Read in : English

கஜா புயல் ஏறபடுத்திய பேரழிவு அதிமுக அரசுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதே வேளையில் அதிமுகவுக்கு  20 தொககுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களை தள்ளிப்போடவிருக்கும் வரமாகவும் இப்புயல் பாதிப்பு ஒரு காரணமாக உள்ளது. அண்மையில் தலைமை தேர்தல் ஆணையர், இடைத்தேர்தல்கள் சில மாதங்களில் நடத்தப்படும் என்றும் அவை நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்தப்படமாட்டாது எனவும் கூறியிருந்தார். அதையடுத்து  மற்ற  கட்சிகளில் செயல்படுவது போல் அதிமுகவும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கென்று தனிக்குழு அமைத்து இடைத்தேர்தல்களை சந்திக்கத் தயாரானது.

இருப்பினும் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை காட்டி மாநில அரசு இடைத்தேர்தல்கள தள்ளிவைக்க இரண்டு காரணங்கள் உண்டு. உண்மையிலேயே புயல் பாதித்த பகுதிகளில்  அரசு நிர்வாகம் முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மறுசீரமைப்பு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அரசின் மந்தமான நிவாரணப்பணிகள் மக்களிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதால், அது அரசியல்ரீதியாக ஆளும் கட்சிக்கு பின்னடைவை உண்டாக்கும்.

அண்மையில் தினமலர் நாளிதழ் செய்தியில் மத்திய உளவுத்துறை அறிக்கையின்படி, இப்போது 20 இடங்களுக்கு இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டால்  அதில் திமுக 14 இடங்களிலும் தினகரனின் அமமுக 2 இடங்களிலும் வெற்றி பெறும். மீதியிருக்கும் நான்கு இடங்களில் மட்டுமே ஆளும் அதிமுக வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல் வந்தால், அதிமுக அரசு மைனாரிட்டி அரசாகக் கருதப்பட்டு அது ஆளுநருக்கு அழுத்தத்தைக் கொடுத்து அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழல் உருவாகும் அல்லது திமுக மாற்று அரசாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உண்டாக்கலாம். இந்த அறிக்கையை இதுவரை உளவுத்துறை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில், மக்களிடம் திமுக 38% செல்வாக்குப் பெற்றுள்ளது; முதல்வருக்கான முகமாக மு.க.ஸ்டாலின் 45 சதவீத  மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்று கூறியது. ஆனால், அதிமுக 20-25 % ஆதரவை பெறவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில் உள்ளது என்று அக்கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் கட்சிக்கு இப்போதைக்கு தேர்தல் மூலம் மக்களை சந்திக்கும்  சாதகமான நிலைமை இல்லை.

கஜா புயலினால் உண்டான பாதிப்பு  மட்டும் ஆளும் அரசுக்கு  இக்கட்டான சூழலை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு இழப்புகளால் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இப்படியான சூழலில், இடைத்தேர்தல்கள் பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டால் அதிமுக அரசுக்கு கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு மக்களிடம் நற்பெயரை சம்பாதிக்கவும் இழந்துபோன நம்பிக்கையை மக்களிடையே திரும்பப் பெறவும் கால அவகாசம் கிடைக்கும்.

ஏற்கனவே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பலத்த மழை பெய்யவுள்ளதால்  தலைமைச் செயலர், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்  எழுதி அந்த இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல்களை தள்ளிப்போடவேண்டும் என கேட்டுக்கொண்டார். ’ஆமாம் சாமி’ போட்ட மத்திய தேர்தல் ஆணையமும் உடனடியாக இடைத்தேர்தல்களை தள்ளிவைத்தது.

மத்தியில் உள்ள பாஜக அரசு அரசின் தயவுள்ளதால் இம்முறையும், தேர்தல் ஆணையம் அதிமுக அரசிற்கு சாதகமான முடிவே எடுக்கும் என நம்பலாம்.

மத்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்லிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தலை நடத்திய பிறகுதான் இடைத்தேர்தல்களுக்கான தேதி குறித்து ஆலோசிக்கும். அதேநேரத்தில் மாநில அரசு புயல் பாதித்த  6 மாவட்டங்களில்  நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இடைத்தேர்தல்களை நடத்த உகந்த சூழ்நிலை இல்லை என்பதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்ட கூடும்.

இந்த நிலையில் அதிமுக அரசை அகற்றுவதற்கான  அஸ்திரமாக இடைத்தேர்தல்களில்  பெரும் வெற்றியை எதிர்பார்த்திருந்த திமுகவுக்கு கஜா புயல் உருவாக்கியுள்ள சூழ்நிலை முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. மாநிலத்தில் மாற்றம் வர இடைத்தேர்தல்களின்  முடிவுகள் வழிவகுக்கும்   என்று எதிர்பார்த்ிருந்த திமுக இப்பொழுது காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த, திமுக  குறைந்தது ஆறு மாதம் காத்திருக்கவேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival