Read in : English
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் பந்த் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாகத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் உறவினைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை இப்போதும் கர்நாடகத்தில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டிய நீரின் அளவை மதிப்பீடு செய்தபின்பு நீர்ப்பங்கீடு சம்பந்தமான ஓர் அதிகாரப்பூர்வமான ஆவணம் உருவாக்கப்பட வேண்டும் என்று கர்நாடக அரசும், பிரச்சினையைத் தங்களுக்குச் சாதகமாக மடைமாற்றம் செய்யத் துடிக்கும் சக்திகளும் தற்போது உணர்ந்திருக்கின்றன.
பந்த் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 29 (வெள்ளி) அன்று கர்நாடகத்தின் சில பகுதிகளில் மட்டுமே அறிவிப்பின் தாக்கம் நிகழ்ந்திருக்கிறது. பெங்களூரு மாநகரம், பெங்களூர் ஊரகப் பகுதி, சாம்ராஜ்நகர், மைசூரு மாநகரம், மாண்டியா மாவட்டம், ராமங்கரா மாவட்டம் ஆகிய பகுதிகள் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பந்த் காரணமாக முடங்கியது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை என்றபோதிலும், போராட்டங்களும், முற்றுகைகளும், கோஷங்களும் தொடர்ந்தன.
கர்நாடக ரக்ஷண வேதிகேவின் தலைவர் நாராயண கவுடா, கர்நாடக, மத்திய அரசுகளுக்கிடையே ஒரு ரகசிய கூட்டு இருக்கிறது என்று கடுமையாகச் சாடினார்
கர்நாடக ரக்ஷணா வேதிகே மற்றும் 1,900 கன்னடப் பாதுகாப்பு இயக்கங்களும் போராட்டத்தில் குதித்தன. அவர்களின் தொண்டர்களில் சிலர் தேவனஹள்ளியில் இருக்கும் கெம்பேகவுடா பன்னாட்டு விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பிய அவர்களைக் காவலர்கள் அப்புறப்படுத்தினர்.
பந்த் அழைப்பு விடுத்திருந்த கன்னடச் செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்றார்கள். கர்நாடகத்தில் காவிரி நதிப்படுகைப் பகுதிகளில் வாழும் மக்களின் நீர்ப்பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் உரித்தான நீர்ப்பாதுகாப்பு தமிழ்நாட்டின் நியாயமற்ற கோரிக்கைகளால் அழிந்துவிடும் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
மேலும் படிக்க: காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம்: வாட்டாள் நாகராஜ்
கர்நாடக ரக்ஷண வேதிகேவின் தலைவர் நாராயண கவுடா, கர்நாடக, மத்திய அரசுகளுக்கிடையே ஒரு ரகசிய கூட்டு இருக்கிறது என்று கடுமையாகச் சாடினார். “இரண்டு அரசுகளும் திருட்டுத்தனமாகக் கூட்டு சேர்ந்து தமிழகத்திற்கு அதிகத் தண்ணீர் கொடுக்க உதவுகின்றன. கர்நாடகத்தில் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈடுபடுத்தி மறைவானதோர் அரசியல் கூத்து நடக்கிறது.
கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து கர்நாடகம் தொடர்ந்து தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கினால், கர்நாடக விவசாயிகளால் ஒரு பயிர் மட்டுமே பயிரடக்கூடிய அளவுக்குத்தான் நீர் இருக்கும்; அதனால் அவர்கள் மிகச் சிரமப்படுவார்கள்; இனிவரும் நாட்களில் குடிக்கக்கூட நீர் இருக்காது. கர்நாடக ரக்ஷண வேதிகே தொண்டர்கள் 10 ஆயிரம் பேர் அக்டோபர் 5 அன்று தில்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து காவிரிப் பிரச்சினையில் தலையிடும்படி மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ள இருக்கிறார்கள்.
கர்நாடக விவசாயிகளைக் காப்பாற்றச் சொல்லி எங்களது ஒரு லட்சம் தொண்டர்கள் ரத்தத்தால் கடிதம் எழுதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப் போகிறார்கள்,” என்றார் நாராயண கவுடா.
இதற்கிடையில், காவிரிப் பிரச்சினைக்காகப் பந்த் நடைபெற்ற நாளில் கன்னட செயற்பாட்டாளர்களில் முன்னணியில் நிற்கும் வாட்டாள் நாகராஜ், பர்தா அணிந்துகொண்டு டவுன் ஹாலுக்கு வந்தார். அவரைக் காவல்துறை கைதுசெய்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றது.
“காவிரியில் தண்ணீர் நிறைய இருந்தால், தமிழ்நாட்டுக்கு த் தண்ணீர் திறந்து விடுவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இந்தத் தடவை எங்கள் மக்களுக்கே தண்ணீர் இல் லை. பின் எப்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்னும் நிறைய தண்ணீர் வேண்டும் என்று கேட்கலாம்?” என்று கேட்கிறார்றார் வாட்டாள் நாகராஜ்.
Read in : English