Read in : English
இளைஞர்கள் அர்ஜூனும் ரிஷியும் மின்னணுப் படைப்பாளிகள். வட சென்னை என்னும் ஒதுக்கிவைக்கப்பட்ட பிரதேசத்தில் அமைப்பியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த இரண்டு இளைஞர்கள் ஆளுக்கொன்றாய் ஸ்மார்ட் ஃபோன்கள் வைத்திருந்தார்கள் என்றாலும், அவை வெறும் அடிப்படை அம்சங்கள் கொண்டவைதான். தங்களைக் கட்டுப்படுத்தும் எல்லைகளைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆயினும் என்ன? அவர்கள் சமூகத்தின் பல்லடுக்குச் சாதிக்கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்க விரும்பினார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு, தங்களின் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்தி ‘தெருக்கூட்டம்’ என்னும் யூடியூப் சானல் ஒன்றை அவர்கள் தொடங்கினார்கள். அதன்மூலம் அந்த இளைஞர்கள் சாதீயத்திற்கெதிரான தங்கள் அரசியலைப் பேசினார்கள். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சாதீய அடக்குமுறைகள், சுரண்டல்கள், வேதனைகளின் பின்னணியில், அவர்களின் காணொளிக் காட்சிகள் வெகுசீக்கிரமாகவே 26,000 பார்வையாளர்களை ஈர்த்தன.
யுவன் ஏவ்ஸ் என்னும் இயற்கைச் செயற்பாட்டாளரின் நீண்டகாலத் தொலைநோக்கு, பல்வேறு இயற்கைக் கல்வி வளங்களை, பாடத்திட்டங்களை, ஊடாடு தளங்களை உருவாக்கி, எல்லா வயதினர்களோடும், அனைத்துச் சமூகப்பின்னணிகள் கொண்டவர்களோடும், குழந்தைகளோடும் இணைந்து பணிபுரிவதுதான். அதற்காக இயற்கைக் கல்வி மற்றும் ஆய்வுக்கான பல்லுயிர் அறக்கட்டளை என்னும் அமைப்பை அவர் உருவாக்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் என்னும் சரித்திரப்புகழ் பெற்ற இஸ்லாமிய நகரத்தின் அழியாத பாரம்பரியத்தை நிரல்படுத்தி எழுதும் சுமையா என்னும் பெண் அந்தக் கடலோர நகரத்தின் பன்முகத்தன்மையை உணவு, கலாச்சாரம் வழியாக வெளிப்படுத்தி ஒரு பிளாக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்.
அரசியலுக்கான இளைஞர்கள் (யங் பீப்பிள் ஃபார் பாலிடிக்ஸ் – ஒய்பிபி) என்பது சுதந்திரச் சிந்தனை கொண்ட பன்முக இளைஞர்கள் இயங்குகின்ற ஓர் அமைப்பு. சமீபத்தில் அந்த அமைப்பு ஏழு இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு சாம்பியன் விருதுகள் வழங்கியிருக்கிறது.
சுமையா (கலாச்சார ஒத்திசைவு), யுவன் ஏவ்ஸ் (இயற்கையியல் செயற்பாட்டாளர்), அர்ஜுன் மற்றும் ரிஷி (சாதீயத்திற்கெதிரான அரசியல்), அழகு ஜெகன் (பாலின நீதி), திலகவதி (பெண்ணுரிமை) மற்றும் ஷாஜன் கவிதா (ஓவியர்-செயற்பாட்டாளர்) ஆகியோர் விருது பெற்றவர்கள்
இளைஞர்களை வெளிக்கொணர்ந்து, அவர்களை ஆற்றுப்படுத்தி, அரசியலில் வெறும் பார்வையாளர்களாக அல்லாமல் ஜனநாயகத்தின் நிஜமான பிரதிநிதிகளாய், போராளிகளாய் அவர்களைக் கட்டமைப்பது, வளர்த்தெடுப்பது அந்த அமைப்பின் இலட்சியம். அது 2019-ல் தொடங்கப்பட்டது. அன்றுமுதல் இந்திய இளைஞர்களை ஜனநாயகச் சிந்தனையிலும் செயற்முறைகளிலும் பயிற்றுவித்து அவர்களை அரசியல் களத்தில் இறக்கி செயல்பட வைத்திருக்கிறது இந்த இயக்கம்.
கலாச்சார, சமூக மற்றும் அரசியல் நீதியைப் புதுமையான வழிகளில் தொடர்ந்து பின்பற்றும் தலைவர்களாக பல்வேறு இளைஞர்கள் மேலெழுந்து வரவேண்டும் என்பதற்காக அவர்களை இனங்கண்டு ஆதரிப்பதுதான் இந்த ஒய்பிபி-யின் பெரும்பாலான பணி என்று அமைப்பாளர் ராதிகா கணேஷ் கூறுகிறார்.
2022-க்கான ஒய்பிபி விருதுகள் பெற்ற ஏழு இளைஞர்கள் பின்வருமாறு: சுமையா (கலாச்சார ஒத்திசைவு), யுவன் ஏவ்ஸ் (இயற்கையியல் செயற்பாட்டாளர்), அர்ஜுன் மற்றும் ரிஷி (சாதீயத்திற்கெதிரான அரசியல்), அழகு ஜெகன் (பாலின நீதி), திலகவதி (பெண்ணுரிமை) மற்றும் ஷாஜன் கவிதா (ஓவியர்-செயற்பாட்டாளர்).
அந்த விருதினால் தனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றும் அதனால் தான் சந்தோசமாக இருப்பதாகவும் யுவன் கூறுகிறார். ”இந்த மாதிரியான பணிகள் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படுகிறது என்பதுதான் என் சந்தோசத்திற்கு முக்கிய காரணம். விருது வழங்கப்பட்ட பல்வேறு பிரிவுகளைப் பார்த்தாலே தெரியும். இந்த மாதிரியான விருதுகளை வடிவமைப்பதற்கு முற்போக்கு மனமும், கலாச்சார ஒருங்கிணைப்பு உணர்வும் தேவை,” என்று சொல்கிறார் யுவன்.
இளைஞர் யுவனைப் போன்ற சுற்றுப்புறச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு விருதுகள் மிகப்பெரிய விசயமல்ல. ஆனால் ஒய்பிபி கொடுத்திருக்கும் அங்கீகாரம் ஒரு கலாச்சார மாற்றத்தின் அசாதாரணமான குறியீடு என்கிறார் யுவன். “நிகழ்காலமே என் எதிர்காலம். பல்வேறு தளத்துப் பரப்புரைகள் மூலமாக, யுத்தங்கள் மூலமாக நாங்கள் சுற்றுப்புறச்சூழல் பிரச்சினைகளில் போராடிக் கொண்டிருக்கிறோம். என்னைப் போன்றவர்களுக்கு இந்த விருது அங்கீகாரம் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது,” என்று சொல்லும் யுவன் ஓர் எழுத்தாளர்; இயற்கையியல்வாதி; கல்வி்யாளர்; சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட செயல்வீர்ர்.
ஓவியரும் இணை இயக்குநருமான ஷாஜன் கவிதா மின்னணு ஊடகத்தின் மூலம் தனது சமூகநீதி அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார். தலித்துகளின் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் சரித்திரத்தில் இடம்பெற்ற ஆகப்பெரும் ஆளுமைகளையும், மறக்கமுடியா நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்தும் முகமாக நடைபெறும் தலித் சரித்திர மாதம் என்னும் வருடாந்திர நிகழ்வு சமீபத்தில் நடந்தேறியது.
அப்போது தலித் தலைவர்களின் சித்திரங்களையும், அவர்கள் சார்ந்த இயக்கங்களையும் ஷாஜன் வரைந்திருக்கிறார். “இந்த அங்கீகாரத்தைத் தனிப்பட்ட முறையில் நான் எடுத்துக்கொள்ளவில்லை. நிஜத்தில் இந்த விருதுக்குரியவர்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள்தான்; சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.
அவர்களின் பிரதிநிதியாகத்தான் நான் இந்த விருதைப் பெறுகிறேன். இது எனக்கு மேலுமோர் ஊக்கத்தைத் தருகிறது. சமூகத்தில் நிலவும் சாதீய சமத்துவமின்மைகளை எதிர்த்து மின்னணு ஊடகம் மூலம் நான் என் போராட்டத்தைத் தொடர்வேன்,” என்கிறார் ஷாஜன்.
அர்ஜூனுக்கும், ரிஷிக்கும் நிரந்தர வேலை என்று எதுவுமில்லை. ஆனால் அவர்கள் மதச்சார்பற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் தங்களுக்கு இருக்கும் பங்கினைப் பற்றி பரஸ்பரம் புரிந்துகொள்கிறார்கள். “நாங்கள் எங்கள் வீடியோக்கள் மூலம் சமூகத்திலிருக்கும் பல்லடுக்குச் சாதீய கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். எங்களைப் பின்தொடர்பவர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் இந்த அங்கீகாரம் நாங்கள் எதிர்பாராதது. ஏனென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் எப்போதுமே கவனத்துக்கு வருவதில்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்,” என்கிறார் ரிஷி.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மே 19 அன்று நடந்த விழாவில் விருது பெற்றவர்கள் விழா முடிந்ததும் தமிழகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி. மனோ தங்கராஜுடன் ஓர் உரையாடல் நிகழ்த்தினார்கள்
சமூகத்தில் அமைப்பியல்ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து வரும் இளைஞர்களுக்குப் பாதுகாப்பான இடத்தை வழங்குவதில் கடப்பாடு கொண்டிருக்கிறது எங்கள் ஒய்பிபி என்கிறார் ராதிகா. எனினும், இந்த முனைப்பும், முயற்சியும் வெறும் விருதுகளோடு முடிந்துவிடுவதில்லை.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மே 19 அன்று நடந்த விழாவில் விருது பெற்றவர்கள் விழா முடிந்ததும் தமிழகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி. மனோ தங்கராஜுடன் ஓர் உரையாடல் நிகழ்த்தினார்கள். ”அமைச்சருடன் கொண்ட இந்த அளவளாவல் பிரயோஜனமாக இருந்தது. நல்ல எதிர்வினை உண்டானது. விருதுபெற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அமைச்சர் பொறுமையாகவும், நாகரிகமாகவும் பதிலுரைத்தார்,” என்று கூறுகிறார் ராதிகா.
விருது வழங்கும் நிகழ்வு ஆகப்பெரிய அங்கீகாரத்தைத் தந்தது. “இந்த விருது மிகப்பெரும் அங்கீகாரம். ஆனால் அமைச்சருடன் கொண்ட உரையாடல் இன்னும் ஒருபடி மேலே சென்றது. அது எங்கள் நம்பிக்கையை மேலும் உயர்த்தியது. இதுவரை நான் ஓர் அமைச்சருடன் இவ்வளவு நெருக்கமாகப் பேசியதில்லை, நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்,” என்கிறார் ஷாஜன்.
விருதுவிழாவின் ஓர் அம்சமாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒரு யூடியூப் செய்தி சானல் தொடங்கப்பட்டது. ஒய்பிபி ஆரம்பித்த அந்தச் சானலின் பெயர் ‘தி லிங்’ (தொடர்பு).
விருது பெற்றவர்கள் இன்னும் பயணிக்க வேண்டிய சாலை மிக நீளமானது. அமெரிக்கக் கவிஞன் ஃப்ராஸ்ட் சொன்னதுபோல, போக வேண்டிய தூரம் பல மைல்; செய்ய வேண்டிய பணிகளோ ஏராளம்!
Read in : English