Read in : English
தனித்துவமான பிராந்தியங்களையும் சாதி சமன்பாடுகளையும் கொண்ட ஒரு பன்முகக் கலாசாரச் சமூகத்தின் வரலாற்றை கர்நாடகம் மீட்டெடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டசபைத் தேர்தல்கள் சொல்லும் செய்தி இதுதான். ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற ஒற்றை முகத்தைக் கர்நாடகத்தில் திணிக்கப்பார்த்த பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டன.
கர்நாடகத்தைப் போலல்லாமல், தமிழ்நாடு ஒரு மாநிலமாகக் கூடி இணைந்து தேர்தல்களில் வாக்களித்து வந்திருக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் கடந்த இரண்டு தேர்தல்கள், அரசியல் தேர்வுகளில் அசல் துணை பிராந்திய வேறுபாடுகள் வலுவடைந்து வருவதைக் காட்டுகின்றன.கட்சிகள் தேர்தலை அணுகும் விதம் தமிழகத்திலும் ஏற்படவிருக்கும் அரசியல் போக்குகளுக்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம்.
கலாசாரம், வாழ்வாதாரங்கள், மொழி, வட்டாரப் பேச்சு வழக்குகள் மற்றும் மத நடைமுறைகளில் பன்முகத்தன்மைக்குக் கர்நாடக மாநிலம் பெயர் பெற்றது. முதல் அரசியல் நிர்ணய சபை கூட்டத்திற்குப் பிறகு, 1950-ஆம் ஆண்டில் மாநில எல்லைகள் வரையறுக்கப்பட்டபோது, மகாராஷ்டிரா, தமிழ்நாடு (மெட்ராஸ் மாகாணம்) மற்றும் ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து கர்நாடகம் பிரித்தெடுக்கப்பட்டது.
இப்பகுதிகள் பம்பாய் கர்நாடகம், ஹைதராபாத் கர்நாடகம் மற்றும் மதராஸ் கர்நாடகம் என்று அழைக்கப்பட்டன. காலப்போக்கில், இந்தப் பகுதிகள் பல்கிப் பெருகியுள்ளன. இன்றைய கர்நாடக மாநிலம், கித்தூர் கர்நாடகம், கல்யாண கர்நாடகம், மத்திய கர்நாடகம், கடலோர கர்நாடகம், பழைய மைசூர் மற்றும் பெங்களூர் மண்டலங்களால் ஆனது.
ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற ஒற்றை முகத்தைக் கர்நாடகத்தில் திணிக்கப் பார்த்த பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டன
பாஜக தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்ட கடலோர கர்நாடகத்தைத் தவிர ஐந்து மண்டலங்களில் இந்துத்துவா தோல்வியடைந்தது என்பதுதான் பாஜகவை வாட்டி வதைக்கும் கேள்வி. இந்த மண்டலத்தில் பில்லவர்கள் (கள் இறக்குபவர்கள்), பண்டுகள் (நில உரிமையாளர்கள்), மொகவீரர்கள் (மீனவர்கள்) மற்றும் குலாலர்கள் (குயவர்கள்), விஸ்வகர்மாக்கள் (தங்கம், வெள்ளி உருக்குபவர்கள்), தேவாங்கர்கள் (கோயில் திருவிழாக்களில் பணியாற்றுபவர்கள்), தேவடிகர்கள் (மேளதாளங்கள் மற்றும் தாள வாத்தியங்கள் வாசிப்பவர்கள்), கனிகர்கள் (எண்ணெய் தயாரிப்பவர்கள்) ஆகிய மைக்ரோ ஓபிசி-கள் வசிக்கின்றனர்.
மேலும் பிராமண உள் சாதிப் பிரிவினர்களான மத்துவாக்கள், ஷிவாலிக்கள் மற்றும் ஹவ்யகர்கள் ஆகியோரும் இந்த மண்டலத்தில் வசிக்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு ’பெரும் மோடி அலை’ வீசியபோது இந்தச் சமூகத்தினர் பாஜகவை பெருமளவில் ஆதரித்தனர். 2018-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த இந்தச் சமூகத்தினரின் வாக்கு 60 சதவீதத்திற்கும் மேலாகப் பதிவானது. ஆனால் இந்த 2023 தேர்தலில் பாஜகவின் வாக்குச் சதவீதம் வெறும் 30 சதவீதமாக குறைந்து போனது.
மேலும் படிக்க: கர்நாடகத்தில் அண்ணாமலை அரசியல்!
இதேபோல், கடலோர மண்டலங்களின் வடக்கு பகுதிகளில், முக்கியமாக உத்தர கன்னட மாவட்டம், மற்றும் கிட்டூர் மற்றும் கானாப்பூரில், மகாராஷ்டிராவின் செல்வாக்கு, குறிப்பாக மராத்திய ஷத்திரியர்களின் (மைக்ரோ ஓபிசி) செல்வாக்கு குறிப்பிடத்தக்கது; குறிப்பாக ஹலியால், தண்டேலி, சித்தபுரா, எல்லாப்பூர் மற்றும் கும்தாவில் அந்தச் செல்வாக்கு அபரிமிதமாக இருக்கிறது.
ஹலியால் மற்றும் சிர்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும் காங்கிரஸ் இடையே காங்கிரஸ் வாக்குகள் பிரிக்கப்பட்ட போதிலும், பாஜகவுக்குப் பயன் ஒன்றுமில்லை. உத்தர கன்னடா மாவட்டத்தில், பட்கல், ஹலியால், சிர்சி, கித்தூர் மற்றும் கானாப்பூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி மிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளையும் விட, பழைய மைசூர் பகுதிக்கான தேர்தல் போர்தான் மிக உக்கிரமாக இருந்தது. சாம்ராஜ்நகர், மைசூரு, மாண்டியா, தும்கூரு, பெங்களூரு ஊரகம், ராமநகரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் சுமார் 45 தொகுதிகள் உள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவியது.
மாண்டியாவின் வறண்ட பகுதிகளான மேல்கோட்டை, நாகமங்களா, மத்தூர் போன்ற பகுதிகளில், கேஆர்ஆர்எஸ் மற்றும் சர்வோதய கர்நாடகா கட்சி (எஸ்கேபி) போன்ற விவசாய அமைப்புகள் செல்வாக்குடன் உள்ளன. கேஆர்ஆர்எஸும் எஸ்கேபியும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை, ஆனால் அன்றைய அரசாங்கத்திற்கு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவை அளிக்கின்றன.
இது ஒக்கலிகர்களின் கோட்டை என்றாலும், சாதி அடிப்படையில் இந்தப் பகுதியில் காங்கிரஸால் ஊடுருவ முடியவில்லை. விவசாயம், நீர் பாதுகாப்பு, சலுகைகள் மற்றும் ஒட்டுமொத்த மத உணர்வுகள் போன்ற பிரச்சினைகளின் அடிப்படையில் பாஜக சாதியைத் தாண்டி பரப்புரை நிகழ்த்தியது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்தப் பகுதிக்கு வருகை தந்தனர்.
மைசூரில் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் சிறப்பான செயல்பாட்டைக் காட்டினாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் அந்தப் பகுதியில் அதிகரித்துள்ளது. அதாவது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகளில் ஏற்பட்ட சரிவு பாஜகவுக்கு நன்மை அளித்துள்ளது.
கர்நாடகம் முழுவதும் சுமார் 72 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் கணிசமான பங்கை வகித்தன. அவர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காமல், பிளவுப்படுத்தாமல் பார்த்துக் கொண்டது பாஜகவின் தோல்விக்கு வழிவகுத்தது
காங்கிரஸ் வெற்றியில் தமிழர்களுக்கும் பங்கு உண்டு என்று கூறலாம். பெரும்பாலும் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் திமுகவும், அஇஅதிமுகவும் இந்தத் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆதலால் தமிழர்கள் மொத்தமாக காங்கிரஸுக்கு வாக்களித்தனர். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பெங்களூரு பகுதியில் பலமுறை பிரச்சாரம் செய்தார் என்பது வேறு விஷயம். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் கூற்றுப்படி, மூன்று பெங்களூர் தொகுதிகளிலும், கோலார் மற்றும் முலாபாகிலு தொகுதிகளிலும் சுமார் 1.1 லட்சம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.
கர்நாடகம் முழுவதும் சுமார் 72 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் கணிசமான பங்கை வகித்தன. அவர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காமல், பிளவுப்படுத்தாமல் பார்த்துக் கொண்டது பாஜகவின் தோல்விக்கு வழிவகுத்தது.
”சுமார் 72 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு முழுக்க முழுக்க எங்கள் வாக்குகளே காரணம். நாங்கள், ஒரு சமூகமாக, காங்கிரஸுக்கு நிறைய கொடுத்துள்ளோம். இப்போது நாங்கள் பதிலுக்கு எதையாவது பெற வேண்டிய நேரம் இது. ஒரு முஸ்லிம் துணை முதல்வரும், உள்துறை, வருவாய், கல்வி போன்ற நல்ல துறைகளைக் கொண்ட ஐந்து அமைச்சர்களும் எங்களுக்குத் தேவை. இதற்காக எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு. இவை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக சன்னி உல்மா வாரிய அலுவலகத்தில் நாங்கள் அவசரக் கூட்டத்தை நடத்தினோம்” என்று கர்நாடக வக்ஃப் போர்டு தலைவர் ஷாஃபி சாடி கூறினார்.
மேலும் படிக்க: மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?
அதேநேரம், தேர்தலின் போது தமிழ்நாடு ஏதாவது ஒரு திராவிடக் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிக்கிறது. என்றாலும், மாநிலம் தழுவிய கட்சிகளில் துணை பிராந்தியங்களின் ஆதரவுத் தளங்கள் இருக்கின்றன என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
காவிரி டெல்டா பகுதியிலும், வட தமிழகத்திலும் திமுக முதலில் வளர்ந்தது. தெற்கு, மேற்கு உள்ளிட்ட பிற பகுதிகளில் காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தது. திமுகவிலிருந்து பிரிந்து பிறந்த அஇஅதிமுக மேற்கிலும், தெற்கிலும் தேசியவாத, திராவிடரல்லாத வாக்குகளை பெறும் அளவுக்கு வளர்ந்தது.
2021-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அஇஅதிமுக தோல்வி அடைந்தாலும், அந்தக் கட்சியை மேற்குத் தமிழகம் காப்பாற்றியது. எடப்பாடி பழனிசாமி மூலம் ஒட்டுமொத்தக் கட்சியிலும் மேற்குத் தமிழகத்தின் பிரதானமான சாதி ஆதிக்கம் செலுத்தும் என்ற அச்சத்தால், தென்தமிழ்நாடு அஇஅதிமுகவை ஆதரிக்கவில்லை. அஇஅதிமுகவின் வாக்குவங்கியை அந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள பாஜக கடும் பிரயத்தனம் செய்கிறது.
சிக்கல்களில் ஊடாடும் இந்த அரசியல் ஆட்டங்களை எல்லாம் பார்க்கும்போது, எதிர்காலத்தில் தமிழ்நாடு கர்நாடகத்தைப் போல அதிகமாக தோற்றமளிக்கும் என்றே தோன்றுகிறது.
Read in : English