதா அவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பொதுவாக எம்.ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அரசுக்கு மாநில கவர்னர்கள் எப்போதும் ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். அதிமுக அரசு, எஸ்.எல். குரானாவுடன் நல்ல நட்புறவில் இருந்தது. நோய்வாய்ப்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர் 1984லில் ஆட்சி அமைக்க குரானா ஒத்துழைத்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரோசையா மற்றும் ராம் மோகன் ராவ் ஆகிய இருவரும் அதிமுகவுக்கு மிகுந்த ஆதரவளித்தார்கள்.
பாத்திமா பீவி, திமுகவின் கருத்துக்களை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாத நிலையிலும் 2001ல் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார். சில மாதங்களுக்குப் பிறகு அப்போதைய மத்திய அரசான பாஜக கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தத்தால் ஜெயலலிதாவை ராஜினாமா செய்ய வைத்தது. ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். பிறகு பாத்திமா பீவி ஊழல் குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்தார்.
புரோஹித்துக்கு முன்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தார் என திமுக குற்றம்சாட்டியது நினைவிருக்கலாம். மைனாரிட்டியாக இருந்த அதிமுகவை நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கக் கோராமல் பாதுகாத்தார் என்று திமுக அவரை விமர்சனம் செய்தது.
மத்தியில் ஆளும் பாஜக தன் சுயலாபத்துக்காகவும் அரசியலுக்காகவும் அதிமுகவை ஆட்சியில் வைத்துள்ளது என திமுக கடுமையாகவும் திரும்பத்திரும்பவும் விமர்சித்து வருகிறது. திமுக அதிமுகவை விட சில சீட்டுகளே பின்தங்கிய நிலையில் ஆட்சி அமைக்க இயலாதது திமுகவுக்கு வேதனையளிக்கும் விஷயம். அதிமுக கட்சிக்குள் நிலவும் உள்ளரசியல் அதன் ஆட்சியை நூழிலையில் தக்கவைத்துக்கொண்டுள்ளது. திமுகவுக்கு ஆட்சி மிக அருகில் இருக்கும் விஷயமாகவும் கைக்கெட்டா கனியாகவுமே உள்ளது. இதனால் வெறுப்படைந்த திமுக, அதிமுக கவர்னரின் ஆதரவுடனே செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசுக்கு தரகு வேலை பார்க்கும் ஆட்சியாக உள்ளது என குற்றம்சாட்டுகிறது. குற்றச்சாட்டுகளும் பதில் குற்றச்சாட்டுகளும் இருந்தாலும் மாநில அரசு கவர்னர் மாளிகைக்கும் எதிர்கட்சியான திமுகவுக்குமான மோதலுக்கு தயாராகவே உள்ளது.
Read in : English