Read in : English
ஜெயசீலி, திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டாமொழிக்கு அருகில் இருக்கும் சுவிசேஷபுரத்தில் வசிப்பவர். நான்கு வருடங்களுக்கு முன்பு, இயற்கை உரமான பஞ்சகவ்யத்தை தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அதனைக் கற்றுக் கொண்டவர். 40 பேர் பெற்ற பயிற்சியில், இன்னும் அப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிலரில் அவரும் ஒருவர்.
தவறாமல் தேவாலயத்திற்கு செல்லும் வழக்கமுடையவர் ஜெயசீலி. இயற்கை விவசாயத்தில் விவசாயிகளை ஆர்வத்துடன் ஈடுபடுத்தும் திட்டத்தை முன்னெடுத்த, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜே.ஹெச்.எஸ் பொன்னையாவைப் பற்றிய நல் எண்ணங்களைக் கொண்டுள்ளார். மேற்கு நாடுகளின் கிறிஸ்தவ அறக்கட்டளைகளின் நிதி உதவியுடன், இந்த திட்டம் 5000 விவசாயிகளை, இத்தொழில்நுட்பத்திலும், நடைமுறைகளிலும் பயிற்சி பெற வைத்திருக்கிறது. கிராமத்துக் குழந்தைகளைப் படிக்க வைப்பதிலும் அக்கறையுடன் செயலாற்றியவர் பொன்னையா. ’முன்னெல்லாம் படிப்பு, சில பேருக்குத்தான் உரிமையாக இருந்தது’ என்கிறார் ஜெயசீலி.
30 கிலோமீட்டர் கடந்து, கயமொழியில் சக்திகுமார் சிறு நிலம் ஒன்றை உழுதுகொண்டிருக்கிறார். 2006-ஆம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர்,அதுதான் வெற்றியின் வழியெனவும் கருதுகிறார். முருங்கைப் பயிர் விதைத்து 8 லட்ச ரூபாய் வரை நஷ்டப்பட்டிருக்கிறார் சக்திகுமார். காரணமென்ன? அதிலுள்ள நுட்பத்தை அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
முதலில் கிடைத்த தோல்வியால் அவர் துவண்டுவிடவில்லை. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைத்தான் தனது துணிச்சலுக்கு தூணாகக் குறிப்பிடுகிறார் சக்திகுமார். ”நீங்கள் ஷாகாக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. ஆனால், அவை எங்களுக்கு பண்பை வளர்க்கும் களம். அவர்கள்தான் என்னை பண்படுத்தினார்கள்” என்கிறார். இயற்கை விவசாயம் பாரம்பரியமானது, உள்நாட்டு அறிவுடனும், வளங்களுடனும் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் அவருக்கு உற்சாகமூட்டியது என்று குறிப்பிடுகிறார்.
இயற்கை விவசாயத்தைக் குறித்துப் பேசுபவர்களுக்கு அது ஒரு சுலபமான விஷயமாக இருக்கலாம். ”கொஞ்சம் யூரியாவையும், கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளையும் தெளித்து விடுவதுதான் விவசாயிகளுக்கு சுலபமான வேலை” என்கிறார் ஜெயசீலி. ஆனால், இயற்கை விவசாயத்தைக் கடைபிடிப்பவர்கள் அனைவரும் அதன் மேலுள்ள விருப்பத்தினால் அதைத் தொடர்கிறார்கள் – இது சில நேரங்களில் சமய நம்பிக்கை சார்ந்ததாகவும் இருக்கிறது. சுசிசேஷபுரம் திட்டமும், சக்திகுமாரும் அதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.
நடைமுறைச் சிரமம்:
2007 முதல் 2014 வரை, சுவிசேஷபுரமும், பக்கத்தில் வளரும் ஒரு சமூகமும் இயற்கை விவசாயத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தன. காய்கறி தோட்டங்கள், பழத்தோட்டங்கள், நிலங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நான்கு ப்ளாக்குகளைச் சேர்ந்த 40 கிராமங்கள் இதில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார் திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மில்டன். ”இன்னும் பலரும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தாலும், திட்டம் முடிந்ததும், ஃபாலோ அப் என்பது சிரமமாக உருவெடுத்திருக்கிறது” என்று கூறுகிறார் அவர்.
தான் தயாரிக்கும் உரங்களில் கொஞ்சம் தயாரிப்பை, தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் பயன்படுத்துகிறார் ஜெயசீலி. இயற்கை உரத்தை விரும்பும் மற்ற சிலர், அதை வாங்கிக் கொள்கிறார்கள்.”சந்தை விலை அறுபது ரூபாயாக இருந்தாலும், பஞ்சகவ்யத்தை நான் 50 ரூபாய்க்குத்தான் விற்கிறேன்” என்று கூறினார் ஜெயசீலி. “பஞ்சகவ்யம் செய்வது சுலபமல்ல. உழைப்பு அதிகம். நாற்றமும் வரும்” என்கிறார் அவர்.
ஜெயசீலி ஒரு கால்நடை வியாபாரி. அவரிடம் இரண்டு அல்லது மூன்று கால்நடைகள் எப்பொழுதும் இருக்கும். மாட்டுச் சாணம், பால், நெய் என எல்லாமும் அவரிடம் கிடைக்கும். அழுகிய பழங்கள் பஞ்சகவ்யம் செய்வதற்கான முக்கியத் தேவை. ஜெயசீலி சப்போட்டா மரம் வளர்க்கிறார். கிராமத்தில் பணம் பழங்களும் அவருக்குக் கிடைக்கும்.
’இயற்கை விவசாயத்தில் மீதான குறைந்துவரும் விருப்பத்திற்கு, அழிந்துவரும் இயல்பான இயற்கைச் சூழல் தான் காரணம். பொன்னையா ஒன்றரை வருடத்திற்கு முன்பே காலமாகிவிட்டார்’என்று கூறினார் அவர். ”பசுக்களும், காளைகளும் இல்லாதவர்களுக்கு இயற்கை உரம் தயாரிப்பது கடினம். மாட்டுச் சாணத்திற்காக தேடி அலைய வேண்டிய சூழல் வரும்”என்கிறார் ஜெயசீலியின் கணவர்.
இதுமல்லாமல், சாதாரணமாக விவசாயமே இன்றைக்கு, தண்ணீர் இல்லாததால் கடினமான நிலையில் இருக்கிறது என்று கவலைப்படுகிறார் அவர். பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஜெயசீலியின் மகன் ஜெரோம், விவசாயம் செய்யத் தனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
ஆனால், ஜெயசீலி நம்பிக்கை இழக்கவில்லை. தனது பஞ்சகவ்ய வியாபாரம் பலன் தரும் என அவர் நம்புகிறார். ”என் நிலத்தில் விளையும் நெல்லுக்கு எடை அதிகம். எனது தேங்காய்கள் எடை அதிகம்” என்கிறார் அவர்.
”நான் உரம் விநியோகிக்கும் தோட்டத்தில் பூக்கும் ரோஜாக்கள் மற்றவற்றை விடவும் அழகாக இருக்கிறது”
”நான் உரம் விநியோகிக்கும் தோட்டத்தில் பூக்கும் ரோஜாக்கள் மற்றவற்றை விடவும் அழகாக இருக்கிறது” என்கிறார் அவர்.
நாகர்கோவிலில், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு இயற்கை விவசாயத்தில் வரும் உணவைச் சாப்பிடச் சொல்லி வலியுறுத்தும் மருத்துவர் ஒருவர் ஜெயசீலியின் வாடிக்கையாளர் என்கிறார் அவர். முன்பை விட அதிகமாக இயற்கை விளைச்சல் பொருட்கள் வாங்கப்படுகிறதா என்பதில் உறுதியற்றவராக இருக்கிறார் ஜெயசீலி. ”நல்ல விஷயங்களை சமூகம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளாது” என்கிறார் ஜெயசீலியின் கணவர்.
தடைகளையும் தாண்டி…
’இயற்கை விவசாயம் செய்யாமல் இருப்பதற்கு மக்கள் சொல்லும் காரணங்களெல்லாம் வெறும் சாக்குகள்தான்’என்கிறார் சக்திகுமார். ஒரு பெரிய நிலத்திற்கான உரத்திற்கு ஒரு மாடு போதுமானதாக இருக்கும் என்கிறார் அவர்.
அவர் ஒத்திகைக்கு எடுத்திருக்கும் 4.5 ஏக்கர் பப்பாளி தோட்டத்தில், நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் சக்திகுமார். அப்போது பூச்சித் தொந்தரவு இருந்திருக்கிறது. அவர் பயன்படுத்திய பஞ்சகவ்யமும் பலனளிக்காமல் போயிருக்கிறது. வேப்பங் குழம்பும், மீன் அமினோ ஆசிடும் கலந்த கலவை, பூச்சிக்கொல்லியாக சிறந்த முறையில் பயன்படுவதை அறிந்துகொண்டிருக்கிறார்.TNAU தயாரிக்கும் பேராசிட்டாய்ட்ஸைப் (பயிர்களுக்கு சேதம் விளைவிக்காமல் புழுபூச்சிகளைச் சாப்பிடும் பூச்சிகள்) பற்றிப் பேசுகிறார்.
மீன் அமினோ பெஸ்டிசைட் பாட்டிலைத் திறந்து காட்டினார், சக்திகுமார். இனிய, பழ வாசனையைத் தந்துகொண்டிருந்தது அது. தன்னுடைய 4.5 ஏக்கர் பப்பாளித் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, பெரிய அளவிலான பப்பாளிகளைக் காட்டுகிறார். ”இன்னும் கொஞ்ச நாட்களிலேயே இதையெல்லாம் அறுவடை பண்ணிடலாம்” என்கிறார் அவர்.
ஜீரோ பட்ஜெட் விவசாய முன்னோடியான சுபாஷ் பலேகர்தான், சக்திகுமாருக்கு ஆசான். நிலத்திற்கு வெளியில் கிடைக்கும் எதையும், தன்னுடைய பப்பாளித் தோட்டத்திற்காக சக்திகுமார் பயன்படுத்துவதில்லை. ”மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன். என்னுடைய சேமிப்பிலேர்ந்து இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். சென்னையிலேயும், வெளிநாட்டிலயும் என்னுடைய பப்பாளிகளுக்கு மவுசு அதிகம்” என்கிறார் அவர்.
Read in : English