Read in : English
முள்ளு கத்தரிக்காய் என்பது வேலுார் மாவட்டப் பகுதியில் புகழ்மிக்க சொல். பெயருக்குத் தகுந்தாற் போல, கத்தரிக்காயில் முள் இருக்கும். இதை இலவம்பாடி கத்தரிக்காய் என்றும், முள்ளம்தண்டு கத்தரி என்றும் அழைப்பர். வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இது விளைவிக்கப்படுகிறது. சமைத்தால் அதற்குத் தனிச்சுவை உண்டு. அதன் சுவைக்கு மற்றொரு கத்தரியை ஒப்பிட இயலாது.
வேலுார் பகுதிகளில் பல விவசாயிகள் பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் இதனை விளைவிக்கின்றனர். இந்த முள்ளு கத்தரிக்காயில் புழுக்கள் புகுந்து, அதனைக் குடைந்து சாப்பிட்டிருக்கும். சொத்தையை வெட்டி அகற்றியபின் இதனைச் சமையலுக்குப் பயன்படுத்துவர். உள்ளூர் சந்தைகளில் இது சத்தமின்றி விற்பனையாகிறது.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக அணைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக முள்ளு கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம்.
பிரியாணி உணவுக்கு முள்ளு கத்தரிக்காய் தொக்கு ஈடு இணையற்ற சேர்க்கை; கத்தரிக்காய் தொக்கின் சுவை பிரியாணி சுவையை மீறும்
அவர்கள் குடும்ப விருந்து நிகழ்வுகளில் பிரியாணியுடன் பக்க உணவாக முள்ளு கத்தரிக்காயை வதக்கித் தொக்காகச் செய்த உணவும் கண்டிப்பாக இடம்பெறும். வேறு வகை கத்தரியை இந்த நிகழ்வுகளில் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாணி உணவுக்கு முள்ளு கத்தரிக்காய் தொக்கு ஈடு இணையற்ற சேர்க்கை. கத்தரிக்காய் தொக்கின் சுவை பிரியாணி சுவையை மீறும். இந்தக் கத்தரிக்காய் தொக்கு பற்றிய உரையாடல்களை எல்லா விருந்து நிகழ்வுகளிலும் கேட்க முடியும். ஒவ்வொரு சமையல் கலைஞரும் வித்தியாசமான பார்முலாவில் அதனைத் தயாரிப்பர்.சென்னையில் வசிக்கும் வேலுார் மக்களால், அங்கும் இது பிரபலமாகிவிட்டது. இதனால் வேலூர் சென்று முள்ளுக்கத்தரிக்காயைப் பலரும் தேடி வாங்குவதைக் காணலாம்.
மேலும் படிக்க: சுவை தரும் நாட்டுக்கத்தரி
வேலூர் முள்ளு கத்தரிக்காயைப் பல விதமாகச் சமைக்கலாம். மசாலா கலந்து எண்ணெயில் பொறிக்கலாம், வறுக்கலாம், பிற காய்கறிகளுடன் கலந்து வேக வைக்கலாம். அதிகமாகக் கிடைக்கும்பட்சத்தில் சுவைமிக்க ஊறுகாயாக ஆக்கலாம்.
தமிழ்நாட்டின் பாரம்பரியமான வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதியில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தில் இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 46 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் 36 தயாரிப்புகளுக்கு இக்குறியீடு கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆனது இலங்கை, நேபாளம், அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ஜெர்மனி நாட்டுக்கும் ஏற்றுமதியாகிறது கத்தரிக்காய் இனம் சார்ந்த இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் இளஞ்சிவப்பு நிறத்துடன் நீலம் கலந்த கலவையாக, பளபளப்பாக காணப்படும். ஒன்றின் சராசரி எடை 50 கிராம் வரை இருக்கும். அறை வெப்பநிலையில் மூன்று நாட்களும், குளிரூட்டப்பட்ட அறையில் எட்டு நாட்களும் பாதுகாப்பாக இருக்கும்.
இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் இளஞ்சிவப்பு நிறத்துடன் நீலம் கலந்த கலவையாக, பளபளப்பாக காணப்படும்; சராசரியாக 50 கிராம் வரை எடை கொண்டது
முள்ளு கத்தரிக்காயில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. பூச்சி மற்றும் நோய் தாக்குதலை எதிர்க்கும் சக்தி கணிசமாக உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் முட்கள் நிறைந்து இருக்கும், இது பயிரைத் தனித்துவமாக அடையாளம் காட்டும்.
இந்த கத்தரிச் செடிகள் நல்ல காய்ப்புத் திறன் பெற்றவை. ‘காய்கள் கொத்தாகத் தொங்கும். ஒரு ஹெக்டேருக்கு 50 டன் வரை மகசூல் தரும்’ என்கின்றனர் விவசாய அதிகாரிகள்.
Read in : English