Read in : English
சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கி வரும் சவுக்கு சங்கர் அரசுக்கு எதிரான வெளிப்படையான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்பவர். சமீபத்தில் இன்மதிக்கு அளித்த நேர்காணலில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் பிரதான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதிமுக மற்றும் திமுக அரசாங்கங்களுடன் தனக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் விவரித்துள்ளார். திமுகவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் சங்கி என்ற தனக்கெதிரான குற்றச்சாட்டு குறித்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
சமூக ஊடகங்களின் தற்போதைய அபரிமிதமான வளர்ச்சி குறித்த பகுப்பாய்வுடன் நேர்காணல் தொடங்கியது. குறிப்பாக அதன் தடையற்ற நடவடிக்கைகள் மற்றும் பிரதான ஊடகங்களின் நடைமுறைகளுக்கு முரணான அதன் நடைமுறைகள் பற்றிச் சவுக்கு சங்கர் பேசினார்.
தினசரி செய்திகளை வழங்க செய்தித்தாள்கள் மற்றும் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலங்களில் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். ஒரு செய்தித்தாளைத் திறந்து நிதானமாகச் செய்திகளை ரசனையுடன் வாசிப்பது எவ்வளவு உற்சாகமாக இருந்தது என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் சமூக ஊடகங்கள் அப்படிப்பட்ட உணர்வை ஒருபோதும் எழுப்ப முடியாது; எழுப்புவதில்லை என்றார்.
பிரதான அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வாறு விளம்பரத்தால் இயக்கப்படும் அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பேசிய சவுக்கு சங்கர், உண்மையில் ஒரு செய்தித்தாளை அச்சிடுவதற்கு ரூ30 செலவாகிறது. ஆனால் சுமார் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அரசு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் விளம்பரங்கள் மட்டுமே, செய்தித்தாள்களை குறைந்த விலைக்கு விற்று ஒட்டுமொத்த லாபத்தை ஈட்டும் வகையில் ஊடக நிறுவனங்களுக்கு உதவுகின்றன. டிவி சேனல்கள் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்காகவும் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
அவையும் விளம்பரதாரர்களின் தாராள மனப்பான்மையைச் சார்ந்துள்ளன. இதன் விளைவாக, முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் செய்திகளில் நேர்மை, நியாயம் இல்லாமல் போய்விடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
டிவி சேனல்கள் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்காகவும் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அவையும் விளம்பரதாரர்களின் தாராள மனப்பான்மையைச் சார்ந்துள்ளன. இதன் விளைவாக, முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களின் செய்திகளில் நேர்மை, நியாயம் இல்லாமல் போய்விடுகின்றன
எடுத்துக்காட்டாக, தாங்கள் தரும் விளம்பரங்களுக்கு ஈடாக அரசாங்கம் ஒருசார்பான செய்தியை வெளியிடச் சொல்லி பிரதான அச்சு ஊடகங்களை வலியுறுத்தலாம். ஆதலால் நியாயமான உண்மையான பாரபட்சமற்ற செய்திகள் வெளிவருவது தடுக்கப்படலாம் என்றார் சவுக்கு சங்கர்.
ஆனால் அந்த மாதிரியான அழுத்தங்கள் சமூக ஊடகங்களில் இல்லை. இப்போதெல்லாம் எண்ணற்ற ’பத்திரிகையாளர்கள்’ மொபைல் போன் மூலம் சமூக ஊடகங்களில் தகவல்களையும், விவாதங்களையும் அளவில்லாமல் அள்ளித் தருகிறார்கள். தொழில்நுட்பம் அனைவருக்கும் நுழைவாயில்களைத் திறந்து வைத்துள்ளது. யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம்; தங்கள் சித்தாந்தத்தை (அப்படி ஒன்று இருந்தால்) பதிவு செய்து ஓடிவிடலாம்.
இந்தச் சமூக ஊடக போக்கு ஆபத்தானது இல்லையா? இது போன்ற மின்னணு கருத்து சுதந்திரத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லையா என்று கேட்டதற்கு, கட்டுப்பாடுகள் பலனளிக்காது என்று சவுக்கு சங்கர் பதில் கூறினார். மாறாக சமூக வலைத்தளங்களில் குவிந்து கிடக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து நல்லது, கெட்டது, அசிங்கம் என்று பிரித்துப் பார்ப்பது நுகர்வோர் கடமை. காலப்போக்கில், நல்லது உறுதியாக நிற்கும். கெட்டது காணாமல் போய்விடும். சமூக ஊடக படைப்பாளிகளுக்குச் சுய கட்டுப்பாடு தேவை என்று அவர் குறிப்பிட்டார். திமுகவின் பகுத்தறிவு விரோத நடவடிக்கைகளை விமர்சித்த சங்கர், அப்போதைய பாஜக தலைவர் எல்.முருகன் வேல் ஏந்தியபடி பாதயாத்திரை சென்றபோது திமுகவும் பதிலுக்கு வேலைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்தார்.
மேலும் படிக்க: செய்தி ஊடகங்களை நம்ப முடியுமா?: சவுக்கு சங்கர் நேர்காணல்
பகுத்தறிவு, நாத்திகம், பகுப்பாய்வு என திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் திமுக காவுகொடுத்து விட்டது என்பதை மீண்டும் நிரூபித்த தருணம் அது என்றார் சவுக்கு சங்கர். திராவிட சித்தாந்தம் என்பது தங்களின் ஏகபோக உரிமை என்பது போல திமுக எண்ணிக் கொண்டிருக்கிறது. அதனால் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் அனைத்தும் தங்கள் பின்னால் அணிதிரள வேண்டும் என்று திமுக விரும்புகிறது. சொல்லப்போனால் நீதிக்கட்சி காலத்தில்தான் திராவிட இயக்கச் சிந்தனைகள் வேர்ப்பரப்ப ஆரம்பித்தன. அந்தக் கருத்தியல் அடிப்படைகளைக் கணிசமாக நீர்த்துப்போகச் செய்த ஒரு கிளைதான் திமுக. நீதிக்கட்சியின் அடிப்படைச் சித்தாந்தமான சமூகநீதியை வைத்துக் கொண்டு திமுக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.
”திமுக அரசை விமர்சிப்பதால், என்னை சங்கி என்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை நான் விமர்சித்தபோது, என்னை திமுகக்காரன் என்று முத்திரை குத்தினார்கள். 2006-ஆம் ஆண்டிலிருந்தே நான் இரண்டு திராவிடக் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறேன்,” என்று சொன்ன சங்கர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட, ”சிறைக்குச் செல்லும் சீமாட்டி” என்று அவரைத் தான் வர்ணித்ததை நினைவுகூர்ந்தார்.
”திமுக அரசு புதிய சட்டசபைக்காக கட்டிய பிரமாண்டமான கட்டடத்தை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றியதற்காகவும், சமச்சீர் கல்வியை ஒழித்ததற்காகவும் நான் அவரை கண்டித்தேன். அப்போதும் என் மீது வழக்குகள் போடப்பட்டன. ஜெயலலிதா மீதான எனது விமர்சனத்தை குறைத்துக் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் சிலர் எனக்கு அறிவுறுத்தினர்,” என்றார்.
திமுக அரசு எப்போதும் எதிர்ப்பாளர்களை ஒடுக்கவே செயல்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில், சவுக்கு சங்கர் தான் அனுபவித்த சிறைச்சாலை சித்திரவதைகளை விவரித்தார். ”என்னை சென்னை புழல் சிறையில் அடைக்காமல், தொலைதூரத்தில் உள்ள கடலூர் சிறையில் அடைத்து சென்னையில் உள்ள எனது குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வராதபடி செய்தது இந்த அரசு,” என்றார்.
சவுக்கு சங்கர் சிறையில் ஒருமுறை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மூன்றுநாட்கள் கழித்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கோமா நிலைக்குச் செல்லும் அபாயத்தில் இருப்பதாகக் கூறி அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று அவருக்கு ஐவி திரவம் செலுத்தினர். அதிகாரம் எப்படி உண்மையை ஒடுக்குகிறது என்பதையும், அப்பட்டமான கொள்கைப்பூர்வமான உண்மையைச் சொல்பவர்களை எப்படி அரசு அதிகாரம் வதைக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“நான் ஓர் ஊடகவியலாளராக செய்திகளைச் சேகரித்து வெளியிடுகிறேன்; அதை எடுத்துக்கொள்வதா வேண்டாமா என்பது நுகர்வோரின் விருப்பம். ஆனால் நான் எப்போதும் சார்பற்ற செய்திகளைக் கண்டறிந்து முன்வைக்கிறேன். மக்களுக்கு கற்பிக்கும் பொருட்டே நான் எனது ஊடகப் பணியைச் செய்கிறேன்.
மனிதாபிமானத்தைக் கொல்லும் மதத்தைத் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த மண்ணில் பாஜக-வால் இன்னும் காலூன்ற முடியவில்லை
உதாரணமாக, கள்ளக்குறிச்சி சிறுமியின் மரணம் மாநிலத்தை உலுக்கியபோது, இது ஏதோ பாலியல் வன்கொடுமையின் விளைவு அது என்று அனைவரும் கூறினர். ஆனால் உண்மை நிலையை ஆராய்ந்தபோது, அந்தப் பெண்ணின் மரணம் அவரது காதல் விவகாரத்தால் நிகழ்ந்தது என்று கூறினேன். அப்போது, பள்ளி நிர்வாகத்தின் பக்கம் நின்று, அவர்களிடம் பணம் பெற்றதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது,” என்றார் சவுக்கு சங்கர்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மாற்றுக்கருத்தும் எதிர்க்கருத்தும் சொல்பவர்களை அடக்கி ஒடுக்குது அதன் வாடிக்கை. ”இப்போது என்னை ‘சங்கி’ என்று அழைக்கும் திமுக ஒரு காலத்தில் அதே பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் பாஜக-வை முழு மூச்சாக ஆதரித்தவர் அல்லவா? 2002-இல் குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை ’குஜராத்தின் உள்விவகாரம்’ என்று சொன்னவர்தானேஅவர்!”
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த திமுக, ஆர்எஸ்எஸ் தொண்டரைக் கொலை செய்ததற்காக பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் முஸ்லிம் குற்றவாளிகளைப் பற்றி கவலைப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழக அரசின் வழக்கறிஞர், ”முஸ்லிம் குற்றவாளிகளை விடுதலை செய்வதை விட அவர்கள் சிறையிலே இருப்பது சமூகத்திற்கு நல்லது,” என்று கூறினார். ஆனால், இதே திமுகதான் தன்னை சமூகநீதியின் ஒரே பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு, சிறுபான்மைத் தலைவர்களுடன் தோள் கோர்த்துக் கொள்கிறது.
தற்போதைய திமுக, 1960-களில் பெரியாரின் கொள்கைகளால் உந்துசக்தி பெற்ற திமுக அல்ல என்றார் சவுக்கு சங்கர். பெரியார் தமிழ்நாட்டிற்கு அறிவூட்டினார் என்று சொல்வதை விட, தமிழகம் பெரியாரைத் தழுவிக் கொண்டது என்று சொல்வது மிகவும் பொருத்தமானது என்றார். தமிழகத்தில் பெரியாருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததற்குக் காரணம், சமூகநீதி, மத நல்லிணக்கம், மனிதாபிமானம் ஆகிய விழுமியங்களை தமிழகம் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருவதுதான்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தமிழ்நாட்டின் அடிப்படை மதச்சார்பற்ற உணர்வைச் சுட்டிக்காட்டிய சவுக்கு சங்கர் அதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறினார். அண்டை மாநிலமான கர்நாடகாவை உலுக்கிய ஹிஜாப் விவகாரம், தமிழகத்தில் எதிரொலித்ததா?
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் கலவரம் வெடித்தபோது, தமிழகத்தில் அதுபோன்ற சம்பவங்கள் நடந்ததா? அல்லது 1984-இல் (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து) சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்தபோது, அது தமிழகம் வரை பரவியதா?
அடிப்படையில் மனிதநேயத்துக்கு ஆதரவு தரும் மாநிலமாக, மனிதாபிமானத்திற்கு விரோதமான வன்முறைகளுக்கு இடங்கொடுக்காத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மனிதாபிமானத்தைக் கொல்லும் மதத்தைத் தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த மண்ணில் பாஜக-வால் இன்னும் காலூன்ற முடியவில்லை.
கர்நாடகத்தில் கன்னடத்திலோ அல்லது வடமாநிலங்களில் இந்தியிலோ பெரியார் பேசியிருந்தால் அவரது கொள்கை எடுபட்டிருக்காது. மனிதனை கடவுளுக்கு மேலாக உயர்த்திப் பிடித்து, மதத்தில் மனிதநேயத்தைப் புகுத்தும் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழர்களை பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. அவரது சித்தாந்தத்தில் இருந்த நாத்திகக் கூறுகளைத் தவிர்த்துவிட்டு அவரது கொள்கைக்குத் தமிழகம் சிறப்பான வரவேற்பு அளித்தது.
ஆனால், பெரியாரையும் அண்ணாவையும் தீவிரமாகப் பின்பற்றுகிறோம் என்று பெருமையடித்துக் கொள்ளும் திமுக தங்கள் மூதாதையர்களின் கொள்கைகளில் இருந்து நிறையவே விலகிவிட்டது. உதாரணமாக, செந்தில்பாலாஜி வழக்கில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பாஜகவுக்கு அடிபணிந்து ஆட்சியைத் தக்க வைப்பதை விட ஆட்சியை இழக்க தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது.
ஆனால், செந்தில்பாலாஜியின் இடத்தில் ஸ்டாலினின் நெருங்கிய உறவினர்களான சபரீசன் அல்லது உதயநிதி இருந்திருந்தால், பாஜகவுக்கு அனுசரணையாக அது நடந்து கொண்டிருந்திருக்கும். எது எப்படியோ, வரும் 2024-ஆம் ஆண்டில் பாஜகவிடம் திமுக சரணடையும் என்று சொல்லி சவுக்கு சங்கர் தனது நேர்காணலை முடித்துக் கொண்டார்.
Read in : English