Read in : English

இந்த ஆண்டு (2023) ஏப்ரல் முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பதைச் சாதிப்பதன் மூலம் புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டு முதல் நாடுதழுவிய அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, இந்தியாவின் எத்தனால் உற்பத்தித்திறன் கரும்பு சார்ந்த சாராய ஆலைகளிலிருந்து 426 கோடி லிட்டராகவும், தானிய அடிப்படையிலான சாராய ஆலைகளிலிருந்து 258 கோடி லிட்டராகவும் உள்ளது.

2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எத்தனால் சந்தை ரூ.40,593 கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, தொழில்துறை நோக்கங்களுக்காக அமெரிக்காவின் எத்தனாலை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோல் (இபிபி) திட்டத்திற்காக வழங்கப்படும் எத்தனால் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்திற்கு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், முதலீடுகளை எளிதாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் புதிய கொள்கைகளை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் வளர்ந்துவரும் தொழில்களின் நன்மைகளைப் பெற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்திய முயற்சி எத்தனால் கலப்பு கொள்கை 2023.

கரும்பு தவிர பல்வேறு உணவு தானியங்களிலிருந்து தூய்மையான எரிபொருளை உருவாக்க தமிழ்நாடு உருவாக்கியிருக்கும் கொள்கை இது. 130 கோடி லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட மோலாசஸ்/உணவு தானிய அடிப்படையிலான எத்தனால் ஆலைகளை நிறுவ ரூ.5,000 கோடி மதிப்புள்ள புதிய முதலீடுகளை ஈர்ப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

130 கோடி லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட மோலாசஸ்/உணவு தானிய அடிப்படையிலான எத்தனால் ஆலைகளை நிறுவ ரூ.5,000 கோடி மதிப்புள்ள புதிய முதலீடுகளை ஈர்ப்பதை தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது

இந்தியாவிலேயே அதிக வாகன உற்பத்தி செய்யும் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2024-25 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பெட்ரோல் தேவை 474 கோடி லிட்டராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில எத்தனால் கொள்கையின்படி, 2021-22-ஆம் ஆண்டில், உத்தரபபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக மோட்டார் ஸ்பிரிட் (எம்எஸ்) பெட்ரோல் நுகர்வில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது (சுமார் 2.7 மில்லியன் மெட்ரிக் டன், அதாவது 3.8 பில்லியன் லிட்டர்).

”பசுமைக்குடில் வாயு (ஜிஎச்ஜி) உமிழ்வுகளில் தமிழகத்தின் போக்குவரத்துத் துறை கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதால், மாநிலத்தில் எதிர்பார்க்கப்படும் வாகனங்களின் வலுவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் செலவு குறைந்த மாற்று பசுமை எரிபொருளுக்கு மாற வேண்டிய உடனடி தேவை உள்ளது,” என்பதை புதிய மாநில எத்தனால் கலப்புக் கொள்கை சரியாகவே சொல்லியிருக்கிறது.

மேலும் படிக்க: நெல் தரும் வைக்கோலில் எத்தனால் உற்பத்திப் புரட்சியை உருவாக்கலாம்

உயிரி எரிபொருள்களுக்கான தேசியக் கொள்கை (2018), விவசாய எச்சங்கள் (நெல் வைக்கோல், பருத்தித் தண்டு, சோளத் துண்டுகள், மரத்தூள், சக்கை போன்றவை) உள்ளிட்ட பல்வேறு தீவன இருப்பிலிருந்து செய்யப்படும் எத்தனால் உற்பத்தியை வலியுறுத்துகிறது; மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, அழுகிய உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து கொண்ட பொருட்களிலிருந்தும், கரும்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு தவிர சேதமடைந்த உணவு தானியங்களிலிருந்தும் எத்தனால் உற்பத்தி செய்வதை அந்தத் தேசிய கொள்கை சொல்லியிருக்கிறது.

தமிழ்நாடு மாநில எத்தனால் கொள்கையில் ஊட்டப்பொருளாக அடையாளம் காணப்பட்ட ஒரு முக்கிய உணவு தானியம் மரவள்ளிக்கிழங்கு ஆகும், இது மாவுச்சத்து நிறைந்த கிழங்குகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.

தற்போது தமிழ்நாட்டில் எத்தனால் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு இல்லை, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு எத்தனாலைப் பெற்றுக் கொள்கிறது. ஆண்டுக்கு 17.4 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 மொலாசஸ் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இதனால், மரவள்ளிக்கிழங்கு போன்ற உணவு தானியங்களை அடிப்படையாகக் கொண்ட பயோ எத்தனால் ஆலைகளை நிறுவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மரவள்ளிக்கிழங்கில் அதிக மாவுச்சத்து உள்ளது (25 முதல் 35%); மேலும் குறைந்த மேலாண்மை நிலைமைகளில் வளரும் திறன் கொண்ட பயிர் அது. அதனால் பயோ எத்தனால் உற்பத்திக்கான சாத்தியமான தீவனப்பொருளாக மரவள்ளிக் கிழங்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில் சுமார் 80% தமிழ்நாட்டில் இருக்கிறது. மொத்தம் 91,506 ஹெக்டேரில் இருந்து 38.93 லட்சம் டன் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்கிறது தமிழ்நாடு என்று மாநில எத்தனால் கொள்கை எடுத்துரைக்கிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கடலூர், விழுப்புரம், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்தக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆதலால் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்ட மாவு மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள் செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதில் ஆச்சரியமில்லை.

கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை இந்தியாவில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் சுமார் 96% பரப்பளவையும், 98% பங்கையும் கொண்டுள்ளன. இந்தக் கிழங்கு பெரும்பாலும் மாவுச்சத்தைப் பிரித்தெடுப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டாலும், மதிப்பு கூட்டப்பட்ட மரவள்ளிக் கிழங்குத் தயாரிப்புகளுக்கான் ஏற்றுமதிச் சந்தைகளில் கேரளா அடியெடுத்து வைத்துள்ளது.

கேரளாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மசாலாவுடன் பதப்படுத்தப்பட்ட மரவள்ளிக்கிழங்கிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது. இந்திய மரவள்ளிக்கிழங்கை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகள் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் நெதர்லாந்து ஆகும்.

தற்போது தமிழகத்தில் எத்தனால் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு இல்லை, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் எத்தனாலைப் பெற்றுக் கொள்கிறது

மரவள்ளிக்கிழங்குச் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு முன்வராத நிலையில், ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான உபரி உற்பத்தியை பயோ எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தலாம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்கான புதிய நொதி தொழில்நுட்பத்தை திருவனந்தபுரத்தில் உள்ள சிடிசிஆர்ஐ உருவாக்கியிருக்கிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறையில் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. 1990-களின் பிற்பகுதியில் பாலக்காட்டில் அமைக்கப்பட்ட ஓர் ஆலையால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிப்பில் வெற்றிபெற முடியவில்லை.

மேலும் படிக்க: நெய்வேலி விரிவாக்கத் திட்டம்: பாமக எதிர்ப்பு சரியா?

அதனால் கேரள அரசு தனது 2022 பட்ஜெட்டில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து எத்தனால் உற்பத்தி ஆராய்ச்சிக்கும், உற்பத்திக்கும் ரூ .2 கோடியை ஒதுக்கியது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், சுபிக்ஷா கேரளம் திட்டத்தின் கீழ் அபரிமிதமாக மரவள்ளிக்கிழங்குச் சாகுபடி செய்துவரும் மாநில விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சேலம் அருகே உள்ள ஏத்தாப்பூரில் மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கியது. ”அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தை, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் உயிரி எரிபொருட்கள் ஆய்வை, முக்கிய பூச்சிகளைக் கண்காணித்தல் மற்றும் மேலாண்மையை வளர்த்தெடுக்கும்” நோக்கத்துடன் உருவானது அந்த நிறுவனம். இருப்பினும், மரவள்ளிக்கிழங்கு மதிப்பு கூட்டல் விசயத்தில் அந்த ஆராய்ச்சி நிலையம் குறிப்பிடத்தக்க பணிகள் எதையும் செய்யவில்லை என்று தெரிகிறது.

தமிழ்நாட்டின் எத்தனால் கலப்புக் கொள்கை, ”உள்நாட்டில் கிடைக்கும் வேளாண் மைய வளங்களின் அடிப்படையில் உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை ஊக்குவித்தல், இந்த வளங்களை விரிவுபடுத்துதல் மற்றும் உபரி மற்றும் சேதமடைந்த விளைபொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தின் இயற்கை வளங்களுக்கு அதன் மதிப்புக் கூட்டலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” மேலும், ”இறக்குமதி விலை அதிர்ச்சிகளை ஓரளவு தவிர்க்கவும், மாசுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும், விவசாய உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் உள்நாட்டு ஆதாரங்களைப் பயன்படுத்தி தமிழ்நாடு மாநிலத்திற்குள் உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்,” என்று கொள்கை கூறுகிறது.

தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கை 2023-ன் முக்கிய குறைபாடு என்னவென்றால், உணவு தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்திக்கான குறிப்பிட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்களை அடையாளம் காணவில்லை என்பதுதான். எத்தனால் உற்பத்தியின் ஒரே வழிமுறை மொலாசஸிலிருந்து மட்டுமே.

இந்த விசயத்தில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை முந்தியுள்ளன,.ஆந்திரா மற்றும் ஹரியானாவில் தலா 15 உணவு தானிய அடிப்படையிலான எத்தனால் ஆலைகளும், மகாராஷ்டிராவில் 28, பஞ்சாபில் 18, கர்நாடகாவில் 6 மற்றும் பீகாரில் 5 ஆலைகளும் உள்ளன.

தனது விவசாய உற்பத்தி வளத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு எத்தனால் கலப்புக் கொள்கையை அறிவிப்பவதற்கு முன்பாக, எத்தனால் உற்பத்தி செய்வதற்கான உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை அடையாளங்காண ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்த நிலையில், எத்தனால் கலப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல், சர்க்கரைத் தொழிலுக்கு புத்துயிர் அளித்தல், குறைந்த செலவில் பசுமை எரிபொருட்களுக்கான முதலீட்டு மையமாக மாநிலத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களில் எந்த அர்த்தமும் இல்லை; ஆழமும் இல்லை.

(கட்டுரையாளர் ஒரு பொருளாதார வல்லுநர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival