Read in : English
காங்கிரஸ் கட்சியின் கர்நாடகத் தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டார் : ”பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.”
அவரது செய்தியின் இப்பகுதி ஊடகங்களில் பரபரப்பாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பாஜக கருத்தியலை நிராகரிப்போர் பலர் கொண்டாடித் தீர்த்தனர். வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கூட ஸ்டாலினை வழிமொழிந்தார்.
அது சரியான புரிதலாக எனக்குத் தெரியவில்லை. தேர்தல் என்றாலும் சரி மக்களின் மனநிலை என்றாலும் சரி, கர்நாடகத் தேர்தல் முடிவுகள் மூலம் ஒட்டுமொத்த தென்னகத்திலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டுவிட்டது என்று கருதுவது மிகையே.
தென்னகத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் வென்றால் கூட காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றும் என்பதற்கான உத்திரவாதம் ஏதுமில்லை
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்கள் எப்படியிருக்கும்? அதனைப் பொருத்தே நாட்டின் எதிர்காலம் அமையும். மோடி மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் அனைத்து தளங்களிலும் இந்து மேலாதிக்கம் தலைவிரித்தாடும். சிறுபான்மையினர் இரண்டாந்தரக் குடிமக்களாவர், அவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கும். மாறாக ஏதோ ஒருவித எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நல்லாட்சியோ என்னவோ, குறைந்தபட்சம் சமூகக் காழ்ப்புணர்வுகள், மோதல்கள் குறையக்கூடும்.
அந்தக் கோணத்தில் காங்கிரசின் கர்நாடகத் தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுகிறதா?
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 தொகுதிகளில், 22ஐ ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது, தெலுங்கு தேசம் மூன்றில் வென்றது.
மேலும் படிக்க: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: கர்நாடகம் காட்டும் பாடம்!
தெலங்கானாவில் மொத்தம் 17: தெலங்கானா ராஷ்டிர சமிதி-9, பாஜக-4, காங்கிரஸ்-3, முஸ்லிமீன்-1.
கர்நாடகம்-28: பாஜக-25, காங்கிரஸ், தேவகவுடாவின் ஜனதா தளம், சுயேச்சை தலா ஒன்று
கேரளம்–20: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-19, சிபிஎம்-1
தமிழ்நாடு-39: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-38, பாஜக கூட்டணியிலிருந்த அஇஅதிமுக-1
புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி காங்கிரசுக்குச் சென்றது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 இடங்க ளில் பாஜக மட்டுமே 301 இடங்களில் வெற்றி பெற்றது அக்கூட்டணி 329 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய முற்போக்கு அணிக்கோ வெறும் 109 இடங்கள். அதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 50 இடங்கள். ஆனால் தென்னகத்திலுள்ள மொத்தம் 130 தொகுதிகளில் பாஜக கூட்டணி 30 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் கர்நாடகத்தில் தான் இமாலய வெற்றி.
தற்போதைய முடிவுகள் அடுத்த ஆண்டு முப்பது இடங்களைக்கூட எட்டாது என்பதை நமக்குக் காட்டலாம். வேறு எந்த தென்மாநிலத்திலும் பாஜக வலிமையான நிலையில் இல்லை. ஆனால் இது ஒன்றே போதுமா நல்லிணக்கம் விரும்புவோர் மகிழ்ச்சியடைய? தென்னகத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளையும் வென்றால் கூட காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றும் என்பதற்கான உத்திரவாதம் ஏதுமில்லை.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெல்லக்கூடும், தமிழ்நாட்டில் திமுக வலிமையுடன் திகழ்கிறது, ஜெயலலிதா இல்லாத அ இஅதிமுகவின் செல்வாக்கு கேள்விக்குறிதான். பாஜக உள்ளாட்சித் தேர்தல்களில் ஏதோ ஒரு சில இடங்களில் வென்றிருந்தாலும் அது பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை, கேரளத்தில் சிபிஎம் வென்றாலும் அது காங்கிரஸ் கூட்டணியைத்தான் ஆதரிக்கப்போகிறது, ஆனால் ஆந்திரம், தெலங்கானாவில் 42 தொகுதிகள். அங்கே காங்கிரஸ் மிகுந்த நலிவுற்றுக்கிடக்கிறது. ஒய்.எஸ்.ஆர். கட்சியோ சந்திரசேகர் ராவ் கட்சியோ காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதற்கான சமிக்ஞைகள் ஏதுமில்லை.
அதுமட்டுமல்ல ராவ் தனது பக்தியை அல்லது இந்து மதப் பற்றை வெளிப்படையாகக் காட்டிக்கொள்பவர். ராஜசேகர் ரெட்டி கிறித்தவர் என்றாலும் மோடி ஆதரவாளரே. ஏதாவது வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய 40 அல்லது சற்றுக் குறைவான இடங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே எனலாம்.
கர்நாடகத்தில் கூட மோடியின் செல்வாக்கு ஒரேயடியாக வீழ்ந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. தலைநகர் பெங்களூருவில் மொத்தம் ஏழு தொகுதிகளில் ஐந்தில் பாஜக வென்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் இந்துத்துவம் இங்கே வேரூன்றவில்லை என்று வேண்டுமானால் ஓரளவு திருப்திப் பட்டுக்கொள்ளலாம். ஆனால் இந்நிலை தொடரும் என்று சொல்லிவிடமுடியாது.
ஒரு நிச்சயமற்ற சூழலே அனைத்து தளங்களிலும் நிலவுகிறது. எனவே திராவிடஸ்தானிலிருந்து பாஜக அகற்றப்பட்டுவிட்டது எனக் கொண்டாடுவதில் பொருளில்லை. கடக்கவேண்டிய தூரம் அதிகம்
நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக தலைமையிலான கூட்டணி வென்று மீண்டும் மோடி பிரதமராகிவிட்டால் அகில இந்திய அளவில் இந்து மேலாதிக்க உணர்வுகள் நிச்சயம் மேலும் வலுப் பெறும். கேரளா ஸ்டோரி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரத் திரைப்படமாகவே கருதப்படுகிறது. தென்னகத்தில் அது புறக்கணிக்கப்பட்டாலும் வட மாநிலங்களில் மக்கள் திரளாகக் கண்டு களித்திருக்கின்றனர். உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றிருக்கின்றது.
வரவிருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் வெற்றி ஒன்றும் உறுதி செய்யப்பட்டதல்ல. அப்படியே வென்றாலும் நாடாளுமன்றத் தேர்தல் எனும்போது மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதையும் துல்லியமாகக் கணக்கிடவியலாது.
மேலும் படிக்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான வெறுப்பு தீருமா?
எல்லாவற்றையும் விட ராகுல் காந்தி எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது அதிமுக்கியமானது. ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற பிறகு அதனை அவர் கண்டுகொள்வதே இல்லை, மற்ற மூத்த தலைவர்களிடம் விட்டுவிடுவார். விளைவு கட்சிக்குப் பெரும் பின்னடைவு என்பதே வரலாறு.
இப்போது ராஜஸ்தானில் உட்கட்சிப் பூசல் வளர்ந்துகொண்டே இருக்கிறது, சச்சின் பைலட் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. மிகப் பெரும் வெற்றி பெற்றும் கர்நாடக முதல்வரைத் தீர்மானிக்க காங்கிரஸ் மேலிடம் திணறிப் போய்விட்டது. இதன் தாக்கம் எப்படியிருக்கும்?
கூட்டணியமைக்க முன்வரும் கட்சிகள் எந்த அளவு இடங்களை விட்டுக்கொடுக்கும் என்பது அடுத்த கேள்வி.
ஒரு நிச்சயமற்ற சூழலே அனைத்து தளங்களிலும் நிலவுகிறது. எனவே திராவிடஸ்தானிலிருந்து பாஜக அகற்றப்பட்டுவிட்டது எனக் கொண்டாடுவதில் பொருளில்லை. கடக்கவேண்டிய தூரம் அதிகம்.
Read in : English