Read in : English

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடச்சொல்லி அரசும், நீதிமன்றமும் போட்ட  ஆணைகளைக் கடந்து அதை மீண்டும் திறந்த வரலாறு அந்த நிறுவனத்திற்கு உண்டு. தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த காவல்துறைத் துப்பாக்கிச் சூடு அந்த ஆலைக்கான மூடுவிழாவாகத்தான் தோன்றியது. ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் நிச்சயமாக நம்பிக்கையை இழக்கவில்லை. மூடச்சொல்லிய அரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் அது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். எப்படியும் அந்த நிறுவனம் ஆலையை திறந்துவிடும் என்ற பேச்சு உலாவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மக்கள் அதை அனுமதிப்பார்களா என்பதையும் யோசிக்க வேண்டியிருகிறது.

ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற ஆவலில்சமூகத்தோடு இணக்கமான உறவைப் பேணும் முறையில்  பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டத்தின்கீழ் ஸ்டெர்லைட்  தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது.

ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற ஆவலில், சமூகத்தோடு இணக்கமான உறவைப் பேணும் முறையில்  பெருந்தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டத்தின்கீழ் ஸ்டெர்லைட்  தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கிறது. ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜனை மருத்துவ நோக்கத்திற்காக வழங்க அந்த நிறுவனம் முன்வந்தது. ஆனால் அது உறுதியளித்த அளவுக்குக்கூட அந்த நிறுவனம் ஆக்ஸிஜனை வழங்கவில்லை. தூத்துக்குடியின் பொதுமருத்துவமனையை அது புதுப்பித்துத் தந்தது.

சமீபத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் நயினார் கோவில் கிராமத்தில் ஒரு தண்ணீர் டேங்கைக் கட்டிக்கொடுத்தது. தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் வசிக்கும் முத்துக்குளிக்கும் மீனவர்களுக்கு பல உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் என்பது ஒரு நகைமுரண். 2018ஆம் ஆண்டு மே 22-இல் எதிர்ப்புப் போராட்ட ஊர்வலம் திரேஸ்புரத்திலிருந்துதான் தொடங்கியது; மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லச் செல்ல அந்த எதிர்ப்பு ஊர்வலம் சூடுபிடித்தது.

ஸ்டெர்லைட்டின் உற்பத்தித் திறனை விரிவாக்குவதற்கு எதிராக போராட்டம் வெடித்த அந்த ஆலையைச் சுற்றியிருந்த கிராமங்களில்,  சிஎஸ்ஆர் திட்டத்தின்கீழ் நிறைய நல்ல விஷயங்களைச் செய்திருப்பதாக அதன் தலைமை ஆபரேட்டிங் அதிகாரியான சுமதி அங்குசாமி சமீபத்தில் தினமலர் நாளேட்டில் சொல்லியிருக்கிறார். அந்த ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பதில் அவர் உறுதியாக  இருக்கிறார். .

ஸ்டெர்லைட்டின் ஆக்ஸிஜன் உற்பத்தியைப் பற்றி எழுதுவதற்காக நான் 2021-இல் தூத்துக்குடிக்குச் சென்றபோது, ஓர் ஆட்டோ ஓட்டுநரிடம் பேச நேரிட்டது. செவிலியர் கல்லூரியில் படிக்கும் தன்மகளின் படிப்புக் கட்டணத்தை ஸ்டெர்லைட் நிறுவனம்தான் கட்டியது என்று அவர் சொன்னார். அதற்காக அந்த நிறுவனத்திற்கு தனது நன்றியைச் சொல்லிக்கொண்டார் என்றாலும் அந்த ஆலையைத் திறக்கக்கூடாது என்று அவர் உறுதியாகக் கூறினார். இவ்வளவுக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்பட்டதாகச் சொன்ன ஐந்து ஆட்டோ ஓட்டுநர்களில் அவரும் ஒருவர். என்றாலும் அந்த ஆலை திறக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக நின்றார்கள். அந்த மாவட்டத்தின் வீதிகளில் நான் கள ஆய்வு மேற்கொண்ட 25 பேர்களில் அவர்களும் அடங்குவர்.

கிட்டத்தட்ட எல்லோருமே ஆலையைத் திறக்கக்கூடாது என்று சொன்னார்கள். அதுவும் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்த பின்னர் அதைத் திறக்கவே கூடாது என்றார்கள். எனினும் கூட்டத்தில் நின்ற ஒரு பெண்மட்டுமே வேறு கருத்தைச் சொன்னார். அந்தப் பெண்ணின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகளின் கல்விக்கும், பெண்ணின் மருத்துவச் செலவுகளுக்கும், இதர செலவுகளுக்கும் அந்த நிறுவனம்தான் உதவியது என்று சொல்லிவிட்டு, அதற்குத் தான் நிறைய நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்தப் பெண்மணி கூறினார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு சம்பந்தப்பட்டவர்களில் சிலர் வெளிப்படையாகவும் நேரடியாகவும் ஆதரிக்கிறார்கள். ஆனால்தூத்துக்குடியில் பெரும்பாலான மக்கள் ஆதரிக்கவில்லை.

களவு ஆய்வு செய்த 25 பேர்களில் ஒருவர் மட்டுமே ஆலையின் மறுதிறப்புக்கு ஆதரவாக உள்ளார் என்பது நிதர்சனம். ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு சம்பந்தப்பட்டவர்களில் சிலர் வெளிப்படையாகவும் நேரடியாகவும் ஆதரிக்கிறார்கள். ஆனால், தூத்துக்குடியில் பெரும்பாலான மக்கள் ஆதரிக்கவில்லை.

முருகன் என்பவர் 2018ஆம் ஆண்டு எதிர்ப்புப் போராட்டத்தின் மையமாக விளங்கிய குமரெட்டியாபுரத்தில் போராட்டத்தை வழிநடத்தியவர்களில் ஒருவர். ஸ்டெர்லைட்டில் லாரி ஓட்டுநராக இருந்தவர். பின்பு அவர் வேலையிழந்தார். எனினும் வேறொரு இடத்தில் வேலை தேடிக்கொண்டார். தன் கிராமத்தில் ஒருபகுதியினர் ஆலையை ஆதரித்தாலும், அதை மீண்டும் திறக்கக்கூடாது என்று அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சொன்னார். இப்போது சூழல் பரவாயில்லை. அந்த ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது கால்நடைகள் குடிக்காத கிராமத்து நிலத்தடி நீரை இப்போது குடிக்கின்றன என்றார் முருகன்.

அந்தத் தாமிர உருக்காலை, தேசிய மற்றும் உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம். ஆனால் அந்த ஆலையைச் சுற்றிலும், நகரத்திலும் வசிக்கும் மக்களின் மனநிலை சமீப காலம் வரை ஆலைக்குச் சாதகமாக இல்லை. இந்த ஏழு மாதங்களில் நிலைமை மாறியிருக்க சாத்தியமும் இல்லை.

தூத்துக்குடி முழுக்க முருகனைப் போன்றோர்களை நிறைய பார்க்க முடியும். ஸ்டெர்லைட்டோடு தனிப்பட்ட முறையில் இனிமையான அனுபவம் கொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநரைப் போன்றவர்கள் பலர், அந்த நிறுவனத்தால் பலன் அடைந்தது என்னவோ உண்மைதான். ஆனால், போராட்டக்காரர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதை அவர்கள் ஒரு தார்மீகப் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள்.

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கோஷம் எழுப்பும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள்.

எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு பத்திரிகையாளனாகப் பயிற்சி பெற்றவன் என்ற முறையில், அதிகாரப்பூர்வமற்ற என் களஆய்வில் நான் கண்ட ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பெரும்பான்மையான எதிர்மறை அலையில் சிக்கலான காரணிகள் நிறையவே உள்ளன என்று நினைக்கிறேன். பொருளாதாரக் காரணங்களுக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் ஆலையின் மறுதிறப்பை சிலர் ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கக்கூடும். ஆனால், அதை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இதற்கான காரணம், அறிஞர்கள் சொல்வது போல,  சமூகத்தால் விரும்பப்படுதல் என்பதுதான் இதற்கு பின் உள்ள காரணம். எடுத்துக்காட்டாக, ஏராளமான அமெரிக்கக் குடிமக்கள் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராவதை உண்மையில் விரும்பினார்கள். ஆனால் யாரும் இதை வெளிப்படையாகத் தேர்தல் கணிப்பாளர்களிடம் சொல்லவில்லை. தாங்கள் ட்ரம்பை ஆதரிப்பவர்கள் என்று பொதுவெளியில் அறியப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. கருத்துக் கணிப்புகளில் ‘சமூகத்தால் விரும்பப்படுதல்’ என்ற இதே காரணியால் பாஜகவும் பாதிக்கப்பட்டது. என்றாலும் அந்தக் கட்சி நரேந்திர மோடியோடு ‘சமூகத்தால் விரும்பப்படுவதற்கான’ காலக்கட்டத்தை அடைந்துவிட்டது என்று சொல்லலாம்.

அதைப்போலவே ஒருசிலரைத் தவிர, தூத்துக்குடிவாசிகளில் பெரும்பான்மையினர் தாங்கள் ஸ்டெர்லைட்டை ஆதரிப்பவர்களாகப் பார்க்கப்படுவதை விரும்பாமல் இருக்கக்கூடும்.

ஸ்டெர்லைட்டின் மாசுபடுத்தும் குற்றத்தைக்கூட சிலர் மன்னிக்கக்கூடும். கடந்தகாலத்தில் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்திய பல ஆலைகள் தூத்துக்குடியில் இருந்தன. ஸ்டெர்லைட்டின் 200 மெகாவாட் ஆலையோடு சேர்த்து அந்த மாவட்டத்தில் 12-க்கும் மேலான நிலக்கரி ஆலைகள் இருக்கின்றன. நிலக்கரிப் புகைவெளியேற்றம் பற்றிய இந்தியச் சட்டங்கள் தற்காலத்தைச் சார்ந்தவை அல்ல. மேலும் நிலக்கரி ஆலைகள் அமில மாசுக்களை ஆகப்பெரிய அளவில் வளிமண்டலத்தில் வெளியேற்றுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மன்னிக்கக்கூடிய மக்களால் கிளர்ச்சியாளர்களைக் கொன்றதை மட்டும் மன்னிக்க முடியவில்லை. அதுதான் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களைத் திருப்பிவிட்டது.

ஆலையின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பிரிவு சுற்றுப்புறச்சூழல் சட்டங்கள் பின்பற்றப்படுவதைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும் என்பது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வந்த ஒரு கருத்து. ஆனால் அந்த நேரத்தில் உற்பத்தியே நிறுவனத்தின் பிரதானமான இலக்காக இருந்ததால், ஆரம்பக்கட்டத்தில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் சம்பந்தமான நெறிமுறைகளும் வேண்டுகோள்களும் புறக்கணிக்கப்பட்டன. 2013ஆம் ஆண்டில் அந்த ஆலை மூடப்பட்டவுடன் உச்ச நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அதன்பின்பு சுற்றுப்புறச் சூழல் விஷயத்தில் ஆலை உண்மையிலேயே அக்கறை செலுத்தியது. ஸ்டெர்லைட்டின் குரல்களில் ஒன்று  பெயர் சொல்ல விரும்பாத ஒருநபர் – சொன்ன தகவல் இது.

ஆலையின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தும் திட்டத்தை எதிர்த்துத்தான் 2018-இல் ஸ்டெர்லைட்டைச் சுற்றியிருந்த கிராமங்களில் வசித்த மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள், ஆனால் பின்னர் அது ஆகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. அனைத்துத் தரப்பு மக்களும், எல்லாச் சித்தாந்தத்து மக்களும் கிளர்ச்சியில் பங்கெடுத்தார்கள்.  வியாபாரிகள், மீனவர்கள், சுற்றுச்புறச்சூழல் ஆர்வலர்கள், வழமையான நகரத்து மக்கள், கிராமத்தினர்கள், தீவிரவாத இடதுசாரிகள், மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்று எல்லாத் தரப்பினரும் போராட்டத்தில் குதித்தார்கள்.

அதற்கு முந்தைய ஆண்டில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம்தான் 2018இ-ல் தூத்துக்குடி போராட்டத்திற்கு உந்துசக்தியை, எழுச்சியைக் கொடுத்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டக் களத்திலே தங்கியிருப்பது என்ற உந்துதல் ஜல்லிக்கட்டுக் கிளர்ச்சியிலிருந்துதான் கிடைத்தது என்று குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த முருகன் கூறினார். அதனால், அதிகாரப்பூர்வமாக போராட்டம் முடிந்துவிட்டாலும் போராட்டக் களத்தைவிட்டு அசையவே கூடாது என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். எப்படியும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இறுதியில் அவர்கள் சந்தித்தது வன்முறையையும் துப்பாக்கிச்சூட்டையும்தான்.

சுற்றுப்புறச்சூழல் பிரச்சினைகளுக்காக மாநிலம் முழுவதும் சாதாரண மக்கள் வெளியே வந்து போராடிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டை நடத்திய நாளில், போராட்டக்காரர்களோடும் செயற்பாட்டாளர்களோடும் கைகோர்த்து வீரமுடன் நடைபோட்டது பெண்களும் குழந்தைகளும் உள்பட சாதாரண மக்கள்தான்! மக்கள் போராட்ட வரலாற்றில் எப்போதும் ரத்தவாடைதானே அடிக்கிறது!

(தொடரும்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival