Read in : English

இந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு சொல்லிவருவதைப்போல, கர்நாடகாவிற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் போக மிச்சமிருப்பது தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படும் என்பதாகத்தான் அந்த மாநிலத்தின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கோடைக் காலத்தில், தண்ணீர் தேவை அதிகமிருக்கும் குறுவைப் பயிர்களுக்கு, தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் போகும்போதும் இதுதான் நிலை. இயற்கையான நியதிகளின் அடிப்படையான கொள்கைகளுக்கும் எதிரானது இது.

வெள்ளப் பாசனம், ஓரினப் பயிர் சாகுபடி, அளவுக்கு மீறிய நெற்பயிர் விதைப்பு போன்றவை தமிழகத்தின் பிரத்யேக பிரச்சனைகளாக இருந்தாலும், கர்நாடக அரசின் பிடிவாதமும், தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற ஆணைகளை மதிக்காததன்மையும், தமிழர்களை காயப்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் கட்டமைத்த கூட்டாட்சித் தத்துவத்தின் மீது தமிழர்கள் நம்பிக்கை இழக்கச்செய்யும் அளவிற்கு தள்ளியிருக்கிறது.

“தமிழ் தேசியம்: இந்தியா வருந்தவேண்டியது எதற்காக?” என பத்ரி சேஷாத்ரி குறிப்பிடுவதைப் போல, மத்திய அரசு, தன்னிடமிருக்கும் மோசமான பிரச்சனையைக் குறித்து உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு விதத்தில், காவிரி ஆணையத்தின் தண்ணீர் திறப்பு வழிமுறைகளுக்கு பணியாமல் கர்நாடக அரசு மறுக்கும்பொழுது, இறுதி முடிவை எடுக்கும் உரிமையைத் தன் கையில் எடுக்க முயற்சிப்பதற்காக மத்திய அரசைப் பாராட்டியாக வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால், தீர்ப்பாயத்தின் தீர்ப்பே தன்னளவில் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் திறன் வாய்ந்ததுதான். ஆனால், உச்சநீதிமன்றம் அந்த பொறுப்பை தட்டி கழித்திருக்கிறது. ஆணையத்தின் தீர்ப்பை ஒரு பக்கம் உறுதியும்  செய்து, மறுபக்கம் பொறுத்தமான ”ஸ்கீமை” உருவாக்குமாறும் ஆணையிட்டதோடு மட்டுமில்லாமல், வாய்மொழியாக அது ஆணையமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று வழிகாட்டிய வகையில் நீதிமன்றம் தனது சட்டப்படியான கடமையிலிருந்து தவறியிருக்கிறது. நிபுணர்களால் தலைமை வகிக்கப்பட்டு, வழிநடத்தப்பட்ட மேலாண்மை வாரியம், அணையிலிருந்து நீர் திறக்கப்படவேண்டிய விஷயத்திற்கு நேரடியான அதிகாரம் பெற்றவர்களாக இருந்திருக்கவேண்டும்.

இறுதி அதிகாரம் படைத்தவர் யார் என்பதோ, கர்நாடகம் வழிமுறைகளை மறுத்து முடிவுக்கு பணிய மறுத்தால் இறுதி முடிவெடுப்பவர் யார் என்பதோ தெளிவாக தெரியவில்லை. தற்போதைய நிலையின்படி, இந்த ஆணையம் சில வழிமுறைகளைத் தர முடியுமே தவிர, ஆணைகளையல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி போன்ற ஒரு தனிநபர் தலைமை தாங்கும் அமைப்புக்கான கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அந்த நிராகரிப்பின் வழியாக, மேற்பார்வை அமைப்பின் திறனை உச்சநீதிமன்றம் குறைத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

இப்போது, இறுதி முடிவு தன்னிடமே இருப்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். அத்தகைய அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டால், ஆட்சி அமைக்கப்போகும் கட்சி, அதன் விளைவுகள் ஆகியவை மத்திய அரசின் முடிவுகளில் பிரதிபலிப்பதாய் அமையும். கர்நாடக தேர்தலை முன்னிட்டு ஸ்கீமை வரையறுப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தியதையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

எதிர்காலத்திலும், ஆணையத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு மறுக்கும் என்ற கணிப்புகள் நியாயமானதுதான். இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பார்த்து வந்திருக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் இருக்கும் சட்டரீதியான வழிகள், மேலும் மேலும் விவாதங்களுக்கும் தாமதங்களுக்கும் இட்டுச்செல்லப் போகிறது. இருந்தாலும், ”பொருத்தமான” ஒரு ஸ்கீம் என்பது எவ்வளவு பிழைகளுடன் இருந்தாலும், சட்டரீதியான அணுகுமுறையின் காரணமாக, தமிழ்நாடு அதன்மூலம் ஓரளவான நன்மையைப் பெறக் கூடும். இடைக்கால தீர்ப்பின்படி இயங்கி வந்த காவிரி ஆணையத்தால், அவ்வப்போது தண்ணீர் பெற்று தமிழக விவசாயிகள் பலனடைந்தார்கள்.

சட்டரீதியான வழிகளின் மூலமாக தீர்வு காண்பதையே தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, தனது அணுகுமுறையாக கையாண்டிருக்கிறார். விளைவுகளை ஏற்படுத்தாத சட்டரீதியான வழிகளின் மூலமாகவே முயற்சித்த அவரது அணுகுமுறையை, அரசியல் நிர்ப்பந்தங்களால் திமுகவும் ஆதரித்தது. கடந்த காலத்தில், எந்த நிலையிலும் இரு மாநில அரசியல் தலைமைகளும், பேச்சுவார்த்தைக்கான வழியைத் திறந்தே வைத்திருந்தனர்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முன்பாக, இரு மாநிலங்களுக்கும் இடையில் சொற்கள் ஜாலங்களாக பயன்படுத்தப்பட்டாலும், அவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருந்திருக்கிறது. மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரப்பூர்வமாக இல்லாமல் நடந்த தொலைபேசி உரையாடல்கள், சமாதானங்கள் ஆகியவற்றின் மூலமாகவே, கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு. அத்தகைய பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு மாநில நலன் காக்கும், அந்த பழைய கலாச்சாரமும், நுட்பமும் மீட்டெடுக்கப்பட வேண்டும். பிரச்சனையை இரு மாநிலங்களாலும் தீர்க்க முடியாத இந்த நிலையில், தொடர்ந்து சண்டையுடனும் விவாதங்களுடனும், தெற்குக் கூட்டமைப்புக்கான மு.க ஸ்டாலினின் முன்மொழிதல், பிரச்சனையின் தீவிரத்தன்மை புரியாமல் பேசுவதாகிவிடும்.

விவசாயிகளாலும், நிபுணர்களாலும் தொடங்கப்பட்ட கூட்டு முயற்சி சில வருடங்களுக்கு முன்பு சிதைக்கப்பட்டது. அப்படியான சூழல் தற்போது இல்லையென்றாலும் கூட, நாகரிக குடிமைச் சமூகம் அத்தகைய முயற்சியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். அனைத்திற்கும் மேலாக, இருபுறத்திலும் இருந்தும் எடுக்கப்படும் நலன் விரும்பும் முயற்சிதான், மக்களுக்கான நன்மையைத் தீர்மானிப்பதாக அமையும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival