Read in : English
தமிழக அரசு அறிவித்துள்ள இயற்கை வேளாண்மைக் கொள்கை (அங்கக வேளாண்மைக் கொள்கை) அறிக்கை நல்ல முயற்சி என்றாலும் புரிதல் இல்லாமலும் உரிய செயல் திட்டங்கள் இல்லாமலும் இருப்பதாக இயற்கை வேளாண்மை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
“கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் இயற்கை வேளாண்மைக் வரைவு அறிக்கைகள் உருவாக்கப்பட்டாலும்கூட அது நடைமுறைக்கு வரவில்லை. தற்போது அங்கக வேளாண்மைக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இதில் நல்ல யோசனைகள் இருக்கின்றன ஆனாலும், புரிதல் இல்லாமல் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறார் தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் (Tamilnadu Traditional Farmers Federation) தலைவர் அரச்சலூர் செல்வம்.

அரச்சலூர் செல்வம்-தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் தலைவர்
“ஒரு நிலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இயற்கை விவசாயம் செய்தால்தான் இயற்கை வேளாண் விளை பொருளுக்கான சான்றிதழைப் பெற முடியும். ஒரு நிலத்தில் தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்ய முடியாது. நிலங்களில் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், அதிக வாய்ப்புள்ள பயிர்கள் அதிக வாய்ப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்துதல் என்ற அரசின் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது தவறான அணுகுமுறையாகும். இது இயற்கை வேளாண்மையை வளர்ச்சிக்கு உதவாது. ஒட்டுமொத்த விவசாய நிலமும் அங்கக வேளாண்மைக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டு இலக்கு இருக்க வேண்டும்.
அதாவது, ரசாயன இடுபொருள்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துவதை விட்டுவிட்டு முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு கால வரம்புடன்கூடிய இலக்கு நிர்ணயித்து செயல் திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டியது அவசியம். மரபணு மாற்றுப் பயிர்கள் அங்கக வேளாண்மையில் வராது என்கிற விளக்கம் இந்தக் கொள்கையில் இல்லை. இயற்கை வேளாண் பொருள் ஏற்றுமதிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயற்கை வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் அடித்தட்டு மக்களின் பயன்பாட்டுக்குக்கு கட்டுபடியான விலையில் அவற்றை கிடைக்கச் செய்வதற்கான செயல் திட்டங்கள் இல்லை.
அங்கக வேளாண்மை வளர்ச்சிக்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும் தெரியவில்லை” என்கிறார் அரச்சலூர் செல்வம்.
ரசாயன இடுபொருள்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துவதை விட்டுவிட்டு முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு கால வரம்புடன்கூடிய இலக்கு நிர்ணயித்து செயல் திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டியது அவசியம்.
“கேரள மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண்மை கொள்கை மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த உரிய செயல் திட்டங்கள் இல்லாமல் உள்ளன. இதுபோன்ற நிலமை தமிழகக் கொள்கைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. அனைத்து வகையான இயற்கை வேளாண்மை முறைகளையும் அரவணைக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை குறித்து இயற்கை விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டு உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தக் கொள்கையால் நல்ல பலன் கிடைக்கும். இயற்கை வேளாண்மையை ஒரு கல்வி இயக்கமாக மாற்றும் வகையில் அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும்.
பண்ணைக்கு வெளியிலிருந்து உயிர் உரஙக்ள் போன்ற இடுபொருள்களை வாங்கிப் பயன்படுத்தும் அங்கக வேளாண்மையிலிருந்து படிப்படியாக இயற்கை வேளாண்மையை நோக்கி, அதாவது பண்ணையிலோ அல்லது பண்ணைக்கு அருகிலோ இடுபொருள்களைத் தயாரித்துப் பயன்படுத்தும் முறையை நோக்கி நகர்வதற்கான செயல் திட்டங்கள் முக்கியம்” என்கிறார் அவர்.
மேலும் படிக்க: பாரம்பரிய நெல்: மக்கள்மயமாக்க என்ன செய்ய வேண்டும்?
“இந்த வேளாண்மைக் கொள்கை உழவர்களை உயிர்ம வேளாண்மையில் (Organic farming) ஈடுபடுமாறு விழிப்புணர்வூட்ட பரப்புரை ஆவணமாக இருக்கிறதே அன்றி, அரசுப் பொறுப்பெடுத்துக் கொண்டு உயிர்ம வேளாண்மையை வளர்ப்பதற்கான எந்த வகை உறுதியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை” என்கிறார் தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்க (Tamil Traditional Farmers Federation) ஒருங்கிணைப்பாளர் கி. வெங்கட்ராமன்.

தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கி. வெங்கட்ராமன்.
“திருப்பதி லட்டு விற்பனை உள்ளிட்ட ஆலய உணவு வழங்கல்களில் இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு தெலங்கானா மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது. அதுபோன்ற கொள்கைகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் ரேசன் கடைகளிலும், மருத்துவமனைகளிலும், அரசு விடுதிகளிலும் குறிப்பிட்ட விழுக்காடாவது உயிர்ம வேளாண்மை விளைபொருள்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அதற்குத் தகுந்தாற் போல உயிர்ம வேளாண்மை விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். உறுதியான சந்தை வாய்ப்பை அதுதான் ஏற்படுத்தும். நகர்ப்புற மகளிர் குழுக்களையும், உயிர்ம வேளாண்மை உழவர் குழுக்களையும் ஒருங்கிணைத்து, அதற்குரிய செயலிகளின் வழியாக சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தித் தர வேண்டும். நாட்டின ஆடு – மாடு வளர்ப்பையும், கோழி – தேனீ வளர்ப்பையும் ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும், அதற்கான உறுதியான செயல்திட்டங்கள் அறிவிப்பில் இல்லை.
ஆடு – மாடு மேய்க்கும் கிடைக்காரர்கள் அவற்றில் கிடைக்கும் சாண எருவை நம்பியே வாழுகிறார்கள். சாண எரு தான் உயிர்ம வேளாண்மைக்கு முதன்மையான இடுபொருள். கிடைக்காரர்களையும், உயிர்ம வேளாண்மை உழவர்களையும் ஒருங்கிணைக்க நிறுவன வழிப்பட்ட திட்டங்களுக்கான எந்த அறிவிப்பும் இக்கொள்கை அறிக்கையில் இல்லை” என்கிறார் கி. வெங்கட்ராமன்.
தற்சார்பான உயிர்ம வேளாண்மை வாரியம் அமைப்பது தான், உயிர்ம வேளாண்மையை நிலைத்த வழியில் கொண்டு செல்ல உதவி செய்யும்
“பசுமைப் புரட்சி என்ற பெயரால் திணிக்கப்பட்ட ரசாயன வேளாண்மையின் தீமைகளை எடுத்துக்காட்டியுள்ள இந்தக் கொள்கை அறிக்கை, ரசாயன வேளாண்மை உழவர்கள் உயிர்ம வேளாண்மைக்கு மாறுவதற்கான எந்தவகை ஊக்குவிப்புத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ரசாயன வேளாண்மையிலிருந்து உயிர்ம வேளாண்மைக்கு மாற விரும்பும் உழவர்கள் மண்ணின் நுண்ணுயிரிகளை மீட்டு, மண்ணின் உயிர்ப்புத் தன்மையை மீட்பதற்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.
இந்த கால கட்டத்தில் இந்த சிறு நடுத்தர உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை முழுமையாக ஈடுசெய்யக் கூடிய வகையில், சிறப்புப் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தையோ நேரடி நிவாரணத் திட்டத்தையோ அரசு செயல்படுத்தாமல் பெரும்பாலான உழவர்களை உயிர்ம வேளாண்மைக்கு மாற்ற முடியாது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் உயிர்ம வேளாண்மைக் கொள்கையில் ஒரு செய்தியும் இல்லை.
மேலும் படிக்க: உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண் உழவர் சந்தைகள்
தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு நிறுவப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. மாறாக, தற்சார்பான உயிர்ம வேளாண்மை வாரியம் அமைப்பது தான், உயிர்ம வேளாண்மையை நிலைத்த வழியில் கொண்டு செல்ல உதவி செய்யும்” என்கிறார் வெங்கட்ராமன்.
“கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தியும் போராடியும் வேண்டிய பின்னர் இயற்கைவழி வேளாண்மைக்கான உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிக்கை இப்போது தமிழ்நாடு வேளாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனால் அதில் உள்ள பல கருத்துகள், கூறுகள் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கின்றன” என்கிறார் இயற்கை வேளாண்மையாளர் பாமயன்.
அரசின் கொள்கை அறிவிப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது:
“இயற்கை வேளாண்மைக்கும் உயிர்ம (அங்கக) வேளாண்மைக்கும் உள்ள வேறுபாடு பிழையாக விளக்கப்பட்டுள்ளது. மட்கு உரம், உயிர் உரம் போன்ற எவற்றையும் அது பண்ணையில் ஆக்கினாலும் வெளியில் இருந்து கிடைத்தாலும் பயன்படுத்தினால் அது உயிர்ம வேளாண்மை என்ற பொருளில் அடங்கும்.

இயற்கை வேளாண்மையளர் பாமயன்.
செம்மொழியாம் தமிழ் மொழியில் இல்லாத சொல்லான அங்கக வேளாண்மை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு உழவர் அமைப்புகள், தமிழ்ப் பற்றாளர்கள் உயிர்ம வேளாண்மை என்ற சொல்லைப் பயன்படுத்தி வரும் தூய தமிழ்ச்சொல்லான உயிர்ம வேளாண்மை என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
நோக்கங்களை வரையறுக்கும்போது மிக முன்மையாக வேளாண் தொழிலாளர்களின் உடல் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இணைக்க வேண்டும். ஏனெனில் உழவியத் தொழிலாளர்களும், உழவர்களும் பூச்சிக்கொல்லி நஞ்சுகளால் மிக மோசமாகப் பாதிப்படைகின்றனர். வேளாண்மையில் தற்சார்பை உறுதி செய்தல் குறிப்பாக விதைகளின் தற்சார்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் நோக்கமாக இருக்க வேண்டும்.
செயலுத்திகளில் (st strategiess) நிலத்திற்கு மட்டும் உயிர்ம வேளாண்மைச் சான்றளிப்பு முறை உள்ளது, பங்களிப்புச் சான்று போலவே அறுவடைக்குப் பின்னர் உழவர்கள் தயாரிக்கும் அரிசி, பருப்பு ஆகிய பொருட்களுக்கு சான்று பெறும் முறையும் இணைக்கப்பட வேண்டும். உயிர்ம வேளாண்மை ஆராய்ச்சிக்கு என்று தன்னாட்சியுடம் கூடிய தனியான ஆராய்ச்சி நிறுவனம் அல்லது அதற்கு இணையான நிறுவனம் வேண்டும்.
ஏற்கனவே உள்ள ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் வேதியியல் (ரசாயன) முறை வேளாண்மையை ஊக்குவிப்பனவாக உள்ளன. அவர்களிடம் இருந்து உளப்பூர்வமான உறுதியான இயற்கை வேளாண்மை ஆய்வு விடைகள் பெற இயலாது. எனவே ஏற்கனவே உள்ள அமைப்புகளின் கீழ் அவற்றை விடுவது பயன் தராது.
உழவர் சந்தை என்பது கலைஞர் அவர்களின் கனவுத் திட்டம். அதனுடன் இயற்கைவழி வேளாண்மைப் பொருட்களை இணைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நஞ்சில்லாத உணவு கிடைக்கும்
சந்தைப்படுத்துவதில் உழவர் சந்தைகளின் பங்கு இணைக்கப்படவில்லை. உழவர் சந்தை என்பது கலைஞர் அவர்களின் கனவுத் திட்டம். அதனுடன் இயற்கைவழி வேளாண்மைப் பொருட்களை இணைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நஞ்சில்லாத உணவு கிடைக்கும். இதன் மூலம் உள்ளூர் சந்தை வாய்ப்புப் பெருகும்.
உயிர்ம வேளாண்மைக் பொருட்களுக்கு நியாயமான விலைக் கொள்கை (அடக்கச் செலவுடன் கூடிய லாப விலை) உறுதி செய்து அறிவித்தால் உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் பயன்படும். நகரங்களில் ஏராளமான மட்கும் குப்பைகள் கிடைக்கின்றன, இவற்றை நல்ல மட்குகளாக உருவாக்கி உயிர்ம வேளாண்மைப் பண்ணைகளுக்கு அளிக்கும் திட்டத்தை இணைக்க வேண்டும். அதன் மூலம் நகரங்கள் தூய்மையாவதுடன், உழவர்களுக்கும் நல்ல உரம் கிடைக்கும்.
பூச்சிக்கொல்லிகளின் தீமையை விளக்கி நஞ்சில்லாத உணவை அனைவரும் உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பரப்புரை இயக்கம் கொள்கையுடன் இணைக்கப்பட வேண்டும். இயற்கைவழி வேளாண்மைக் சுற்றுலாக்கள், இயற்கைப் பண்ணைத் தங்கல்கள் (organic farm stay) போன்ற திட்டங்கள் இணைக்கப்படுவதன் மூலம், உழவர்களுக்கு அறிவும், வருமானமும் கிட்டும்.
படிப்படியாக தமிழ்நாட்டுச் சூழலில் இருந்து தீங்கான பூச்சிக்கொல்லிகள் முற்றிலும் அகற்றப்படத் திட்டம் வேண்டும். வேளாண்மைத்துறையுடன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுலாத்துறை, உடல்நலத்துறை ஆகிய துறைகளும் இணைந்து உயிர்ம வேளாண்மைப் பரப்புதல் பணிகளில் ஈடுபட்டால் விளைவுகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

சித்த மருத்துவ ஆய்வாளர் பேராசிரியர் என். புண்ணியமூர்த்தி
இயற்கை முறையில் உருவாக்கப்படும் மருந்துச் செடிகள் (மூலிகைகள்) மருத்துவத்தில் மிக அவசியமானதாக உள்ளன. இப்போது பல நஞ்சு கலந்த மூலிகைகள் சாகுபடியில் உள்ளன. எனவே நஞ்சில்லா மருந்துச்செடி உருவாக்கத் திட்டம் இதனுடன் இணைக்கப்பட வேண்டும்.
அத்துடன் இயற்கைவழி உழவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். உயிர்ம வேளாண்மை உழவர்கள் ஒவ்வொரு பயிர் சாகுபடியின்போதும் நீரையும், மண்ணையும் சூழலையும் மாசுபடாமல் காக்கிறார்கள். அதற்காக அவர்களுக்குக் கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கிடத் திட்டம் வேண்டும். உயிர்ம வேளாண்மை மண்டலங்களில் மரபீனி மாற்றப் பயிர்கள் (Genetic Modified Crops) சாகுபடிக்குத் தடைத் திட்டம் வேண்டும். உயிர்ம வேளாண்மை மண்டலங்களில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் அப்புறப்படுத்தப்படவும், புதிய மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் ஏற்படுத்த முடியாதவாறும் திட்டம் வகுக்க வேண்டும்.
ஜிஎஸ்டி அமைப்பிற்குள் வரும்போது தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வலியுறுத்தியதுபோல, வழமையான வேதி வேளாண்மையில் இருந்து இயற்கை வழி வேளாண்மைக்கு மாறும் உழவர்களுக்கு, மாறும் குறிப்பிட்ட கால அளவிற்கு மண்வள மேம்படுத்தல் தொகை வழங்க வேண்டும். இதன் மூலம் நஞ்சில்லாத நலமிக்க உணவை உண்டு பிறருக்கும் அளித்து வாழ்வாங்கு வாழும் தமிழ்நாட்டை உருவாக்க முடியும்” என்கிறார் பாமயன்.
“தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக மரபு வேளாண்மையில் வேளாண்மைக்கு பயன்பட்ட கிடை ஆடு மாடுகளின் சாண இடுபொருள்களை கிடை அமர்த்துதல் மற்றும் தொழு உரம் ஆகியவற்றின் மூலம் வழங்கி பங்களிப்பு செய்து வரும் மேய்ச்சல் சமூகத்தை பற்றிய புரிதலோ பார்வையோ அரசாங்கத்திடமும் வேளாண் கொள்கை வகுக்கும் வேளாண் துறை அதிகாரிகளிடமோ இல்லை. எனவே உரிய அங்கீகாரம் இது வரை மேய்ச்சல் தொழிலுக்கு கிடைக்கப் பெறவில்லை. வேதி உரங்களுக்கு மாற்றாக நுண்ணுயிர் உரம் (bio-fertilizer) என்ற புரிதலில் அங்கக வேளாண்மை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த அறிக்கையை மறுசீராய்வு செய்து மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் மக்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பார்வையோடு கொள்கையை அறிவிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நல நடுவத்தின் (Tamilnadu Livestock Feeder welfare Association) ஒருங்கிணைப்பாளர் சி. இராசீவ்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
“இயற்கை வேளாண்மைக்கு கால்நடைகளின் கழிவுகளைப் பயன்படுத்துவதுதான் நிலைத்த செயல்பாடுகளாக இருக்கும். அதேசமயத்தில் கால்நடைகளைப் பராமரிப்பதில் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த வேண்டும்.அப்போதுதான் கால்நடைக்கழிவுகளில் ரசாயன எச்சங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் சித்த மருத்துவ ஆய்வாளருமான பேராசிரியர் என். புண்ணியமூர்த்தி.
Read in : English