Read in : English
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு அங்கக வேளாண்மைக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இந்த முன்முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது என்றாலும், உண்மையிலேயே ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வை இந்த கொள்கைக்கு உள்ளதா?
தொழிற்புரட்சிக்கு முன்பும், ரசாயனங்கள் பெருமளவில் உற்பத்தியாவதற்கு முன்பும், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற செயற்கை இடுபொருட்கள் வேளாண்மைக்குள் வருவதற்கு முன்பும், இந்தியாவில் விவசாயம் இயற்கை வேளாண்மையாகத்தான் இருந்தது. இந்தியாவில், குறிப்பாக, சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியம் பசுமைப் புரட்சிக்கு வழிவகுத்தது. மேலும் வேளாண் விளைபொருட்களை அதிகரிக்க ரசாயன இடுபொருட்கள் பெரிய அளவில் பயன்படுத்தப் பட்டது.
இருப்பினும், காலப்போக்கில், வேளாண்மையில் ரசாயனங்களைப் பயன்படுத்துவது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், உணவு உற்பத்திக் களங்களைச் சுற்றியுள்ள இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பபட்டது. இந்த விழிப்புணர்வால், இயற்கை முறையில் உணவு சாகுபடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு அங்கக வேளாண்மைக் கொள்கையை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் விவசாயத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, இடைத்தரகர்கள் வந்ததால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான தொடர்பு முறிந்தது. மேலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் விவசாயக் கொள்கைகளுக்கும் விவசாய சமூகத்தின் பாரம்பரிய அறிவுக்கும் இடையில் ஒரு பரந்த இடைவெளி ஏற்பட்டது, விதைகள் தேர்வு, காலநிலை மண்டலங்கள் மற்றும் பருவங்களை அடிப்படையாகக் கொண்ட சாகுபடி, மண் ஆரோக்கியத்தை பராமரித்தல் மற்றும் வழங்கப்படும் சலுகைகள், மானியங்கள் ஆகிய விசயங்களில் இந்த இடைவெளி உருவானது.
இடைத்தரகர்கள் வந்ததால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான தொடர்பு முறிந்தது… ரசாயன அடிப்படையிலான விவசாயம் வழக்கமானதற்கும், இயற்கை விவசாயம் வெறும் விதிவிலக்காக மாறியதற்கும் அரசாங்கங்களின் கொள்கைகளே காரணம்
எனவே, ரசாயன அடிப்படையிலான விவசாயம் வழக்கமானதற்கும், இயற்கை விவசாயம் வெறும் விதிவிலக்காக மாறியதற்கும் அரசாங்கங்களின் கொள்கைகளே காரணம், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு எங்கும் பரவியதால் மக்களிடையே கொடிய சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. தமிழ்நாட்டில் 93% க்கும் மேற்பட்ட விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாயத்தை லாபகரமானதாக, நிலையானதாக மாற்றுவதற்கு நடைமுறைக் கொள்கைகள், திட்டங்கள் வேண்டும்.
அங்கக வேளாண்மைக் கொள்கை யை உருவாக்குவதற்கு முன்பு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆலோசனை நடத்தியதாக மாநில அரசு கூறினாலும், மாநிலத்தில் உள்ள விவசாயம் சம்பந்தமானவர்களுடன் குறிப்பிடத்தக்க ஆலோசனைகளை நடத்தவில்லை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் உள்ள எந்தப் பிரிவு இந்தக் கொள்கையை உருவாக்கியது என்பது கூட நமக்குத் தெரியாது.
மேலும் படிக்க: இயற்கை வேளாண்மைக் கொள்கை பலன் தருமா?
இதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில், விவசாய சமூகத்திடமிருந்து எந்த வகையான பின்னூட்டங்கள், ஆலோசனைகள் பெறப்பட்டு அவை கொள்கை வடிவமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். 31,629 ஹெக்டேர் இயற்கை விவசாய நிலத்தைக் கொண்டிருக்கும் தமிழகம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் மாநிலங்களில் 14 வது இடத்தில் உள்ளது என்று கொள்கை ஆவணம் தெரிவிக்கிறது. இதில் அங்ககச் சான்றளிக்கப்பட்ட 14,086 ஹெக்டேர் நிலங்களும், அங்கக வேளாண்மைக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் 17,542 ஹெக்டேர் நிலங்களும் அடங்கும். இயற்கை விவசாயத்தின் மொத்த பரப்பளவில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளன.
வேளாண், வன விளைபொருட்கள் உட்பட மொத்தம் 24,826 டன் இயற்கை விவசாய உற்பத்தியைக் கொண்டிருக்கும் தமிழகம், 11வது இடத்தில் உள்ளது. 2020-2021-ஆம் ஆண்டில் 4,223 டன் இயற்கை வேளாண் விளைபொருட்களை மாநில அரசு ஏற்றுமதி செய்து ரூ .108 கோடியை ஈட்டியது.
இருப்பினும், ஜூலை 26, 2022 நிலவரப்படி, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 52,305.73 ஹெக்டேர் அங்கக வேளாண் பண்ணைகள் உள்ளன. தேசிய அங்கக வேளாண்மை உற்பத்தி திட்டத்தால் (என்பிஓபி) சான்றளிக்கப்பட்டவை அவை. பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் (பிஜிஎஸ்) கீழ் சான்றளிக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் நிலங்கள் மொத்தம் 8,240.00 ஹெக்டேர் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
2015-16 முதல் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (பிகேவிஒய்) மூலம் நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. உற்பத்தி முதல் சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்துதல் வரையிலான முழுமதிப்புச் செயற்பாடுகளிலும் இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் ஆதரவை வழங்குகிறது. பதப்படுத்துதல், பேக்கிங், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய விசயங்களிலும் இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 2, 2022 நிலவரப்படி, தமிழ்நாட்டில் 4,000 ஹெக்டேர் பரப்பளவில் 200 இயற்கை விவசாயத் தொகுப்புகள் உள்ளன, இதன் மூலம் 10,000 விவசாயிகள் பயனடைகின்றனர். ஆனால் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யாமல், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களின் பல்வேறு மாதிரிகளைப் பார்க்காமல், மாநில அரசின் கொள்கை அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
முக்கிய அளவுகோல்களுடன், முயற்சிகளுடன் அடையக்கூடிய இலக்குகளுடன் ஒரு தெளிவான வரைபடத்தைக் கட்டமைக்க இந்தக் கொள்கை தவறிவிட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல பயிர்களை உற்பத்தி செய்வதில் பல்வேறு தரப்பினர் பின்பற்றும் தற்போதைய சிறந்த நடைமுறைகளைக் குறிப்பிடத் தவறியதால், இந்த கொள்கை தரமான அல்லது அளவுரீதியான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இயற்கை விவசாயத்தின் அடிப்படை நிலையான கொள்கைகள் ஆவணத்தில் விளக்கப்படவில்லை.
இயற்கை வேளாண்மை முறையை அதிக அளவில் விவசாயிகள் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேவேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை விளக்கத் தவறிவிட்டது
நச்சு இல்லாத வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்காக, சரியான பண்ணை உள்ளீடுகளைக் கொண்டு மண் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது? சந்தை இணைப்புகளை மேம்படுத்துவதில் தனியார் துறை எவ்வாறு பங்கேற்க முடியும்? இதுபோன்ற விசயங்களை உள்ளடக்கிய முழுமையான இயற்கை வேளாண்மை மேலாண்மையில் இந்த கொள்கை போதுமான கவனம் செலுத்தவில்லை.
அங்கக வேளாண்மைக் கொள்கையின் நோக்கங்கள் விவசாயத் துறை எதிர்கொள்ளும் சவால்களுடன் பொருந்தவில்லை. மேலும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் யதார்த்தமானவை அல்லது நம்பத்தகுந்தவை அல்ல. உதாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு அதிகமான உற்பத்தித்திறன் என்ற நோக்கில் செய்யப்படும் தீவிர விவசாயத்தில் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வழக்கத்தை ஆரோக்கியமான, நிலையான உணவு உற்பத்தி முறைக்கு மடைமாற்றம் செய்வதற்கான தீர்வுகள் எதுவும் முன்மொழியப்படவில்லை.
மேலும் படிக்க: புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய்!
2022 ஆம் ஆண்டில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் மாநில வேளாண்மைத் துறையும் சாகுபடிக்காக 17 புதிய பயிர் வகைகளை வெளியிட்டன. இந்த வகைகள் இயற்கை விவசாயத்திற்கு பொருத்தமானவையா அல்லது உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு விவசாயம் செய்வதற்கானவையா என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இந்த 17 புதிய பயிர் வகைகள் ”விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை” நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று மட்டுமே கூறப்பட்டது.
அதேபோன்று, இயற்கை வேளாண்மை முறையை அதிக அளவில் விவசாயிகள் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் பல்வேவேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை விளக்கத் தவறிவிட்டது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் ஒரு வலுவான இயக்கமாகச் செயற்படுகிறது. ஆனால் அதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊக்கத்தொகைகள் மூலம் மாநிலக் கொள்கை போதுமான ஆதரவை வழங்கவில்லை.
“பசுந்தாள் உரம் மற்றும் உறைப்பயிர்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படும்; மானாவாரி விவசாயம், தோட்டக்கலை, வேளாண்மை சுற்றுச்சூழல் கட்டமைப்பு, , வேளாண் காடு வளர்ப்பு, பண்ணை-காடு வளர்ப்பு, பால்வளம், மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற அனைத்து இயற்கை சார்ந்த செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து பண்ணைக்குள் வள மறுசுழற்சி ஊக்குவிக்கப்படும்” என்று முன்மொழியப்பட்ட கொள்கை உத்திகள் சொல்கின்றன.
ஆனால் இந்த உத்திகள் இயற்கை விவசாயத்தின் வளர்ச்சியை எவ்வாறு ஊக்குவிக்கும்; எவ்வாறு நிலையானதாக மாற்றும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மரபணு மாற்றப்படாத விதைகளை வளர்த்தெடுக்கும் விதத்தில் புதிய விதைகள் சம்பந்தமாக தனியார் துறை நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது, விவசாயிகளுக்கு நன்மைதரும் அங்கக விதைகள் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது, சிறிய மற்றும் நடுத்தர அங்கக வேளாண்மை விவசாயிகள் சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பெறுவதற்கு வழிவகுப்பது, இயற்கை விவசாய சந்தைகளை இடைத்தரகர்கள் இல்லாமல் ஒருங்கிணைப்பது – இவையெல்லாம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பயனுள்ள செயல் அம்சங்கள். ஆனால் இந்தச் செயல் அம்சங்கள் அரசுக் கொள்கையில் இடம்பெறவில்லை.
இந்தப் புதிய அங்கக வேளாண்மைக் கொள்கை இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில் மதிப்புமிகு இணைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்
உதாரணமாக, இந்திய விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட கடுகு சாகுபடி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இருக்கும் ஒரு பிரச்சினை. எனவே, தமிழ்நாடு போன்ற ஒரு மாநில அரசு, முறையான ஆய்வுகள் மற்றும் அறிவியல்ரீதியான தகவல் தொடர்புகள் இல்லாமல் தனது கொள்கை ஆவணங்களில் அதைப் பற்றிக் கருத்து தெரிவிக்கவோ அல்லது குறிப்பிடவோ கூடாது.
மரபணு மாற்றப்பட்ட கடுகைக் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கையை மாநில இயற்கை விவசாயக் கொள்கை மூலம் எதிர்க்க வேண்டும் என்று விமர்சகர்கள் கோரிக்கை விடுத்தாலும், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது நியாயமானதல்ல.
எவ்வாறாயினும், வேளாண்மை விதைகளில் அரசாங்கங்களின் பங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இந்தியாவில், விதை உற்பத்தியில் பொதுத் துறையின் பங்கு 2017-18 ஆம் ஆண்டில் 42.72 சதவீதத்திலிருந்து 2020-21-ஆம் ஆண்டில் 35.54 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் துறையின் பங்கு 57.28 சதவீதத்திலிருந்து 64.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட சுமார் 540 தனியார் விதை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சுமார் 80 நிறுவனங்கள் தங்கள் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளன.
எனவே, புதிய விதை ரகங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உண்மையில் பொதுத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, அங்கக வேளாண்மை விதைகளைப் பெறுவதற்கான சவாலைச் சமாளிப்பதற்கான வழிகளையும், சில விதை உற்பத்தி நிறுவனங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சில பொருட்களுக்கு விலை வரம்புகளை விதிப்பதற்கான வழிகளையும் தமிழக அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
மத்திய அரசின் வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தின் தரவுகளின்படி, தமிழகம் 2020-21 ஆம் ஆண்டில் 4,965 டன் சிறுதானியங்களையும், 2021-22 ஆம் ஆண்டில் 4,328 டன் சிறுதானியங்களையும் ஏற்றுமதி செய்துள்ளது. சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் சிறுதானியங்களுக்கு உள்ள வலுவான அடித்தளத்தை வலியுறுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கும் நிலையில், தமிழகத்தின் கொள்கை சிறுதானியங்களுக்குப் போதுமான முக்கியத்துவம் தரவில்லை. சோளம் / கேழ்வரகு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் ஐந்து மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும்.
தமிழகத்தில் சிறுதானியப் பயிர்களை பயிரிடுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவற்றின் நன்மைகளை அறுவடை செய்ய மாநில அரசு தனது கொள்கையில் போதுமான கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாட்டில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் பற்றி அதிகம் அறிய முடிவதில்லை.
இந்தப் புதிய அங்கக வேளாண்மைக் கொள்கை இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில் மதிப்புமிகு இணைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் நிலையான அங்கக வேளாண் உற்பத்தி முறைகளை ஊக்குவிக்க வேண்டும். ஒற்றைச் சாளரச் சான்றிதழ் கட்டமைப்பில் மட்டும் கவனம் செலுத்துவது தமிழக விவசாயிகளுக்கு உதவாது.
(கட்டுரையாளர் பொருளாதார வல்லுநர் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்)
Read in : English