Read in : English
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடியதற்காகவும் பல்வேறு சமூக நல வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காகவும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தற்காகவும், அவசரநிலைக் காலத்தில் அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிய அரசை தைரியமாக எதிர்கொண்டதற்காகவும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியையே காணாத கலைஞர் கருணாநிதி இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் நினைவு கொள்ளப்படுவார்.
1980களில் மதுரையில் முரசொலி தொடங்கப்பட்டபோது அங்கு நிருபராகச் சேர்ந்த நான், சென்னை முரசொலியிலும் நிருபராக இருந்திருக்கிறேன். பின்னர் 1988லிருந்து தினமணியில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட பல்வேறு நகரங்களில் பணியாற்றியிருக்கிறேன். மதுரை முரசொலி பதிப்பு தொடங்கிய போது கலைஞர் உடன்பிறப்புக்கு அவரது கையெழுத்தில் எழுதிய கடிதத்தை நான் இன்றும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
முரசொலியில் நிருபர் பணி என்பதால் கலைஞருடன் செய்தி சேகரிக்க அவர் சுற்றுப் பயணம் செய்யும்போது அவருடன் செல்ல வேண்டும். அவரது பொதுக்கூட்ட உரையை ஒலிநாடாவில் பதிவு செய்து பின்னர் இரவில் கேட்டு எழுத வேண்டும். பின்னர் காலையில் முழு உரையை எழுதி அவரிடம் கொடுப்பது வழக்கம். அவர் பொறுமையாகப் படித்துத் திருத்திக் கொடுக்கும் வரையில் அவர் அருகே காத்திருப்பேன். தலைப்பை அவரே எழுதிக் கொடுத்துவிடுவார்.
சொற்கள் மாறி இருந்தால் நான் இப்படிப் பேசவில்லையே என்று கூறியபடி அவரே திருத்துவார். பிழை இருந்தால் கவனிக்கவில்லையா என்பார். இவையெல்லாம் எனக்குப் பாடமாக இருக்கும். சில நேரங்களில் பிற நாளிதழ் செய்தியுடன் ஒப்பிட்டுக் கேட்கும்போது, பதில் கூறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அவரது உரை பிரதியில் அவர் எந்தக் குறிப்போ அல்லது திருத்தமோ எழுதாமல் என்னிடம் மீண்டும் கொடுக்கும்போது கலைஞர் முகத்தில் மலர்ச்சியைப் பார்க்கும்போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தலைப்பை அவரே எழுதிக் கொடுத்துவிடுவார். சொற்கள் மாறி இருந்தால் நான் இப்படிப் பேசவில்லையே என்று கூறியபடி அவரே திருத்துவார். பிழை இருந்தால் கவனிக்கவில்லையா என்பார். இவையெல்லாம் எனக்குப் பாடமாக இருக்கும். சில நேரங்களில் பிற நாளிதழ் செய்தியுடன் ஒப்பிட்டுக் கேட்கும்போது, பதில் கூறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்
அவரைச் சந்திக்கப் போகும்போது காலை நாளிதழ்களைப் படிக்காமல் போனால் அவர் கேட்பதற்கு பதில் சொல்ல முடியாமல் போகும் என்பதால் நாளிதழ்களைப் படிக்காமல் அவரைச் சந்திக்க மாட்டேன்.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வேல் காணாமல் போன மர்மம் நீடித்தது… அங்கு அப்போது பொறுப்பில் இருந்த அதிகாரி சுப்பிரமணியம் உயிரை போக்கிக் கொண்டார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இதற்காக நீதி கேட்டு கலைஞர் நெடும் பயணம் மேற்கொண்டார். 1982ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு கலைஞர் நடந்தே நெடும் பயணத்தைத் தொடங்கினார். ஏழு நாட்கள் நடை பயணம். கால்களில் கொப்புளங்கள் வந்தபோதும் அவர் நடைபயணத்தை நிறுத்தவில்லை.
மேலும் படிக்க: ஊடகங்களின் வழியே ஆட்சி கட்டிலுக்கு, திமுக கடந்துவந்த பாதை
காலில் கட்டுப்போட்டுக் கொண்டு திட்டமிட்டபடி நடை பயணத்தைத் தொடர்ந்தார். அவருடன் நடந்து வந்த திமுக முன்னணி பிரமுகர்களுடன் பேச்சு, நகைச்சுவை உரையாடல், நடந்தபடி நாளிதழ்களைப் படித்தல், மாலையில் பொதுக்கூட்டம் என தொடர்ந்து நிகழ்வுகள் இருக்கும். முரசொலி நிருபராக செய்தி சேகரிக்க நானும் ஏழு நாட்கள் கலைஞருடன் நடந்து சென்றது மறக்க முடியாத அனுபவம்.
திருச்செந்தூரை அவர் வந்தடைந்தும் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கலைஞர். சோர்வாக இருந்தாலும் பேட்டியை முடித்ததும் என்னைப் பார்த்து, நடைபயணச் செய்திகள் நன்றாக வந்திருந்தது என்று என்னைப் பாராட்டியது இன்றும் நினைவில் நிற்கிறது.
சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். வேகமாகப் பேசிக் கொண்டிருந்த கலைஞர், தனது பேச்சுக்கு இடையே காலை நாளிதழ் தேவை என்பது போல அங்குமிங்கும் பார்ததார். இதை உணர்ந்து கொண்ட நான், மேடைக்குச் சென்று என் கையில் இருந்த காலை நாளிதழை அவரிடம் கொடுத்தேன். பின்னர் அதிலிருந்த புள்ளி விவரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார். கூட்டம் முடிந்ததும் அவர் அங்கிருந்து புறப்பட்டார். நான் விரைந்து காரில் ஏறுவதற்குள் வேகமாக வாகனங்கள் புறப்பட்டுவிட்டன. என்ன செய்வது என்று யோசித்தப்படி கூட்டத்திடலில் நின்று கொண்டிருந்தேன்.
அங்கிருந்து சென்ற கலைஞர் சிறிது நேரத்தில் வழியில் வாகனங்களை நிறுத்தி, என்னைக் கூப்பிடச் சொல்லி இருக்கிறார். உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் நான் காரில் அழைத்து வரப்படாததை தயங்கியபடி கூறியதும், போய் அவரை அழைத்து வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன் என்று கலைஞர் சொல்லி இருக்கிறார். அதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டத் திடலுக்கு விரைந்து வந்து என்னை அவரிடம் அழைத்துச் சென்றனர். என்ன வேகமாகக் கிளம்பிவிட்டமோ என்று கேட்டு விட்டு புறப்பட்டார்.
பின்னர் மதியம் அவரச் சந்தித்தபோது, என் மீது தனி அக்கறையுடன் உடன் வருவதற்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் அன்போடு கேட்டது என்னை நெகிழ வைத்து விட்டது.
முதல்வராக இருந்தாலும் தானும் ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளும் கலைஞர், பத்திரிகையாளர்களின் பணிச்சூழலையும் சிரமங்களையும் அறிந்தவர். பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பொதுக்கூட்டங்களிலும் செய்தி சேகரிக்க வருபவர்களுக்கு முக்கியச் செய்தியைக் கிடைக்கச் செய்துவிடுவார்
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு விடுதலையான சில நாட்கள் கழித்து அறிவாலயத்தில் கலைஞரின் பிரத்யேக அறையில் அவரைத் தனிமையில் சந்திக்க அனுமதி கிடைத்தது. அப்போது நான் தினமணி நாளிதழின் செய்தியாளர். நான் உள்ளே சென்ற போது மெதுவாக நடந்து கொண்டிருந்தார். வணக்கம் கூறிட்டு நின்றதும், கலைஞர் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார். பின்னர், என்ன நடக்குதுய்யா என்றபடி பேச்சைத் தொடங்கினார்.
அவர் கேட்டிருந்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை அவரிடம் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்த அவர் கேட்டதற்கு நான் பதில் கூறினேன். பின்னர், உங்களது கைவலி எப்படி இருக்கிறது என்று தயங்கியபடி கேட்டேன். உடனே அவர், பார் என்றபடி தோள்பகுதி அருகே சட்டையை விலக்கிக் காண்பித்தார். அந்த இடம் கறுப்பாக இருந்தது. வலி இன்னமும் இருக்கிறது என்றபடி சட்டையைச் சரி செய்து கொண்டார்.
மேலும் படிக்க: கருணாநிதி இறந்த பிறகும் போராட்டம்: போராடி வென்ற திமுக
யாருக்கும் கிடைக்காத அபூர்வ தருணம் இது. இந்த அளவுக்கு என் மீதும் மதிப்பு வைத்திருந்தது கடைசி வரை குறையவில்லை. எந்த ஊரிலும் எப்போது பார்த்தாலும் அடையாளம் கண்டு பேசுவார்.
முதல்வராக இருந்தாலும் தானும் ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளும் கலைஞர், பத்திரிகையாளர்களின் பணிச்சூழலையும் சிரமங்களையும் அறிந்தவர். Ðபத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பொதுக்கூட்டங்களிலும் செய்தி சேகரிக்க வருபவர்களுக்கு முக்கியச் செய்தியைக் கிடைக்கச் செய்துவிடுவார். முதல்வராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் அவர் தரும் செய்தி தலைப்புச் செய்தியாகி அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்திவிடும்.
அந்தக் காலங்களில் இரவு நேரம் நடைபெறும் பொதுக் கூட்டத்தை அன்றைய இரவுப் பதிப்புக்கு நிருபர்கள் செய்தி கொடுக்கும் வகையில் கூட்டத்தில் தனது பேச்சை முடித்துக் கொள்வார். எந்த நேரத்திலும் காரில் ஏறும்போது, நிருபர்கள் ஏதாவது கேட்க விரும்பினால், காரில் ஏறாமல் காரின் கதவைப் பிடித்து நின்று கொண்டே பதில் சொல்வார்.
முக்கிய நிகழ்வுகள் குறித்து அவரது கருத்துகள் அறிக்கைகளாக வந்து விடும். இரவு நேரங்களில் நிருபர்கள் முக்கிய விஷயங்களில் அவரது கருத்துகளை அறிய தொலைபேசி மூலம் பேசினால் அந்த நேரங்களில் அவரே தொலைபேசியில் பேசுவார். சில நேரங்களில் முரசொலியில் அறிக்கை கொடுத்திருக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்.
ஏதேனும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் எதிர்நோக்கும் விஷயம் குறித்து யாரும் கேள்வி எழுப்பாவிட்டால் அவரே சுட்டிகாட்டி செய்தியாக்கும் கலையில் அவர் வல்லவர். பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியும் பதிலும் கலந்த சாதுரியத்தைப் பார்க்க முடியும். கேட்ட கேள்வியிலிருந்தே விடை சொல்லும் பாங்கு. குறுக்குக் கேள்விகள். ஒற்றை வரியில் நச்சென்ற பதில்கள். தலைப்புச் செய்திக்குரிய தகவல்கள் தரும் சாமார்த்தியம்.
இப்படி அவரது ஒவ்வொரு பேட்டியும் வித்தியாமான அனுபவம்தான். இத்தகைய தலைவர் கலைஞரின் பேச்சுகளை செய்தியாக்கித் தந்த அனுபவம் பலருக்குக் கிடைத்தாலும்கூட, கலைஞருடன் நெருங்கிப் பழக எனக்குக் கிடைத்த வாய்ப்பு அபூர்வமானது. அவை என்றும் எனது நினைவில் நிற்கும்.
Read in : English