Read in : English
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்காக ரூ.46,605 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்கள் ஒத்துழைப்பு அளித்தால் மத்திய அரசு அதற்கான நிதியை அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பு என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமாகாது என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். ஜனகராஜன்.
நதிகள் இணைப்புக்கான சாத்தியங்கள் குறித்தும் இடர்பாடுகள் குறித்தும் அவரது கருத்துகள்:
மாநிலங்கள் ஒத்துழைத்தால் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி ஆறுகளை இணைப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நதிகளின் இணைப்பில் மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு என ஐந்து மாநிலங்கள் இணைந்துள்ளன. நதிகள் இணைப்பதன் மூலம் தண்ணீர் கிடைப்பதாலும், விவசாயிகள் பயனடைவார்கள் என்ற வகையிலும் தமிழகம் முழு ஒத்துழைப்பை அளிக்கும். ஆனால், மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிப்பதில் சிக்கல் உள்ளது. கோதாவரி ஆற்று படுகையை ஒட்டிய பகுதிகளில் வறட்சி நிலவுவதால் எதிர்காலத்தில் அதிக தண்ணீர் தேவைப்படும் என கூறும் மகாராஷ்டிரம், கோதாவரி நீரை வழங்க தயக்கம் காட்டி வருகிறது. இதனிடையே கோதாவரி நீரை பங்கு கொள்வதில் மகாராஷ்டிரத்திற்கும், தெலங்கானாவுக்கும் ஏராளமான பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. இதேபோல் கர்நாடகத்துக்கும் , தெலுங்கானாவுக்கும் இடையே கோதாவரி நீரை பயன்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
நதிகள் இணைப்பதன் மூலம் தண்ணீர் கிடைப்பதாலும், விவசாயிகள் பயனடைவார்கள் என்ற வகையிலும் தமிழகம் முழு ஒத்துழைப்பை அளிக்கும். ஆனால், மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிப்பதில் சிக்கல் உள்ளது.
நதிநீர் இணைப்பு திட்டம் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் சத்தீஸ்கர் மற்றும் ஒரிசாவில் பாயும் மகாநதியையும் கோதாவரியையும் முதலில் இணைக்க வேண்டும். அதன் பிறகே, இரண்டாம் கட்டத்தில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு நதிகளை இணைக்க வேண்டும். இதனால் முதல் கட்டத் திட்டத்தில் இருக்கும் நதிகளை இணைக்க வேண்டுமென தெலங்கானா வலியுறுத்தி வருகிறது. முதல் கட்டத் திட்டத்தின் மூலம் மகாநதி நீர் வந்தால் மட்டுமே கோதாவரியை வழங்க முடியும் என தெலங்கானா திட்டவட்டமாக கூறியுள்ளது. அடுத்ததாக நதிநீர் அதிகம் பாயும் மாநிலங்களிலிருந்து பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு நதியை இணைக்கலாம் என்ற கூறப்படுகிறதே, நதிநீர் அதிகமாக இருக்கிறது என யார் சொன்னது? அடுத்த 10-, 20 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வோம்? என நதி நீர் இணைப்பு திட்டத்தில் உள்ள பிற மாநிலங்கள் கேள்விகளை எழுப்புகின்றன.
நதி நீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தந்ததாலும் வருங்காலத்தில் மேலும் சிக்கலுக்கு தான் வழி வகுக்கும். ஏனெனில், தற்போது நடைமுறையில் உள்ள கிருஷ்ணா நீரை தெலங்கானாவில் இருந்து பெறுவதே பெரிய சவாலாக உள்ளது. ஆண்டிற்கு 11 டிஎம்சி நீரை பெறுவதற்கு தமிழக அமைச்சர்கள் இரண்டு அல்லது மூன்று முறை அந்த மாநிலத்திற்கு நேரில் சென்று தண்ணீரை வழங்குங்கள் என வலியுறுத்த வேண்டியுள்ளது. மத்திய அரசு கூறும் நதிநீர் இணைப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு 135டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டும். இவ்வளவு தண்ணீரை எப்போது வழங்குவார்கள், எப்படி ஆண்டுதோறும் தமிழகம் பெறும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதில் தொடர்புடைய மாநிலங்களுக்கு சரியான புரிதலும் இல்லாமல் உள்ளதை கவனிக்க வேண்டும்.
இணைப்பு கால்வாயை பராமரிக்கும் பணியை எந்த மாநிலம் மேற்கொள்ளும், அதற்கான தொகையை மத்திய அரசு கொடுக்குமா, மாநில அரசு கொடுக்குமா, தொகையை மாநிலங்கள் பங்கீடு செய்ய முன்வருமா என்பது குறித்து யாரும் பேசவில்லை.
இதற்கெல்லாம் மேலாக நதிகள் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்தி விட்டாலும் இணைப்பு கால்வாயை ஆண்டுதோறும் பராமரிக்க வேண்டும். இணைப்பு கால்வாயை பராமரிக்கும் பணியை எந்த மாநிலம் மேற்கொள்ளும், அதற்கான தொகையை மத்திய அரசு கொடுக்குமா, மாநில அரசு கொடுக்குமா, தொகையை மாநிலங்கள் பங்கீடு செய்ய முன்வருமா என்பது குறித்து யாரும் பேசவில்லை. கால்வாய் பராமரிப்பு பணியும் மாநிலங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, கோதாவரி தண்ணீரை வழங்கும் தெலங்கானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் பராமரிப்புச் செலவை ஏற்க மறுக்கும். தண்ணீர் பெறும் தமிழகமும் முழு தொகையை ஏற்க முடியாது. ஏனெனில், தெலங்கானாவை தாண்டி கால்வாய் மூலம் வரும் தண்ணீரை ஆங்காங்கே அந்த மாநில மக்களே பயன்படுத்திக் கொள்ளக்கூடும். எஞ்சிய தண்ணீர் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். இதனால் கிட்டத்தட்ட ரூ.15,000 கோடி வரை ஆகும் பராமரிப்பு செலவை தமிழகம் ஏற்க மறுப்பு தெரிவிக்கும்.
இதற்கும் மேலாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் உள்ளன. அதற்கும் தெளிவான தீர்வு இல்லை. இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால் நதி நீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்திவது கடினமானது. நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தலாம் என எளிதாக பேசலாம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரச்சினையை ஆராய்ந்தால், இது சாத்தியமில்லாத ஒரு திட்டமாகவே இருக்கும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் மாநிலங்கள் ஒத்துழைத்தால் நதி நீர் இணைக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. அதாவது மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூறாமல், ஒத்துழைப்பு அளித்தால் செயல்படுத்துவோம் என கூறி மத்திய அரசு நழுவ பார்க்கிறது. நதி நீர் இணைப்பு திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்குள் புரிதல் இருந்தால் மட்டுமே ஒருவேளை சாத்தியப்படலாம் என்கிறார் பேராசிரியர் ஜனகராஜன்.
உபரி நீர் உள்ளதாகக் கூறப்படும் நதி தோன்றும் இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்து வருகிறது என்று சென்னை, மும்பையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதேநேரம் மத்திய, மாநில அரசுகளிடம் நதிகளை இணைப்பது குறித்து அறிவியல் பூர்வமான அடிப்படை தரவுகள் ஏதுமில்லை என்று வல்லுநர்களும் கூறி வருகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்த்தால் 150 ஆண்டுகளுக்கு மேலாக கூறப்பட்டு வரும் நதிநீர் இணைப்பு திட்டமானது கட்டுக்கதையாகவே தொடருகிறது.
Read in : English