Read in : English

Share the Article

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கள்ளச் சாராய சாவுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச் சாராயச் சாவுகளால் திணறிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மரணம் அடைந்தவர்கள் அதிகம். அனைவரும் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதே நேரம் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் வட்டாரத்தில் உள்ள பெருக்கரணை கிராமத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதில் பெருக்கரணையில் இரண்டு பேரும், சுற்றியுள்ள இரண்டு கிராமங்களில் இரண்டு பேரும் அடக்கம். இங்கு பலியானவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். மரம் வெட்டுதல் போன்ற கூலி வேலைக்கு செல்பவர்கள்.

இந்த சம்பவத்தில் குடிப்பழக்கம் உள்ள பழங்குடிகளை வேலைக்கு அமர்த்துபவரே சாராயமும் வழங்குவதாக கூறப்படுகிறது. பழங்குடி குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளே இந்தத் தகவலை ஒப்புக்கொண்டுள்ளனர். குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையானதால், மொத்த வாழ்க்கையையும் இழக்கும் நிலை அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற போதைக்கு உட்படுத்துவது ஒரு வகை அடிமைத்தனம். அடிமைத்தனத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இது போன்ற அவல சம்பவங்களை தவிர்க்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் 14 பேர் இறந்துள்னர். 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலும் மீனவர்கள். தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். குடும்பத்துக்கு வருவாய் ஈட்டித் தந்த அந்த உறுப்பினர்கள் இறந்து போனதை அடுத்து, இப்போது அந்த குடும்பங்கள் நடுத்துதெருவில் நிற்கின்றன. ஊரே சுடுகாடாக மாறிவிட்டது.

குடிப்பவருக்கும் இந்த முறைகேடான சாராயம் புதிதல்ல… வழக்கமாக விற்கப்படுவதுதான். டாஸ்மாக் போல் அதுவும் நிறுவனமாக செயல்படுகிறது

கள்ளச் சாராயம் குடித்ததால் தான் இந்த நிலை. இது ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அந்த ஊரில் கேட்கின்றன. இது எத்தனை நாட்கள் இருக்கும் என்பதை கணிக்க முடியாது. எங்கும் அழுகையும் கண்ணீரும்தான். இந்த மரணங்களால் பலர் விதவையாகி உள்ளனர். இங்கு சாராயம் குடித்து இறந்த சங்கர் என்பவரின் மனைவி தேவகி, ‘அன்று சாராயம் குடித்து வந்து படுத்திருந்தார்.

இரவில் நெஞ்சு வலிப்பதாக கூறினார். கை, கால்கள் உதறல் எடுத்தது. செய்வதறியாது தவித்து நின்றேன். அக்கம் பக்கத்திலும் பல குடும்பங்களில் இதே நிலை ஏற்பட்டிருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் இறந்துவிட்டார்…’ என கண்ணீர் வடித்தார்.

மேலும் படிக்க: திருவண்ணாமலையில் கொத்தடிமை நிலையில் வெளி மாநில பழங்குடிகள்

இந்த கிராமத்தில் மக்கள் சாராயம் குடிப்பது புதிதல்ல. தொடர்ந்து குடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தினமும் அதிகாலை 3:00 மணிக்கு கடலுக்குச் செல்கின்றனர். முற்பகல், 11:00 மணிக்குள் தொழிலை முடிக்கின்றனர். மதிய உணவுக்கு பின் ஓய்வு எடுக்கின்றனர். மாலை, 5:00 மணிக்கு மேல் வேலை ஏதுமில்லை. பொழுதுபோக்கிற்காக குடிப்பழக்கம் தொடர்கிறது. இரவு வரை போதை தொடர்கிறது.

குடிப்பவருக்கும் இந்த முறைகேடான சாராயம் புதிதல்ல… வழக்கமாக விற்கப்படுவதுதான். டாஸ்மாக் போல் அதுவும் நிறுவனமாக செயல்படுகிறது. இங்கு குடித்தால் இப்படி ஆகும் என்று மக்களுக்கு உணர்வு இல்லை. இளைஞர்களையும் இந்த பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளது. இதிலிருந்து மீளும் வழிமுறை தெரியாமல் திணறி வருகின்றனர். அதற்கு நல்ல வழியை காட்ட முன் வர வேண்டும் அரசு .

கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு இழப்பீடுகளை தந்தது குறித்தும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பலக் கருத்துகள் கூறப்பட்டாலும், அரசுக்கு இதுவும் ஒரு வழக்கமாகிவிட்டது. கள்ளச் சாராய உயிரிழப்புகள் எதிரொலியாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விஷச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் ஆய்வாளர்கள் இருவர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள், செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் என ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிப்பது அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் அன்றாட கடமைகளின் ஒன்று. அதை முறையாக செய்யாததும் இந்த மரணங்களுக்கு காரணமாகிவிட்டது

இந்த கள்ள சாராய உயிரிழப்புகளுக்கு மெத்தனால் என்ற வேதிப்பொருளே காரணம் என்று கூறப்படுகிறது. தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வாங்கும் மெத்தனால் பயன்பாட்டை இவ்வாறு இடைத்தரகர்கள் பயன்படுத்துகின்றனர். தொழிற்சாலைகளில் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிப்பது அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களின் அன்றாட கடமைகளின் ஒன்று. அதை முறையாக செய்யாததும் இந்த மரணங்களுக்கு காரணமாகிவிட்டது.

இது போன்ற சாவுகளை தடுக்க வேண்டுமானால், முறையான சமூக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அரசு காட்டும் தற்போதைய தீவிரத்தை விட்டுவிடக்கூடாது. கள்ளச்சாராயத்துக்கு எதிராகத் தொடர்ச்சியான கண்காணிப்பும் நடவடிக்கைகளும் தேவை. அத்துடன், நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க அரசு அரசியல் உறுதியுடன் செயல்பட வேண்டும்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles